நாட்டில் பேரிடர்கள் வெடித்துப் புறப்படும்போது சிரமம்படும் மக்களுக்கு உதவ நல்ல மனங்கள் உதவிக்கு வருவது இயல்பாக நடக்கும் ஒன்று.
சென்ற ஆண்டு கரோனா தோற்று பரவலின் போது நாடு முழுக்க சமூக ஆர்வலர்கள், தொண்டு அமைப்புகள் தங்களால் ஆன உதவிகளை செய்து வந்தார்கள். இப்போது வட இந்தியா முழுவதிலும் உயிர் வாயு எனப்படும் ஆக்சிஜனுக்கு பெரிய அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆக்சிஜன் அடங்கிய சிலிண்டர்களைத் திருடிச் செல்லும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது.
இந்த இக்கட்டான காலகட்டத்தில் மும்பையில் ஷாநாவாஸ் ஷேக் என்பவர் ஆக்சிஜன் சிலிண்டர்களை இலவசமாக விநியோகம் செய்து வருகிறார். அது குறித்து அவர் சொல்வது:
""சென்ற ஆண்டு கரோனா பரவலின் உக்கிரத்தை முன்கூட்டியே என்னால் அனுமானிக்க முடிந்தது. மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் மூச்சு திணறல் ஏற்பட்டு இறக்கிறார்கள். அவைகளைக் காப்பாற்ற ஆக்சிஜன் தேவை. சாதாரண கால கட்டத்தில் கேட்டவுடன் ஆக்சிஜன் சிலிண்டர்கள் கிடைத்துவிடும். ஆனால் கரோனா பரவல் காரணமாக நோயாளிகளுக்கு அதிகமாக ஆக்சிஜன் தேவையும் அதிகரித்தது. அதனால் ஆக்சிஜன் விநியோகத்திற்காக சென்ற ஆண்டின் இறுதியில் எனது விலை உயர்ந்த காரை விற்று ஆக்சிஜன் தயாரிப்பைத் தொடங்கினேன்.
ஆக்சிஜன் உரிய சமயத்தில் கிடைக்காததால் எனது நெருங்கிய நண்பனின் உறவினர் இறந்துவிட்டார். உரிய தருணத்தில் ஆக்சிஜன் கிடைத்திருந்தால் அவரை மரணத்திலிருந்து காப்பாற்றியிருக்கலாம். இந்த இழப்பு காரணமாகவும் ஆக்சிஜன் சிலிண்டர்களை விலைக்கு வாங்கி விநியோகிக்க ஆரம்பித்தேன். மும்பை மலாட் பகுதியில் UNITY & DIGNITY-என்னும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறேன். சென்ற ஆண்டில் ஆக்சிஜன் வேண்டும் என்று தினமும் ஐம்பது போன் அழைப்புகள் வரும். இப்போது தினமும் குறைந்தது ஐநூறு அழைப்புகள் வருகின்றன. நிலைமை அந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது. என்னால் இயன்ற அளவுக்கு தேவையானவர்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்கி வருவேன்'' என்கிறார் ஷேக்.
பீகார் பட்னாவைச் சேர்ந்தவர் கெளரவ் ராய். இவரை "ஆக்சிஜன் மனிதன்' என்று அழைக்கிறார்கள். இலவசமாக ஆக்சிஜன் சிலிண்டர்களை தேவைப்பட்டவர்களுக்கு வழங்கி வருகிறார்.
""கரோனா இரண்டாவது அலையால் ஆக்சிஜன் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதுவரை 1100 நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்கியுள்ளேன். நான் விநியோகிப்பது 10 கிலோ எடையுள்ள ஆக்சிஜன் சிலிண்டர்கள். சென்ற ஆண்டு என்னை கரோனா தாக்கியது. மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் ஆக்சிஜன் சிலிண்டர்கள் கிடைக்காமல் தவிப்பதை நேரில் கண்டு திடுக்கிட்டேன். நான் பிழைத்தால் கரோனா நோயாளிகளுக்கு உதவுவேன் என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டேன்.
அதிர்ஷ்டவசமாக நான் கரோனாவிலிருந்து மீண்டேன். பிறகு ஆக்சிஜன் சிலிண்டர்களை விலைக்கு வாங்கி சேமித்தது ஆக்சிஜன் வங்கியைத் தொடங்கினேன். தேவையானவர்களுக்கு நானே நேரில் ஆக்சிஜன் சிலிண்டர்களைக் எடுத்துச் சென்று கொடுத்து எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுத்து வருகிறேன். காலி சிலிண்டர்களில் ஆக்சிஜன் நிரப்ப நூறு ரூபாயே செலவாகிறது. அந்தச் செலவுகளை நானும் எனது குடும்பமும் ஏற்றுக் கொள்கிறோம்'' என்கிறார் கெளரவ் ராய்.