தினமணி கொண்டாட்டம்

கற்றல் - மொழிக்கான போர்க்களமல்ல! - பேராசிரியர் சாலமன் பாப்பையா

ஜெயப்பாண்டி


சாமானியரின் தமிழ் ஆசான்... எளிய மக்களுக்கும் தமிழ் இலக்கிய ரசனையை ஊட்டிய பாவலர்...பாரதியின் கவிதை தொடங்கி கம்பனின் காவியம் வரை  பாமரத் தமிழருக்கும் பக்குவமாய் அறிமுகம் செய்தவர்...

படித்தவர்களால் வகுப்பறைகளுக்குள்ளே சிறைப்படுத்தியிருந்த தாய் மொழியின் சங்க இலக்கியம் முதல் தற்போதைய அறிவியல் இலக்கியம் வரை கடைக்கோடி தமிழருக்கும் அறிமுகம் செய்துவைத்தவர்.

ஏதாவது ஒரு துறையில் பிரபலமாகிவிட்டால் பலரும் திரைத்துறையை நோக்கி செல்வதே வழக்கம். ஆனால், திரைத்துறையினரையே பட்டிமன்ற மேடையை நோக்கி ஓடி வர வைத்தவர்தான் மதுரை பேராசிரியர் சாலமன் பாப்பையா.

ஓடையாய் தொடங்கி, கல்லிலும், முள்ளிலும் பயணித்து பிரவாகமாய் கடலை நோக்கிப் பெருகி செல்லும் வைகையை போலவே பாப்பையாவின் தமிழ் பயணமும் வலியும்,வேதனையும் கடந்து சாதனை நிறைந்ததாகும். குக்கிராம இலக்கிய மன்ற விருது முதல் மாநில அரசின் கலைமாமணி விருது வரை பெற்ற பாப்பையாவுக்கு மத்திய அரசு சமீபத்தில் பத்மஸ்ரீ விருது வழங்கி தமிழுக்கு மரியாதை செய்துள்ளது.

பட்டிமன்றத்துக்காக முதன்முறையாக பத்மஸ்ரீ  விருதைப் பெற்ற பேராசிரியர் சாலமன் பாப்பையாவை மதுரை ஞானஒளிவுபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினோம்:

உங்கள் இளமைக்காலம் பற்றி பகிர்ந்து கொள்ளுங்களேன்?

மதுரை திருமங்கலத்துக்கு அருகேயுள்ள சாத்தங்குடி சொந்த ஊர். அப்பா சுந்தரம், அம்மா பாக்கியம், உடன் பிறந்தவர்களில் 4 சகோதரர்கள், 4 சகோதரிகள். நான் 9 -ஆவதாகப் பிறந்தேன். அப்பாவும், அம்மாவும் நெசவுத் தொழிலில் கிடைத்த சொற்ப வருவாயில்தான் குடும்பத்தை நடத்திவந்தனர். முதல் உலக யுத்தத்தால் நெசவுத் தொழில் நசியத் தொடங்கியதால் மதுரையில் ஆரம்பிக்கப்பட்ட மதுரா கோட்ஸை நம்பி கிராமத்தை விட்டு மதுரைக்கு குடும்பம் இடம் பெயர்ந்தது. இளமையில் வறுமையின் பிடியில்தான் வாழ்க்கை நகர்ந்தது.

உங்களது படிப்புக்கு பிள்ளையார் சுழி போட்ட பள்ளி எது? 

ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில் உள்ள வெள்ளிவீதியார் பள்ளியில்தான் (தற்போது அது மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியாக உள்ளது) 4- ஆம் வகுப்பு வரை படித்தேன். பின்னர் டிஎல்சி எனும் பள்ளியில் 6 -ஆம் வகுப்பு வரையிலும், அதன்பின் தல்லாகுளம் அமெரிக்கன் கல்லூரி பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்தேன். அதன்பின் இண்டர்மீடியட் 2 ஆண்டு அமெரிக்கன் கல்லூரியிலும், அங்கேயே பி.ஏ.பொருளாதாரம் இரண்டாண்டு படித்து முடித்தேன்.

