தினமணி கொண்டாட்டம்

நெல் வகைகள்- அசத்தும் விவசாயி

பிஸ்மி பரிணாமன்

இயற்கை விவசாயியும் விஞ்ஞானியுமான நம்மாழ்வாரின் தொடர்பில் இல்லாமலேயே இயற்கை வேளாண்மை செய்து வருபவர் பாஸ்கர். இயற்கை விவசாயத்தில் பாரம்பரிய நெல்வகைகளைப் பயிரிட்டு வருவதுடன், வயலில் உருவாகும் புதிய நெல் வகைகளையும் சேகரித்து அவைகளுக்குப் பொதிகை, சேரன், சோழன், பாண்டியன் போன்ற பெயர்களைச் சூட்டியிருக்கிறார். சுமார் 30 புதிய நெல் வகைகள் அவரது வயல்களில் உருவாகியுள்ளன. இயற்கை விவசாயத்தில் புதிய திசையில் பயணிக்கும் பாஸ்கர் புதிய ரக நெல்கள் குறித்து விளக்குகிறார்:

""எனக்குக் காரைக்காலுக்குப் பக்கத்தில் வரிச்சிகுடி கிராமத்தில் சொந்தமாக 10 ஏக்கர் நிலம் இருக்கிறது. குத்தகைக்கு 25 ஏக்கர் எடுத்திருக்கிறேன். இதில் இரண்டு சென்ட் நிலத்தில் ஐம்பது கிராம் நெல் விதைகளை விதைத்து சாகுபடி செய்கிறேன். மொத்தம் நூறுக்கும் மேற்பட்ட நெல்வகைகளை ஒவ்வொரு ஆண்டும் வளர்ப்பேன். ஆண்டிற்கு ஒரு பட்டம்தான். காரணம் மேட்டூர் அணை தண்ணீரைத்தான் எனது விவசாயம் சார்ந்திருக்கிறது. அணையில் ஜூன் மாதம் தண்ணீர் திறந்து விடுவார்கள். ஒரு மாதம் கழித்துதான் காவிரி நீர் என் கிராமத்தை வந்து அடையும். அதற்குள் வயலை விவசாயத்திற்காகப் பண்படுத்தித் தயார் நிலையில் வைத்திருப்போம்.

புதிய நெல் வகைகள் உருவானதில் எனது முயற்சி எதுவும் இல்லை. வயல்களில் பலவகைப் பாரம்பரிய நெல்களை விளைவிக்கும் போது, காற்றால், பூச்சிகளால் அயல் மகரந்த சேர்க்கை ஏற்பட்டு புதுவகை நெல்கதிர்கள் ஆங்காங்கே உருவாகும். அந்த நெல் பயிர்கள் உயரத்தில், உருவத்தில், நெல் மணிகளில் வித்தியாசமாக இருக்கும். அறுவடை நடக்கும் போது அந்த வித்தியாசமான நெல்மணிகளைத் தனியாக எடுத்து வைத்து அதற்கு சேரன், சோழன், பாண்டியன், திருவள்ளுவர், தொல்காப்பியர், நெல்லப்பர் என்று ஒரு அடையாளத்திற்காக பெயர் வைப்போம் . இந்தப் பயிர்களை நெல்மணிகள் கையளவுதான் கிடைக்கும். அதை பத்திரமாக எடுத்து வைத்து அடுத்தப் பட்டத்தில் தனியாக விதைப்போம். இந்த முறையில்தான் புதுவகை நெல்களைப் பெருக்கி வருகிறேன். ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர்தான் பெரிய அளவில் விதைத்து, வளர்த்து, அறுவடை செய்து பயன்பாட்டுக்கு உபயோகிக்க முடியும். நெல் அறுவடை முடிந்ததும் காய்கறிகள், கீரைகள், வெள்ளரி பயிரிடுவேன்.

பாரம்பரிய இயற்கை விவசாயத்தை 17 ஆண்டுகளாகச் செய்து வருகிறேன். நம்மாழ்வாரின் அறிமுகம் இல்லை என்றாலும் அவரது சொற்பொழிவுகளைக் கேட்டிருக்கிறேன். செயற்கை உரம் போட்டால் நிலம் பாழாகிறது. உணவு விஷம் ஆகிறது என்பதைத் தெரிந்து கொண்டு இயற்கை விவசாயத்திற்கு மாறினேன். உழைத்தால் நல்ல பலன் கிடைக்கும் என்பதை அனுபவபூர்வமாகத் தெரிந்து கொண்டிருக்கிறேன். எல்லாரும் செய்வது போல் விவசாயம் செய்யாமல், வித்தியாசமாகச் செய்தால் நல்ல வருமானமும் கிடைக்கும்.

பாரம்பரிய நெல் பயிர்களுக்கு உரம் தேவையில்லை. அவைகளாக வளரும். அவைகளாகக் காற்றையும், மழையையும் எதிர் கொள்ளும். நான் கடந்த மூன்று ஆண்டில் வயலுக்கு இயற்கை உரம் கூட போடவில்லை. பயிர்களை நோய் தாக்காமல் இருக்க சாணக்கரைசல் அல்லது வேப்பங்கோட்டையை இடித்துத் தண்ணீரில் ஊறவைத்து தெளிப்போம். மாப்பிளை சம்பா ரகம் ஒன்பது அடி வரை வளரும். தன்னைத் தானே காத்துக் கொள்ளும். சில பரம்பரை நெல்களில் "சொன' எனப்படும் முள் பகுதி உண்டு. பூச்சி தாக்குதலின் போது, சில நாள்களில் அந்த முள்கள் பெரிதாகி பூச்சிகளால் அங்கு வந்து அமரமுடியாதபடி பார்த்துக் கொள்ளும். நாட்டுப் பொன்னிக்குப் பூச்சிகள் வராது. வாலன் சம்பா நெல்லுக்கு நீண்ட வால் இருக்கும். யானைக்குக் கொம்பன் நெல் மணியில் தந்தம் மாதிரி துருத்திக் கொண்டிருக்கும். கொத்துமல்லி சம்பாவின் நெல்மணிகள் கொத்துமல்லி விதைபோல உருண்டு இருக்கும். அதுபோல் இலுப்பைப்பூ சம்பா பச்சை நிறத்தில் இருக்கும். இலுப்பைப் பூவின் வாசம் இருக்கும். இந்த அரிசியைச் சாப்பிட்டு வந்தால் வாத நோய் குணமாகும்.

நான் நெல்களின் உமியை மட்டும் நீக்கிவிட்டு அரிசியாக விற்கிறேன். பாலீஷ் செய்வதில்லை. அதனால் அரிசியின் இயற்கை நிறம் மாறாது. மருத்துவக் குணமும் அப்படியே இருக்கும். நாட்டுப் பொன்னி அரிசி கிலோ 65 ரூபாய்க்கும், கருப்பு கவுனி 130 ரூபாய்க்கும் விற்கிறேன். இலுப்பைப்பூ சம்பா கிலோ 120 ரூபாய். தேவைப்படுபவர்களுக்கு வெளி ஊர்களுக்கும் அனுப்பி வைக்கிறேன். சர்க்கரை குறைபாடுள்ளவர்கள் கருப்பு கவுனி அரிசி பயன்படுத்தலாம். இயற்கை விவசாயத்தில் நிச்சயம் நஷ்டம் எதுவும் இல்லை'' என்கிறார் பாஸ்கர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா்த் தட்டுப்பாடு: ஒசூா் மாநகராட்சியை முற்றுகையிட்ட பெண்கள்

வெளிமாநில தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை

சிறைவாசிகளுக்கு புத்தகங்கள் வழங்கல்

கோடை வெயிலில் இருந்து பொதுமக்கள் தற்காத்துக் கொள்ள ஆட்சியா் அறிவுறுத்தல்

திருமலை: 60,371 பக்தா்கள் தரிசனம்

SCROLL FOR NEXT