தினமணி கொண்டாட்டம்

திருச்சி சுருட்டும் - திருமிகு சர்ச்சிலும் 


சமீபத்தில் பாராளுமன்றத் கூட்டத்தில் விவசாயச் சட்டங்கள் பற்றிய விவாதத்தில் பங்கு கொண்ட பிரதமர் நரேந்திர மோடி : "காலனி ஆதிக்கத்தின் போது சர்ச்சிலுக்கு சுருட்டு வாங்கி அனுப்புவதற்கென்று தமிழ்நாடு தலைமைச் செயலாளர் அலுவலகத்தில் சர்ச்சில் சுருட்டு அசிஸ்டன்ட் என்று ஒரு பதவி ஏற்படுத்தப்பட்டு ஒருவர் நியமிக்கப்பட்டார். 1945-இல் சர்ச்சில் போரில் தோற்றாலும், இந்தியா சுதந்திரம் அடைந்த 1947-ஆம் ஆண்டுக்குப் பிறகும் பல பத்தாண்டுகளுக்கு அந்த அசிஸ்டன்ட் பதவி அரசில் இருந்து வந்தது. அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வுக்காக நியமிக்கப்பட்ட கமிஷனின் முன்பு இந்த அசிஸ்டன்ட் தனக்கு ஏன் சம்பள உயர்வு வழங்கவில்லை என்று கேட்ட போதுதான் இம்மாதிரி ஒரு பதவி அரசில் இருப்பதாகத் தெரிய வந்தது. அதனைப் பின்னர் சம்பள உயர்வு கமிஷன் நீக்கி விட்டது. இது போல இம்மாதிரி மாறுதல்களின் அவசியத்தை உணராது பழங் கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தால் பழங் குப்பைகளே நமது ஆக்கபூர்வமான செயல்பாடுகளைத் தடுத்து நிறுத்திக் கொண்டிருக்கும்' என்றார்.

பிரதமரின் இந்த பேச்சுக்கும், திருச்சி சுருட்டுக்கும் ரொம்பவே தொடர்பு உண்டு. அது என்ன?

இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் சர்ச்சிலுடன் இயைந்தது. 1940-ஆம் ஆண்டுகளில் ஹிட்லரின் படைகள் அட்லான்டிக் பெருங்கடலில் இங்கிலாந்து அரசுக்குக் கப்பல்களில் எடுத்துச் சென்ற ராணுவ தளவாடம், ஆயுதங்கள், உணவுகள், பிரதமர் சர்ச்சில் மிகவும் விரும்பி உபயோகிக்கும் ஹவானா சுருட்டுகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து விட்டன.

அதில் குறிப்பாக பிரதமர் சர்ச்சில் மிகவும் விரும்பிப் புகைக்கும் சுருட்டுக்களின் சப்ளை தடைப்பட்டு விட்டது. அதனால் அப்போது இந்தியாவில் ஆங்கில அரசின் பிரதிநிதியாக இருந்த சென்னை கவர்னர் உதவ முன் வந்தார். திருச்சியில் தயாரான சுருட்டுக்களை வாங்கி இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்து பிரதமர் சர்ச்சிலின் இல்லத்தை அவை அடைவதைக் கண்காணிக்க ஒரு அசிஸ்டன்ட் நியமிக்கப்பட்டார். அதனால் அவர் சர்ச்சில் சிகார் அசிஸ்டன்ட் ! (இட்ன்ழ்ஸ்ரீட்ண்ப் இண்ஞ்ஹழ் அள்ள்ண்ள்ற்ஹய்ற்) என்று அழைக்கப்பட்டார்.

காலனி அரசின் போது திருச்சியிலிருந்து பெருமளவில் ஏற்றுமதியான ஒரே பொருள் சுருட்டுதான். உறையூர் பகுதியில் மட்டும் அப்போது 4000 நிறுவனங்கள் இத்தொழிலில் ஈடுபட்டிருந்தன. ஆரம்பத்தில் கையால் தயாரிக்கப்பட்ட சுருட்டுகள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொழிற்சாலைகளில் இயந்திரங்களின் உதவியுடன் தயாராயின. திருச்சி சுருட்டு காரம், மணம், குணம் கொண்டு மக்களை வசீகரித்தது. சுருட்டு தயாரிப்பதற்கு வேண்டிய புகையிலையை அருகிலிருந்த திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் இருந்து மட்டுமில்லாமல், மேற்கு வங்காள மாநிலம் மற்றும் கடல் கடந்து இருந்த கியூபா நாட்டிலிருந்தும் கொள்முதல் செய்தார்கள்.

புகையிலையுடன் ஆப்பிள், ஆரஞ்சு, பைனாப்பிள், திராட்சை ஆகிய பழங்களி
லிருந்து எடுத்த சாறுகளைக் கலந்து பல வருஷங்களுக்குப் புளிக்க வைத்து அதன் பின் வெல்லத்தையும் தேனையும் தக்க விகிதத்தில் சேர்த்துக் கலவையாக்குவார்கள். இதிலிருந்து தயாரிக்கப்பட்ட சுருட்டிலிருந்து வெளி வரும் மணம் ஹவானா சுருட்டுகளில் இருப்பதில்லை என்று மயங்கிப் புகைத்தவர்களின் எண்ணிக்கை பல லட்சம்.

ஏற்றுமதி செய்யப்பட்ட சுருட்டுகளை வாங்கி உபயோகித்த பெரும்பான்மையான மேலை நாட்டினரைக் கவருவதற்காக திருச்சி சுருட்டுத் தயாரிப்பாளர்கள் கையாண்ட யுக்தியே இந்த சுருட்டுகளுக்கு ஆங்கிலப் பெயர் சூட்டுவது ! ஜான் மேயர், ஹண்டர் அண்ட் கோ , ஃபென் தாம்ப்ஸன் ஆகியவை வெகு சரளமாக உபயோகிக்கப்பட்ட பெயர்களில் சில. இவற்றில் இறுதியாக நின்று நிலைத்து இன்றும் வியாபாரத்தைத் தொடர்வது ஃபென் தாம்ப்ஸன் மட்டுமே ! 1900-ஆம் ஆண்டு சோலையப்பத் தேவர் என்பவர் ஃபென் தாம்ப்ஸன் அண்ட் கோ என்ற கம்பெனியை ஆரம்பித்தார். ஃபென் தாம்ப்ஸன் சுருட்டுகள் இன்றும் பல மேற்கத்திய நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகின்றன.

ஃபென் தாம்ப்ஸன் கம்பெனியைப் பற்றி எழுதும் போது "டைம்ஸ் ஆஃப் இந்தியா' ஆசிரியரான ஜக் சுரையா ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிட்டிருக்கிறார். சுரையாவின் நண்பரின் சகோதரர், அமெரிக்காவில் "வால் ஸ்ட்ரீட்' ஜர்னலில் ஆசிரியர். அவர் மூலமாக இவருக்கு ஹவானா சுருட்டுகள் தொடர்ந்து கிடைத்து வந்தன. ஒரு நாள் சுரையாவின் நண்பன் ஹவானா சுருட்டுக்குப் பதிலாக அதே உயர்ந்த தரத்தில் விளங்கும் இந்திய சுருட்டுக்களை அறிமுகம் செய்வித்தான்.

"பிளாக் டைகர்' என்ற பெயரில்கிடைத்த சுருட்டுகள் விலை அதிகமில்லாமலும் தரத்துடனும் இருந்தன. திடீரென்று அவருக்கு விற்றுக் கொண்டிருந்த புதுதில்லிக் கடைக்காரன்," இனிமேல் சரக்கு வராததால் அது கிடைக்காது' என்று கூறி விட்டான். பிளாக் டைகர் லேபிளில் இருந்த தொழிற்சாலையின் நம்பரைப் பார்த்து சுரையா தமிழ் தெரியாததால் சென்னையில் உள்ள தன் சிநேகிதி ஒருத்தியிடம் "திருச்சியில் உள்ள பிளாக் டைகர் தொழிற்சாலையில் சுருட்டு கிடைக்குமா என்று கேட்கச் சொன்னார். அவளும் அவர்களுக்குப் போன் செய்து கிடைக்குமா, அப்படியென்றால் என்ன விலை கொடுக்க வேண்டும், எப்படி பணம் அனுப்புவது என்று கேட்டிருக்கிறாள். மறு முனையில் "ஓகே' என்று சொல்லி போனை வைத்து விட்டார்கள். சரி அவ்வளவுதான் கிடைக்காது என்று இருந்த போது ஐந்து நாள் கழித்து அழகாகப் பேக் செய்யப்பட்டு ஆறு பெட்டிகள் நிறைய " பிளாக் டைகர்' சிகரெட்டுகள் சுரையாவை வந்தடைந்தன. !

உலகப் புகழ்பெற்ற எழுத்தாளரான சர் கானன் டாயில் தமது "எ ஸ்டடி இன் ஸ்கார்லட்' நாவலில் ஷெர்லக் ஹோம்ஸ் என்னும் துப்பறிவாளரை அறிமுகம் செய்தார். ஒரு கொலையைப் பற்றி ஷெர்லக்கும் அவரது நண்பர் வாட்சனும் பேசுவார்கள்: "சந்தேகத்துக்குரிய கொலையாளி ஓர் ஆண். அவன் ஆறடி உயரம். நடுத்தர வயதுக்காரன். அவனது பாதங்கள் உருவத்துக்கு சம்பந்தமில்லாமல் சிறியவை. கவர்ச்சியற்ற ஆடை, அழுத்தமான பூட்ஸ் அணிந்தவன். தவிர திருச்சினாப்பள்ளி (ஆங்கிலேயர்கள் அழைத்த விதம் அப்படி ) சுருட்டு பிடிப்பவன் !

1938-இல் "தி லேடி வேனிஷஸ்' என்று ஒரு ஹிட்ச்காக் படம் வந்தது. காணாமல் போய்விட்ட ஓர் இளம் பெண்ணைத் தேடிப் போகும் துப்பறிவாளர் (நடிகர் மைக்கேல் டெர்தேரவ்) தனது நண்பனிடம் "வேண்டுமென்றால் ஒரு திருச்சினாப்பள்ளி சுருட்டைக் குடித்துப் பார் !' என்று கூறுவான்.

ஜி. கே செஸ்டர்ட்டன் என்னும் பிரபல ஆங்கில நாவலாசிரியரின் கதையில் ஒரு பாத்திரம் இந்தியாவுக்கு வருவான். அவன் திருச்சினாப்பள்ளி சுருட்டு விற்கும் கடையைத் தேடிப் போகும் போது அக்கடையில் கைகலப்பு ஏற்பட்டு விடும் என்று நாவலாசிரியர் குறிப்பிட்டிருப்பார் !

இதையெல்லாம் விட நோபல் பரிசு பெற்ற அர்ஜென்டினாவைச் சேர்ந்த இலக்கிய ஆசிரியர் ஜார்ஜ் லூயி போர்ஹே தன்னுடைய "தி அப்ரோச் டு அல்முட்டாசிம்' என்னும் சிறுகதையில் திருச்சி சுருட்டு பற்றி எழுதியிருக்கிறார்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எல்லைகளில் தீவிர வாகனச் சோதனை

திருமருகல் ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று இலவசமாக சுற்றிப் பாா்க்கலாம்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேக்கேதாட்டு அணை கட்டப்படும்: டி.கே.சிவகுமாா்

மக்களவைத் தோ்தல்: 2-ஆம் கட்டத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவு

SCROLL FOR NEXT