தினமணி கொண்டாட்டம்

எண்ணங்கள் எல்லாமே  பிரதிபலிக்கும்!

DIN

""நான் சென்னை பையன். படிப்பு முடித்ததும் ஐ.டி.யில் வேலை. இருந்தாலும், சின்ன வயதில் இருந்து கதைக்கான ஒன்லைன் வைத்து அதை விரிவுப்படுத்தி பார்ப்பது ஒரு வேலையாகவே இருந்தது. ஆனால் படிப்புக்கும் சினிமாவுக்கும் தொடர்பே இல்லை. இருந்தாலும், சினிமா தொடர்பாக ஆங்காங்கே இருப்பேன். அப்போதுதான் ஒரு சினிமாவுக்கான திரைக்கதைக்கு எதையும் கொஞ்சம் மேலே இருந்து பார்க்க வேண்டும் என்று கற்று கொண்டேன். கிடைத்த பயிற்சிகளை கொண்டு "பஞ்சாயத்து பொட்டி' என்ற பெயரில் குறும்படம் எடுத்தேன். பல தரப்பிலும் பாராட்டுகள். நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் தனி வரவேற்பு கிடைத்தது. அதன் பின் நார்வே திரைப்பட விழாவிலும் அங்கீகாரம் கிடைத்தது. அதன் பின் "நரன்' என்ற குறும்படம். அதற்கும் தனி அடையாளம் கிடைத்தது. நிறைய கற்றுக் கொண்டே இருந்தேன்.'' - பளீச்சென சிரிக்கிறார் கிஷோர். குறும்பட உலகத்தில் இருந்து "மாயோன்' படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு படையெடுக்கும் இன்னொரு படைப்பாளி.

மாயோன் என்றால், கிருஷ்ணரை குறிக்கும்... முல்லை நிலத்தின் தலைவன். இதுதான் இந்த கதையின் அடிக்கரு. அதை வைத்து ஏக கற்பனைகளில் சினிமாவுக்காக பின்னிய கதைதான் இது. நம் எண்ணங்கள்தான் வாழ்க்கை. ஒரு விஷயத்தில் எந்தளவுக்கு திடமாக இருக்கிறோமே, அது அந்தளவுக்கு கிடைத்தே தீரும் என்பதுதான் நம்பிக்கை. ஒரு விஷயத்தை ஆழ்ந்து நோக்க வேண்டும் என்பதுதான் இறையருளின் தத்துவம். அது மனித எண்ணங்களின் ரகசியம். அந்த ரகசியத்தை நான் கொண்டு வந்திருக்கிறேன். எண்ணங்கள் எதை குறிக்கிறதோ, அதை நோக்கிதான் எல்லோரும் பயணமாகிறோம். மூடி அடைக்கப்பட்டிருக்கும் சின்ன கூடாரத்தில் இருந்து ஒரு உலகமே வெளியே வருகிறது என்பதும் உண்டு. இது நம்பிக்கைகளோடு விளையாடும் கதை. எண்ணங்கள் எல்லாமே ஏதோ ஒரு நாளில் பிரதிபலிக்கும் என்பதுதான் கதையின் அடிப்படையாக வரும். தினமும் ஏதாவது ஒரு கெட்ட விஷயம் நம்மை ஆக்கிரமித்து வரும். அது அடுத்தடுத்த நாள்களில் அப்படியே மூளைக்குள் ஏறி வரும். கெட்ட விஷயங்களை விட்டொழிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டே அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டே இருப்போம். அந்த எண்ணம் நமக்கு வருவதற்கு காரணமே, அதுதான் நடப்பதற்கான அடிப்படைகளை கொண்டு வருகிறது என்பதுதான் கதையடக்க அம்சம். 5 ஆயிரம் வருடத்துக்கு முந்திய காலத்தையும், இந்த நாளையும் இதில் இணைத்து இருக்கிறேன். இது ஒரு ரெகுலர் சினிமா இல்லை.

பெரிய சவால்கள் நிறைந்த களமாக இருக்கும் போல...?

நிச்சயமாக. இந்திய சினிமாவிலேயே இப்படியொரு சினிமா களம் வந்ததில்லை. அடுத்து என்ன படம் வந்தாலும், இதுதான் முதன்மையானதாக இருக்கும். அவற்றையெல்லாம் கதாபாத்திர சாயலில் கொண்டு வந்திருக்கிறேன்.

குற்றங்களுக்கான மூலம் எங்கே என்று பார்த்தால் அது அங்குள்ளவர்களின் திட்டங்களால்தான் நிரம்பி இருக்கும். சதுரங்க வேட்டை துரத்தல்கள் நிறைந்திருக்கும். எத்தனை நூற்றாண்டுகள் கழிந்தாலும் குற்றங்கள் குற்றங்கள்தான். எதுவுமே இங்கு புதிதாக உருவாவதில்லை. தொன்று தொட்டு எல்லா குற்றங்களும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. காலக் கட்டங்களுக்கு ஏற்ப குற்றங்களும் நவீனமயமாக்கப்பட்டு விட்டது என்பதுதான் உண்மை. 5 ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய ஒரு கிருஷ்ணர் கோயில் அகழ்வாராய்ச்சி செய்ய செல்கிறது ஒரு குழு. அந்த அகழ்வாய்வில் அவர்களுக்கு நடந்தது என்ன என்பதை விறுவிறுப்பு நிறைய சம்பவங்களோடு தொடர்பு படுத்தியிருக்கிறேன். அந்த அகழ்வாராய்ச்சியில் உள்ளவர்களின் திட்டங்களும், வாழ்க்கையும்தான் படம். சிபிராஜ், தன்யா ரவிச்சந்திரன், பகவதி பெருமாள், கே.எஸ்.ரவிக்குமார் என நடிகர்களின் முக்கிய பங்கு நிறைந்த கதை. பல கஷ்டங்களை தாங்கி கொண்டு, படத்துக்காகத் தன்னை அவ்வளவு வருத்தி நடித்திருக்கிறார்கள்.

முதல் படம்... இவ்வளவு பெரிய நம்பிக்கையா...?

பெரிய நம்பிக்கைதான். ஒரு கட்டத்தில் பயம் வந்தது. படத்தை தயாரிப்பது அருண் மொழி மாணிக்கம் சார். ஏற்கெனவே "சைக்கோ' உள்ளிட்ட படங்களைத் தயாரித்தவர். தேடி போய் கதையை சொன்னதும், அதில் அவர் அவ்வளவு ஒன்றி விட்டார். திரைக்கதையிலும் பெரும் பங்காற்றி தந்து தயாரிக்க முன் வந்தார். அவர் இருப்பதால், யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதனால் ஒரு கை பார்த்து விடலாம் என்று வந்து விட்டேன். அப்புறம் வாழ்க்கையில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது. வெவ்வேறு மாதிரி உணர்ந்தால்தான், வெற்றி - தோல்வி இரண்டுமே உறைக்கும். அனுபவங்கள் கிடைத்தால்தான், அடுத்து பலமாக எழுந்து நிற்க முடியும். நிறைய கஷ்டங்கள். ஒரு எண்ணத்தை வைத்து எவ்வளவு கொடூரமாக நடக்கலாம், எத்தனை நல்ல விதமாகவும் நடக்கலாம் என்பதுதான் கதையின் அடிப்படை . இந்த இரண்டின் உச்சத்தையும் இந்தப் படத்தின் உருவாக்கத்தின் போது நானே உணர்ந்தேன். நான் சினிமாவை "கேம்' மாதிரி நினைத்து விளையாடுகிறேன். இந்தப் படத்துக்குப் பின் இன்னும் ஏக கதைகள் வைத்திருக்கிறேன். அதுவும் வேறு இடத்தில் இருக்கும். இந்த நம்பிக்கைதான் என் மந்திரம்.

இளையராஜா இசை...

முதல் படத்திலேயே இளையராஜா சார் இசை என்பது எத்தனை பெரிய வரம். இசையின் எல்லா நுணுக்கங்களையும் இளையராஜா தொட்டு விட்டார். இனி என்ன இருக்கிறது... ஆனாலும், அவர் இசையின் இன்னொரு பரிமாணம்தான் இந்தப் படம். இந்த தலைமுறைக்கு அவர் கொண்டு போய் சேர்க்க நினைக்கிற இசை. இசையும், தியானமும் இரண்டு கண்களில் மிளிர அவ்வளவு ஆசையாக இசை மீட்டி கொடுத்திருக்கிறார். அவ்வளவு இலகுவாக கைக்கு வந்திருக்கிறது. இந்தப் படத்தின் பலமே ராஜாவின் இசைதான். ராஜாவின் இசை உள்ளே வந்த பின்னர்தான், படத்துக்கு இன்னொரு கலர் வந்து சேர்ந்தது. இப்போது இசையின் வடிவம் மாறியிருக்கலாம். உயிரோட்டம் மாறியிருக்கலாம். எத்தனை காலம் ஆனாலும் ராஜாவின் இசை மாறாது. அலைகடலும் ஆழ்கடலும் அவர்தான் என்றான பின், கரைகளும், நுரைகளும் என்னவாகும்...

படப்பிடிப்பு சவால்கள்...?

100 நாட்கள் படப்பிடிப்பு... நீங்கள் கற்பனையே செய்ய முடியாத கலர்ஃபுல் கனவை நனவாக்கி இருக்கிறேன். அர்த்தம் உள்ள பிரம்மாண்டம் என்று சொல்லலாம். ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், இசை என எல்லாவற்றின் பங்கும் ஒரு சேர வந்திருக்கிறது. "மாயோன்' படத்தின் சிறப்பு என்னவென்றால், தமிழ் ரசிகர்களுக்கு நிச்சயம் இந்தப் படம் பெரிய ஆச்சர்யத்தை கொடுக்கும். நான் இவ்வளவு நம்பிக்கையாகப் பேசும் அளவுக்குப் பிரமாதமாக வந்திருக்கிறது படம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

கா்நாடகத்தில் வேட்புமனு தாக்கல் தொடக்கம் : முதல்நாளில் 29 மனுக்கள் தாக்கல்

பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

தேஜஸ் இலகுரக போா் விமான சோதனை வெற்றி

லஞ்சம் பெற்ற வழக்கு முன்னாள் வனச்சரகா், பாதுகாவலருக்கு தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

SCROLL FOR NEXT