தினமணி கொண்டாட்டம்

ராயப்பேட்டையல்ல, கலைஞர்கள் கோட்டை!

பாடகர் டி.கே.எஸ்.கலைவாணன்

ரத்தினம் தெருவும் தாண்டவராயன் தெருவும் சந்திக்கும் இடத்தில் நடிகர் டி.எஸ். துரைராஜ் வீடு உள்ளது. அவருடைய பிள்ளைகள் எல்லாம் எனக்குத் தோழர்கள். அச்சந்திப்பின் இடப்புறத்தில் எங்கள் பெரியப்பாவும் படத் தயாரிப்பாளருமான டி.கே. முத்துசாமி வீடு உள்ளது. அப்பகுதிக்கு கணபதி காலனி என்று பெயர். அதன் அருகில் உள்ள பக்கத்து வீட்டில் புகழ் பெற்ற சாக்ஸபோன் வித்வான் கத்ரி கோபால்நாத் குடியிருந்தார்.

திரைப்பட இயக்குநர் பி.மாதவனும், இசையமைப்பாளர் எஸ்.எம். சுப்பையா நாயுடுவும் இதே தெருவில் தான் குடியிருந்து வந்தனர். அவர் வீட்டின் எதிர்புறத்தில் தான் புகழ்பெற்ற தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் மற்றும் கவிஞர் ஈரோடு தமிழன்பனும் வாடகை வீட்டில் குடியிருந்தனர். அருகாமையில் உள்ள பீட்டர்ஸ் சாலையில் பிலிம் நியூஸ் ஆனந்தன் தம் சொந்த வீட்டில் வசித்து வந்தார்.

கோபாலபுரம் பகுதியில் திரைப்பட தயாரிப்பாளரும் "முரசொலி' பத்திரிகையாசிரியரும், மத்திய முன்னாள் அமைச்சருமான முரசொலி மாறன் வீடு உள்ளது. அருகில் உள்ள கணேஷ் தெருவில் எம்.ஜி.ஆரின் நிரந்தர ஒப்பனையாளர் பீதாம்பரம் வீடும் உள்ளது. அவர் மகன் தான் புகழ்பெற்ற திரைப்பட இயக்குர் பி.வாசு. தற்போது கணேஷ் தெருவில் உள்ள வீட்டை படக்கம்பெனி அலுவலகமாக மாற்றிவிட்டு, அவ்வை சண்முகம் சாலையிலேயே புதுவீடு கட்டி குடும்பத்துடன் வசிக்கிறார்.

அருகில் உள்ள கோபாலபுரம் 6-ஆவது தெருவில் புகழ்பெற்ற திரைப்பட வில்லன் நடிகர் எம்.என்.நம்பியார் வீடு உள்ளது. ஐந்து கிரவுண்டுக்கும் மேல் உள்ள நிலத்தில் வரிசையாக நான்கு வீடுகள் இருந்தன. பின்புறத்தில் மாடுகளை வளர்த்து, சுத்தமான கறந்த பசும்பாலைத்தான் அருந்துவார். அந்தத் தெருவில் உள்ள மற்ற வீடுகளுக்கும் பால் விநியோகம் செய்து வந்தார்.

ஆண்டுதோறும் பெரும்பாலான திரைப்படக் கலைஞர்களுக்கு மாலை போட்டு சபரிமலைக்கு அழைத்துச் சென்றவர் நம்பியார் தான். விரதமுறைகளை இவர் குழுவில் உள்ளவர்கள் கடுமையாக அனுசரிக்க வேண்டும். அனைவருக்கும் இவர்தான் பெரிய குருசாமி. சபரிமலை சந்நிதானத்தில் இவர் கட்டிய தங்கும் விடுதி இவர் பெயரால் இன்றும் இயங்கி வருகிறது. முதன் முதலாக சபரிமலையில் அமைந்த தனியார் தங்கும் விடுதி இவருடையதுதான்.

அவர் தலைமையில் கிட்டத்தட்ட அறுபதுக்கு மேல் ஐயப்ப சாமிமார்கள் அவர் வீட்டிலிருந்து மூன்று நான்கு சிறப்பு பேருந்துகளில் கோலாகலமாக சபரிமலைக்குப் புறப்பட்டுசெல்வார்கள். அவர் வீட்டு வளாகத்திலேயே புறப்படுவதற்கு முன் பெரிய அளவில் ஐயப்ப பூஜை, ஆராதனை மற்றும் அன்னதானம் நடைபெறும். புகழ்பெற்ற பாடகர்கள் எல்லாம் அந்தப்பூஜையில் கலந்து கொண்டு கச்சேரி செய்வார்கள். நம்பியார் மறைந்த பிறகு, தற்போது அந்த வீடுகள் இடிக்கப்பட்டு, அடுக்குமாடி குடியிருப்புகளாக மாறிவிட்டன. அதன் ஒரு பகுதியில் அவர் குடும்பத்தார் வசித்து வருகின்றனர்.

மியூசிக் அகாதெமியின் பின்புறத்தில் உள்ள கணபதி (முதலி) தெருவில் புகழ்பெற்ற மிருதங்க வித்வானும் தமிழக அரசுக் கலைஞராக எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் இருந்த வரும் 98 வயது வரை வாழ்ந்து மறைந்த மதராஸ் ஏ.கண்ணன் வீடு இருந்தது. அதற்கு அடுத்து புதுப்பேட்டை தோட்டத்தெருவில் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தம் தொடக்கக் காலத்தில் அதாவது சென்னைக்கு வந்த புதிதில் குடியிருந்தார். அப்போது தான் "அபூர்வ ராகங்கள்' படத்தில் நடித்திருந்தார்.

அருகாமையில் மலையாள திரைப்பட உலகின் அந்நாளைய சூப்பர் ஸ்டார் பிரேம் நசீர், தம் தம்பி பிரேம் நவாசுடன் குடியிருந்து வந்தார். மற்றொரு மலையாள நடிகரும், தமிழ்ப்படங்களிலும் நிறைய நடித்தவருமான அப்பா நடிகர் டி.எஸ்.முத்தையா குடியிருந்தார். இவர்தான் "கர்ணன்' படத்தில் சகுனி வேடம் ஏற்று நடித்திருந்தார். பிரேம் நசீர் நிறைய தமிழ்ப்படங்களில் நடித்துள்ளார். பிற்காலத்தில் பிரேம்நசீர் மகாலிங்கபுரம் லேடிமாதவன் சாலையில் பங்களா கட்டிக்கொண்டு சென்றுவிட்டார்.

அருகில் லட்சுமிபுரம் என்ற புகழ்வாய்ந்த பகுதி உள்ளது. அங்கு ஒரு புகழ்பெற்ற பெருமாள் கோயிலும் உண்டு. அதன் அருகில் உள்ள சந்நிதி தெருவில் புகழ் வாய்ந்த நாடகாசிரியரும், எழுத்தாளரும், திரைப்பட வசன கர்த்தாவுமான கவிஞர் எஸ்.டி.சுந்தரம் வீடு இருந்தது. அதன் அருகில் புகழ்பெற்ற ஆன்மிக பேச்சாளர் பேராசிரியர் முனைவர் சாரதா நம்பியாரூரன் வீடு இருந்தது. தற்போது அது அடுக்குமாடி வீடாகிவிட்டது. தற்போது அவர் மயிலை முத்துகிருஷ்ணன் தெருவில் வசித்து வருகிறார்.

அவ்வை சண்முகம் சாலையில், "தில்லானா மோகனாம்பாள்' தந்த புகழ் பெற்ற எழுத்தாளரும், ஜெமினி அதிபர் வாசனின் நெருங்கிய நண்பரும், ஜெமினியின் பல படங்களுக்கு வசனம் எழுதி, துணை இயக்குராகப் பணியாற்றியவரும் சிறந்த கவிஞருமான கொத்தமங்கலம் சுப்பு வீடும் உள்ளது. அங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் சனிக்கிழமை தோறும் புகழ் பெற்ற இசைக்கலைஞர்கள் இசையரங்கு நிகழ்த்துவார்கள். நானும் கூட இசையரங்கு நிகழ்த்தி இருக்கிறேன்.

அவர் என் தந்தையார் மறைந்த அதே நாளில் ஓராண்டு இடைவெளியில் பிப்ரவரி 15-ஆம் தேதி மறைந்தவர். அவருடைய மகன் நாராயணனும் நானும் கோபாலபுரம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வகுப்புத் தோழர்கள். 11-ஆம் வகுப்பு வரை படித்தோம். தற்போது அந்த வீடு இடிக்கப்பட்டு அடுக்குமாடி குடியிருப்புகளாகக் கட்டப்பட்டு விட்டது. அதில் சுப்பு மூத்த மகன் வழக்கறிஞர் விஸ்வநாதன், தம் சகோதர, சகோதரிகளுடன் குடும்பத்துடன் தனித்தனி குடியிருப்புகளில் வசித்து வருகின்றார். அந்த வளாகத்தில் வாயிலில் கொத்தமங்கலம் சுப்பு மார்பளவு சிலை உள்ளது சிறப்பு.

அதே சந்திப்பில் நடிகர் ரஞ்சன் குடியிருந்தார். "சத்தியமே லட்சியமாய் கொள்ளடா' என்று , தேவரின் "நீலமலைத்திருடன்' படத்தில் குதிரையில் அமர்ந்து பாடிக்கொண்டே வருவாரே, அவர் தான். தற்போது வகாப் மேன்சன் என்ற பெயரில் உள்ள அந்த கட்டடத்தில் மின்வாரிய அலுவலகமும் மேலும் சில கடைகளும் உள்ளன. அப்படியே கிழக்குப்புறம் வந்தால், எம்.ஜி.ஆர் சென்னையில் வாங்கிய முதல்வீடு உள்ளது. "தாய்வீடு' என்று அந்த இல்லத்துப் பெயர். நாங்கள் இந்த சாலைக்கு வந்த நாளிலிருந்தே இந்த வீடும் உள்ளது. ஆம்! அன்றே இதனை வாங்கிவிட்டார் எம்.ஜி.ஆர். அந்த இல்லத்தில் தான் எம்.ஜி.ஆர் தம்முடைய அண்ணன் எம்.ஜி. சக்ரபாணி குடும்பத்தோடு வாழ்ந்து வந்தார். "நாடோடி மன்னன்' திரைப்பட படப்பிடிப்பு நடைபெறும் போதெல்லாம் அவர் இந்த வீட்டில் தான் இருந்திருக்கிறார்.

எம்.ஜி.சக்ரபாணி குடும்பம், எம்.ஜி.ஆர் குடும்பம் ஆகியவற்றைச் சேர்ந்த அனைவரும் எங்கள் குடும்பத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர்களாதலால், நான் சிறுவயதில் என் தாயாருடன் இந்த வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவேன். எம்.ஜி.சக்ரபாணியின் பிள்ளைகள் எம்.ஜி.சி. சுகுமார் (திரைப்படக் கதாநாயகன்) பிரபாகர் ஒளிப்பதிவாளர், ராஜேந்திரன், பாலு மற்றும் சகோதரர்கள் அனைவரும் எனக்கு நெருங்கிய நண்பர்கள். அதில் சுகுமார் என்னுடன் தொடக்கப்பள்ளியில் ஒன்றாகப் படித்தவர். இவர்களுள் பாலும் நன்றாகப் பாடுவார். திரைப்படத்தில் கூட பின்னணி பாடியிருக்கிறார்.

"நாடோடிமன்னன்' படத்தில் நடிப்பதற்காக ஓர் ஆண் சிங்கத்தை இந்த வீட்டிலேயே எம்.ஜி.ஆர் வளர்த்து வந்தார். வீட்டில் நாய் வளர்ப்பதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் சிங்கத்தை வளர்த்தவர் எம்.ஜி.ஆர் ஒருவராகத்தான் இருக்க முடியும். அவ்வாறு அவர் வளர்த்த சிங்கத்தைப் பார்க்க போயிருந்தோம். எம்.ஜி.ஆர் வீட்டில் இருந்தார்.

நான் அருகில் செல்ல மிகவும் பயந்தேன். என் பயத்தை போக்கும் விதமாக என் கையைப் பிடித்து கூண்டுக்கு அருகில் கொண்டு சென்று காட்டினார் எம்.ஜி.ஆர். நான் கூச்சலிட்டேன். அவர் சமாதானப்படுத்தி தைரியமூட்டினார். "எதற்கும் பயப்படக்கூடாது' என்றார். இந்த காட்சிகளை பார்த்து கொண்டு எம்.ஜி.ஆரின் துணைவியார் சிரித்துக் கொண்டே என்னை வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். பின்னர், இதைக் கேள்விப்பட்ட எனது தாயார் சற்று பயந்து விட்டார். என் தாயாரும் ஜானகி அம்மாவும் நெருங்கிப் பழகியவர்கள். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அந்த சிங்கத்தின் கர்ஜனையைக் கேட்டு பயந்த காரணத்தால், பத்து நாள்களிலேயே படப்பிடிப்பு முடிந்தவுடன் அதனை சென்னை சென்ட்ரலுக்கு அருகாமையில் இருந்த மிருகக்காட்சி சாலைக்கு அன்பளிப்பாக கொடுத்துவிட்டார் எம்.ஜி.ஆர். தற்போது அந்த மிருகக்காட்சி சாலையும் வண்டலூருக்கு மாற்றப்பட்டது .

அந்த வீட்டுக்கு எதிர்ப்புறத்தெருவில் தான் நாராயணன் கம்பெனி என்னும் புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனமும், திரைப்பட விநியோக அலுவலகமும் இருந்தன. அதன் உரிமையாளரும் அங்குதான் வசித்து வந்தார். தற்போது இந்த அவ்வை சண்முகம் சாலையில்தான் ஹேமமாலினி திருமண மண்டபமும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிலையமும் இருக்கின்றன.

ராயப்பேட்டைப் பகுதியில் மேலும் சில குணசித்திர நடிகர்களும், துணை நடிகைகளும் கூட இருந்தனர். குறிப்பாக பொன்னுசாமி தெருவில், நாடக திரைப்பட நடிகர் பக்கிரிசாமி மற்றும் கலைவாணர் என்.எஸ்.கேயுடன் நிறையப் படங்களில் நடித்த சி.எஸ்.பாண்டியன் ஆகியோரும் வசித்து வந்துள்ளனர்.

ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் ஓட்டல் சுவாகத் அருகில் நாடகக் காட்சியமைப்புகளை வரைந்து தரும் புகழ்பெற்ற ஓவியர் கே.மாதவன் பிள்ளையுடைய சாந்தி ஆர்ட்ஸ் நிறுவனம் இயங்கி வந்தது. அவரும் அங்கேயே வசித்து வந்தார். அந்த சந்திப்பின் முனையில்தான் வழக்கறிஞர் வி.பி.ராமன் இல்லம் உள்ளது. அதில் அவரது மகன் நடிகர் பி.எல்.மோகன்ராம் வசித்து வருகிறார்.

கே.மாதவன் பிள்ளை, தந்தையாரின் புகழ்பெற்ற டி.கே.எஸ்.நாடக சபையின் ஆஸ்தான காட்சியமைப்பாளர். அவர் வரைந்து கொடுத்த தேசபக்தர் சிதம்பரனார் நாடகத்தில் வரும் சுதேசிக்கப்பல், சிவகாமியின் சபதத்தில் வரும் மதம் கொண்ட யானை, அரண்மனை , மாட மாளிகைகள், ராஜராஜசோழனில் வரும் தஞ்சைப் பெருவுடையார் கோயில் மற்றும் பெரிய நந்தி சிலை ஆகியவை மிகவும் புகழ் வாய்ந்தவையாகும்.

ஸ்ரீபுரம் முதல் தெருவில், புகழ் பெற்ற புல்லாங்குழல் கலைஞர் மாலா சந்திரசேகர் இருக்கிறார். இவர் புகழ் பெற்ற புல்லாங்குழல் கலைஞர்கள் சிக்கில் நீலா மற்றும் குஞ்சுமணி ஆகியோரில் நீலாவின் புதல்வியாவார். அதற்கு கிழக்குப்புறம் உள்ள வி.எம். தெருவில் தான் புகழ்பெற்ற பக்திப் பாடகர் பித்துக்குளி முருகதாஸ் வாழ்ந்து வந்தார்.

இத்தகைய கலைஞர்கள் நிறைந்த இந்த பேட்டையில் பல கலைஞர்களின் வீடுகள் விற்கப்பட்டு விட்டன. சில கலைஞர்கள் மறைந்தும் விட்டனர். இருப்பினும் இத்தனை கலைஞர்கள் ஒரு சேர இப்பகுதியில் வசிது வந்ததால் இந்த ராயப்பேட்டை "கலைஞர்கள் கோட்டை'யாக என்றும் நினைவில் நிற்கும் பகுதியாக விளங்கி வருவது சிறப்பான ஒன்றாகும்.

இவ்வாறு ஏராளமான கலைஞர்களைக் கொண்ட இந்த ராயப்பேட்டை பகுதியைப் போல சென்னை மாநகரின் வேறு எந்த பகுதியிலும் இவ்வளவு புகழ் பெற்ற கலைஞர்கள் ஒரே பகுதியில் வாழ்ந்தது இல்லை. ஏறக்குறைய 63 கலைஞர்களுக்கும் மேல் ஒரே பகுதியில் குடியிருந்தது இந்த ராயப்பேட்டையில் தான். இப்போது நீங்களே சொல்லுங்கள். இது ராயப்பேட்டையா? இல்லை கலைஞர்கள் கோட்டையா?

(நிறைவுற்றது)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு: பேஸ்புக்- நெட்பிளிக்ஸ் உறவு?

வெளியானது வீ ஆர் நாட் தி சேம் பாடல்

தி பாய்ஸ் - டிரெய்லர்

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

SCROLL FOR NEXT