தினமணி கொண்டாட்டம்

ரத்தத்தின் ரத்தமே... - 43

28th Nov 2021 06:00 AM | டாக்டர் எஸ். அமுதகுமார்

ADVERTISEMENT

 

ஒரு மனிதனுக்கு உடலிலுள்ள எல்லாப் பாகங்களும் மிகமிக முக்கியமே. ஒன்றில்லாமல் மற்றொன்று உபயோகமில்லை. மனிதனுடைய ஒட்டுமொத்த வேலைகளையும் செய்து முடிக்க மூளை ஒரு முக்கியமான உறுப்பாக மனித உடலில் அமைந்திருக்கிறது. அதேபோன்று உடலைப் பொருத்தவரை கைகள் மற்றும் கால்கள் ஆகிய இரண்டும் மிகமிக முக்கியமானதாக இருக்கின்றன. கைகள் இல்லாமலேயே சிலர் இந்த உலகில் வாழவில்லையா? கால்கள் இல்லாமல் சிலர் வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கவில்லையா? என்று நீங்கள் நினைக்கலாம். கேட்கலாம். உடலின் அனைத்து உறுப்புகளுமே நாம் வாழ்வதற்கு மிகமிக முக்கியமே. இதில் நீ பெரிதா? நான் பெரிதா? என்ற கேள்விக்கு இடமே இல்லை. அனைத்தும் முக்கியம் தான். அனைத்தும் தேவைதான். 

கால்களைப் பொருத்தவரை உடலுக்கு முக்கிய தேவையான ஒரு பாகமாக இவைகள் இருக்கின்றன. உடலின் எடை குறைவாக இருந்தாலும் சரி கூடுதலாக இருந்தாலும் சரி உடலின் மொத்த எடையையும் தாங்குவது கால்கள்தான். நிற்க, நடக்க, ஓட, குதிக்க, மடக்க, நீட்ட, தாவ, தவழ, சம்மணம், போட்டு உட்கார, எழுந்திருக்க, நடனமாட, உடற்பயிற்சி செய்ய, அப்படி இப்படி ஆட, பாதத்தை பல திசைகளில் திருப்ப, கிடைத்த இந்த வாழ்க்கையை ஓட்ட இப்படி பலவிதமாக, பல கோணங்களில் உடல் அசைய, உடல் நகர, உடல் இயங்க, கால்கள் மிகவும் உதவியாய் உடலுக்கு இருக்கின்றது.

கைகளை மாதிரி நான்கு மடங்கு அதிக சக்தி கொண்டது கால்கள் ஆகும். கைகளால் தள்ளப்படும் எடையைவிட, நான்கு மடங்கு அதிக எடையை கால்களால் தள்ள முடியும். கால்களின் துணையில்லாமல், தனியாக கைகளால் கடின வேலைகளைச் செய்ய முடியாது. நமது உடலில் சுமார் 600 தசைகள் இருக்கின்றன. உடலின் மொத்த எடையில் சுமார் 40 சதவீத எடை கால்களில் தான் இருக்கின்றன.

ADVERTISEMENT

"ரிவெர் டான்ஸ்' என்கிற நடன நாடகத்தின் மூலம் உலகப் புகழ் பெற்ற நடிகர், டான்ஸர், டான்ஸ் மாஸ்டர் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த மைக்கேல் ரெயான் ப்லேட்லே என்பவர் 1999- ஆம் ஆண்டில் சுமார் 57.6 மில்லியன் டாலருக்கு (இன்றைய தேதியில் நம்மூர் மதிப்பு சுமார் 427 கோடி ரூபாய் ஆகும்) இன்சூர் அதாவது காப்பீடு செய்திருந்தார். ஒரு நொடியில் 35 நடன அசைவுகளை செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ள இவர், நடனத்தின்போது நகர்த்தும் ஒவ்வொரு காலடிகளுக்கும், லட்சக்கணக்கான ரசிகர்களின் வரவேற்பும், கைத்தட்டலும், ஆரவாரமும் அரங்கத்தில் உண்டாகும். 

மிக அற்புதமான நடனத்தை, தனது கால்களில் வைத்துள்ள இவரது நடனத்தை கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம். மேலைநாட்டு நடன சிகாமணி என்றுகூட இவரைச் சொல்லலாம். அந்த அளவுக்குப் புகழ் பெற்றவர். சுமார் 427 கோடி ரூபாய்க்கு தனது கால்களை இன்சூர் செய்துள்ள ,ப்லேட்லேவைப் போல், கால்பந்து வீரர்கள் டேவிட் பெக்காம், ரொனால்டோ இவர்களும் தங்களது கால்களை இன்சூர் செய்துள்ளனர். 

இப்படி உடலின் ஒவ்வொரு பாகங்களுக்காகவும், இன்சூர் செய்திருக்கும் பிரபலங்களையும், அவர்கள் இன்சூர் செய்த உடலின் பாகங்களையும் சொல்லிக் கொண்டே போகலாம். கால்பந்து வீரர்களுக்கும், நடனக் கலைஞர்களுக்கும் கால்கள் பாதுகாப்பும், கால்கள் பராமரிப்பும் ரொம்ப ரொம்ப முக்கியம். இவர்களுக்கு மட்டுமல்ல, உலகில் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் கால்கள் பாதுகாப்பு ரொம்ப ரொம்ப முக்கியம். அவசியமும் கூட.

உடலிலேயே மிகப்பெரிய தசைகள் எல்லாம் கால்களில் தான் இருக்கின்றன. உங்களுடைய கால்களில் நான்கு பாகங்களாக, தசைகள் உள்ளன. இந்த நான்கு பாக தசைகளும் கால்களில் ஒன்றோடொன்று சேர்ந்திருக்கின்றன. உடலின் மொத்த ரத்த ஓட்டத்தில் சுமார் 50 சதவீதம் ரத்த ஓட்டம் கால்களில்தான் சுற்றிக் கொண்டு இருக்கின்றன. 

பேஸ்மென்ட் என்று அவர் குறிப்பிடுவது இடுப்புக்கு கீழுள்ள பகுதியையே. உடலின் கீழ் பாதி ஸ்ட்ராங்காக இல்லாமல், மேல்பாதி  ஸ்ட்ராங்காக இருந்து உபயோகமில்லை. உடலின் கீழ்ப்பகுதி ஸ்ட்ராங்காக இருக்க, இருக்க, உடலின் மேல்பகுதி தன்னாலே ஸ்ட்ராங்க் ஆகிவிடும்.

கால்களிலுள்ள தசைகள் தான் உடலிலேயே மிகவும் வலுவான, ஸ்ட்ராங்கான, உறுதியான தசைகள் ஆகும். மனிதனுக்கு தன்னம்பிக்கையை முதலில் கொடுப்பது கால்கள்தான். வீரத்தைக் காண்பிப்பது கால்கள்தான். வேகத்தைக் காட்டுவது கால்கள்தான். தயக்கத்தைக் காட்டுவது கால்கள்தான். பயத்தைக் காட்டுவது கால்கள் தான். நவரச பாவனைகளையும் முகம் காட்டும் என்று சொல்வதுண்டு. அதுபோல உடல் செய்யும் நவரச செயல்களையும், கால்கள் காட்டும். கால்களால் மட்டும்தான் காட்டமுடியும். கால்கள் ஸ்ட்ராங்காக இருந்தால், கால்களை உறுதியாக, நிலையாக, தைரியமாக தரையில் பதித்து வைத்தால், உடல் தன்னாலே கம்பீரமாக நிற்கும். நிற்க முடியும். கம்பீரம் கால்
களில் தான் ஆரம்பிக்கின்றது.

"திருவருட்செல்வர்' என்கிற திரைப்படத்தில், "மன்னவன் வந்தானடி தோழி' என்றொரு பாடல். 

கவியரசர் கண்ணதாசன் எழுதி, கல்யாணி ராகத்தில், இசைமேதை கே.வி.மகாதேவன் இந்தப் பாடலை உருவாக்கியிருப்பார். சிவாஜி - பத்மினி நடித்துள்ள இந்தப் பாடல் காட்சியில், இருவருமே போட்டி போட்டுக் கொண்டு, தங்களது கால்களால் காட்டும் அசைவுகளையும், பாவனைகளையும், நளினங்களையும், பார்த்துக் கொண்டே இருக்கலாம். 

கால்களுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட மிக அற்புதமான பாடல் இது. ""அந்தக் காலத்தில் நாடக மேடைகளில் நான் முதலில் கற்றுக் கொண்ட விஷயம், கால்களை நிலைப்படுத்தி, உறுதிப்படுத்தி, சரியாக தரையில் பதித்து வைக்க வேண்டும் என்பதுதான். கால்களை சரியாக தரையில் பதித்துவிட்டால், உடலில், தன்னாலேயே தைரியம் வந்துவிடும். அதற்குப் பிறகு சொல்ல வேண்டிய வசனமும், காட்ட வேண்டிய உடல் பாவங்களும், தானாகவே வர ஆரம்பித்துவிடும்  நடிப்பு என்பது கால்களில் தான் தொடங்குகிறது'' என்று ஒரு பத்திரிகைப் பேட்டியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சொன்னதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். எல்லோருக்கும் மிகவும் உபயோகமான விஷயம் இது. 

ஒரு நடிகனுக்கு, ஒரு மேடைப் பேச்சாளனுக்கு கால்களை நிலைப்படுத்தி, கால்களை நன்றாக தரையில் பதித்து வைப்பது என்பது மிகமிக முக்கியம். கால்கள் சரியாக பதிந்து விட்டால், கால்கள் சரியாக நின்றுவிட்டால், லட்சக்கணக்கான மக்கள் அமர்ந்திருக்கும் பொதுக் கூட்டங்களில் கூட, பேச்சு சரளமாக வர ஆரம்பிக்கும். கால்களுக்கு தைரியம் கிடைக்கவில்லை என்றால், உடல் அங்கும் இங்கும் ஆடும். ஒரு நிலையில் நிற்காது. பேச்சு சரியாக வராது. வியர்க்க ஆரம்பிக்கும், மெதுவாக பயம் வரும். அப்புறம் எதையாவது உளற வேண்டி வரும். 

ஒருவருக்கு உடலில் முதுமை எங்கிருந்து ஆரம்பிக்கிறது தெரியுமா? தலைநரை.. அதாவது தலையில் வெள்ளை முடி ஆரம்பிப்பதிலிருந்து என்று எல்லோரும் சொல்வார்கள். இது சரியல்ல, இப்பொழுதெல்லாம் இளைஞர்களுக்குக் கூட வெள்ளை முடி வர ஆரம்பித்துவிடுகிறது. முதுமை ஒருவருக்கு அவருடைய கால்களிலிருந்து அவருடைய பாதத்திலிருந்து தான் ஆரம்பிக்கின்றது. பார்த்து நடங்கள், பார்த்து இறங்குங்கள், பார்த்து உட்காருங்கள், பார்த்து காலை வையுங்கள், பார்த்து தாண்டுங்கள் என்று எப்பொழுது உங்களை மற்றவர்கள் சொல்ல ஆரம்பிக்கிறார்களோ, அப்பொழுதே உங்களுக்கு முதுமை ஆரம்பித்துவிட்டது என்று சொல்லாமல் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள் என்று அர்த்தம். 

நிலையான,  சீரான வேகத்தில் ரத்தம் உடல் முழுவதும் நகருவதைத்தான், நாம் ரத்த ஓட்டம் என்கிறோம். இந்த செயல், 24 மணி நேரமும், ஆயுள் முழுக்க நடந்து கொண்டே இருக்கிறது. ரத்த ஓட்டம் ஆயுள் முழுக்க, ஒழுங்காக நடக்க, இருதயத்தின் சீரான துடிப்பும், ரத்தத்தை உடல் முழுக்க பாய்ச்சும் சீரான சக்தியும், வேகமும் தான். 

இருதயத்திலிருந்து ரத்தம் தலைமுதல் கால்வரை பாய்கிறது. கால்களுக்குச் சென்ற ரத்தம் மீண்டும் இருதயத்துக்கு வருகிறது. இது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. கால்களுக்குச் சென்ற ரத்தம், மீண்டும் மேலே ஏறி இருதயத்துக்கு வந்தாக வேண்டும். மேலே வந்தாக வேண்டும் என்று சொல்வது மிகச் சாதாரணமான விஷயம் அல்ல. முதலாவது மாடியில் இருக்கும் வீட்டுக்கு, தரையிலிருந்து ஒரு குடம் தண்ணீரை மேலே ஏற்ற வேண்டும் என்றால் கூட, நாம் கண்டிப்பாக  ஹெச்.பி. அல்லது    1 ஹெச்.பி. சக்தியுள்ள மோட்டாரை வைத்துத்தான், தண்ணீரை மேலே குழாய் வழியாக ஏற்ற முடியும். ஆனால் மனித உடலைப் பொறுத்தவரை, கால்களில், கால்விரல்களில் அந்த மாதிரி எந்த மோட்டாரும் கிடையாது. 

ரத்தம் தானாகவேதான் வந்தாக வேண்டும். உலகில் மனிதன் தோன்றிய காலத்திலிருந்து இன்றைய தேதிவரை கால்களுக்குப் போன ரத்தம் மோட்டார் எதுவும் இல்லாமல் தானாகத்தான் இருதயத்துக்கு வந்து கொண்டிருக்கிறது.

ரத்தம் உடலுக்குள்ளேயே, கால்களிலிருந்து மேல் நோக்கி தள்ளியாக வேண்டும். ரத்தக்குழாய்களைச் சுற்றியிருக்கும் வலுவான தசைகள், சுருங்கி விரிந்து, சுருங்கி விரிந்து ரத்தம் மேல்நோக்கி வர மிகவும் உதவியாய் இருக்கின்றன. உடலையும், குறிப்பாக கால்களையும் எப்பொழுதும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்வது இதனால்தான். ஒரு மனிதனுக்கு நம்பிக்கையை அதிகமாக்குவது கால்கள்தான். 

துணிச்சலும், தன்னம்பிக்கையும் கால்களுக்கு எப்போதும் வேண்டும். இந்த இரண்டும், கால்களுக்கு சரியாக கிடைக்கவில்லையென்றால், கைகளின் உதவியைத்தான் நாடவேண்டிவரும். 90 வயதைத் தாண்டியவர்கள் கூட, ஊன்றுகோல் உதவியில்லாமல் தனியாக நடந்து, தங்களது  அன்றாட வேலைகளை அவர்களே செய்து கொள்கிறார்கள். எனவே கால்களைப் பத்திரமாகப் பேணிக் காப்பது ஒவ்வொருவருடைய கடமையாகும்.

- தொடரும்

ADVERTISEMENT
ADVERTISEMENT