பிரபாதீஸ் ஷாம்ஸ் மற்றும் "ராட்சசி' புகழ் கெளதம் ராஜ் இருவரும் எழுதியுள்ள திரைக்கதையாக உருவாகி வரும் படம் " வீரப்பனின் கஜானா'. யாசின் இப்படத்தின் கதை களம் அமைத்து இயக்குகிறார். யோகிபாபு, "நான் கடவுள்' ராஜேந்திரன், ராஜேஷ், தேவா, பூஜா, ஜீவிதா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படம் குறித்து இயக்குநர் பேசும் போது...
""காட்டிற்கும் மனிதனுக்கும் பிரிக்கப் முடியாத ஒரு பந்தம் இருக்கிறது. ஆதி மனிதன் காட்டில் தான் வாழ்ந்தான். பிறகு நாகரிகம் வளர்ச்சியடைந்து கிராமம், நகரம் என்று மாறியது. இருப்பினும் காட்டின் மீது அனைவருக்கும் எப்போதும் ஒரு மோகம் இருந்துக் கொண்டே இருக்கும். குறிப்பாக குழந்தைளுக்கு காடு பற்றிய ஆர்வமும் கற்பனையும் அதிகம் உண்டு. காடுகளைப் பற்றி கேட்கவும் காட்சிகளாக பார்க்கவும் உற்சாகமாகிவிடுவார்கள். அந்தக் காட்டின் பெருமையை பேசும் படம் இது. காடு என்றால் ஞாபகம் வருவது சத்தியமங்கலமும், வீரப்பனும் தான். ஆகையால், அதை மையமாக கொண்டு கதை உருவாக்கப்பட்டுள்ளது.
வீரப்பனின் வாழ்க்கையோடு இணைந்த குரங்கு, புலி, யானை என படம் முழுவதும் சுவாரஸ்யங்கள் நிறைந்திருக்கிறது. ஃபோர் ஸ்கொயர்ஸ் ஸ்டுடியோஸ் பிரபாதீஸ் ஷாம்ஸ் தயாரிக்கிறார். தென்காசி, குற்றாலம், நாகர்கோவில் வனப்பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் தொடங்கியுள்ளன'' என்றார் இயக்குநர்.