தினமணி கொண்டாட்டம்

ரோஜா மலரே! - 79: ஆற்றல் படைத்த ஆளுமை! - குமாரி சச்சு

சலன்


நாகேஷைப் பொருத்தவரை எனக்குப் பல விஷயங்களைச் சொல்லி இருக்கிறார். அதில் முக்கியமான ஒன்று, தான் எப்படிப் பேசுகிறாரோ, அதே டைமிங்கில் பேசினால், அவர் மிகவும் சந்தோஷப்படுவார். ""நீங்கள் எந்த நிலையிலும் அந்த டைமிங்கை விட்டுக் கொடுக்காதீர்கள். நான் எந்த விதத்தில் பேசுகிறேனோ, அதே அளவில் நீங்களும் பேசினால் தான், நாம் இந்தக் காட்சிக்கு உயிரூட்ட முடியும். மக்களும் சிரிப்பார்கள். அதைப் புரிந்து கொண்டால் நீங்கள் சிறப்பாக நடிப்பீர்கள் என்று எனக்கு நன்றாகத் தெரியும்''என்றார். எதையும் சர்வ சாதாரணமாகச் சொல்லி விட்டு போய் விடுவார். 

நாகேஷ் ஒரு சிறந்த நடிகர் என்று கூறுவதை விட, அவர் ஆற்றல் படைத்தவர். "அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்று சொல்வார்களே, அது போல, வசனத்தை மட்டும் வாய் வழியாகப் பேசினால் எப்படி சிரிப்பு வரும். அதற்குரிய பல விஷயங்களை நாங்கள் செய்ய வேண்டும். 

இப்படிப்பட்ட சோதனையான கட்டங்கள் பல, எங்களுக்கும் வந்துள்ளன. நாகேஷ் கவர்ச்சிகரமாக, புதுவிதமாக நாட்டியமாடக்கூடிய நடிகர். அவரை நான் முதலில் பார்த்தது எப்பொழுது என்று நான் யோசிக்கிறேன். பாலாஜி நாடகத்தில் அவர் நடித்திருக்கிறார். அந்த நாடகத்தை மேடையில் பார்த்த போது அவரைப் பார்த்திருக்கிறேன். 

நான் நடித்த "அன்னை' படத்திலும், ஒரு பாடல் காட்சியிலும், அவர் நடித்திருக்கிறார். எங்களுக்குள் நல்ல புரிதல் இருந்தது. நல்ல பழக்க வழக்கங்களைக் கொண்ட மனிதர். 

அப்பொழுதே அவர் ஒரு நாளைக்கு, 6 பேருக்கு கால்ஷீட் கொடுத்து, நடித்துக்கொண்டிருந்தார். சினிமா உலகில் சொல்வது என்றால், 6 ஷிப்டுகளில் நடிப்பது. அப்படிப் பார்த்தால் ஒரு ஷிப்ட் என்றால், கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் தான், அவரால் நடித்துக் கொடுக்க முடியும். அதையும் அவர் செய்து நான் பார்த்திருக்கிறேன். காரணம், அந்த 6 ஷிப்டுகளில், மூன்று அல்லது நான்கு படங்களில்,  கூட நடித்திருக்கிறேன். ஒரு படத்தில் மனோரமா ஆச்சி நடித்து இருப்பார். 

நாகேஷ் கடுமையான உழைப்பாளி. ஆண்டவன் சிரிக்க வைப்பவர்களைத் தான் மிகவும் சோதிப்பான். அதற்கு நான் பல உதாரணங்களைச் சொல்ல முடியும். ஆனால் நடிப்பு என்று வந்து விட்டால் அவருக்கு எந்த சுணக்கமும் ஏற்படாது. இவ்வளவு கடுமையாக உழைத்தாலும், காமிரா முன்னாடி, வந்து நின்று விட்டால், நடிப்பும், அவரது வேகமான வசன உச்சரிப்பு வந்து விடும். வேகம் இருக்கும். அதே சமயம் வசன உச்சரிப்பில் தெளிவு இருக்கும். வேகம் இருந்தால் மக்களுக்குப் புரியாமல் போய் விடக்கூடாது இல்லையா? அதை மனதில் கொண்டு, எப்பொழுதுமே வசனங்களைத் தெளிவாகப் பேசுவார். ஸ்ரீகாந்த் அவருடைய நெருங்கிய நண்பர். 

"காதலிக்க நேரமில்லை' படத்திற்குப் பிறகு, நாங்கள் இருவரும் நடித்தது வெளிவந்தது "ஊட்டிவரை உறவு' தான். நான் முன்பே சொன்னது போன்று "காதலிக்க நேரமில்லை' கடைசிக் கட்ட படப்பிடிப்பு நடக்கும் போதே, இந்தப் படம் முழுமை பெற்றுவிட்டது. அது மட்டுமல்ல, நாங்கள் இருவரும் நடித்து வெளியானது, இந்தப் படம் தான். எங்கள் இருவருக்கும் நல்ல கதாபாத்திரங்கள் அமைந்ததும் இந்தப் படத்தில் தான். 

அந்தக் காலத்தில் இருந்து,  இந்தக் காலம் வரை, நகைச்சுவை பாத்திரமேற்று நடிக்கும் நடிகர், தொடர்ந்து கதாநாயகருடன் தான் படத்தில் பயணிப்பார்கள் . அந்தக் காலத்தில், அந்த பாத்திரத்திற்கு ஒரு ஜோடி இருந்தது. இந்தக் காலத்தில் அது இல்லை. ஜோடி இருந்தால், கதையில் ஒரு பிடிப்பு இருக்கும். எங்களைப் போன்ற கலைஞர்களுக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கும். நாம் ஏற்று நடிக்கும் பாத்திரம் வலுப்பெறும். 

இயக்குநர் ஸ்ரீதர் திரைக்கதை, வசனம் எழுதும் போதே, எங்கள் இருவரின் பெயரை போட்டு எழுதியுள்ளார் என்று நான் கேள்விப்பட்டு இருக்கிறேன். நாங்கள் இருவரும், திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான சித்ராலயாவின் ஆஸ்தான நடிகர்கள் ஆகிவிட்டோம். கூட்டாகக் கதையைப் பேசும் போதே இயக்குநர் ஸ்ரீதரும், கோபுவும் எங்கள் இருவரின் பாத்திரத்தை பற்றி பேசி முடிவு செய்து விடுவார்கள்.

"ஊட்டி வரை உறவு' படத்தில் நாகேஷ் மருத்துவராகவும் , நான் செவிலியராகவும் நடித்து இருப்போம். கதையோட நகைச்சுவை காட்சிகள் ஒன்றி வரும் படம் இது. இந்தப் படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மருத்துவராக நடிப்பார். அவர் வீட்டுக்கு நடிகை கே.ஆர். விஜயா ஒரு நாள் திடீர் என்று ஒரு பெட்டியை தூக்கிக் கொண்டு வருவார். அதில் ஒரு முக்கியமான விவரம் இருக்கும்.

இதை என் கணவராக நடிக்கும் நாகேஷ் பார்த்து விட்டு, என்னிடம் வந்து காண்பிப்பார். அது மட்டுமல்ல, அந்தப் பெண்ணை சிவாஜிகணேசன் வீட்டில் பார்த்ததாக என்னிடம் தெரிவிப்பார். ரூபாய் பத்தாயிரம் பணத்துக்கு ஆசைப்பட்டு, அந்த விலாசத்திற்கு தகவல் கொடுக்க விரும்புவேன். அதற்குள் அந்தப் பேப்பர் மீது பாட்டிலில் இருந்த பேனா மை கொட்டி விடும். விலாசம் தெரியாமல் போய் விடும். எப்படியாவது அந்த விலாசத்தைக் கண்டு பிடிக்க, அந்தப் பழைய பேப்பரை என் கணவராக நடிக்கும் நாகேஷை தேடச் சொல்வேன். 

இந்தத் தேடும் படலத்தில் தான் நகைச்சுவை மிளிரும். இதில்  நாகேஷ்  செய்யும் சேட்டைகள் மக்களுக்குச் சிரிப்பை வரவழைக்கும். 

மக்கள் வயிறு குலுங்க சிரிக்க, இது போன்று கதையோடு வரும் காமெடி, அந்தக் காலத்தில் நிறையவே இருந்தது. இப்போது எல்லாம் காமெடி டிராக் என்று தனியாகச் சொல்லும் படி நகைச்சுவை காட்சிகள் தான் இருக்கிறது. 

இந்தக் காட்சிகள் படமாகும், அன்று நாங்கள் எல்லாம் தயாராக இருந்தோம். என்னிடமும், நாகேஷுடமும், காட்சி பற்றியும், நாங்கள் பேசவேண்டிய வசனங்கள் பற்றியும், "சித்ராலயா' கோபு சார் விவரமாகச் சொல்லிவிட்டார். இயக்குநர் ஸ்ரீதர் காமிரா கோணத்தை வைக்க, எல்லாம் சரியாக நடந்தது. "ஆக்ஷன்' என்று கூற வேண்டியதுதான் பாக்கி. அதையும் இயக்குநர் கூற, நாங்கள் இருவரும் நடித்துக் கொண்டிருந்தோம். அடுத்த நடந்தது என்ன?

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT