தினமணி கொண்டாட்டம்

மனிதத்தை தின்னும் அதிகாரம்!

DIN

""இந்தப் படத்துக்கான கருவை சாதாரண மக்களின் வாழ்க்கையில் இருந்துதான் எடுத்தேன். என் வாழ்க்கை, என் நண்பர்களின் வாழ்க்கை, ஏன் உங்களின் வாழ்க்கை என எல்லாமே இருக்கிறது. "உங்க வாழ்க்கைக்கு நீங்களே பெரிய சாட்சி' என்கிற அழகான கருத்தை புத்தர் சொல்லியிருக்கிறார். நம் வாழ்க்கையில் நாமே பெரிய சூழ்நிலையில் சிக்கிக் கொண்டு இருக்கும்போது, நாமே அதற்கு சாட்சியாக இருப்போம் என்று தோன்றியது. அப்படி உருவானதுதான் இந்தப் படம்.'' ஆத்மார்த்தமாக பேசுகிறார் பிராங்க்ளின் ஜேக்கப். பா. ரஞ்சித்தின் உதவியாளர். இப்போது "ரைட்டர்' படத்தின்இயக்குநர்.

"ரைட்டர்'.... எதனோடு பொருந்தி வருகிற தலைப்பு?

இது போலீஸ் படம். பொதுவாக சராசரி மனிதர்களுக்கு அனுபவம் குறைவுதான். தினமும் ஏழெட்டு பேரை புதிதாக சந்தித்து பேசினாலே அதிகம். ஆனால், போலீஸ் வாழ்க்கை அப்படியில்லை. ஒரு வழக்கோடு ஆறு மாதம் கூட பயணிக்க வேண்டியிருக்கும். அப்படிப் பார்த்தால் அவர்கள் சந்திக்கிற மனிதர்கள், அவர்களின் சூழ்நிலை எல்லாமே வித்தியாசமாக இருக்கும். சில வழக்குகள் ரொம்பவும் விசித்திரமாக, சிக்கலாக, அவிழ்க்க முடியாத புதிராக இருக்கும். அதற்கேற்ற மாதிரி இயங்குவதே சிரமமானது. இது ஒரு சாமானிய போலீஸ் ஸ்டேஷன் ரைட்டரின் கதை.

இது ஒரே ஒரு போலீஸ் ரைட்டரின் கதையும் கிடையாது. நான் பார்த்த, கேட்ட, படித்த நிறைய விஷயங்களின் தொகுப்பு. நிச்சயம் "சிங்கம்', "சாமி' படங்களின் மாதிரி கிடையாது. கதை அனுமதிக்கிற, பொருந்துகிற அளவுக்குத்தான் எல்லாமே. ஆனால், எதார்த்தம் நிரம்பி வழிகிற திரைக்கதை. போலீஸ் படம் என்றால், வெறும் ஆக்ஷன் என்ற எதிர்பார்ப்பு வேண்டாம். கோபம், பாசம், அழுகை, வெறி, கெத்து எல்லாம் சேர்த்த ஒரு படம்.

மீண்டும் ஒரு எதார்த்த பாணி ....

இந்திய காவல்துறையில் பணியாற்றும் ஒருவன், பொது மக்களிடம் இருந்து எவ்வளவு விலகி இருக்கிறான், அதிகார மையங்கள் அவனை எப்படியெல்லாம் கேவலமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன என்பது வரை தீவிரமாக யோசித்து திரைக்கதை எழுதியிருக்கிறேன். குற்றங்கள்தான் இந்த கதையின் பிரதானம். அவர்களின் உருவாக்கம் தொடங்கி, அதன் சம்பவங்கள் வரை எல்லாமே இதில் இருக்கும். போலீஸ் கதைகளில் 100க்கு 80 சதவீதம் வெற்றி அடைந்திருக்கிறது. . அதை ரிப்பீட் செய்ததில் சில படங்கள் தோற்றிருக்கலாம். திரைக்கதை எழுதும் போதே, சேகரித்த கதைகளே எக்கச்சக்கம் இருக்கும். நானே போலீஸ் ஸ்டோரியில் புதிதாக பத்துக் கதை இயக்க முடியும். ஒரு ஆளை நாம் சந்திக்க மட்டும்தான் செய்வோம். போலீஸ் அந்த ஆளை ஊடுருவிப் பார்க்கும். கண்காணிக்கும். விட்டுட்டு வேடிக்கை பார்க்கும். விட்டுத்தான் பிடிக்கும். நிச்சயம் "ரைட்டர்' நீங்கள் பார்த்த படம் மாதிரி இருக்காது.

திரைக்கதையின் ஆரம்பப் புள்ளி எது?

நம் ஒவ்வொருத்தருக்குள்ளும் ஒரு ஆறாத வலி இருந்துக் கொண்டே இருக்கும். அந்த வலி ஏற்படுத்தும் பாதிப்புகள் நமக்குள் ஒரு கோபத்தை சாம்பல் மூடின தணல் மாதிரி பத்திரமாக வைத்திருக்கும். கோபத்தின் தணல் ஏற்படுத்தும் பாதிப்புகள்தான் படம். ஒன்லைன் ரொம்பவே சிம்பிள்தான். படத்தின் மேக்கிங் இன்னும் பலம். . நம்மைச் சுற்றி நடந்து வருகிற சம்பவங்கள்தான். கேரளக் காவல் துறையில் பல ஆண்டுகள் போலீஸ் வேலை பார்த்த ராமச்சந்திரன் நாயர் என்பவர் எழுதிய, "நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி' என்ற புத்தகத்தைப் படித்து இருக்கிறீர்களா....? நக்ஸல் பாரி புரட்சியாளன் நர்கீûஸ மேலதிகாரிகளின் குரூரமான வற்புறுத்தலால், தனது கையால் சுட்டுக் கொன்றதில் இருந்து, இந்தியக் காவல் துறையில் பணியாற்றும் ஒருவன், பொதுமக்களிடம் இருந்து எவ்வளவு விலகி இருக்கிறான், அதிகார மையங்கள் அவனை எப்படி எல்லாம் கேவலமாகப் பயன்படுத்திக்கொள்கின்றன என்பது வரை மிகத் தீவிரமாக எழுதப்பட்ட பதிவு அது. போலீஸ்காரர்களில் அற்புதமானவர்களை, நேர்மையானவர்களை, போராளிகளை, எழுத்தாளர்களை, கலைஞர்களை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், இங்கே நிறைய பேருடைய மனிதத்தை, அதிகாரமும் அரசியலும் தின்றுவிடுகின்றன. கேவலமான அரசியல்வாதிகளின் கையில் காக்கிகளின் மனிதம் மழுங்கடிக்கப் பட்டுக்கொண்டே இருக்கிறது. மனிதமும் அதன் பொருட்டு எழும் கோபமுமே போலீஸின் ஆயுதங்களைத் தீர்மானிக்க வேண்டுமே தவிர, அரசியல் சந்தர்ப்பவாதம் அல்ல!

காவல்துறை பற்றிய பார்வை மாறுமா?

முதலில் இந்த படத்துக்கு தயாரிப்பாளரே கிடைக்கவில்லை. ஐந்து வருடம் பெரும் தேடலில் இருந்தேன். எல்லோரும் போலீஸ் கதை என்றால், மசாலா கலந்த கமர்ஷியல் கதைகளைத்தான் கேட்டார்கள். இயக்குநர் பா. ரஞ்சித் என் வலியை உணர்ந்து கதை கேட்டு தயாரிக்க சம்மதித்தார். பா. ரஞ்சித்தான் இந்தக் கதைக்கு சமுத்திரக்கனி பொருந்துவார் என சொன்னார். அவர்தான் இதற்கு பொருத்தமான ஆள். ஏற்கெனவே "காலா' படத்தின் போது எனக்கு அவர் பழக்கம். சந்தித்து கதை சொன்னேன். கதையை படித்து விட்டு, சந்தோஷப்பட்டார். போலீஸ் ஸ்டேஷன் ரைட்டராக இருந்தாலும், சாமானிய மனிதனின் எல்லா பிரச்னைகளும் அவருக்கு உண்டு. அதுதான் கதையின் பலம். அதை சரியாக புரிந்து நடித்து கொடுத்தார். இனியா லேடி கான்ஸ்டபிளாக நடிக்கிறார். அவர் வழியாகவும் கதை நகரும். மகேஷ்வரி, லிஸி... இன்னும் ஏராளமான நடிகர்கள். காவல்துறை பற்றி மக்களுக்கு இருக்கும் பார்வையை மாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல. மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். அது நிறைவேறினால் என் உழைப்பு உண்மை பெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

வாக்களித்த அரசியல் பிரபலங்கள் - புகைப்படங்கள்

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

SCROLL FOR NEXT