தினமணி கொண்டாட்டம்

வையத் தலைமை கொள்!

வனராஜன்

இளைய தலைமுறையிடம் வாசிப்பை ஊக்குவிக்க வேண்டும், அவர்களிடம் தலைமை பண்பை ஏற்படுத்தி 100 ஆளுமைகளை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ரீட் டூ லீட் (read to lead) என்ற பெயரில் 100 ஆங்கிலப் புத்தகங்களைப் படித்து அதிலிருக்கும் முக்கிய சாரம்சங்களை 8 நிமிட விடியோவாகத் தமிழில் தந்து ஊக்குவிக்கிறார் சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த விமல் தியாகராஜன். பொறியியல் மேலாண்மையில் முதுகலை பட்டம் பெற்ற இவர் அயல்நாடு மற்றும் பிரபல நிறுவனங்களில் 15 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியுள்ளார். 

""அயல்நாட்டில் இருப்பவர்கள் இந்தியா என்றாலே இளக்காரமாகப் பேசுவதைக் கண்டேன். இதனை மாற்ற நம்மால் முடிந்ததைச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் சென்னை திரும்பியவுடன் நண்பர்களின் உதவியுடன் "பி.பாசிட்டிவ் தமிழ்' என்ற வலைப்பக்கத்தை ஆரம்பித்தேன். இளைஞர்களின் லட்சிய கனவையும், நேர்மறை சிந்தனைகளையும் ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல கட்டுரைகளைப் பதிவு செய்தேன். பல துறை சாதனையாளர்களைப் பேட்டி எடுத்து வலைப்பக்கத்தில் பதிவிட்டேன். 

"நூறு இளைஞர்களை என்னிடம் தாருங்கள், பாரத தேசத்தை மாற்றிக் காட்டுகிறேன்' என்றார்  விவேகானந்தர்; பாரதி சொன்னது போன்று "வையத் தலைமை கொள்ளச் செய்ய வேண்டும்'  என்ற நோக்கில் 2017-ஆம் ஆண்டு அண்ணாநகரில் பி பாசிட்டிவ் என்ற பெயரில் பயிற்சி அகாதெமி ஒன்றை தொடங்கினேன். இதன் மூலம் இதுவரை 8 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்குத் திறன் ஆளுமை பயிற்சி, தகுதி மேம்பாடு, மொழி ஆளுமை, மொழி பயிற்சி என பல பயிற்சிகளைத் தொடர்ந்து அளித்து வருகிறேன். இந்தப் பயிற்சியின் ஒரு பிரிவு தான் வாசிப்பை மேம்படுத்த செய்வது. எனவே இளைய தலைமுறையிடம் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்த வேண்டும். இதன் மூலம் 100 தலைசிறந்த ஆளுமைகளை உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டேன்.

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், தொழிலதிபர், சமூக சேவகர், பிரபல நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள், பேச்சாளர், கல்வியாளர் என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். அவர்களை உருவாக்கும் நோக்கில் தான்  100 நாள் 100 புத்தகம் பற்றிய திட்டம் உருவானது.

 அதற்கு ஓர் எளிய வழி நல்ல புத்தகங்களை அவர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்று நினைத்து ஆகஸ்டு 3-ஆம் தேதி முதல் நவம்பர் 10 -ஆம் தேதி வரை 100 ஆங்கிலப் புத்தகங்களைப் படித்து அதில் முக்கியக் கருத்துகளை 8 நிமிட விடியோவாக்கி 100 காணொளிகளை யூடியூபில் பதிவேற்றினேன். 

இதற்காகப் பல புத்தகங்களைப் படிக்கும் அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. "ரீடர்ஸ் ஆர் லீடர்ஸ்' என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அது போன்று நாம் தலைமை பண்பை ஏற்க வேண்டுமானால் அதிகம் புத்தகங்களை வாசிக்க வேண்டும். ஒவ்வொரு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி என்று பொறுப்பு வகிக்கும் சி.இ.ஓக்கள் ஆண்டுக்கு 50 புத்தகங்களைப் படிக்கிறார்கள். அப்போது தான் அவர்களின் தலைமைபண்பு மட்டுமல்ல அவர்களின் அறிவும் விசாலமாகும் அதற்கு பெரும் துணையாக இருப்பது புத்தகங்களே. அடுத்ததாக வாழ்க்கை கல்வி.

வாசிப்பு பழக்கம் ஏற்படுத்தும் மாற்றங்கள் என்ன?

மனிதன் சிந்திக்கத் தொடங்கிய காலத்திலிருந்தே, தன்னுடைய கருத்துகளை, எண்ணங்களை, ஏதோ ஒரு வகையில் வெளிப்படுத்திக்கொண்டுதான் இருந்திருக்கிறான். அது சைகை மூலமாகவோ, சித்திரங்களை வரைதலின் மூலமாகவோ, ஒலி எழுப்பியோ மற்றவர்களுக்கு தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறான். இதன் நீட்சியாகத்தான், மொழி உருவாகி இருக்கிறது என்பது வரலாற்று உண்மை. ஆரம்பகாலத்தில் வெறும் பேச்சாக மட்டுமே இருந்த மொழி, பிறகு கொஞ்சம் கொஞ்சமாக, எழுப்பப்படும் ஒலியை பிரதானமாகக் கொண்டு, எழுத்துகளை உருவாக்கி, அதன்முலம் தங்கள் கருத்துகளை, அனுபவங்களை நம் மூதாதையர்கள் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். அதன் தொகுப்புகள் நமக்கு ஏராளமாகக் காணக்கிடைக்கின்றன. 2600 ஆண்டுகளுக்கு முன்னரே, தமிழர்களாகிய நாம் எழுத, படிக்க அறிந்திருக்கிறோம். 

வாசித்தல் என்பது நம் உயிர்முச்சு போன்றது. அதை, பழகிக்கொள்ளுதல், வழக்கமாக்கிக் கொள்ளுதல் என்பதைவிட, சுவாசித்தல் போன்று நம்முடைய வாழ்வில் இன்றியமையாததாக ஆக்கப்படல் வேண்டும். இது பெரும்பாலோரால், கடைபிடிக்கப்படுகிறது என்பதை, ஒவ்வொரு ஆண்டும் நம் புத்தகக்காட்சியில் விற்கப்படும் புத்தகங்கள் எண்ணிக்கையில் அதிகமாக போய்க்கொண்டிருக்கின்றன என்பதே சாட்சியாக இருக்கின்றது. வாசிப்பின் அவசியத்தை நம் இளைய தலைமுறையினர் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள் என்பது மிகவும் மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும். வாசிப்பு, நமக்கு அப்படி என்ன தருகிறது என்று கேட்டால், அறிவை விரிவாக்குகிறது என்பது மட்டுமல்லாமல், நம்முடைய சிந்தனையை வலுவாக்குகிறது, அறத்தை போதிக்கிறது, அன்பை அதிகப்படுத்துகிறது, பண்பை வளர்க்கிறது, அனுபவத்தை கற்றுக்கொடுக்கிறது, கற்பனைத்திறனை அதிகரிக்கிறது, இன்னும் ஏராளாமாக சொல்லிக்கொண்டே போகலாம். 

புத்தகங்கள் என்பது அரிய பொக்கிஷம். ஒருவர் தன் சுயசரிதையைப் புத்தகமாக எழுதுகிறார். அந்தப் புத்தகத்தைப் படிக்கும் நாமும் அவருடைய பல ஆண்டு கால வாழ்க்கை அனுபவத்தைக் கையடக்கப் புத்தகத்தின் மூலம் தெரிந்து கொண்டு அதிலுள்ள நல்ல விஷயங்களை நம்முடைய வாழ்க்கைக்கு பயன்படுத்துகிறோம். இவ்வாறாக எழுத்தின் பயன் -படிப்பதால் ஏற்படுகிறது.'' 

8 நிமிட விடியோ மூலம் இளைஞர்களின் வாழ்க்கையை மாற்ற முடியுமா?

எட்டு நிமிட விடியோவிற்காக நான் 19 மணி நேரம் வேலை செய்கிறேன். புத்தகத்தை முழுமையாகப் படித்து அதிலுள்ள விஷயங்களை எடுத்து எழுதி, அதனை எப்படி சொல்வது என்று தயார் செய்து, விடியோவாகப் பதிவு செய்து, அதனை எடிட் செய்து வெளியிடுவதற்கு இத்தனை நேரம் பிடிக்கிறது. சிரமமான வேலை தான். இளைஞர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்த கல்வி தான் சிறந்த ஆயுதம். தொழில்நுட்பம், அறிவியல், உற்பத்தி, உயிரியல், விளையாட்டு, கலாசாரப் பெருமை, சுற்றுலா என பல விஷயங்களை உள்ளடக்கியது இந்த விடியோ. இளைஞர்களின் இலக்கை எட்ட இந்த காணொளிகள் கட்டாயம் உதவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

SCROLL FOR NEXT