தினமணி கொண்டாட்டம்

ஆப்பிரிக்க வனத்தில் அணையாத விளக்கு !

28th Nov 2021 06:00 AM

ADVERTISEMENT

 

ஆப்பிரிக்க மண்ணின் மீதும் கருப்பின மக்கள் மீதும் தீராத அன்பு கொண்ட ஆப்பிரிக்க நாட்டின் எழுத்துத் திலகமான வில்பர் ஸ்மித் தனது 88-ஆம் அகவையில் இயற்கையெய்திய தகவல் ஆங்கில இலக்கிய உலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது "ஜாம்பியா' என்றழைக்கப்படும் மேற்கு ருடேசியாவில் 09.01.1933 அன்று பிறந்தவர் வில்பர் ஸ்மித்.

தன் தாயார் தான், இயற்கையை ஆராதிக்கவும், புத்தகங்கள் மட்டுமின்றி அதிலுள்ள ஒவ்வொரு எழுத்துக்களை நேசிக்கவும் கற்றுத் தந்தார் என்று குறிப்பிட்டவர் தான், ஆப்பிரிக்காவின் 500 ஆண்டுக்கால வரலாற்றைத் தொடர்ச்சியாகத் தனது புதினங்களில் பதிவு செய்த அற்புதமான எழுத்தாளர் வில்பராவார்.

உலகிலுள்ள அழகான பொருள்களை முழுமையாகக் கண்டு இன்புற முடியுமேயன்றி, உலகை நீங்கள் மாற்றவே முடியாது. ஆக, மகனே! கோபம் உன்னை நோயாளியாக்கி வாழ்வின் நலத்தைச் சீர்குலைத்து விடும் என்று ஆற்றொழுக்காக மனிதர்களின் கோப தாபங்களை எளிமையாகச் சித்திரித்துக் காட்டுகிறார்.

ADVERTISEMENT

புத்தகத்தின் முதல் பத்தியிலேயே, பெரும்பாலும் முதல் வரியிலேயே வாசகர்களின் முழுக் கவனத்தையும் வென்றெடுத்தவர் வில்பர்.

அவர் நாவல்களைப் படிக்காமல் எனக்கு பொழுது விடிந்ததில்லை. சூரியன் உதிக்கும் வரை வில்பர் ஸ்மித் நாவல்களை படித்துக் கொண்டே எண்ணற்ற இரவுகளை நான் கழித்துள்ளேன். ஏனெனில், அவரின் புத்தகங்களைப் படிக்கத் தொடங்கினால், அதனை முழுமையாகப் படிக்காமல் எவராலும் நிறுத்தவியலாது என்று கூறினால் மிகையாகாது.

ஆப்ரிக்கக் கண்டத்தில் தம் முன்னோர் செய்த பாவங்களுக்குக் கழுவாய் தேடுவதற்காகத் தன் வாழ்நாள் முழுவதையும் அந்த அழகிய கண்டத்தின் கதையை, அது அடிமைப்பட்டதை, மீண்டெழுந்ததை. வெள்ளைக்கார கொள்ளையர்களின் கொடுமைகளை, அந்த மக்கள் வீறுகொண்டு, பின் அதை எதிர்கொண்டதை எழுதுவதற்காகச் செலவிட்ட மாமனிதராவார்.

"கறுப்பின மக்கள் அடிமைப்பட்ட வரலாற்றைக் கேட்டால் கடவுளும் கண்ணீர் சிந்துவார்' எனும் கருத்துடைய "தி ஏஞ்செல்ஸ் வீப்' என்ற புதினம் மட்டுமின்றி, மற்ற புதினங்கள் வாயிலாகவும், ஆப்பிரிக்காவின் வரலாற்றில் நிறவெறி தாண்டவமாடிய பெரும்பகுதியையும், ஒடுக்கப்பட்டவர்கள் குறித்தும் பரிவோடு எழுதுவதுதான் இவரின் தனிப் பாங்காகும்.

ஆப்பிரிக்க வனங்களில் நாமே சுற்றித் திரிவது போன்ற உணர்வைத் தரும் தன் ஆற்றல்மிகு மொழியால், ஆப்பிரிக்காவின் சமதளங்களையும், புல்வெளிகளையும், மரஞ்செடி, கொடிகள், விலங்குகள், பறவைகள், வேட்டையாடும் விதம், பழங்குடியின மக்களின் சடங்குகள், நம்பிக்கைகள் பற்றியெல்லாம் நுட்பமாய் விவரித்து நம்மை ஈர்க்கச் செய்யும் திறன் மிகுந்த எழுத்தாளர் ஸ்மித் தான் சுவைத்த விலங்குகளாக சிங்கம், முதலை, மலைப்பாம்பு என்று பட்டியலிட்டு, சிங்கத்தை மட்டும் உண்ணாதீர்கள் என்று அறிவுறுத்துவார்.

ஒவ்வொரு கதையின் பின்னணியிலும் விரிவான ஆய்வு மேற்கொள்ளப் பட்டிருப்பதோடு, அவர்தம் எழுத்துக்களின் வாயிலாக, கப்பல்களிலும் குதிரைகளிலும், யானைகளிலும் அமர்ந்து வனப் பயணம் செய்தும், கழுகுகளுடன் சிறகடித்து பறந்தும் ஆப்பிரிக்கா முழுவதையும் சுற்றிப் பார்த்த மனநிறைவைப் பெறுவதோடு, பாலன்டின், பாரோக்கள், டைட்டா, வில்பர் ஸ்மித்தின் பாட்டனார் பெயரான கோர்ட்னி போன்ற ஒப்பற்ற கதை மாந்தர்களின் ஐநூறாண்டு கண்ணீர்க் காட்சிகளைக் பெருங்காவியமாகப் படைத்திருப்பதிலிருந்து அறியலாம்.

பண்டைய எகிப்து நாடு, காலனித்துவ ஆப்பிரிக்கா, சூடான் மற்றும் அபிசீனியா நாடுகளை முதன்மையாகக் கொண்டு அவர் புதினங்கள் படைக்கப்பட்டுள்ளன. இரண்டாம் உலகப் போருக்கும் கூட வாசகர்களை அழைத்துச் சென்ற படைப்புகளும் உள்ளன. அவரின் சில படைப்புகள் திரைப்படங்களாகவும் உருவாக்கப்பட்டுள்ளன.

கடந்த முப்பதாண்டுகளாகத் தென்னாப்பிரிக்காவின் குடிமகனாகவுள்ள என் இளவல் பரதன் குடும்பத்தினர் வாயிலாக வில்பர் ஸ்மித்தின் புதினங்களைப் படிக்கும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றது. மேலும், ஜோகன்ஸ்பர்க், டர்பன், கேப்டவுன் போன்ற இடங்களுக்கும், வில்பர் வரைந்து காட்டிய வனப் பகுதியின் ஒரு முனையான "க்ரூகர்' விலங்ககத்திற்கு என் மனைவி வாணியுடன் சென்றது மறக்கவொண்ணா நிகழ்வாகும்.

புதிய புதினங்களின் பிரதிகள் இயல்பாகவே ஆயிரம், ஈராயிரம், ஐயாயிரம் பிரதிகள் விற்கப்படும் என்பது நாமறிந்த கணக்கு. ஆனால் இத்தாலி நாட்டில் வெளியிடப்படும் பிரதிகள் நான்கு லட்சமாகும். ஆங்கில உலகில், பத்து லட்சம் பிரதிகள் விற்கப்படும் நூலாசிரியர்களாக மிளிர வேண்டும் என்பது அவர்களின் இலக்காகும். வில்பர் ஸ்மித்தின் படைப்புகள் ("கிங் ஆஃப் கிங்ஸ்', "ரிவர் ஆஃப் காட்', "தி செüண்ட் ஆஃப் தண்டர்', "புளூ ஹாரிஸான்', "வென் தெ லயன் ஃபீட்ஸ்', "தி ட்ரயம்ப் ஆஃப் த சன்' உள்ளிட்ட 29 புதினங்கள்) மட்டுமே ஏழு கோடிப் பிரதிகளை விஞ்சியதற்குக் காரணம், தன்னை ஆளாக்கிய குருநாதர் "ஸ்டூவர்ட் கோலட்' மற்றும் பதிப்பாசிரியர் "சார்லஸ் பிக்' என்று நெகிழ்ந்து தெரிவித்துள்ளார்.

"உனக்கு நன்கு புரிந்த விசயத்தைப் பற்றி மட்டுமே எழுது. உன்னுடைய பதிப்பாசிரியருக்கோ, கற்பனை வாசகர்களுக்கோ எழுதாதே. உனக்காக மட்டும் எழுது. எழுதி முடிக்கும் வரை உன் புதினங்களைப் பற்றி எவரிடமும் விவாதிக்காதே' என்ற சார்லஸ் பிக்கின் நான்கு கட்டளைகளை ஆதாரத் தூண்களாகக் கொண்டே வில்பர் ஸ்மித்தின் எழுத்து மாளிகை உலகெங்கும் பரவியதோடு, தான் எவ்வித இலக்கிய இயக்கத்திலோ, கருத்தாக்கக் குழுவிலோ பங்கு கொள்ளாமல், சக எழுத்தாளர்களுடன் பேசுவதைத் தவிர்த்து, இலக்கிய உலகின் தனி அடையாளமாகத் திகழ்ந்தார் வில்பர். பொதுவாகவே இவ்வாண்டு ஆப்பிரிக்க எழுத்துலகத்திற்கு மறுமலர்ச்சி ஆண்டாகுமென்று சொன்னால் மிகையாகாது.

