தினமணி கொண்டாட்டம்

கரோனா: குறைந்திருக்கிறது ஆனால்...

28th Nov 2021 06:00 AM | வனராஜன்

ADVERTISEMENT


கரோனா இன்னும் இருக்கிறதா? இல்லையா? அரசு முகக்கவசம் அணிவது அவசியம் என்கிறது. ஆனால் பெரும்பாலானவர்கள் அணிவதில்லை. கரோனாவின் இப்போதைய நிலை தான் என்ன? முதியோர் நல மருத்துவர் வி.எஸ். நடராஜனிடம் கேட்டோம்:

கரோனா தாக்கம் ஏற்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்தியாவை பொருத்தவரை அதிகளவில் தாக்கியது 60 வயதுக்கு மேற்பட்டவர்களைத்தான். உலகளவில் எடுத்துக்கொண்டால் இந்தியாவிலுள்ள முதியவர்கள் தாக்கப்பட்டது குறைவு தான் என்பது ஆறுதல் தரும் செய்தி.

முதியவர்கள் மட்டும் அதிகம் பாதிக்கப்பட என்ன காரணம்?

பெரும்பாலும் 60 வயதிற்கு மேல் இருப்பவர்களுக்கு உடலில் உள்ள நோய் எதிர்ப்பு தன்மை குறைந்துவிடும். சிறு வயதில் உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவார்கள். பெரும்பாலும் 50 வயது வரை உடலில் நோய் எதிர்ப்பு அதிகமாக இருக்கும். அதற்கு மேல் தான் பெரும்பாலானவர்கள் நீரிழிவு, ரத்த அழுத்தம், கிட்னி பிரச்னை, இருதய அடைப்பு போன்ற நோயால் பாதிக்கப்படுவார்கள். மேலும் புற்றுநோய்க்கு ரேடியோதெரபி, கீமோ தெரபி போன்ற சிகிச்சை எடுத்தவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கு சத்தான உணவுகளை சாப்பிடாமல் இருப்பது முக்கியக் காரணம். ஒருவரை நோய் தாக்க பல காரணங்கள் உள்ளன.

ADVERTISEMENT

தற்போது முதியவர்களின் நிலை?

கரோனாவிற்கு பின்பு சில முதியவர்கள் தனிமையினாலும், மனச்சோர்வினாலும், பசி குறைந்தும், எடை குறைந்தும் காணப்பட்டார்கள். அதற்கு மாறாக சில முதியவர்கள் மூன்று வேளையும் தவறாமல் உணவு உண்டு உடற்பயிற்சி இல்லாமல் உடற்பருமனாக உள்ளார்கள். கடந்த ஓர் ஆண்டுக்கு மேலாக மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளாததானால் பல முதியவர்களின் நோய்கள் தீவிரத் தன்மையடைந்துள்ளது.

அதனால் அவர்களின் உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. கரோனா மட்டுமல்லாமல் கரோனாவோடு, மழையும் சேர்ந்து முதியவர்களை வீட்டிலேயே முடக்கிவிட்டது.அதன் காரணமாக இணை நோய்களான பக்கவாதம், உதறுவாதம், மூட்டு வலி போன்ற நோய்கள் அதிகரித்துள்ளன.

கரோனாவிற்கு பின் ஏற்படும் பக்கவிளைவுகள்?

கரோனா சிகிச்சையின் போது கொடுக்கப்படும் மாத்திரைகளின் தீவிரத்தால் பக்கவிளைவுகள் ஏற்படுகிறது. உதாரணம்: ஸ்டீராய்டு மாத்திரையினால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது.

சிலருக்கு கரோனாவிற்கு பின் தலைவலி, உடல்வலி, வறட்டு இருமல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படும். ஆனால் சில வாரத்திலேயே அத்தொல்லைகள் சரியாகி விடும். தொல்லைகளுக்கான சிகிச்சையே போதுமானது கரோனா வந்தவர்கள் மூன்று மாதம் கழித்து நிமோனியா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், மூன்று வாரங்கள் கழித்து நிமோனியா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

கரோனா தடுப்பூசியின் வீரியம் சுமார் ஓராண்டுக்கு மட்டும் தான் நம் உடலில் இருக்கும் என்று கூறப்படுகிறது.இதன்படி பார்த்தால் ஓவ்வொரு ஆண்டும் தடுப்பூசி போட வேண்டிய நிலை வந்தாலும் வரலாம்.

இணை நோய்கள் இருப்பவர்களை அதிகம் பாதிக்கப்பட்டதாக சொல்கிறார்கள் சரிதானா?

ஆமாம், நீரிழிவு, ரத்த அழுத்தம், ஆஸ்துமா போன்ற இணை நோய் உள்ளவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டார்கள். முதுமை என்பது நோய்களின் மேய்ச்சல் காடு. பல நோய்கள் இருக்கும். எந்த நோய்களையும் முழுமையாக விரட்ட முடியவிட்டாலும் அவற்றின் தீவிரம் அதிகம் ஆகாமல் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது அவசியம்.

கிராமங்களைக் கூட இரண்டாம் அலை விட்டுவைக்காததற்கு என்ன காரணம்?

கிராமங்களில் உள்ள மக்களுக்கு நம்மை கரோனா என்ன செய்துவிடும் என்ற மனோபாவம் இருந்தது. இதன் காரணமாக கல்யாண வீடு, இறுதி ஊர்வலம் போன்றவற்றில் கூட்டமாக கலந்து கொண்டார்கள். சமூக இடைவெளியை பின்பற்றவில்லை. ஊசி போட்டுக்கொள்ளவில்லை இதுவே கிராமங்களை அதிகம் பாதிக்கக் காரணம். மேலும் பொது முடக்கம் என்பது அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக பாதித்தது.வெளியே செல்ல முடியவில்லை. அதனால் இருந்த நோய்கள் அதிகமாகிவிட்டன.

தடுப்பூசி போட்டவர்களையும் கரோனா தாக்குமா?

தடுப்பூசி போட்டவர்களுக்கும் கரோனா பாதிப்பு வரலாம். ஆனால் அவர்களுக்கு உயிரிழப்பு ஏற்படாது. ஆபத்தான கட்டத்திற்கு செல்லமாட்டார்கள். சாதாரண காய்ச்சல், உடல் வலியோடு போய்விடும். மூச்சு விடுவதில் சிரமம், வென்டிலேட்டர் வைத்து உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற நிலை வராது. சாதாரண காய்ச்சல், உடல் வலிக்கான மாத்திரை எடுத்துக்கொண்டு சரியாகிவிட்டார்கள். . கரோனா போய் விட்டது என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். அதனால் முகக்கவசம் அணிவதில்லை. கரோனா குறைந்துள்ளதே தவிர முழுமையாக போகவில்லை.

கரோனாவிலிருந்து விடுதலை கிடைக்க செய்ய வேண்டியது என்ன?

தினமும் மூச்சு பயிற்சி, பிராணாயாமம் செய்வது மிகவும் அவசியம். தினமும் உடற்பயிற்சியும் அவசியம். முடிந்தால் காலை அரை மணி நேரம், மாலை அரை மணி நேரம் வெயிலில் நடைப்பயிற்சி செய்யலாம். "வைட்டமின் டி' அதிகம் உள்ள உணவுகளை சேரத்துக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக : சைவ உணவுகளில் பால், தயிர், வெண்ணெய், சோயா பால், பாலாடைக் கட்டி மற்றும் பால் பொருள்கள் அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

நோய் ஏதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உணவில் நெல்லிக்காய், ஆரஞ்சு, எலுமிச்சை, கொட்டை வகைகள், பாகற்காய், தேன், காளான், பூண்டு, இஞ்சி, தயிர், மிளகு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

முடிந்தளவிற்கு குளிர்ந்த பானங்களை தவிர்த்து வெந்நீர் பருக வேண்டும். குளிர்ச்சாதனப் பெட்டியில் உள்ள உணவுகளை முடிந்தளவிற்கு தவிர்க்கவும் எல்லாவற்றிக்கும் மேலாக கரோனா வந்தால் எதிர்த்து போராடுவோம் என்ற மன உறுதியை கடைப்பிடிக்க வேண்டும்.

 


தடுப்பூசி தடுப்பு ஆயுதமா?


2020 ஜனவரியில் தடுப்பூசி வந்த போது எல்லோரும் போட்டுக் கொள்ள தயங்கினார்கள். நானே முன் வந்து போட்டுக்கொண்டேன். முறையாக ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கிறதா என்பதை பரிசோதித்து தான் ஊசி போட்டார்கள். மருத்துவர்களும், முன்களப்பணியாளர்களும் கூட போட்டுக்கொள்ளவில்லை. காரணம் பயம், பக்கவிளைவுகள். முதியவர்களிடம் ஊசி போடவில்லையா என்று கேட்டதற்கு ஊசி போட்டு கொள்வதை விட, கரோனா வந்து என்ன வேண்டுமானாலும் ஆகட்டும் என்றார்கள். 

ஒரு கட்டத்தில் ஊசி போட அனைத்து தரப்பினரும் முன் வந்த போது கரோனா தடுப்பூசி கிடைக்கவில்லை. இப்போது தான் நிலைமை சீராகி, ரயில்வே ஸ்டேஷன், வணிக வளாகம், தெருவுக்கு தெரு போட ஆரம்பித்து இருக்கிறார்கள். 70 சதவிதம் பேர் ஊசி போட்டுவிட்டார்கள். இப்போதும் கரோனா பாதிக்கப்பட்டு இறப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் எண்ணிக்கை மிகவும் குறைவு.

Tags : கரோனா Kondattam
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT