தினமணி கொண்டாட்டம்

ரோஜா மலரே! - 87: கவர்ந்து இழுக்கக்கூடிய கண்கள்! - குமாரி சச்சு

2nd May 2021 06:00 AM | சலன்

ADVERTISEMENT

 

நானும் நாகேஷும் நடித்த தொலைக்காட்சி தொடரின் பெயர் "ரிஷி மூலம்'. அது மட்டுமல்ல, ஒரு வருடம் தீபாவளி அன்று ஒளிப்பரப்பட்ட சிறப்பு நிகிழ்ச்சி ஒன்றில் நாங்கள் இருவரும் சேர்ந்து நடித்து இருக்கிறோம். அதுவும் வெற்றிகரமான நிகழ்ச்சி தான். இப்படி நாங்கள் இருவரும் இணைந்து நடித்த எல்லா நிகழ்ச்சிகளும் மக்களுக்குப் பிடித்தவை, மக்கள் மனதை மகிழ்வித்தவை. 
உன்னதக் கலைஞன். நல்ல நண்பர். அவருக்குத் தோழமை உணர்வு உண்டு. அவருடன் நடித்த அனுபவங்கள் என்னுடைய திரையுலக வாழ்க்கையில் மறக்க முடியாதவை.
சோவுடன் நான் நிறையப் படங்களில் நடித்திருக்கேன். நான் அவருடன் நடிப்பதற்கு முன், அவர் நடித்து, இயக்கிய நாடகங்களை, நான் பார்த்திருக்கிறேன். "கோவாடிஸ்', "உண்மையே உன் விலை என்ன', "மனம் ஒரு குரங்கு', போன்ற பல நாடகங்களை இங்கே நான் பட்டியலிட முடியும். இவை பார்த்து ரசித்ததனால், அவருடன் படங்களில் நடிக்கும் சந்தர்ப்பம் வந்த போது சந்தோஷப்பட்டேன். முதன் முதலில் சோவுடன் நான் நடித்த படம் "தேன் மழை'. இது முக்தா பிலிம்ஸ் தயாரிப்பு. 
அதற்குப் பிறகு "குமரிக்கோட்டம்', "மாட்டுக்கார வேலன்', "டில்லி மாப்பிள்ளை', " வடை மாலை', "அவன் தான் மனிதன்', இப்படி நிறைய படங்களில் சோவுடன் நடித்து இருக்கிறேன். அவருடன் நடிக்கும் போது அரசியல் நையாண்டி கலந்த வசனங்களைப் படங்களில் பேசுவார். அந்தக் காட்சியின் போது நான் இருந்தால், நான் அவர் வசனத்திற்கு ஏதாவது சொல்ல வேண்டி வரும். அப்படி ஏதாவது நான் பேச, அது பிரச்னை ஆகிவிடுமோ என்று நான் ஒதுங்கிவிடுவேன். ஆனால் அவருடன் ஜோடியாக நடிக்கும் போது, அரசியல் வாடையே வீசாமல் அவர் பேசுவார். ஏனென்றால் காதலர்களுக்குள் என்ன அரசியல் என்று நினைத்தார் போலும். பெரும்பாலும் பிரச்னை இல்லாமல் அத்தகைய முறையில் நடித்து விட்டு வந்து விடுவேன். 
சோவுடன் நடிக்கும் போது பெரிதாக எனக்குப் பிரச்னை ஏற்பட்டதில்லை. ஆனால், அவருடன் பாட்டுக்கு நடனம் ஆடும் போது தடுமாறுவேன். அதற்குக் காரணம் உண்டு. நன்றாக நடனம் தெரிந்தவருடன், நாம் நடிக்கும் போது அவர் நன்றாக நடனம் ஆடுவார், நாமும் அவருக்கு ஏற்றார் போல் சிறப்பாக நடனம் ஆடவேண்டும் என்ற போட்டி மனப்பான்மையுடன் நடனம் ஆட  தோன்றும். 
டான்ஸ் மாஸ்டர் இசைக்கு ஏற்ப நடனம் கற்றுக் கொடுத்தால், அவருக்கு வருகின்ற முறையில், இசை எங்கு முடிகின்றதோ, அந்த இசைக்கு ஏற்றாற்போல் சரியாக முடித்து விடுவார். நான் தாளத்திற்கு ஏற்ப சரியாக ஆடினால், "சச்சு தான் சரியாக ஆடவில்லை. தப்பு தப்பாக ஆடுகிறார். நான் இசைக்கு ஏற்ப ஆடி, முடித்து விட்டேன்', என்று கூறி, என்னைக் கிண்டல் செய்வார். அது மட்டுமல்லாமல் யூனிட்டில் உள்ளவர்களையும், நம்ப வைத்து விடுவார். 
சோவுடைய முகபாவங்கள், உடல் அசைவுகள், தனிப் பாணியில் இருக்கும். அது சோவின் பாணி என்றே கூறவேண்டும். அவருக்கு எது பிளஸ் என்று கேட்டால், கண்டிப்பாக அது அவரது கண்கள் என்று தைரியமாகச் சொல்வேன். உருண்டையான கண்கள், அது யாரையும் கவர்ந்து இழுக்கக் கூடியவை. அது மட்டுமல்ல, அதை எந்த இடத்தில், எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை அவர் நன்றாக உணர்த்தவர். அது மட்டுமல்ல, வசனங்களை உச்சரிக்கும் முறை, அதன் டைமிங், அவருடைய டைமிங் தனி வகைப்படும். நானும் அந்த வகை டைமிங்கை சரியாகப் புரிந்து கொண்டு, அவருக்கு ஏற்றார் போல் நடிக்க பழகிக்கொண்டேன். அவர் ஒரு வசனத்தில் ஒரு பஞ்ச் வைத்து பேசுகிறார் என்றால், அதற்கு நாம் பதில் சொல்ல தயாராக இருக்க வேண்டும். 
நான் ஜோடியாக நடிக்கும் போது, அவருக்கு ஈடு கொடுத்து நடிக்க வேண்டும். நான் நடிக்கும் ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு பாணி உண்டு. நான் ஜோடி இல்லாமல் தனியாக நகைச்சுவை செய்தால், என் டைமிங்கிற்கு, அவர்கள் வர வேண்டும். "தேன் மழை' படத்தில் நான் அவருக்கு ஜோடியாக நடித்தேன். "நினைவில் நின்றவள்' என்ற படத்தில் நான் அவருக்கு ஜோடி இல்லை, நாகேஷ் தான் எனக்கு ஜோடி. அந்த காமெடியும் மக்களைக் கவர்ந்தது. "வடை மாலை' படத்தில் எங்கள் நகைச்சுவை போற்றும் படி இருக்கும். "குமரிக்கோட்டம்' படத்தில் சோ எனக்கு ஜோடி. இந்த காமெடியும் எல்லோரும் சிரித்து மகிழ்ந்தார்கள்.  
"மாட்டுக்கார வேலன்', படத்தில், எங்கள் நகைச்சுவை காட்சிகள் மக்களை மிகவும் சிரிக்க வைத்தது. அதற்கு ஒரு காரணம் உண்டு. 

 (தொடரும்)

ADVERTISEMENT
ADVERTISEMENT