தான்சானியாவைச் சார்ந்த "அப்துல் ரசாக் குர்ணா' இலக்கியத்திற்குப் பெற்ற நோபல் பரிசும், செனகால் நாட்டின் புதின ஆசிரியர் "முகமது போகர்சார்' பெற்ற உயரிய "பிரிக்ஸ் கன்கார்ட்' விருதும், தென்னாப்பிரிக்க எழுத்தாளர் "டாமன் கால்குத்' பெற்ற புக்கர் விருதும் உலக நாடுகளை ஆப்பிரிக்க இலக்கியங்கள் பக்கம் ஈர்த்துள்ளன.

தன்னால், இயல்பாக 90 விழுக்காடு திருத்தமேதுமின்றி நாளொன்றுக்கு 4000 சொற்கள் எழுத முடியுமென்றும் என்று கூறும் வில்பர், தான் எழுதுவதற்கு உயர்ந்த மலைப் பகுதிகளோ, அழகிய ஜாம்பசி ஆற்றங்கரையோ தேவையில்லை, வெறும் குட்டிச்சுவர் போதும் என்று எளிமையாகக் குறிப்பிட்டுள்ளது நினைக்கத்தக்கது.

வில்பர் ஸ்மித் மறைந்த நாள் (13.11.2021), உலகெங்கும் உள்ள வாசகர்களுக்கு கருப்பு நாளாகும். பல லட்சக்கணக்கான வாசகர்களின் இரங்கற் கடிதங்கள் அவருடைய அலுவலகத்தில் குவிந்தன.

அவற்றில் வெளிநாட்டுத் தூதர் ஒருவரின் உருக்கமான இரங்கற் குறிப்பு:-

வில்பர் ஸ்மித் அவர்களே! நீங்கள் மிகவும் நுட்பமாக விவரித்த சமதளங்களிலும் புல்வெளிகளிலும் உங்கள் நினைவுகள் என்றென்றும் பதிந்திருக்கும். உங்கள் கதைகளில் வரும் கப்பல்களை ஏந்திச் சென்ற கடல்களில் தொடர்ந்து உங்கள் நினைவுகள் பயணித்துக்கொண்டே இருக்கும். உங்களின் எழுத்துக்கள், தென்றலென எங்களை வருடி உயிர்மூச்சாய் எங்களுள் கலந்திருக்கும். ஆப்பிரிக்கா மட்டுமின்றி உலகம் மக்கள் அனைவரின் அன்பும் உங்களைப் பின் தொடர்ந்து கொண்டேயிருக்கும்! என்றென்றும் எங்களின் அன்பிற்குரியவராய் நீங்கள் திகழ்வீர்கள். உங்கள் கதைகளில் நீங்கள் அதிகம் விரும்பி எழுதிய பறவைகள் உங்கள் ஆன்மாவை அமைதி நிறைந்த விண்ணுலகத்திற்குக் கொண்டுச் செல்லும்.


சீஷல்ஸ் நாட்டிலுள்ள தனித்தீவின் உரிமையாளரான எழுத்தாளர் வில்பர் ஸ்மித் தான் வாழ்வின் அனைத்து வளங்களையும் அனுபவித்த பெருமிதத்தால், "என் மறைவிற்காக யாரும் வருந்த வேண்டாம்' என்று குறிப்பிட்டதில் வியப்பேதுமில்லை.

இந்தியாவிற்குப் பலமுறை வருகை புரிந்திருந்தாலும், தான் எழுத்தாளர் என்ற முறையில் நூல் வெளியீட்டு விழாக்களில் கலந்து கொண்ட தருணங்களே தனக்கு மிக்க மகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இவரின் பல படைப்புகள் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு அதிகளவில் விற்பனையாகியுள்ள போதிலும், அவரின் ஒரு படைப்புக் கூடத் தமிழில் மொழி
பெயர்க்கப் படவில்லை என்ற ஏக்கம் இருந்தாலும், உறுதியாக அவரின் படைப்புகள் தமிழ்மொழியில் விரைவில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்பதே நமது பேரவா.

- இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
மிழ் நாடு அரசு
 

Tags : kondattam Unquenchable light in the African jungle
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT