தினமணி கொண்டாட்டம்

ரத்தத்தின் ரத்தமே... - 20

20th Jun 2021 06:00 AM | டாக்டர்  எஸ். அமுதகுமார்

ADVERTISEMENT

 

"சென்ற வாரம் இவர் கால் விரலெல்லாம் நல்லாத்தானே இருந்தது இப்ப திடீர்னு இப்படி விரல் வீங்கிப் போய் தோல் நிறம் மாறி கறுப்பு நிறமாகி ஒரே நாத்தம் அடிக்குது. இவருக்கு என்ன ஆச்சுன்னு தெரியலையே'-என்று யாராவது எங்கேயாவது எப்போதாவது புலம்புவதை நீங்கள் கேட்டும் இருக்கலாம். கேட்காமலும் இருக்கலாம். இது போன்று புலம்பல்  தினம் தினம் நடக்கக்கூடிய ஒரு விஷயம் அல்ல.  எப்போதாவது எங்கேயாவது தான்இது போன்று சொல்வதை நீங்கள் கேட்க முடியும். 

நன்றாக இருக்கக்கூடிய கை அல்லது கால் விரல்கள் திடீரென்று வீங்கி நிறம் மாறி கறுப்பாகிப் போகிறதென்றால் இது சாதாரண விஷயமா? இல்லை. நம் உடலுக்குள் ஏதோ ஒரு பெரிய பிரச்னை ஏற்பட்டுவிட்டது என்றுதான் அர்த்தம். என்ன பிரச்னை அது? விரலை கறுப்பாக்கி விரலை நாற்றமடிக்க வைத்து ஒன்றுக்கும் உபயோகமில்லாமல் ஆக்கியது எது?

உடலில் காயங்கள் ஏற்பட்டாலோ உடல் தொற்று நோய்களினால் தாக்கப்பட்டாலோ உடலில் ஒரு குறிப்பிட்ட நோய் நீண்ட நாட்களாக இருந்து பாதிப்பை ஏற்படுத்தினாலோ உடலின் ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டாலோ உடலிலுள்ள ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டாலோ பாதிக்கப்பட்ட உடல் திசுக்கள் நசிந்துபோய் உருக்குலைந்து, ரத்த சப்ளை கிடைக்காமல் இறந்து போய் விடுகின்றன. இது நியாயம் தானே!

ADVERTISEMENT

உலகிலுள்ள எல்லா உயிரினங்களும் வாழ உணவு மூலம் சத்துப் பொருட்கள் உடலுக்குக் கிடைக்கின்றது. அப்படி உணவு மூலம் சத்துப் பொருட்கள் கிடைக்கவில்லையென்றால் அந்த உயிர் இறந்து தானே போகும் அதேபோல் நமது உடலிலுள்ள திசுக்களுக்கு ரத்த சப்ளை மூலம் உணவு கிடைக்கவில்லையென்றால் அந்த திசுக்களும் இறந்துதானே போகும்? உடலில் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு ரத்த ஓட்டம் சரியாகவோ அல்லது சுத்தமாகவோ போகவில்லையென்றால் அந்த இடத்திலுள்ள திசுக்கள் முதலில் சிதைந்து பின் அழிந்து அப்புறம் இறந்துபோய் விடும். இந்த மாதிரி பாதிப்பு உடலில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் ஏற்படலாம். ஆனால் பெரும்பாலும் கைவிரல்கள் மற்றும் கால் விரல்களில் தான் அதிகமாக ஏற்படும்.

அரிதாக சிலருக்கு கைவிரல்கள் அல்லது கால்விரல்களில் ஏதாவது ஒரு விரலோ அல்லது இரண்டு விரலோ எப்பொழுதும் எல்லோருக்கும் இருக்கக்கூடிய நிறத்திலிருந்து மாறி சுத்த கறுப்பு கலரில் விரல்களின் மேல் தார் ஊற்றியதுபோல் ஆகிவிடும். இதை ஊரிலுள்ளோர் விரல் கறுப்பு அடித்துவிட்டது என்று சொல்வார்கள். கறுப்பு அடித்துவிட்டது என்று சொன்னால் விரலுக்கு ரத்த ஓட்டம் சுத்தமாக கிடைக்காமல் விரல் அழுகிப் போய் கறுப்பாகிவிட்டது என்று அர்த்தம். 

இதை ஆங்கிலத்தில் "கேங்க்ரின்' என்று சொல்வார்கள். "கேங்க்ரின்" என்ற இந்த வார்த்தைக்கு லத்தீன் மொழியில் கேங்க்ரினா  அதாவது அழுகிய திசுக்கள் என்று அர்த்தம். ஆனால் நமக்கு விரல் அழுகிப்போச்சு என்று சொல்லித்தான் பழக்கம். கேங்க்ரின் அதாவது அழுகிய திசுக்கள் உள்ள ஒரு நோயாளியின் வீட்டு வாசலில் கால் வைக்கும்போதே இந்த வீட்டில் கேங்க்ரின் நோயாளி இருக்கிறார் என்று சுலபமாகக் கண்டுபிடித்துவிடலாம். அந்த அளவுக்கு தாங்க முடியாத அழுகிய நாற்றம்  வீடு முழுக்க  ஏன் வீட்டைத் தாண்டிக் கூட வரும்.

1883-ஆம் ஆண்டில் ஆல்ப்ரெட் போர்னியர் என்ற ஒரு பால்வினை மருத்துவநோய் நிபுணர் ஒரு நோயாளியின் ஆணுறுப்பில் புண் ஏற்பட்டு வீக்கம் உண்டாகி பின் நிறம் மாறி திசுக்கள் அழுகி நாற்ற மடித்ததை பார்த்து தொடர்ந்து ஆய்வு செய்து இதுதான் "கேங்க்ரின்'  என்று கண்டுபிடித்து உலகுக்கு தெரிவித்தார்.

உடலில் திசுக்கள் அழுகி பாதிக்கப்பட்ட இடங்கள் பெரும்பாலும் கறுப்பு நிறத்தில் தான் இருக்கும். சில சமயங்களில் பச்சை நிறத்திலோ ஊதா நிறத்திலோ அல்லது பச்சையும் கறுப்பும் கலந்த நிறத்திலோ கூட இருக்கும்.

தொடர்ந்து சிகரெட் அதிகமாக உபயோகிப்பவர்கள்  ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்காதவர்கள்  அதிக எடையுள்ளவர்கள் பித்தப்பையில் கல் உள்ளவர்கள் அதிக ரத்த அழுத்தம் தொடர்ந்து உள்ளவர்கள் ரத்தக்குழாய் நோயுள்ளவர்கள் அதிக மது அருந்துபவர்கள் நாள்பட்ட காயங்கள் அல்லது புண் உள்ளவர்கள் ஆகியோருக்கு "கேங்க்ரின்' அதாவது அழுகிய திசுக்கள் ஏற்பட வாய்ப்புண்டு. பெரும்பாலும் கைவிரல்களின் நுனி கால் விரல்களின் நுனி ஆகியவைகளில் தான் கேங்க்ரின் அதிகமாக ஏற்படும். இது கேங்க்ரின் தான் என்று எப்படி கண்டுபிடிப்பது?

(1) முதலில் பாதிக்கப்பட்ட விரல் லேசான சிவப்பாகவும் லேசான வீக்கத்துடனும் இருக்கும். எல்லாக் காயங்களுமே ஆரம்பத்தில் இந்த மாதிரி தான் இருக்கும். அதனால் இது குணமாகக் கூடிய விரலா அல்லது அழுகக்கூடிய விரலா என்று கண்டுபிடிக்க முடியாது. 

(2) அடுத்து பாதிக்கப்பட்ட விரல் நெருப்பில் காட்டியது போல் தாங்கமுடியாத அளவுக்கு எரிச்சலும் வலியும் இருக்கும். சில சமயங்களில் சுத்தமாக வலியே இல்லாமல் மரத்துப்போய் உணர்வே இல்லாமல் ஊசியால் குத்தினால் கூட தெரியாத மாதிரி இருக்கும். 

(3) அடுத்ததாக பாதிக்கப்பட்ட விரலில் புண் உண்டாகி அல்லது கொப்புளங்கள் ஏற்பட்டு அந்தப் புண்ணிலிருந்து ரத்தமும் நீரும் கலந்த ஒருவித  நாற்றமடிக்கும் திரவம் வெளிவர ஆரம்பிக்கும்.

(4) அடுத்து அந்த இடத்திலுள்ள தோல் வெளிறிப் போய்  குளிர்ந்து இருக்கும். 

(5) அடுத்து ரத்த ஓட்டம் சுத்தமாக நின்றுவிட ஆரம்பிக்கும்போது விரலின் நிறம் மாறி கறுப்பாக ஆரம்பித்துவிடும். நாற்றம் அதிகமாக ஆரம்பித்துவிடும். 

இதெல்லாம் படிப்படியாக ஒவ்வொன்றாக நடக்கும். அழுகிய அந்த விரல் இனி எதற்கும் உபயோகப்படாது. அவ்வளவுதான். முடிந்தது முடிந்ததுதான். இழந்தது இழந்ததுதான். அந்த அழுகிய விரலின் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று அர்த்தம். அதை உங்கள் குடும்ப டாக்டரிடம் காட்டினால் எடுத்துவிட வேண்டும் என்று ஆலோசனை சொல்வார்.

சர்க்கரை வியாதிக்காரர்களுக்கும் சிகரெட் மது அதிகமாக உபயோகிப்பவர்களுக்கும் ஆரம்பத்திலேயே விரல்களை கவனிக்காவிட்டால் மேற்கூறிய நிலை தான் ஏற்படும். அதற்காக மேலே சொன்ன மாதிரி நமக்கும் ஏற்பட்டுவிடுமோ என்று பயந்து தினமும் கை கால் விரல்களைப் பார்த்துக் கொண்டு இருக்காதீர்கள். அதற்குப் பதிலாக சிகரெட் மதுவை நிறுத்தப் பாருங்கள். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சரியாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள்.

பொதுவாக "கேங்க்ரின்' அதாவது திசுக்கள் அழுகுவது என்பது கைகள், கால்கள், கைவிரல்கள்,  கால்விரல்கள் இவைகளில்தான் ஏற்படும் என்றில்லை. சில சமயங்களில் தசைகள் உடலின் உள்உறுப்புகளில் கூட ஏற்படலாம். திசுக்கள் அழுகுவது என்பது பெரும்பாலும் கைவிரல்கள் மற்றும் கால்விரல்களில் தான் அதிகமாக ஏற்படுகிறது. இதற்குக் காரணம் விரல்களின் நுனிகளை பாதை முடிவு அல்லது முட்டுச் சந்து என்று கூட சொல்லலாம். நுனிகளுக்குப் பிறகு ரத்த ஓட்டத்திற்கு வாய்ப்பில்லை. அதனால்தான் ரத்தக் குழாய்களும் அதற்கு மேல் போகமுடிவதில்லை. எனவே இந்த நுனிகளில் உள்ள ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். எனவே ரத்த ஓட்டம் தடைபடவும் வாய்ப்பு அதிகம். அதனால்தான் "கேங்க்ரின்' கைவிரல் மற்றும் கால்விரல் நுனிகளில் அதிகமாக ஏற்படுகிறது.

"க்ளாஸ்ட்ரீடியம்' பாக்டீரியா என்று சொல்லப்படும் ஒரு வகைக் கிருமி மிகக் கடுமையான மிகக் கொடுமையான ஒரு பாக்டீரியா கிருமி ஆகும். இந்தக் கிருமியெல்லாம் உடலினுள் நுழைந்தால் உடலிலுள்ள திசுக்கள் செல்கள் தசைகள் ரத்தக் குழாய்கள் பாதிக்கப்பட்டு ஒரு வகை விஷப்பொருள் இந்த இடங்களில் உற்பத்தியாகி கடைசியில் இறப்பை உண்டாக்கிவிடும். மேற்சொன்ன பாக்டீரியா கிருமியால் "கேங்க்ரின்' ஏற்பட்டால் இரண்டு மூன்று நாட்களிலேயே ஆளை க்ளோஸ் பண்ணிவிடும். மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்.

விரலுக்கு ரத்த சப்ளையே இல்லாததால் அந்த விரல் முழுவதுமாக அழுகிப் போய்விட்டதால் அதை வெட்டி அப்புறப்படுத்தியாக வேண்டும். அப்படி எடுக்காவிட்டால் இந்த அழுகல் விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக பரவி அடுத்த கால் விரலுக்கும் வந்துவிடும். 

எனவே முதல் விரலை எடுத்துவிடலாம் என்று முடிவு செய்து ஒரு விரலை எடுப்பார்கள். ஆனால் அடுத்த விரலுக்கும் ரத்த சப்ளை இல்லாமற்போய் அந்த விரலையும் எடுப்பார்கள். அப்படியே ஒவ்வொரு விரலாக எடுத்துக் கொண்டு வருவார்கள். அதற்குப் பிறகு கணுக்காலுக்குக் கீழே பாதம் முழுவதையும் எடுக்கணும் என்பார்கள். அப்புறம் கணுக்காலுக்கு மேலே எடுக்கணும் என்பார்கள். அப்புறம் கால் முட்டிக்கு கீழே வரை எடுக்கணும் என்பார்கள். அதன்பிறகு கால் முட்டிக்கு மேலே தொடை வரை எடுக்கணும் என்பார்கள். இப்படித்தான் இந்த கேங்க்ரின் அதாவது அழுகுதல் என்பது விரலில் ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக மேலே வந்து கடைசியில் ஒரு காலே இல்லாமல் ஆக்கிவிடும்.

ஆகவே ஆரம்ப காலத்திலேயே "கேங்க்ரின்' அதாவது திசுக்கள் அழுகும் நோயைக் கண்டுபிடித்து சிகிச்சையை உடனடியாக ஆரம்பித்துவிட்டால் திசுக்கள் மேலும் அழுகாமல்  விரல்களைக் காப்பாற்றிவிடலாம். சரியான நேரத்தில் கண்டுபிடித்து சிகிச்சை அளிக்காவிட்டால் முதலில் உறுப்பு இழப்பு ஏற்படும். அப்புறம் இறப்பு ஏற்படும். எனவே தினமும் உங்கள் கைவிரல்களையும் கால் விரல்களையும் தொட்டுப் பார்ப்பதை விட்டுவிட்டு இனிமேல் இனிப்பைத் தொடமாட்டேன் சிகரெட்டைத் தொடமாட்டேன் மதுவைத் தொடமாட்டேன் என்று முடிவு செய்து இன்றே கடைப்பிடிக்க ஆரம்பியுங்கள். 

 -தொடரும்

Tags : தினமணி கொண்டாட்டம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT