தினமணி கொண்டாட்டம்

உதடு அசைவால் உயரம் தொட்டவர்!

3rd Oct 2021 06:00 AM | -சுதந்திரன்

ADVERTISEMENT

 

ஐ.ஏ.எஸ் தேர்வுகளை தமிழில் எழுதும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள் என்று கருத்துகள் பல பதிவு செய்யப்படும் சூழ்நிலையில், பேசவும் கேட்கவும் குறைபாடுள்ள ரஞ்சித் குமார் ஐ.ஏ.எஸ் தர வரிசையில் 750-ஆவது இடத்தைப் பிடித்து தேர்வு பெற்றுள்ளார்.

கோவையை சேர்ந்த ரஞ்சித் குமாருக்கு 26 வயதாகிறது. அம்மா அமிர்தவள்ளி. பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்தவர். மகனுக்கு செவிகளில் நிரந்தரக் கோளாறு என்று தெரிந்ததும், தனது மகனைப் பேச வைக்க... இந்த உலகுக்கும் ரஞ்சித்திற்கும் தொடர்பு அறுந்து போகாமல் இருக்க, கேட்கும் சக்தி பேசும் திறமை அற்ற மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் நிலையத்தில் சேர்ந்து பேசும் திறமை அற்ற மாணவர்களுக்கான பள்ளியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார்.

மகனையும் அந்தப் பள்ளியில் சேர்த்தார். வீட்டில் பள்ளியில் மகனுக்கு ஆசிரியராகவும் மாறினார். தாய் மூலம் உதடுகளின் அசைவைக் கொண்டு மற்றவர் என்ன சொல்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டார். வீட்டில் டைரி எழுதும் பழக்கத்தை ஏற்படுத்தி பேசும் போது முழு வாக்கியமாக எழுத வைத்தார். அப்போதுதான் பேசும் போது முழுமையாகப் பேச முடியுமாம். பாடங்களை சொல்லிக் கொடுத்தும் வந்தார், பிளஸ் டூவில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்வான ரஞ்சித் பொறியியல் படிப்பையும் காது கேட்காத நிலையில் படித்து முடித்தார்.

ADVERTISEMENT

அமுதவள்ளி மகனுக்காகப் படும் சிரமங்கள், சிந்திய உழைப்புகள், எடுத்த முயற்சிகளைக் கண்டவர்கள் "என்ன ... மகனை கலெக்டர் ஆக்க போறீயா?' என்று கேலி செய்தார்களாம்.

"அது இன்று நனவாகியிருக்கிறது' என்கிறார் ரஞ்சித் குமார். அமிர்தவள்ளியின் தளராத முயற்சியால் காது கேட்காவிட்டாலும், தன்னோடு பேசுபவரின் உதடுகள் அசைவுகளை வைத்து என்ன சொல்கிறார் என்று புரிந்து கொண்டு மெதுவாகப் பேசுகிறார்
ரஞ்சித்.

""அம்மா, என்னைப் பேச வைத்ததுடன் கல்வியால்தான் உயர முடியும் என்பதையும் புரியவைத்தார். மாற்றுத் திறனாளிகள் ஐ.ஏ.எஸ் தேர்வில் பங்கு பெறமுடியாது என்று நாங்கள் நினைத்திருந்தோம். அதை மாற்றியவர் சென்னை சந்தோஷ் சபரி. ஆட்சிப் பணி பயிற்சி மைய ஆசிரியர் சபரிநாதன் பேச, கேட்கும் திறன் இல்லாதவர்களும் தேர்வு எழுதி ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் ஆகலாம் என்று நம்பிக்கை தந்தார்.

அந்த சந்தோஷத்தில் பயிற்சி மையத்திலேயே சேர்ந்தேன். எனது பயிற்சி ஆசிரியர் சபரிநாதன் பொறுமையாகச் சொல்லிக் கொடுத்தார். வகுப்பில் என்னை முன் வரிசையில் அமர்த்தி, தனது உதடு அசைவுகளை நான் சரியாகக் கவனிக்க வேண்டும் என்று என்னைப் பார்த்துதான் வகுப்பு எடுப்பார்.

கரோனா காலம் எல்லாருக்கும் சோதனை காலம். பயிற்சி மையம் மூடப்பட்டதால் ஆன்லைன் வகுப்புக்களில் கலந்து கொண்டாலும் உதடு அசைவுகளைப் புரிந்து கொள்வது மிகவும் கடினமாக அமைந்தது. அம்மாதான் உடன் இருந்து ஆசிரியர் சொல்வதைக் கேட்டு எனக்குப் புரியவைத்தார். இவற்றை எல்லாம் தாண்டி எனது இரண்டாம் முயற்சியில் முதல் நிலை, முதன்மை நிலை தேர்வுகளில் வெற்றி பெற்றேன். எல்லா தேர்வுகளையும் தமிழில் தான் எழுதினேன். விருப்பப் பாடமாக தமிழ் இலக்கியத்தை தேர்வு செய்திருந்தேன்.

நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள அழைப்பு வந்த போது நேர்முகம் செய்பவர்களின் கேள்விகளை கணினி திரையில் எழுத்து வடிவில் வருமாறு வசதி செய்து தர வேண்டும் என்று வேண்டினேன். ஏனென்றால் உதடு அசைவுகளை வைத்து என்னால் அப்படியே புரிந்து கொள்ள முடியாது. பிழையில்லாமல் எழுதத் தெரியும்.. வாசிக்கத் தெரியும். தேர்வில் வெற்றி பெற நேர்முகத் தேர்வின் மதிப்பெண்கள் மிக முக்கியம் என்பதால் அதில் நல்ல மதிப்பெண்கள் பெறுவது அவசியம். அதற்கு கேள்விகளைப் புரிந்து கொண்டு சரியான விடை சொல்ல வேண்டும். ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்பதற்காக கணினி திரை உதவி வேண்டும் என்று கேட்டேன். ஆனால் நேர்முகத் தேர்வில் கணினி திரை வசதி வழங்கப்படவில்லை. அதனால் நேர்முகத் தேர்வில் கேள்வி கேட்டவர்களின் உதட்டசைவை கவனமாகப் பார்த்து புரிந்து கொண்டு எனது விடைகளை தாளில் எழுதிக் கொடுத்தேன். முடிவு குறித்து பயமாக இருந்தாலும் ... வெற்றி கிடைத்துவிட்டது'' என்கிறார் ரஞ்சித்.

பயிற்சி ஆசிரியர் சபரிநாதனிடம் பேசினோம்:

""இயலாமைகளைத் தாண்டி படிப்பதில் ரஞ்சித் மிகவும் ஆர்வம் காட்டினார். சென்னையில் நண்பர்களுடன் தங்கிப் படித்த ரஞ்சித் தவறாமல் வகுப்புகளுக்கு வருவார். முழு நேரமும் வகுப்பில் இருப்பார். ரஞ்சித்தின் விடாமுயற்சி அவரை ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி காணச் செய்திருக்கிறது. தர வரிசையில் 750-ஆவது இடத்தில் இருந்தாலும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கீடு இருப்பதால் நிச்சயம் ஐ.ஏ.எஸ் பதவி நிச்சயம் கிடைக்கும்.

ரஞ்சித்தின் விடாமுயற்சி இருந்தாலும் அவரிடம் அதை விதைத்தவர் அவரது தாயார்தான். கேட்கும் சக்தி இல்லாதவர்களால் பேச முடியாது. மற்றவர்கள் பேசுவதைக் கேட்டுத்தான் குழந்தை பேசக் கற்கிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் காது கேளாத பேச முடியாத ரஞ்சித்தைப் பேச வைத்த அவரது அம்மாவை எத்தனை வேண்டுமானாலும் பாராட்டலாம்.
இப்போதும் ரஞ்சித்திற்கு நாம் என்ன பேசினாலும் எத்தனை சத்தமாகப் பேசினாலும் கேட்காது. உதடு அசைவுகளை வைத்து அவர் புரிந்து கொள்கிறார். இயலாமையை வைத்துக் கொண்டு ரஞ்சித் சாதனை புரிந்திருக்கிறார்'' என்கிறார் சபரிநாதன்.

Tags : kondattam lip movement
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT