தினமணி கொண்டாட்டம்

பாரம்பரிய சின்னங்களைப் போற்றுவோம்!

21st Nov 2021 06:00 AM | கி. ஸ்ரீதரன் - தொல்லியல் துறை (ஓய்வு) சென்னை

ADVERTISEMENT


உலக மரபு வார விழா : 19 - 25.11.2021

நமது பண்பாட்டுப் பெருமையை அறிந்து கொள்ள உதவுவது நம் முன்னோர் விட்டுச் சென்ற பாரம்பரியமிக்க வரலாற்றுப் பொருட்களும், இடங்களும் ஆகும்.

புதிதாகக் கோயிலைக் கட்டுவதைக் காட்டிலும் பண்டைய கோயில்களை புதுப்பிப்பது, பராமரிப்பது மிகவும் சிறந்ததாகும். எனவே தான் பண்டைய நாளில் கோயிலைக் கட்டும் பொழுது அதனைப் பராமரிப்பதற்கும் நிலம் தானமாக அளித்தனர். இவ்வாறு அளிக்கப்பட்ட நிலம் "திருப்பணிப்புறம்', "புதுக்குப்புறம்' என்றெல்லாம் கல்வெட்டுகளில் குறிக்கப்படுகின்றன. கோயில்களில் ஏற்படும் பழுதுகளை பார்த்து திருப்பணிகள் மேற்கொள்ளவும் சிற்பிகள் நியமிக்கப்பட்டனர் என்பதை அறிய முடிகிறது.

கல்வெட்டுகள்

திருக்கோயில் சுவர்களில் பொறிக்கப்பட்டுள்ள "கல்வெட்டுகள்' வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். பண்டை நாளில் நடைபெற்ற கிராம நிர்வாகம், நீதி, தேர்தல் முறை, வேளாண்மை, பாசன முறை, நீர்நிலை பாதுகாப்பு, வரிவிதிப்பு, திருக்கோயில் நிர்வாகம் போன்ற பல அறிய செய்திகளை கல்வெட்டுகளின் வழியே அறிய முடிகிறது. இதுமட்டுமல்லாமல் வரலாற்றுச் சிறப்புமிக்க செப்பேடுகள், ஓலைச்சுவடிகள், பண்டைய காசுகள் போன்றவைகளும் பலரிடம் உள்ளன. இவையும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். இவற்றையும் நாம் போற்றிப் பாதுகாக்க வேண்டியது நமது கடமையாக விளங்குகின்றன.

வரலாற்றுச் சின்னங்கள்

ADVERTISEMENT

பாரம்பரிய - வரலாற்று சிறப்பு மிக்க வரலாற்றுச் சின்னங்களை மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறையும், தமிழ்நாடு அரசின் தொல்லியல்துறையும் போற்றிப் பாதுகாக்கும் உயரிய பணியினை மேற்கொண்டு வருகின்றன. மத்திய தொல்பொருள் ஆய்வுத்துறை இந்தியா முழுவதும் 3000-க்கும் மேற்பட்ட பல்வேறு வரலாற்றுச் சின்னங்களையும், தமிழகத் தொல்லியல்துறை 80-க்கும் மேற்பட்ட வரலாற்றுச் சின்னங்களையும் பாதுகாத்து வருகிறது.

வரலாற்றுச் சின்னங்களின் தொன்மை நிலை மாறாமல் பாதுகாப்பதே தொல்லியல்துறைகளின் நோக்கமாக அமைந்துள்ளது. மாமல்லபுரம், காஞ்சி கைலாசநாதர் கோயில், தஞ்சை, கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம் கோயில்கள், சித்தன்னவாசல், செஞ்சிக்கோட்டை போன்றவை மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. தஞ்சாவூர் - தாராசுரம் போன்ற கோயில்களில் அக்கோயில்களின் கலைச் சிறப்பு - நடைபெற்ற பணிகள், கோயில் முன்பு இருந்த நிலை போன்றவற்றை எடுத்துக் கூறும் வரலாற்றுக் காட்சியகங்களும் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பாகும்.

மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை, தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை, தஞ்சாவூர் மராட்டியர் அரண்மனை, ராமநாதபுரம் ராமலிங்க விலாசம் அரண்மனை, காஞ்சிபுரம் அருகே திருப்பருத்திக்குன்றம் சமண கோயில்கள், ஓவியங்கள், கழுகுமலை வெட்டுவான் கோயில்கள், மதுரை அருகே சமணக் குகைகள், தமிழில் கல்வெட்டுகள் போன்றவைகள் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் பராமரிக்கப்படும் குறிப்பிடத்தக்க வரலாற்றுச் சின்னங்கள் ஆகும்.

அகழ்வைப்பகங்கள்:

மேலும் அகழாய்வு நடைபெற்ற இடங்களிலும் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களிலும் வரலாற்று காட்சியகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பூம்புகார், கருவூர், கங்கைகொண்டசோழபுரம், பூண்டி, ராமநாதபுரம், குற்றாலம் போன்ற இடங்களில் உள்ள வரலாற்றுக்காட்சியகங்கள் மூலம் அப்பகுதியின் தொன்மைச் சிறப்புமிக்க சிறப்பினை அனைவரும் அறிந்து கொள்ள இயலும்.

கீழடி - ஆதிச்சநல்லூர்:

தொன்மைச் சிறப்புமிக்க கீழடி, ஆதிச்சநல்லூர் போன்ற இடங்களிலும் வரலாற்று காட்சியகங்கள்ழ அமைப்பதற்கு ஆவன மேற்கொள்ளப்பட்டு வருகிறது மகிழ்ச்சி அளிக்கின்றது.

இது மட்டுமல்லாமல் ஐக்கிய நாடுகளின் அமைப்பு சர்வதேச புராதன மற்றும் வரலாற்றுச் சிறப்பிடங்கள் பாதுகாப்புக்குழு உலக பாரம்பரியமிக்க வரலாற்று சின்னங்களை பாதுகாக்க செயல்பட்டு வருகிறது. முக்கிய வரலாற்றுச் சின்னங்கள் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டன. தமிழகத்தில் மாமல்லபுரம், தஞ்சாவூர், கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம் கோயில்கள் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டதில் நாம் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறோம். மேலும் இந்தியாவில் போன்ற அமைப்புகளும் வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

உலகப் பாரம்பரிய வார விழா

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 19-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை வரலாற்றுச் சின்னங்களின் சிறப்பினை எடுத்துக் கூறும் உலக பாரம்பரிய வார விழா நடைபெற்று வருகிறது. மாணவர்களும் பொது மக்களும் தம் பகுதியில் உள்ள வரலாற்றுச் சின்னங்களின் சிறப்பினை அறிந்து கொள்வதற்கும், அதனை போற்றுவதற்கும் ஊக்கமளிப்பது இவ்விழாவின் நோக்கமாகும். நமது உயரிய பண்பாட்டுச் சிறப்புக்கு அடையாளமாக விளங்கும் வரலாற்றுச் சின்னங்களை இந்நாளில் கண்டு மகிழ்ந்து போற்றி பாதுகாப்போம்! பெருமை கொள்வோம்!

Tags : Kondattam Let celebrate traditional symbols!
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT