தினமணி கொண்டாட்டம்

கால்களை இழந்தேன்- சேவைக்கு மாறினேன்!

16th May 2021 06:00 AM | -பிஸ்மி பரிணாமன்

ADVERTISEMENT

 


கரோனா இரண்டாம் அலையின் உக்கிரம் இந்தியர்களின் மூச்சினை நெருக்கிக் கொண்டிருக்கும் வேளையில் பல்வேறு வகையில் பலரும் களத்தில் இறங்கி உதவி வருகிறார்கள். இத்தகைய மனிதர்களுக்கு உதவி கரம் நீட்டி வரும் சேலத்தை சேர்ந்த கவிஞர் ஏகலைவன் தனது செயல்பாடுகள் குறித்து விளக்குகிறார்:

""சிறு வயதில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரயிலில் அடிபட்டு இடது காலை இழந்தவன். வளர்ந்த பிறகு தையல் கலையைக் கற்று தையலைத் தொழிலாக மாற்றிக் கொண்டவன். தமிழின் மீதுள்ள ஈர்ப்பால் கவிதைகள் எழுதி நூல்களாக வெளியிட்டுள்ளேன். வாசகன் பதிப்பகம் நடத்தி வருகிறேன். மாற்றுத்திறனாளிகளுக்கு உடலில் குறையிருந்தாலும், நம்பிக்கை இருந்தால் விதியை மாற்றி எழுதலாம். அவர்களுக்கு நம்பிக்கையை ஊட்டுவதற்காக "நம்பிக்கைவாசல்' அறக்கட்டளையைத் துவங்கி, எட்டு ஆண்டுகளாக இயங்கிக் கொண்டிருக்கிறேன். மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள், நடை பழகும் தாங்கு கட்டைகள், தையல் கருவிகள், பார்வையற்றோருக்கான பிரெய்லி பொருள்கள் போன்றவை வழங்கி வருகிறோம். சேலம் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் மாற்றுத் திறனாளிகள் எந்த உதவி வேண்டுமானாலும் எங்களை அணுகலாம்.

எங்களது அறக்கட்டளையின் லட்சியமே சமூகத்தில் நலிந்தவர்களுக்கு உதவுவதுடன் மாற்றுத்திறனாளிகள் தங்களது வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல உதவுவதுடன் சுயசார்புடன் வாழ அவர்களைத் தயார்படுத்துவதும்தான். மீனை பிடித்து உணவாக வைத்துக் கொள்ளுங்கள் என்று உதவுவதைவிட மீன் பிடிக்க கற்றுக் கொடுத்தால் அது அவர்களுக்குத் தொழிலாக.. வாழ்வின் ஆதாரமாக மாறும். தேவைக்காகப் பிறரைச் சார்ந்திருக்க வேண்டியதில்லை. நானும் ஒரு மாற்றுத்திறனாளி என்பதால் மாற்றுத்திறனாளிகளின் வலிகளையும் வேதனைகளையும் அவர்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் புறக்கணிப்புகளையும், சவால்களையும் என்னால் புரிந்து கொள்ள முடியும்.

ADVERTISEMENT

தமிழில் ஆளுமை உள்ள மாற்றுத் திறனாளிகளின் கவிதைகளைத் தொகுத்து "கவிச்சிதறல்' என்ற தலைப்பில் 2009-இல் நூலாக வெளியிட்டோம். இந்த கவிதைத் தொகுப்பில் உடல் ஊனமுற்றவர்கள் என்ற சொல்லுக்கு மாற்றாக தமிழில் மாற்றுத் திறனாளிகளின் முதல் கவிதைத் தொகுப்பு என்று பதிவு செய்தோம்.

முன்பெல்லாம் உடல் குறைபாடுள்ளவர்களை உடல் ஊனமுற்றவர்கள் என்றுதான் அழைத்து வந்தார்கள். 2010-இல் வள்ளுவர் கோட்டத்தில் உடல் ஊனமுற்றவர்கள் நடத்திய மாநாட்டில் அன்றைய முதல்வர் கலைஞர் கலந்து கொண்டார். அப்போது உடல் ஊனமுற்றவரை மாற்றுத் திறனாளி என்று அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தோம். கலைஞர் அந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு உடல் ஊனமுற்றவரை மாற்றுத் திறனாளிகள் என்று அழைக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார். மாற்றுத்திறனாளிகள் என்கின்ற சொல் உடல்திறன் இழந்தவர்கள் ஏதாவது ஒரு மாற்றுத்திறனை உருவாக்கிக் கொள்பவர்கள்' என்ற அர்த்தத்தைத் தருகிறது.

சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வீட்டில் மாற்றுத் திறனாளி இருந்தால் பெற்றோரில் ஒருவர் தான் வேலைக்குச் செல்ல முடியும். ஒருவர் குறைபாடுள்ள குழந்தையைக் கவனித்துக்கொள்ள வீட்டில் இருக்க வேண்டும். அதனால் வருமானம் குறைவாக இருக்கும். அதனால் குறைபாடுள்ள குழந்தையை சிறப்புப் பள்ளிகளில் சேர்க்கவோ, பயிற்சிகள் தரவோ பொருளாதாரம் இடம் கொடுப்பதில்லை.

அதனால் அந்தக் குறைபாடுள்ள குழந்தை அந்தக் குறையுடன் வளருகிறது. தனது தேவையைச் சொல்ல, அல்லது பூர்த்தி செய்து கொள்ளக் கூட முடியாத நிலையில் அந்தக் குழந்தை வளருகிறது. ஓர் இடத்திலிருந்து தவழ்ந்தோ, நடந்தோ போக கூடத் தெரியாமல் வளருகிறது.

இத்தகைய சிறார்களுக்கு தேவையான உடல் பயிற்சி இலவசமாக வழங்க "பிஸியோதெரபி நிலையம்' ஓன்றை சென்ற டிசம்பரில் சேலம் ஹஸ்தம்பட்டியில் தொடங்கி மாற்றுத்திறனாளிகளுக்கு பொருத்தமான உடல் பயிற்சியை பிஸியோதெரபிஸ்ட் ராஜா மூலமாக இலவசமாக கொடுத்து வருகிறோம்.

மாற்றுத் திறனாளிகளில் ஓரளவு படித்தவர்களுக்கு அவர்களுக்குப் பொருத்தமான தொழிற்பயிற்சி அளிக்கிறோம். வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தித் தர தயாராக உள்ளோம்.

பள்ளிகளில் தன்னம்பிக்கையை விதைக்கும் சொற்பொழிவுகளை நிகழ்த்துவதுடன், அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச டியூஷன் வகுப்புகளை 2017 லிருந்து 2019 வரை நடத்தி வந்தோம். கரோனா வந்ததினால் பயிற்சி வகுப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த இரண்டாம் கரோனா ஊரடங்கு நாள்களில் எல்லோரையும் பாதிக்கும் பசி, வேலை வாய்ப்பின்மையும் மாற்றுத்திறனாளிகளை அதிகமாகப் பாதிக்கும். அவர்களைப் பாதிப்பிலிருந்து மீட்கும் விதத்தில், ஒவ்வொரு மாதமும் 25 கிலோ அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருள்களை நல்லுதவியாக வழங்கிவருகிறோம்'' என்கிறார் கவிஞர் ஏகலைவன்.

ADVERTISEMENT
ADVERTISEMENT