தினமணி கொண்டாட்டம்

விவசாயியின் விருந்தாளிகள்!

21st Nov 2021 06:00 AM | சக்ரவர்த்தி

ADVERTISEMENT

 

முல்லைக் கொடி படர தேர் கொடுத்தான் வள்ளல் பாரி. புள்ளி மான்கள் வளர சொந்த நிலத்தை விட்டுக் கொடுத்துள்ளார் விவசாயி குருசாமி.

கோவை அவிநாசி அருகே புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் குருசாமி (70). 20 ஆண்டுகளுக்கு முன் இவரது நிலத்தில் உள்ள புற்களை மேய வந்த புள்ளி மான்களைக் கண்ட குருசாமிக்கு விரட்டத் தோன்றவில்லை. இதனால் தன்னிடமிருந்த 60 ஏக்கர் நிலத்தில் 10 ஏக்கர் நிலத்தை மட்டும் பயிர் செய்ய பயன்படுத்திக் கொண்டு மீதி 50 ஏக்கர் நிலத்தில் மான்களுக்காக விட்டுக் கொடுத்துள்ளார்.

உணவுக்காகவும் தண்ணீருக்காகவும் பசுமை தேடி மேட்டுப்பாளையம் மலைகளிலிருந்து புறப்பட்டு வந்திருக்கும் விருந்தாளிகள் இந்த மான்கள் என்று நினைத்து மான்களை அவற்றின் போக்கிலேயே வந்து போகட்டும் என்று குருசாமி விட்டுவிட்டார். புற்களை மேயத் தடையில்லை என்று தெரிந்ததும் மான்கள் அங்கேயே வாழ ஆரம்பித்தன. இப்போது புள்ளிமான்கள் இனப் பெருக்கம் செய்து சுமார் 1800 மான்கள் குருசாமியின் நிலத்தை அலங்கரிக்கின்றன.

ADVERTISEMENT

""விவசாயியான நான் இயற்கையை நேசிப்பவன். மான்கள் குழந்தைகள் மாதிரி. பயந்த சுபாவம் உடையது. அனைவராலும் விரும்பப்படுபவை. எனது நிலம் கவுசிக ஆற்றின் கரையோரம் அமைந்துள்ளது. அதனால் நிலத்தடி நீருக்குப் பஞ்சமில்லை. 1996-ஆம் ஆண்டு வாக்கில் மூன்று மான்கள் ஆற்றங்கரையோரம் வந்தன. உணவு, குடிக்கத் தண்ணீர் தேடி அல்லது வழி தவறி வந்திருக்கலாம். அவற்றில் ஒரு மான் ஆண். எனது நிலத்தில் நான் வளர்க்கும் ஆடுகள் மாடுகள் மேய்வதைக் கண்ட மான்கள் ஆடு மாடுகளுடன் சேர்ந்து கொண்டன. எனக்குத் தெரிந்து இதற்கு முன் புள்ளிமான்கள் அந்தப் பக்கம் வந்ததில்லை.

அமைதியான சூழ்நிலை... பசுமைப் போர்வை... ஆடு மாடுகள் மேய்வதற்கேற்ற புதர்கள், சிறு சிறு மரங்கள், புற்கள் எனது நிலத்தில் உள்ளதால் மான்களுக்குப் பிடித்துப் போயிருக்கவேண்டும். நாளடைவில் எனது நிலத்திலேயே தங்க ஆரம்பித்தன. ஆடுகள் மாடுகளுடன் மான்கள் சேர்ந்து வாழ்வதில் எந்த பிரச்னையும் எழவில்லை. பரஸ்பரம் நட்பாகவே இருந்து வருகின்றன. ஆற்றில் தண்ணீர் வரும் மாதங்கள் போக கோடை காலத்தில் மான்கள் தண்ணீர் குடிக்க குட்டைகள் வெட்டி அதில் தண்ணீரை நிரப்புவேன்.

மான்களை வேட்டையாட இந்தப் பகுதியில் காட்டு விலங்குகள் இல்லாததாலும், மனிதர்கள் மான்களை வேட்டையாடுதல் பெரிதாக இல்லாது இருந்ததால் மான்கள் எண்ணிக்கை ஏறுமுகத்தில் அமைந்தது. இந்தப் பகுதியில் சுமார் 1800 மான்கள் வாழுகின்றன.

இந்த எண்ணிக்கை வனத்துறை சொன்னது. எண்ணிக்கை கூடியதால் மான்கள் பக்கத்து வயல்களுக்கும் சென்று மேய ஆரம்பித்தன. தொடக்கத்தில் சக விவசாயிகள் ஒன்றும் சொல்லவில்லை. இப்போது மான்களால் விவசாயம் பாதிப்படைகிறது... பயிர்கள் அழிகின்றன... என்று புகார்கள் எழுகின்றன. மான்களைக் காடுகளுக்கு அல்லது வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று சொல்கிறார்கள். வனத்துறை இந்தக் கோரிக்கையைப் பரிசீலித்துக் கொண்டிருக்கிறது.

காலம் மாற மாற மாமிசத்திற்காகவும் தோலுக்காகவும் மான்களைப் பிடிக்க மனிதர்கள் இறங்கியுள்ளார்கள். பல கால இடைவெளிகளில் மான் வேட்டைக்காரர்கள் காவல்துறையால் பிடிக்கப்பட்டுள்ளனர். இருந்தாலும் திடீர் திடீரென்று மான் வேட்டை நடக்கத்தான் செய்கிறது.

மான்கள் தங்கள் வயலுக்குள் வராமல் தடுக்க சில விவசாயிகள். நாய்களை வளர்க்கிறார்கள். மான்கள் வயலுக்குள் நுழைவதைத் தடுக்கக் காவல் நாய்கள் மான்களைக் கடித்துக் குதறிவிடும். சில மான்கள் செத்துவிடும். கடிபட்ட மான்களுக்கு சிகிச்சை அளிக்கிறேன். விரட்டும் நாய்க்குப் பயந்து அவசரத்தில் சாலையைக் கடக்கும் போது வாகனங்களில் அடிபட்டு மான்கள் சாகும். இப்படி பல அபாயங்கள் மான்களுக்கு உண்டு.

எனது வயலில், மான்களுடன், ஐம்பது வகையான பறவைகள், மயில்கள், முயல்கள், பூனை, கீரிகள், உடும்புகள், எறும்பு தின்னி போன்ற உயிரினங்களும் உண்டு. காடுகளில் அல்லது மிருகக்காட்சி சாலைகளில் மட்டுமே காண முடியும் புள்ளி மான்களைப் பசுமைப் பின்னணியில் கண்டு மகிழ கோவை சுற்றுவட்டார மக்கள் எனது வயலுக்கு வந்து செல்கிறார்கள்.

புள்ளி மான்கள் மீதுள்ள எனது ஈடுபாடுகளைப் புரிந்து கொண்ட நண்பர் பாலசுந்தரம் தனது தென்னைப் பண்ணையிலும் மான்கள் சுற்றித் திரிய அனுமதித்துள்ளார். தமிழ்நாட்டு வனத்துறை, இயற்கை ஆர்வலர்களிடமிருந்து பாராட்டுகளும், மான்களைப் பராமரிப்பதில் வழிகாட்டல்களும், உதவிகளும் கிடைத்து வருகின்றன.

விரைவில் புள்ளிமான்களை இடம் மாற்றுவார்கள்... இடம் மாற்றம் தாமதம் ஆனாலும் எனக்கு மகிழ்ச்சிதான்... தாமதம் ஆகவேண்டும் என்பதுதான் எனது விருப்பமும். தவிர்க்க முடியாதபட்சத்தில், மான்களைப் பாதுகாப்பான முறையில் இடம் மாற்றப்பட்டு நல்லபடியாக வாழ வைக்க வேண்டும் என்பதுதான் எனது வேண்டுகோள். அதுவரை புள்ளி மான்கள் எனது நிலத்தில் துள்ளி விளையாடட்டும். அது போதும் எனக்கு'' என்கிறார் குருசாமி.

ADVERTISEMENT
ADVERTISEMENT