படிப்பு முடிந்ததும் அரசுப் பணிக்குத் தேர்வெழுதியதால் செங்கல்பட்டில் வருவாய்த்துறையில் பணியும் கிடைத்தது. ஆனால், நண்பர்கள் முதுகலைத் தமிழ் படிக்க வற்புறுத்தி உதவியதால் தியாகராஜர் கல்லூரியில் முதுகலைத்தமிழ் படித்தேன். படிப்பை முடித்ததும் வேலூர் ஊரிஸ் கல்லூரியில் விரிவுரையாளராகச் சேர்ந்தேன்.

உங்களது முதல் மேடை அறிமுகம் எப்படி அமைந்தது?   

பள்ளியில் 3 -ஆம் வகுப்பில் பேச்சுப் பயிற்சி வகுப்பில் ஆசிரியர் எழுதிக் கொடுப்பதை மனனம் செய்து ஒப்பித்தேன். அப்போது நடந்த உலகப் போர் குறித்த பேச்சுப் போட்டியில் எனக்கு பரிசு கிடைக்கவில்லை.

பள்ளியில் நடந்த பேச்சுப் பயிற்சி வகுப்புகளே எனது மேடைக்கு அடித்தளம். அப்போது நாடகத்திலும் பங்கேற்பேன். அமெரிக்கன் கல்லூரி பள்ளியில் திருவள்ளுவர் கழகத் தலைவராக இருந்தபோது பேசியுள்ளேன்.
வேலூர் ஊரிஸ் கல்லூரியில் படிக்கும்போதுதான் முதன்முறையாக ஒரு கிராமத்தில் பாரதி விழாவுக்குச் சென்று பேசினேன். அமெரிக்கன் கல்லூரியில் விரிவுரையாளராக இருந்தபோது பேச்சுக்கலை பாடத்தை நடத்தினேன். என்னை பிரபலப்படுத்தியது. எட்டையபுரம் பாரதி விழாவே என்னை கொல்கத்தா வரை சென்று பேசும் அளவுக்கு பிரபலப்படுத்தியது.அதைத் தொடர்ந்தே பாரதி விழா பட்டிமன்றம் என குன்றக்குடி அடிகளார் தலைமையில் பேசத் 
தொடங்கினேன்.

இதுவரை எத்தனை பட்டிமன்ற மேடைகளில் பேசியிருப்பீர்கள்?   

இதுவரை 7 ஆயிரம் பட்டிமன்றங்களில் பேசியுள்ளேன். அதில் பெரும்பாலானவை நடுவராக இருந்து செயல்பட்டதுதான். தனியுரையாக 500 மேடைகளில் பேசியிருப்பேன்.

தங்களுக்குப் பிடித்த பேச்சாளர்கள் என்று யார் யாரை குறீப்பிடுவீர்கள்? 

பள்ளி வயதில் திருக்குறள் முனுசாமி, கல்லூரி அளவில் "திருவாசகமணி' மற்றும் அண்ணா, கருணாநிதி, சி.பி.சிற்றரசு, கம்யூனிஸ்ட் ராமமூர்த்தி, ஜீவானந்தம் ஆகியோரது பேச்சை ரசித்துக் கேட்டுள்ளேன்.

தமிழில் பிடித்த துறை எது?

சங்கத்தமிழை விரும்பிப்படிப்பேன். வரலாற்று பின்னணியோடு கூடிய இலக்கியம் எனக்கு மிகவும் பிடிக்கும். தற்போது புறநானூறுக்கு உரை எழுதி நூலாக்கியுள்ளேன்.

தமிழைத் தவிர்த்து பிற மொழி ஈடுபாடு உண்டா?

சம்ஸ்கிருதம் படிக்க விரும்பினேன். அதற்கு முயற்சி எடுத்தும் பொருளாதார நிலையால் சம்ஸ்கிருதத்தை படிக்க முடியவில்லை. அதைக்கற்கவில்லை என்ற ஆதங்கம் எனக்குண்டு. தமிழைப் போலவே சம்ஸ்கிருதத்திலும் ஏராளமான இலக்கியங்கள் உள்ளன. ஒவ்வொரு மொழியும் மற்றொரு மொழியோடு சேரும்போது சிலவற்றை இழந்தும், சிலவற்றை பெற்றும் மேம்படும். ஆகவே, தமிழுடன் சேரும் சம்ஸ்கிருதத்தை பகையுணர்வுடன் பார்ப்பது சரியல்ல.

ஆங்கிலம், சம்ஸ்கிருதம் இவை குறித்த உங்கள் கண்ணோட்டம் என்ன?

ஆங்கிலம் எங்கோ இருந்து வந்த மொழி. அதை லாபம் எனக்கருதி ஏற்போமானால், நமது நாட்டு மொழியான ஏராளமான இலக்கியச் செழுமையுடைய சம்ஸ்கிருதத்தை ஏற்பதில் என்ன தவறு இருக்கிறது. கற்றல் என்பது மொழிக்கான போர்க்களமல்ல. மக்களிடையேயான பகையுணர்வால் அவர்கள் பேசும் மொழியையும் பகையுணர்வோடு பார்ப்பது என்பது சரியான பார்வையல்ல.

அனைத்து மனிதர்களிடத்திலும் இருப்பதைப் போலவே மொழிகளிலும் நிறை, குறை உண்டு.ஆகவே, ஆங்கிலத்தில் புலமை பெற்றவராக இருப்பதை பெருமையாகக் கருதும் நாம்,சம்ஸ்கிருதத்திலும் தேர்ந்த புலமை பெற்றால் தமிழுக்கு பெருமையே சேர்ப்பவர்களாக இருப்போம். "யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என உலகில் பல பகுதிகளில் வாழும் தமிழர்கள் ஒரு மொழியை மட்டும் அறிந்திருப்பது என்பது நடைமுறை சாத்தியமில்லை.

ஹிந்தி குறித்த உங்கள் பார்வை என்ன?

ஹிந்தி எதிர்ப்பு என்பது ஒரு மொழி மீது மற்றொரு மொழியின் ஆதிக்கம் எனும் அடிப்படையிலே பார்க்கப்படுகிறது.அதனால் அரசியல் கண்ணோட்டத்துடன் எந்தவொரு மொழியையும் பார்க்கக்கூடாது. 

பேச்சாளர் என மட்டுமே பெரும்பாலானோர் தங்களை அறிந்த நிலையில்,இலக்கியவாதியாக தங்களை அறியச்செய்தது திருக்குறள் உரைதானே?

நான் கல்லூரியில் பணியாற்றியபோதே "பட்டுக்கோட்டை ஒரு பார்வை' எனும் நூலை எழுதி அது ஜீவானந்தம் உள்ளிட்டோரால் பாராட்டப்பெற்றுள்ளது. அதையடுத்து வானொலி உரையைத்தொகுத்து" உரைமலர்கள்' நூல் வெளியிடப்பட்டு மதுரை பல்கலைக்கழகம் பாடமாகியுள்ளது. வானொலி தனிப்பேச்சும் தொகுக்கப்பட்டது. நான்காவதாகத்தான் "திருக்குறள் உரை' எழுதப்பட்டு மக்களால் ஏற்கப்பட்டது. தற்போது புறநானூறு பாடல் உரை வெளிவந்துள்ளது.

பட்டிமன்றங்களால் தமிழ் இலக்கியம் செழுமையுறவில்லை என்ற ஆய்வறிஞர்களது விமர்சனம் குறித்து?

பட்டிமன்றங்களின் இலக்கிய தலைப்பு விவாதம் பேசுவோரின் புலமையை வெளிப்படுத்தியதே தவிர மக்களைச் சென்று சேரவில்லை. 

சமுதாயத்தலைப்புகளில் அரசியல் கொள்கை கலந்து பேசியபோதும் மக்கள் அதை அதிகம் ரசிக்கவில்லை. குடும்பத்து பிரச்னைகளை மையமாக்கி பேசும் போதுதான் பட்டிமன்றங்களை விட்டு தள்ளியிருந்த பெண்களும் கூட்டத்துக்கு வரத்தொடங்கினர். அவர்களுக்கு அவர்கள் விரும்பிய வடிவத்தில் குடும்பக் கட்டமைப்போடு சங்கத்தமிழ் முதல் அனைத்து தமிழ் இலக்கியங்களையும் எளிமையாக எடுத்துரைத்து ஏற்கவைக்க முடிகிறது.

அதனால் பட்டிமன்றங்கள் தங்களது இலக்கிய பின்புலத்தை இழந்துவிட்டதை நீங்கள் உணரவில்லையா?

 இலக்கிய விமர்சன பேச்சுகளுக்கான தளத்தை பல்கலை, கல்லூரி அளவில் ஏற்படுத்தியிருக்கவேண்டும். ஆனால்,ஏற்படுத்தவில்லை. பக்தி இலக்கியங்களை விசாரணைக்கு உள்படுத்தினால் அதில் பிரச்னை வரும். ஆகவே இலக்கிய விசாரணை வடிவமான பட்டிமன்றங்களில் குடும்பக்கட்டமைப்பை மையமாக்கியது காலத்தின் கட்டாயம். இலக்கியம் எனப் பேசிவரும் ஆசிரியர்கள்,பேராசிரியர்களே கூட இலக்கியக் கூட்டங்களுக்கு வருவதில்லை என்பதே நடைமுறை.

தற்காலத் தமிழரிடையே மொழி உணர்வும், பற்றும் எந்த வகையில் உள்ளது?

இளந்தலைமுறையினர் எந்தப் பதவியில் இருந்தாலும், எத்தனை மொழிகளைக் கற்றாலும் அவர்கள் தாய்மொழியை மறக்கக்கூடாது. ஆனால், தற்போது தமிழில் நெடுங்கதைகள், சிறுகதைகள் வருவதில்லை. நிமிடக் கதைகளாகவே வருகின்றன.

திரைப்படத்துறைக்கு தரும் மரியாதை இலக்கியத்துக்கு தரப்படுவதில்லை. அதே நிலைதான் இலக்கியவாதிகளுக்கும் உள்ளது. தமிழாசிரியர்கள் திருக்குறள், சங்க இலக்கியங்களுக்கு முக்கியத்துவம் அளித்து கற்கவேண்டும்; கற்பிக்கவும் வேண்டும்.

தமிழில் இலக்கியம்,மேடைப் பேச்சு என உச்சந்தொட்ட உங்கள் வீட்டில் ஜப்பானிய மொழிப்புலமை மிக்க ஒருவர் உள்ளாரே?

எனது வீட்டில் மனைவி ஜெயாபாய், மகள் விமலா சாலமன், மகன் தியாகமூர்த்தி ஆகியோர் எனது தமிழ்ப் பணிக்கு முழுக்க முழுக்க உறுதுணையாக உள்ளனர். எனது மகள் விமலா சாலமன் ஜப்பான் சென்று வந்த நிலையில், அம்மொழியில் சிறந்த ஆசிரியராகத் திகழ்வது பெருமை. "சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்' என்ற பாரதியின் வாக்குக்கு ஏற்ப அவர் ஜப்பானிய மொழியில் உள்ளவற்றை தமிழுக்கு கொண்டு வந்துள்ளார். 

பத்மஸ்ரீ விருது வழங்கப்படுவது  குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?

விருதுகள் என்பது மகிழ்ச்சிக்குரியதுதான். இது தமிழக மக்களுக்கும், பட்டிமன்ற ஆர்வலர்களுக்கும், தமிழுக்கும் மத்திய அரசு அளித்த அங்கீகாரமாகவே கருதுகிறேன். 

எல்லாவற்றையும் விட மக்களின் அங்கீகாரமே முக்கியம் என்பதே எனது கருத்து.

படம்: ப.விஜயகுமார்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

‘இனி விளம்பரங்கள் இல்லை, படங்கள் மட்டுமே’ : பிவிஆரின் புதிய திட்டம் பலனளிக்குமா?

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT