தினமணி கொண்டாட்டம்

புவியியல் அதிசயம்!

16th May 2021 06:00 AM | -பாரதி

ADVERTISEMENT

 

மங்களூருக்கு அருகில் "மால்பே' என்ற மீனவ கிராமத்திற்கு அருகில் "புவியியல் அதிசயம்' என்று சொல்லப்படும் செயின்ட் மேரி தீவு அரபிக் கடலில் உள்ளது. 880 லட்சம் ஆண்டுகள் பழமையான பல்கோண பாறைகள் இந்தத் தீவில் இருப்பதால் தீவினை "புவியியல் அதிசயம்' என்கிறார்கள்.


மால்பே படகுத்துறையிலிருந்து தீவிற்கு விசைப்படகில் செல்ல வேண்டும். கட்டணம் பெரியவர்களுக்கு ரூபாய் 300 . சிறியவர்களுக்கு ரூபாய் 150. 30 நிமிடப் பயணம். தீவில் யாரும் வாழ்வதில்லை. விசைப்படகு தீவின் கரைக்கு அருகில் செல்ல முடியாது. அதனால் விசைப்படகிலிருந்து சின்ன படகிற்கு மாறி கரையில் இறங்க வேண்டும். தீவினுள் பிளாஸ்டிக் பொருள்களுக்கு அனுமதியில்லை. நுழைவு வாயில் பழமையை உணர்த்துவதாக அமைந்திருக்கிறது.

இந்தத் தீவில் உள்ள பாறைகள் எரிமலைக் குழம்புகளால் 88 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவானவை. பொதுவாக எரிமலை குழம்புகள் பொங்கி வரும் போது தரையில் பிரம்மாண்டமான தோசையாகப் பரவி உறையும். ஆனால் செயின்ட் மேரி தீவில் பலமுகப் பாறைத் தூண்களை நெருக்கமாக பூமியில் ஆணி போல அடித்து இறக்கியதாய் அமைந்துள்ளன. இப்படி பாறைகள் பல கோண வடிவில் அமைந்திருப்பதைத்தான் புவியியல் அதிசயம் என்கின்றனர். இந்திய புவியியல் ஆய்வு நிலையம் இந்தத் தீவினை தேசிய புவியியல் நினைவு சின்னமாக அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

88 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, எரிமலை வெடித்ததால் மடகாஸ்கர் தீவு இந்தியத் துணை கண்டத்திலிருந்து பிரிந்து போன போது இந்தத் தூண் பாறைகள் உருவானது என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகை பாறைகளை இந்தியாவில் வேறு எங்கும் பார்க்க முடியாது. அதனால் செயின்ட் மேரி தீவு புவியியல் அதிசயம் என்று பாராட்டப்படுகிறது.

வாஸ்கோட காமா கேரளத்தின் கள்ளிக்கோட்டை வரும் போது நடுவில் இந்தத் தீவில் தங்கினாராம். அவர் வைத்த பேர்தான் செயின்ட் மேரி தீவு என்பது. இந்தத் தீவு 500 மீட்டர் நீளம் கொண்டது. அதிகபட்ச அகலம் 100 மீ ட்டர். பொடிநடையாகப் பதினைந்து நிமிடங்களில் தீவைச் சுற்றி வந்துவிடலாம். குட்டித் தீவு. ஆனால் அறிவியல் முக்கியத்துவம் கொண்ட தீவு..!

இப்போது கரோனா இரண்டாம் அலை காரணமாகத் தீவிற்குப் போவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT