தினமணி கொண்டாட்டம்

சாமான்யர்களுக்கும் சாதனைகள் சாத்தியமே!

பிஸ்மி பரிணாமன்


கோகுல்நாத் சின்னத்திரை கலைஞர் மட்டுமல்ல... திரைப்பட நடிகர். தற்போது 9 கின்னஸ் சாதனைகளுக்கு சொந்தக்காரர்.

ஒரு கின்னஸ் சாதனை நிகழ்த்துவதற்கே பெரும் முயற்சி செய்ய வேண்டும். ஆனால் இதுவரை தனது நிலையத்தின் சார்பில், 27 கின்னஸ் சாதனைகளை நிகழ்த்தி கின்னஸ்மழையைப் பொழிய வைத்திருக்கிறார் கோகுல்நாத்.

தனது வெற்றிக் கதை குறித்து நம்மிடம் பகிர்நது கொண்டார்:

""எஸ். ஆர். எம் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்தேன். கல்லூரியில் கலை விழாக்களில் வித விதமான சர்க்கஸ் கலை வித்தைகளை வழங்கி வந்தேன். வெளிநாட்டு விடியோக்களைக் கண்டு பயிற்சி செய்து எனது திறமையை வளர்த்துக் கொண்டேன். கோவாவில் டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் வெளிநாட்டவர்கள் ஏற்பாடு செய்யும் கலை விழா ஒரு வார காலத்திற்கு ஆரம்போல் பீச்சில் நடக்கும். அந்த விழாவில் பலவித சர்க்கஸ் கலைவித்தைகள் அரங்கேறும். அதில் வாய்ப்பு கிடைக்கும் போது விழாவில் கலந்து கொண்டு மேற்கத்திய கலைஞர்களிடம் எனது சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்வேன்.

எனது நிகழ்ச்சிகளைப் பார்த்து விஜய் டிவியில் "கலக்கப் போவது யாரு.." நிகழ்ச்சிக்காக அழைத்தார்கள். அந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயனும் இடம் பெற்றிருந்தார். பிறகு மானாட மயிலாட என்று பயணம் தொடர்ந்தது. பல வகை நடனங்கள், நடிப்பு, இசை ஓவியம், உடல் பயிற்சிக்குத் தனித்தனி பயிற்சி நிலையங்கள் உள்ளன.

நடிப்பு, உடல் பயிற்சி, நடன நளினம், சாகசம் நிறைந்த கலையான சர்க்கஸ் கலைக்கு பயிற்சி நிலையம் இல்லை. தமிழகத்தில் முதல் முதலாக 2018}இல் நான் படித்த சர்க்கஸ் வித்தையை விருப்பப்படுபவர்களுக்கு சொல்லிக் கொடுக்கலாம் என்று "கோகுல்நாத் யூனிக்யூ டேலண்ட் அகாதெமி'என்ற பெயரில் அரும்பாக்கத்தில் தொடங்கினேன். தொடக்கத்தில் சுமார் 30 சிறார்கள் சேர்ந்தார்கள். கரோனா காலத்தில் பயிற்சி நிலையங்களும் மூடப்பட்டதால் ஆன்லைனில் வகுப்புகள் தொடர்ந்தன. என்னிடம் பயிற்சி பெறும் சிறார்களை ஊக்குவிப்பதற்காக கின்னஸ் சாதனை புரியலாம் என்று சென்ற ஆண்டு முடிவு செய்தேன்.

கின்னஸ் புத்தகத்தில் ஏற்கெனவே சர்க்கஸ் கலை வித்தையில் இடம் பெற்றிருக்கும் சாதனைகளை முறியடித்து புதிய சாதனை படைப்பதும், புதிதாக வித்தையை வடிவமைத்து அதில் சாதனை நிகழ்த்துவது என்று இருமுனை முயற்சியாக ஆரம்பித்தேன். சென்ற ஆண்டு பயிற்சிகள் எல்லாம் ஆன்லைனில் தொடர்ந்தது. நான், சிறார்கள் செய்யும் சாதனையை படம் பிடித்து கின்னஸ் பொறுப்பாளர்களுக்கு அனுப்புவோம். அதை ஆய்வு செய்து கின்னஸ் சாதனையாக அங்கீகரித்து சான்றிதழ் அனுப்புவார்கள். இப்படி பல முயற்சிகளை கின்னஸ் பொறுப்பாளர்கள் அங்கீகரிக்கவும் இல்லை. நாங்கள் செய்த சுமார் அறுபது முயற்சிகளில் 27 முயற்சிகளில் மட்டுமே கின்னஸ் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதில் இந்த ஆண்டு படைத்த கின்னஸ் சாதனைகள் 12. சென்ற ஆண்டு சாதனைகள் 15.

"கின்னஸ் விதிகளின் படி 16 வயதிற்குள் இருக்கும் சிறார்கள் ஒரு நிமிடத்திற்குள் சாதனையை நிகழ்த்த வேண்டும். ஒரு நிமிடத்திற்கு மேல் நிகழ்ச்சி நீளக்கூடாது. சிறியவர்களை சாதனை என்ற பெயரில் பிழிந்தெடுக்கக் கூடாது என்பதற்காக இந்த கின்னஸில் விதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பெரியவர்கள் மட்டுமே எத்தனை மணி நேரமோ, நாள்களோ எடுத்துக் கொண்டு சாதனை படைக்க அனுமதி தரப்பட்டுள்ளது.

வளையத்தை இடுப்பில் வைத்து சுழற்றுவது மாதிரி தலையால், மூக்கால் சுழற்ற வேண்டும். தலையால் ஒரு நிமிடத்தில் 141 முறை வளையத்தைச் சுழற்றியும், மூக்கால் ஒரு நிமிடத்தில் 67 முறை சுழற்றியும் நான் கின்னஸ் சாதனை நிகழ்த்தியிருக்கிறேன்.

நானும் ஐந்து வயது மகனும் சேர்ந்து ஒரே வளையத்தில் வித்தை செய்து இன்னொரு சாதனை செய்துள்ளோம். 12 அடி நீளமும் 12 அடி அகலமுள்ள காகிதத்தில் ஓரிகாமி என்ற காகிதக் கலை வடிவம் மூலம் காகிதத்தை வெட்டாமல் மடித்துக் காதல் சின்னமான இதயத்தை பெரிய வடிவில் உருவாக்க வேண்டும்.

இந்த ஆண்டு சென்னையில் நடந்த காதலர் தினப் போட்டியில் நானும் என் மனைவியும் கலந்து கொண்டு கின்னஸ் சாதனை நிகழ்த்தினோம். அங்கும் இங்கும் அலை பாயும் ஸ்கேட்டிங் பலகையில் நின்று கொண்டு அடுத்தடுத்து நான்கு பந்துகளை மேலே தூக்கிப் போட்டு கரங்களால் சுழற்ற வேண்டும். பந்துகள் கீழே விழக்கூடாது. அதற்கும் எனக்கு கின்னஸ் சான்றிதழ் வழங்கியுள்ளார்கள்.

இந்தக் கலையில் கவனம் முக்கியம். கலைப் பயிற்சியின் போது மனதை பயிற்சியில் குவிக்க வேண்டும். பயிற்சியில் கிட்டத்தட்ட எல்லா உறுப்புகளுக்கும் வேலை உண்டு. அதனால் உடல்நலம் மேம்படும். தவிர கின்னஸ் சாதனை புரிந்தவர்கள் மேல்நாடு போகும் போது பாஸ்போர்ட்டுடன் கின்னஸ் சான்றிதழையும் வைத்தால் விசா எளிதில் கிடைத்துவிடும்.

இப்போது விருகம்பாக்கத்தில் இரண்டாவது பயிற்சி நிலையத்தைத் தொடங்கியுள்ளேன். நான்கு பயிற்சியாளர்களை நியமித்திருக்கிறேன். மொத்தம் 55 சிறார்கள் பயிற்சி பெறுகிறார்கள். எனது பயிற்சி நிலையத்தின் சார்பாக நூறு கின்னஸ் சாதனைகளை நிகழ்த்தவேண்டும். அதுதான் லட்சியம். இப்போதைக்கு 27 கின்னஸ் சாதனைகள். இன்னும் 73 சாதனைகளை சாதிக்க வேண்டும்'' என்கிறார் கோகுல்நாத்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

வாட்ஸ்அப் பிரசாரத்தைத் தொடங்கினார் கேஜரிவாலின் மனைவி!

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

SCROLL FOR NEXT