தினமணி கொண்டாட்டம்

சொல்லித் தீராதது பெண்களின் பிரியம் !

3rd Oct 2021 06:00 AM | -ஜி.அசோக்

ADVERTISEMENT


""வாழ்க்கையின் அடித்தட்டு மக்களோடு ரத்தமும் சதையுமாக கலந்து திரிந்தவன். ஒரு வேளை சாப்பாட்டில் இருக்கிற அருமை பெருமையெல்லாம் தெரியும். அப்படி தெருவில் திரிந்து நான் பார்த்த, பழகிய மனிதர்கள் ஏராளம். அப்படி அலையடித்து உள்ளுக்குள் வந்து நின்றவர்தான் "சுந்தர பாண்டியன்'. நட்புக்கும், துரோகத்துக்குமான உறவு.

சிரித்தால் அழகு சொட்டுகிற, முறைத்ததால் பதற வைக்கிற விதமாக வந்து நின்றார் சசி அண்ணன். அடுத்து "இது கதிர்வேலன் காதல்', "சத்ரியன்' என வரிசையாக படங்கள். இப்போது முழுக்க முழுக்க மனிதம் பேசுகிற கதை.

மனிதமும், அன்பும்தான் என சொல்லப் போகிறேன். இதற்கும் துணையாக நிற்கிறார் சசி அண்ணன். என் உணர்வையும், உயிரையும் எரிபொருளாக எரித்து தேடிக்கண்டுபிடித்தவர்கள் இந்த "கொம்பு வச்ச சிங்கம்டா'. - தெளிவாகப் பேசுகிறார் இயக்குநர் எஸ்.ஆர். பிரபாகரன்.

"சுந்தரபாண்டியன்' படத்தில் பளீச்சென்று வெளிச்சம் காட்டியவர்.

ADVERTISEMENT

சசிகுமாரோடு இணைந்து ஏற்கெனவே ஹிட் மேஜிக் நடத்தியிருக்கீங்க....

தேங்க்ஸ் சார். படத்தையும் அதே ரசனையோடுதான் கொண்டு வந்திருக்கிறேன். "சுந்தரபாண்டியன்' ஹிட்ஆனதுமே மீண்டும் ஒரு படத்தில் இணையலாம் என்ற எண்ணம் எங்கள் இருவருக்குமே இருந்தது. ஆனால், நாங்கள்தான் அதை தள்ளி வைத்தோம். நல்ல கதை, நேரம் எல்லாம் இப்போது சேர்ந்து வந்தது. அதுதான் இது. என் கதைகளுக்கு எப்போதும் அன்பும், உறவும்தான் அடிப்படை. அன்பு, காதல், பரிவு... கதையை நகர்த்தும் கரு. உறவுகள்தான் மனித வாழ்வின் ஆதாரம் என நினைக்கிறேன். அதை விட்டு வெளியேற நினைக்கிற மனப்பாங்கு இப்போது விரவிக் கிடக்கிறது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு வரலாறு இருக்கிறது. பிறக்கும் போது அவனோடு பிறக்கிற வரலாறு, அவன் இறந்த பின்னாலும் அவனது உறவுகள் மூலம் சுற்றிக் கொண்டே இருக்கிறது. எத்தனையே விஷயங்கள் மனிதனை ஆட்டிப் படைக்கின்றன. இந்த எல்லாவற்றையும் கடந்தவர்கள் மரணத்தை அடைய துடிக்கிறார்கள். ஒரு சிலர்தான் சில நல்ல நிமிடங்களை தவிர வேறு எதையும் விட்டு போகக் கூடாது என நினைக்கிறார்கள். இந்த மாய மந்திரம் இந்த சினிமாவுக்கும் பொருந்தும். மனித உறவுகளின் மகத்துவத்தை, ஆழத்தை முன் வைக்கிற கதை. உலகம் எங்கும் நிறைந்து கிடப்பதும், உலகமே தேடிக் கொண்டிருப்பதும் அன்புதானே. அது போன்ற அசைக்க முடியாத நம்பிக்கைதான் இந்தப் படம்.

மறுபடியும் சென்டிமென்ட்டா...

அளவாக கொடுத்தால் சென்டிமென்ட் மாதிரி மனுஷனுக்கு இஷ்டமானது எதுவும் கிடையாது. யாரும் இந்த உறவுகளிலிருந்து தப்பி வந்தவர்கள் கிடையாது. சென்டிமென்டா.... என்று சிரிக்கிறவர்களுக்கும் ஒரு சென்டிமென்ட் உண்டு. பாட்டிக்கு பெத்த மகனைவிட பேரனுக்கு ஆக்கிப் போட்டு சாப்பிடுவதுதான் ஆசையாக இருக்கும். ஒரு பாசப் பிணைப்பில் உங்களைக் கட்டிப் போடுகிற கதையாகவும் இதைப் பார்க்கலாம். கொங்கு மண்டலத் தமிழன் என்றால் இப்படித்தான் இருப்பான். தயவு செய்து யாரும் இதுக்கு எந்த ஜாதி, மதம் என வர்ணம் பூசி விட வேண்டாம். இது ஒரு மனிதனின் கதைதான். என் வேலைப்பளூவை புரிந்துக் கொண்டு, அதைத் தன் தோளுக்கு மாற்றிக் கொண்டு அப்படியே தடதடவென நடித்து முடித்தார் சசி அண்ணன். கரூர் ஏரியாவில் படம் பிடித்தோம்.

அப்படியே சசி அண்ணன் அங்கே ஜனங்க பார்க்க ஆரம்பித்து விட்டார். எனக்கு என்னவென்றால் இன்னும் பெண்களின் மாண்பு பற்றி சொல்லித் தீரவில்லை. சொல்லித் தீராதது அவர்களின் பிரியம். படத்தின் ரஷ் பார்த்து விட்டு "ரொம்ப நன்றி பிரபா, எனக்கு ஒரு நல்ல முகம் கொடுக்கிற படம். அப்படியே எல்லோருடைய மனதிலும் ஒட்டிக்கிற நிறைய இடங்கள் படத்துல இருக்கு'னு சொன்னார் சசி அண்ணன். எனக்கு அதுதான் முதல் திருப்தி!

மடோனா செபாஸ்டியன் கிராம வாழ்க்கைக்கு பொருந்துகிற முகமா...

அச்சு அசல் கிராமத்து முகம். மார்டன் ஆடைகளில் பார்க்கும் போது வேறு மாதிரி தெரிவார். தாவணி போட்டு அழகு பார்த்தால், அப்படியே நம்மூர் பொண்ணு. படத்துக்கு ஏக பொருத்தம். ஏனென்றால் பாடுபட்டு எழுதுகிற குணத்தை, உணர்வை, பாசத்தை ஒரு நொடியில் கடத்திக் கொண்டு, அடுத்து என்ன சொல்ல வேண்டும் என்று நம்மிடம் நிற்பார். அப்படி என் மனதில் இருந்த சித்திரம் திரையிலும் வந்திருக்கிறது. சிலிர்த்து போகிற அளவுக்கு சில இடங்கள் மடோனாவுக்கு இருக்கிறது. அந்த பொண்ணு ஒரு வாழ்க்கை வாழ்ந்திருக்காங்க பாருங்க. அவ்வளவு அழகு. பாவாடை தாவணியில் அப்படியொரு பாந்தம்.

பாடல்கள் ஏற்கெனவே ஹிட்டாகி விட்டது... இல்லையா...

படத்துக்கு பாடல்களும் பெரும் பலம். அப்படியொரு இசை மீட்டி தந்திருக்கிறார் ஜி.வி. பிரகாஷ். ஒரு பக்கம் பரபரப்பான நடிகராக அவர் பிஸி. இன்னொரு பக்கம் எங்களுக்கும் இசை தந்தார். இன்னொரு சிறப்பு. அருண்ராஜா காமராஜாவின் வரிகள். ""பேசாத மொழியே...'' எனத் தொடங்கும் ஒரு பாட்டு. வரியும், இசையும் பொருந்தி வந்திருக்கிற அழகு அபாரம். இணையத்தில் பெரும் ஹிட் அந்த பாட்டு. அது மாதிரிதான் மற்ற பாடல்களும். படத்தை திரையில் பார்க்க நானே ஆவலாக இருக்கிறேன்.

Tags : kondattam Unspeakable women's love
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT