தினமணி கொண்டாட்டம்

ஹசமூகத்தோடு பேசும் கதை!

DIN

"ஒரு சமூகத்தின் நீதி கல்வி கூடங்களில்தான் பிறக்கிறது. அங்கே இருந்துதான் ஒவ்வொரு சமூகமும் முதல் ஒளியை வாங்கிக் கொள்ள முடியும்.'' இரண்டே வார்த்தைகளில் கதையின் ஆழம் பேச தொட்டுப் பார்க்கிறார் இயக்குநர் செரா. கலையரசன். நீண்ட கால சினிமா அனுபவங்களோடு களம் காணும் புதுமுக இயக்குநர். படத்தின் பெயர் "குழலி'.  ""இன்றைய சினிமா மிகவும் துணிச்சலாக பேச வேண்டிய விஷயம் இது. அதனால்தான் ஒரு கை பார்ப்போம் என இறங்கி வந்து விட்டேன். ஏதோ ஒரு விதத்தில் எல்லோரும் ஏதோ ஒரு விஷயத்துக்கு பொறுப்பாகி விடுகிறோம். வறுமை, ஆதிக்க சக்திகளின் பண பலம் என நிறைய விஷயங்கள் இதன் பின்னணியில் உண்டு. இந்தியாவின் வல்லரசு கனவு... சந்திரனுக்கு விண்கலம் என பெருமைகளை பேசிக் கொண்டிருக்கிற நாம், இன்னொரு பக்கம் ரணங்களை உள்நோக்கி பார்ப்பதில்லை. அப்படி ஒரு பார்வை இது முன் வைக்கும்.  தீர்க்கமான அரசியல் பார்வையும் இதில் இருக்கிறது. இது சமூகத்தோடு பேசும் கதை'' ஆவலோடு கரம் கொடுத்து பேசுகிறார். 

கதையின் திரை பாணி வடிவம் எப்படி...

ஒரு கல்விச் சாலை  என்பது, ஒரு சமூகம். ஒரு தேசம். அங்கிருக்கும் சூழலையும் சக மாணவர்களையும் அனுசரிக்க முடியாமல் போனதுதான் இங்கே பல பேருக்கான பிரச்னை. அது வெறும் வாடகை சத்திரம் அல்ல. அது வாழ்க்கையை செதுக்கும் பட்டறை களம். ரசவாதக் கூடம். மாறுபவனும் இருக்கிறான். மாற்றப்படுகிறவனும் இருக்கிறான். எல்லா கல்விச் சாலைகளிலும்  யாரோ ஒருவன் வீட்டுக்கு அடங்காமல் வந்து சேருகிறான். யாரோ ஒரு மாணவனுக்கு காதல் பூக்கிறது. ஒருவனுக்கு மரணம் நிகழ்கிறது. யாரோ ஒருவன் கலைஞனாகிறான். கவிதை எழுதுகிறான். அரசியல் கற்று உணர்கிறான். ஒருவன் குற்றவாளியாகிறான். நிறைய பேர் திருந்துகிறார்கள். யாரோ ஒருவன் தன்னைத்தானே கண்டுபிடித்துக் கொள்கிறான் வெகு நாள்களுக்கு பிறகு... பள்ளி, கல்லூரி என்பது ஒரு வனத்தை கடந்த மாதிரி இருக்கிறது எல்லோருக்கும். இதுதான் கதையின் அடிப்படை. இன்றைய கல்வி சூழல், அரசியல், ஜாதியம் எல்லாவற்றையும் கொண்டு வருவதில் சவால். ஒரு அளவுக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறோம். இன்றைய கல்வியும், சமுதாயச் சுழலும் சீர் கெட்டு கிடக்கிறது. 

சமுதாயம் வேறாகவும், வளரும் மாணவ சமுதாயம் வேறாகவும் இருப்பது பல சிக்கல். சமுதாயம் மாணவர்களோடு பொருந்தி போக முடியவில்லை. இது மாதிரி ஒவ்வொரு இடமும் கவனிக்கத் தோன்றும். 

 
விமர்சனங்கள் அதிகம் இருக்கும் போல....

எல்லாம் உண்டு.  விமர்சனங்களும்தான்.  குறிப்பாக தனி மனித வாழ்வு தொடங்கி அரசியல் வரைக்குமான ஏக விமர்சனங்கள் இருக்கும். இங்கே அரசியல் என்பது மக்கள் புரட்சி, தேர்தல், ஆட்சி என்பது மட்டுமே அல்ல... கல்வி, வேலை, தனி மனித வளர்ச்சி, குடும்பம், உறவுகள் வரை அந்த வார்த்தை ஊடுருவிக் கிடக்கிறது. குருஷேத்திர யுத்தமும் அரசியல்தான். யூதாஸ் கொடுத்த முத்தமும் அரசியல்தான். நீங்கள் எதை தருகிறீர்கள்... எதை பெறுகிறீர்கள்... என்பது அல்லவா முக்கியம். அற்பத்துக்கும் சொற்பத்துக்கும் அரசியல் என்ற பெயரை எதற்காகவோ பயன்படுத்துகிறோம். அவரவரது வளர்ச்சிக்கும் வாழ்க்கைக்கும் பெயர்தான் கல்வி என்றாகி விட்டது. அரசியல் செல்வாக்கு இருந்தால் அவர் ஒரு கல்லூரி தொடங்கி, கல்விமான் ஆகி விடலாம்  இந்த தேசத்தில். கொஞ்சம் உள் நோக்கி பார்த்தால், எல்லாவற்றுக்கும் நாமே காரணமாகி இருப்போம். அது தவறு.. இது தவறு... எனப் பேசிப் பேசியே நமக்குள் இருக்கும் தவறுகளை சரி செய்ய தவறி விடுகிறோம். எவ்வளவு திட்டமிடல்களோடு இருந்தாலும், அவனையறியாமல் அந்த நாள்களை இந்த சமூகமும், அரசியலும் மாற்றி எழுதி விடுகின்றன. உன்னை சரி செய்து கொள்... உலகம் சரியாகி விடும் என்பதுதான் இந்த கதையின் நீதி. அதை கல்வி, மாணவப் பருவம்  கொண்டு உரசியிருக்கிறேன்.  

வேறு என்ன எதிர்பார்க்கலாம்....

இளைஞனுக்கு பொறுப்பு வேண்டும் என்கிற நேரத்தில், இந்த சமூகத்தின் மீது அவர்களுக்கு வெறுப்பு இருக்கிறது என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒரு தேசம் அதன் இளைஞர்களை அனுசரிக்க முடியாததுதான் இங்கே பிரச்னை. அதுவும் இளைஞர்களை பெரும்பான்மையாக கொண்ட இந்திய சமூகத்தில் இது பெரும் பிரச்னை. சுதந்திரத்துக்கும் கனவுக்கும் இடையில் சிக்கிக் கொண்டு திண்டாடும் இளைஞர்கள் எத்தனை பேர். வேலையையே சந்தோஷமாகவும் காதலாகவும் அனுபவிக்கும் இளைஞர்களுக்கு சரியான அங்கீகாரம் இல்லாமல் போனதுதான் இங்கே துரதிருஷ்டம். ஒரு கட்டத்தில் நிராகரிப்புகளும், புறக்கணிப்புகளும் மலிந்து விட்ட இந்த சமூகத்தின் மேல் இளைஞர்களுக்கு கோபம் வருவது இயல்புதான். மற்ற பிரச்னைகள் எல்லாவற்றையும் விட, கல்வியால் எழுகிற பாகுபாடுகள் இங்கே பெரிய பிரச்னை. அதை விட ஜாதியம்.  ஒரு சினிமா இரண்டு மணி நேரம்தான். ஆனால், ஒவ்வொரு நாள் வாழ்க்கையும் இங்கே 24 மணி நேரம். இங்கே சந்திக்கும் முகங்கள், சம்பவங்கள், தத்துவம், துயரம், சந்தோஷம் இப்படி எத்தனையோ இருக்கின்றன. வாழ்க்கைதான் நாம் யோசிக்கவே முடியாத சினிமா. கற்பிக்கப்பட்ட கல்வி, அதன் நியாய, தர்மங்கள் எல்லாமும்தான் இந்த வாழ்க்கை. ஏதேதோ யோசனைகளில் இருக்கும் போது, திடீரென்று ஓர் உணர்வு எழும். அதை மனசும் ஆமோதிக்கும். சில நேரங்களில் அந்த உணர்வு எந்த எல்லைக்கும் எடுத்து செல்லும். அப்படியான உணர்வுதான் இந்த சினிமா.   எல்லாம் அடைந்த பின் அன்புக்கு ஏங்குகிறோம். வன்மம் இல்லா உலகை அடைய தவிக்கிறோம். சந்தோஷங்களுக்கு காத்திருக்கிறோம். எப்போதும் பரிசுத்தமான காதலுக்குப் பரிதவிக்கிறோம். ஒருகணமும் மறு கணமுமாக மாறுவதுதான் மனித மனம்.  அப்போது உணரும் ஒரு தனிமைதான்  நாம் யார் என்று உணர வைக்கும். அப்படி உணர்ந்த ஒரு சங்கதிதான் இந்த கதை.  ஜாதி, மதம், மொழிகளை கடந்து நிலைத்து நிற்பது அன்பும், மனிதநேயமும்தான் என்று உணர வைக்கும் களம். பின்னணியில் நிஜ சம்பவங்களும் இருக்கலாம். 

"காக்கா முட்டை' விக்னேஷை கொண்டு வந்திருக்கீங்க போல...

பெரிய நட்சத்திரங்களை அணுகி பேசியிருக்கலாம். ஆனால், இங்கே அதற்கு வேலை இல்லை. நீங்கள், நான், நாம் எல்லோருமே கடந்து போன ஒரு நிகழ்வு இது. அதனால், அதையொட்டியே கதாபாத்திரங்களை கொண்டு வந்தேன். "காக்கா முட்டை' விக்னேஷ், ஆரா என இருவருமே உங்களுக்கு நல்ல அறிமுகம்தான். கதைக்கும், சூழலுக்கும் பொருந்தி வந்தார்கள். வாழ்க்கையிலிருந்து அந்நியம் காட்டாத முகங்கள் இன்னும் இருக்கிறார்கள். கார்த்திக் நேத்தாவின் பாடல்கள் கதைக்கு இன்னும் பலம். உங்கள் வாழ்க்கையிலிருந்து விலகாத சினிமா இது.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT