தினமணி கொண்டாட்டம்

ரத்தத்தின் ரத்தமே... - 42 

டாக்டர் எஸ். அமுதகுமார்


ஒரு நாள் இரவு வேளை பொன்னேரிக்குப் பக்கத்திலுள்ள கிராமத்திலிருந்து ஒரு பெண்மணி என்னை போனில் அழைத்தார். பதட்டத்துடன் போனில் பேசிய அந்தப் பெண் "சார் எங்க வீட்டுக்காரர் ரத்த ரத்தமா வாந்தி எடுக்கிறார். மயக்கமாகி அப்படியே உட்கார்ந்துட்டார்.' என்றார்.

"பயப்படாதீங்க முதல்ல நீங்க பதட்டப்படாதீங்க. நீங்க ரொம்ப பயந்தா அதப்பார்த்துட்டு உங்க வீட்டுக்காரருக்கு இருக்கிற தைரியமும் போயிடும். முதல்ல அவருக்கு தண்ணியை கொடுத்து வாயை நல்லா கொப்பளிக்கச் சொல்லுங்க. அப்புறம் கொஞ்சம் தண்ணீர் குடிக்கச் சொல்லுங்க' என்று முதலில் அவருக்கு கொஞ்சம் தைரியத்தைக் கொடுத்தேன்.

அதற்குப்பின் அந்தப் பெண்ணிடம் மெதுவாக நிதானமாக ஒவ்வொரு கேள்வியாக கேட்க ஆரம்பித்தேன்.

1) இப்பொழுது உங்க வீட்டுக்காரர் எப்படி இருக்கிறார்? பரவாயில்லை சார்.

2) இதற்கு முன்பு இதேமாதிரி ரத்தவாந்தி எடுத்திருக்கிறாரா? இல்லை சார். இதுதான் முதல் தடவை.

3) ரத்த வாந்தி வாய், மூக்கு இரண்டின் வழியாகவும் வந்ததா? இல்லை. வாய் வழியாக மட்டும்தான் வந்தது.

4) ரத்த வாந்தி என்ன கலரில் இருந்தது? சிகப்பு கலரில் தான் இருந்தது.

5) ரத்த வாந்தி பழுப்பு கலர் அல்லது காபி கலரில் இருந்திருக்குமா? ராத்திரி நேரம் என்பதால் சரியாக கவனிக்கவில்லை.

6) எவ்வளவு ரத்தம் வாந்தியில் வந்திருக்கும்? ரெண்டு கை நிறைய ரத்தம் இருந்துச்சு சார். எப்படியும் அரை லிட்டர்கிட்ட இருக்கும் என்றார்.

7) மது அருந்துவாரா? "ஆமாம்'.

8) சிகரெட் பிடிப்பாரா? "இல்லை'.

சுமார் ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ரத்த வாந்தி எடுத்த அந்த நபருக்கு. இங்கிருந்து கொண்டு அவசர சிகிச்சை எதுவும் செய்ய முடியாது. முதலுதவி சிகிச்சையும் கொடுக்க முடியாது. கொடுக்கவும் கூடாது. அதனால் ரத்த வாந்தி எடுத்தவரை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கூட்டிக் கொண்டு போகச் சொன்னேன். போக்குவரத்து வசதி இல்லாத இடங்களிலும் இரவு வேளைகளிலும் இம்மாதிரி பிரச்னைகள் சிலருக்கு வரும்போது என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக்கொண்டு இருப்பவர்கள் ஏராளம். சிலபேர் தான் மிக தைரியமாக மிக சாதுர்யமாக இம்மாதிரிப் பிரச்னைகளை சமாளித்து வெற்றி காண்பார்கள்.

உங்களிடம் வந்துள்ள நோயாளி சொல்லும் குறைகள் அனைத்தையும் பொறுமையாக கவனம் சிறிதும் சிதறாமல் காது கொடுத்து நன்றாகக் கேளுங்கள். அதை ஒழுங்காகக் கேட்டுக் கொண்டிருந்தாலே அந்த நோயாளியே தனக்கு வந்திருக்கும் நோய் என்ன என்பதை எளிமையாக அருமையாக விளக்கி நோயைக் கண்டுபிடிக்க உதவி செய்துவிடுவார். உங்களுக்கு நோயைக் கண்டுபிடிக்கும் வேலை மிச்சம். நவீன மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படும் கனடா நாட்டைச் சேர்ந்த ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக மருத்துவமனையின் பேராசிரியர் டாக்டர். சர்.வில்லியம் சொல்லிய பழமொழிதான் இது.

தனக்கு ஏற்பட்ட உடல் பிரச்னை எப்படி முதலில் ஏற்பட்டது? எங்கு ஏற்பட்டது? எதனால் ஏற்பட்டது? உடலில் ஏற்பட்டபோது என்னென்ன அறிகுறிகள் வந்தது? போன்ற விவரங்களை முழுமையாக விலாவரியாக ஒரு நோயாளி தன்னை பரிசோதிக்கும் டாக்டரிடம் சொன்னால்தான் உடனடியாக தீர்வு எப்படி காண்பது என்பதை டாக்டர் முடிவு செய்ய மிகமிக உபயோகமாக இருக்கும். நான் முதலில் சொன்ன ரத்தவாந்தி பிரச்னையும் இப்படித்தான்.

ரத்த வாந்தி - இதைப்பற்றி ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். வாய் வழியாக ரத்தமாக வாந்தி எடுத்தால் அதை ரத்த வாந்தி என்று நாம் பொதுவாக சொல்லிவிடுகிறோம். ஆனால் ரத்தம் வயிற்றுப் பகுதியிலிருந்து வருகிறதா அல்லது நெஞ்சுப் பகுதியிலிருந்து வருகிறதா என்று கண்டுபிடிப்பது சற்று கடினமான காரியமே.

உணவுப்பாதை அதாவது வயிற்றிலிருந்து ரத்தம் வாய்வழியாக வெளியே வருவதுண்டு. சுவாசப்பாதை அதாவது நுறையீரலில் இருந்தும் ரத்தம் வாய்வழியாக வெளியே வருவதுண்டு. ரத்தம் வயிற்றிலிருந்து உணவுப்பாதை வழியாக வருகிறதா அல்லது நுரையீரலிலிருந்து சுவாசப்பாதை வழியாக வருகிறதா என்பதை உடனே கண்டுபிடிக்க முடியாது.

என்னென்ன பிரச்னைகளினால் உணவுப்பாதை அதாவது வயிற்றிலிருந்து ரத்தம் வாய்வழியாக வெளியே வரும்?

1) அல்சர் அதாவது வயிற்றுப்புண்
2)மிக வேகமான குமட்டலினால் மார்புப் பகுதியின் உள்ளேயுள்ள உணவுக் குழாயில் ஏற்பட்ட கீறலிலிருந்து கசியும் ரத்தம்.
3)இரைப்பை மற்றும் குடலில் ஏற்பட்ட ரத்தக்குழாய் வீக்கம்.
4)உணவுப்பாதையிலுள்ள ரத்தக்குழாய்களில் கோளாறு ஏற்பட்டு அதனால் கசியும் ரத்தம்.
5) இரைப்பை உணவுக்குழாய்களில் ஏற்பட்ட கட்டி
6) குடல் அழற்சி நோயினால் ரத்தம் கசிவது.
7) கதிர்வீச்சு வெப்பத்தினால் குடலில் ஏற்பட்ட பாதிப்பு
8) ரத்தக்கசிவு காய்ச்சல்
9) இரைப்பைப் புற்றுநோய்
10)வாயில் ஏற்பட்ட பிரச்னைக்காக பண்ணப்பட்ட ஆபரேஷனுக்குப் பிறகு ஆபரேஷன் பண்ணிய இடத்திலிருந்து தொடர்ந்து வடிந்து கொண்டிருக்கும் ரத்தத்தை உள்ளே விழுங்கிக் கொண்டே இருப்பதனால் இரைப்பையில் சேருகிற ரத்தம் மொத்தமாக சேர்ந்து பின் அது ரத்த வாந்தியாக வெளியே வருவது
11) சில நோய்களில் மூக்கினுள் வடியும் ரத்தம் வயிற்றினுள் போய்ச் சேர்ந்து பின் அது ரத்த வாந்தியாக வெளியே வருவது
12) மிக மிக வேகமாக இருமும்போது மிக நுண்ணிய ரத்தக்குழாய்கள் வயிற்றுக்குள் வெடித்து ரத்தம் கசிவது. மேற்கூறிய பிரச்னைகளில் வயிற்றிலிருந்து ரத்தம் வாய்வழியாக வெளியே வரும். இதை ஹெமட்டமெஸிஸ் என்று மருத்துவ மொழியில் சொல்வதுண்டு. வயிற்றிலிருந்து வரும் ரத்தம் கருஞ்சிவப்பு அல்லது பழுப்பு அல்லது காபி கலரில் இருக்கும். வயிற்றிலிருந்து வரும் ரத்தத்தில் நாம் சாப்பிட்ட உணவுப்பொருள்களின் சிறு சிறு துண்டுகளும் கலந்திருக்கும்.

என்னென்ன பிரச்னைகளினால் சுவாசப்பாதை அதாவது நுரையீரலில் இருந்து ரத்தம் வாய்வழியாக வெளியே வரும்?

1)நுரையீரலில் நோய்த்தொற்று
2) மூச்சுக்குழாய்களில் நோய்த்தொற்று
3) நாள்பட்ட நுரையீரல் நோய்
4)நுரையீரல் புற்றுநோய்
5) நிமோனியா நோய்
6) காசநோய்
7) இணைப்புத்தசை அழற்சி நோய் (பைப்ரோஸிஸ்)
8)நுரையீரலுக்குச் செல்லும் ரத்தக்குழாய்கள் அடைப்பு ஏற்பட்டு வெடித்துவிடுதல்

மேற்கூறிய பிரச்னைகளில் நுரையீரலிலிருந்து ரத்தம் வாய்வழியாக வெளியே வரும். இதை ஹெமாப்டைஸிஸ் என்று மருத்துவ மொழியில் சொல்வதுண்டு. நுரையீரலில் இருந்து வரும் ரத்தம் பளிச்சென்ற சிவப்பு நிறத்தில் இருக்கும். அதோடு நுரையீரலிலிருந்து வரும் ரத்தத்தில் சளியும் நுரையும் கலந்திருக்கும். நுரையீரலிலிருந்து சுவாசப்பாதை வழியாக ரத்தம் வெளியே வரும்போது ரத்தத்துடன் சளியும் நுரையும் சேர்ந்து நுரை நுரையாக ரத்தம் வெளியே வரும். நுரையீரலிலிருந்து ரத்தம் வரும்போது பெரும்பாலானவர்கள் முதலில் இருமி இருமித்தான் ரத்தத்தைக் கக்குவார்கள். ரத்த வாந்தி சுமார் 100 மில்லி லிட்டரிலிருந்து சுமார் 1 லிட்டர் வரைகூட ஒரே நேரத்தில் வெளிவருவதுண்டு. நுரையீரலிலிருந்து ரத்தம் வருகிறதென்றால் முதலில் இருமல் வரும். அப்புறம் ரத்தவாந்தி வரும். வயிற்றிலிருந்து ரத்தம் வருகிறதென்றால் முதலில் குமட்டல் வரும். அப்புறம் ரத்தவாந்தி வரும். இரண்டு விதமான வாந்திகளிலும் வாந்தி வருவதற்கு முன்பு வாயில் இரும்பு ருசியும் மூக்கில் இரும்பு வாசனையும் தெரியவரும். சில சமயங்களில் ஒரே ஒரு முறை ரத்தவாந்தி எடுத்தால் கூட உயிருக்கே ஆபத்தை உண்டாக்கக்கூடிய அளவுக்குக் கொண்டுபோய் விட்டுவிடும்.

அதிகப்படியான ரத்தம் சுவாசப்பாதை வழியாக வெளியே வரும்போது நுரையீரல் குழாயை அடைத்து நாம் சுவாசிக்க தேவையான காற்று உள்ளேயும் போகமுடியாமல் வெளியேயும் வரமுடியாமல் மூச்சு சரியாக விட முடியாமல் மூச்சுத் திணறி இறந்து போவதற்குக் கூட வாய்ப்புண்டு. சாப்பிடும்போது தவறுதலாக ஒரு வேர்க்கடலை உணவுப்பாதையில் செல்வதற்குப் பதிலாக சுவாசப் பாதையில் சென்றுவிட்டால் கூட அது குத்தி அடைத்து அந்த இடத்தில் காயத்தை ஏற்படுத்தி, ரத்தத்தை சுவாசப்பாதை வழியாக வெளியேற்றிவிடும்.
நீங்கள் குறைவான ரத்தத்தை, இருமி, கக்கி, வாந்தியாக எடுத்தால், உடனே விரைந்து சென்று உங்கள் குடும்ப டாக்டரைப் பார்க்க வேண்டும்.

நீங்கள் அதிக ரத்தத்தை வாந்தியாக எடுத்தால், உடனே ஆம்புலன்ûஸ வரவழைத்து ஆஸ்பத்திரிக்கு விரைந்து செல்ல வேண்டும்.

- தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிரிடையே திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி

அழகில் தொலைந்தேன்... பாலி தீவு பயணத்தில் சாய்னா நேவால்!

ம.பி.யில் ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட்ட கமல் நாத்: வைரலாகும் விடியோ

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்!

திருச்சூரில் பூரம் விழா கோலாகலம்!

SCROLL FOR NEXT