தினமணி கொண்டாட்டம்

உயிர் காக்கும் உன்னத சேவை!

வனராஜன்

சென்னை மீனம்பாக்கம் ஏ.எம். ஜெயின் கல்லூரியில் கரோனா சிகிச்சை மையத்தில் எந்த வித உயிர் இழப்பும் நேராமல் சிகிச்சை பெற்ற நோயாளிகளில் 102 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்த மையத்தின் பொறுப்பு மருத்துவ அதிகாரியான மருத்துவர் சதீஷ்குமாரை சந்தித்து பேசினோம் :

""நான் அரும்பாக்கம் அரசினர் சித்த மருத்துவக் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றுகிறேன். கரோனா முதல் அலையின் போது எங்களுடைய இந்திய மருத்துவ துறை இயக்குநர் கணேஷ் ஐ.ஏ.எஸ் தலைமையில் வியாசர்பாடி அம்பேத்கர் அரசினர் கல்லூரியில் சித்த மருத்துவ சிகிச்சை அளித்து 2600 பேர் குணமடைந்தனர். இந்த இரண்டாவது அலையின் தீவிரம் காரணமாக ஏ.எம். ஜெயின் கல்லூரி வளாகத்தில் உள்ள கரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையம் மே 11 முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். இதற்கு பொறுப்பு மருத்துவ அதிகாரியாக என்னை நியமித்தார்கள். மே13-ஆம் தேதி முதல் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனர். இதுவரை 145 பேர் அனுமதிக்கப்பட்டனர். அதில் 102 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர். மீதியுள்ள நபர்கள் சிகிச்சையில் உள்ளார்கள். இதில் 20 பேர் தொற்று தீவிரமான நிலையில் தான் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் தற்போது குணமடைந்து வருகிறார்கள்.

உயிர் இழப்பு இல்லாமல் எப்படி இந்த சிகிச்சை சாத்தியமானது?

மனித உடலில் ஆக்சிஜன் அளவு 95 முதல் 100 வரை இருக்க வேண்டும். இதில் 94 கீழ் வரும் போது மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். 90 ஆச்சிஜன் அளவுடன் வருபவர்களுக்கு 3 மணி நேர இடைவெளியில், தாளிசாதி சூரணம், சிவனார் அமுதம், தாளக செந்தூரம் போன்ற மருந்துகளை தொடர்ச்சியாக அளிப்போம். இதனால் அவர்களது ஆக்சிஜன் அளவு சராசரியாகிவிடும். மேலும் லவங்காதி சூரணம், சுவாச குடோரி மாத்திரை, வசந்தகுசுமாகர மாத்திரை போன்ற சுவாச நோய்களுக்கு சிறந்த மருந்தான இவற்றை வெற்றிலையுடன் 2 மாத்திரை வழங்குவோம். இதனால் நுரையீரல் நோய் தொற்று முழுமையாக குணமாகும்.
காலை முதல் இரவு வரை ஐந்து வகை குடிநீர் வழங்குகிறோம். காலையில் சீரண குடிநீர். அதாவது மஞ்சள், உப்பு, பச்சை மிளகாய், சீரகம் போன்றவை கலந்த நீரை வெறும் வயிற்றில் வழங்குகிறோம். இங்குள்ள பூங்காவில் காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை சித்தர் யோகம்,சித்தர் முத்திரை,சித்தர் திருமூலர் மூச்சு பயிற்சி,சித்தர் வர்மம்,சித்தர் மன நல பயிற்சி போன்றவை சித்த மருத்துவரின் நேரடி கண்காணிப்பில் அளிக்கிறோம்.

காலை உணவுக்கு முன் கபசுரகுடிநீர் வழங்குகிறோம். 11 மணிக்கு வெற்றிலை குடிநீர் வழங்குகிறோம். இது வெற்றிலை, பூண்டு, மிளகு, லவங்கம் சேர்ந்தது. மதிய உணவுடன் தூதுவளை ரசம், முடக்கத்தான் ரசம், ஆவாரம்பூ ரசம் என இதில் ஏதாவதொன்றை வழங்குகிறோம். மாலை 4 மணிக்கு மேல் 5 மணிக்குள் சுக்கு, மிளகு, திப்பிலி, அதிமதுரம், மரமஞ்சள், சித்தரத்தை போன்ற 10 பொருள்களில் தயாரான மூலிகை தேநீர் வழங்குகிறோம். இரவு 7.30 மணி கபசுர குடிநீர், இரவு உணவுக்குப் பின் வெற்றிலையுடன் சுவாச குடோரி, வசந்தகுசுமாகர மாத்திரைகளை வழங்குகிறோம். இரவு தூங்குவதற்கு முன் மர மஞ்சள் குடிநீர் வழங்குகிறோம். மேலும் மூன்று வேளையும் தாளி சாதி சூரணம், லவங்காதி சூரணம், ஆடாதொடை மணப்பாகு வழங்குகிறோம். நோயாளிகளுக்கு வழங்கப்படும் இந்த மருந்துகளை அனைத்து டாம்கால் நிறுவனம் மூலம் அரசால் வழங்கப்படுபவை.

ஆக்சிஜன் அளவு குறைந்தவர்களுக்கு சித்த மருத்துவம் சாத்தியமா?

ஆக்சிஜன் அளவு 87 இருந்தாலும் நோயாளிகள் நீர்ம உணவு, திட உணவை உட்கொள்பவர்களாக இருந்தால் எளிதாக அவர்களின் ஆக்சிஜன் அளவை அதிகமாக்கி விடலாம். ஆனால் பலர் ஆக்சிஜன் அளவு குறைய குறைய பதற்றத்துடன் உணவு அருந்தாமல் இருந்துவிடுகிறார்கள். இது தவறான ஒன்று. அவசர சிகிச்சை பிரிவில் ஆச்சிஜன் வசதியுடன் சுவாசிக்கும் நபர்கள் கூட நீர்ம உணவு, திட உணவை எடுத்தக்கொள்பவர்களாக இருந்தால் கூட சுவாச குடோரி,தாளிசாதி வடகம், வசந்தகுசுமாகர மாத்திரை சாப்பிட்டு வர நல்ல பலன் அளிக்கும். பக்கவிளைவு ஏற்படுத்தாது. இதனை தொடர்ச்சியாக எடுத்துவர ஆக்சிஜன் உதவி தேவைப்படாது. எங்கள் சிகிச்சை மையத்தை பொருத்தவரை 87க்கு கீழ் ஆக்சிஜன் அளவு இருந்தால் அவர்களின் பாதுகாப்பு கருதி ஒமந்தூரார் அரசின் மருத்துவமனைக்கு அனுப்பிவிடுவோம்.

கரோனா இரண்டாவது அலை இத்தனை உயிர்ப்பலிகளை ஏற்படுத்த காரணம் என்ன?

முதல் அலையின் போது நோய்தொற்று ஏற்பட்டு 7-ஆவது நாள் தான் ஆக்சிஜன் உதவி தேவைப்பட்டது. ஆனால் இரண்டாவது அலையில் 3-ஆவது நாளே ஆக்சிஜன் உதவி தேவைப்படுகிறது. நுரையீரல் தொற்று ஏற்பட்ட பிறகு தான் சிகிச்சைக்கு வருகிறார்கள். சித்த மருத்துவத்தை பொருத்தவரை ஆரம்ப கட்டத்தில் வந்தால் நூறு சதவிகிதம் உறுதியாக குணமடையலாம். உயிர் பயம் என்பது துளியும் கிடையாது.

அதனால் தலைவலி, உடல் சோர்வு, காய்ச்சல், வாய்குமட்டல், வாந்தி பேதி இருந்தால் உடனே டெஸ்ட் எடுத்துவிட வேண்டும். சிகிச்சை உடனடியாக தொடங்கினால் ஆபத்திலிருந்து மீண்டு விடலாம். ஆனால் எனக்கு கரோனா வராது என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். காய்ச்சல் வந்தாலும் டெஸ்ட் எடுப்பதில்லை. டெஸ்ட் எடுத்தால் பாசிட்டிவ் என்று சொல்லி நம்மை பிடித்து போய்விடுகிறார்கள் என சுய மருத்துவம் செய்து உயிர் இழந்தவர்கள் தான் அதிகம் பேர். எனவே யூடியூப் போன்றவற்றை பார்த்து சுய மருத்துவம் செய்து கொள்ளாதீர்கள். அறிகுறிகள் ஏற்பட்டால் அருகிலுள்ள மருத்துவரை உடனே கலந்துஆலோசியுங்கள்.

பணி நிமித்தம் காரணமாக வெளியே வருபவர்கள் தங்களை தற்காத்து கொள்ள என்ன செய்ய வேண்டும்?

நிலவேம்பு குடிநீர், கபசுர குடிநீர் தொடர்ச்சியாக எடுத்தக் கொள்ளலாம். தாளிசாதி சூரணம், திப்பிலி ரசாயனம் வெந்நீர் அல்லது தேனில் கலந்து சாப்பிடலாம். அரசு சித்த மருத்துவமனைகளில் வழங்கப்படும் சுவாச குடோரி, வசந்தகுசுமாகர மாத்திரைகளை வெற்றிலையுடன் சேர்த்து சாப்பிடலாம். இது வைரஸ் தொற்று ஏற்பட்டு இருந்தாலும் அதனை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்திவிடும். பக்க விளைவுகள் ஏற்படாது. சித்த மருத்துவம் நம் வாழ்வியல் சார்ந்த மருத்துவம்.உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான உயிர் காக்கும் மருத்துவம். சரியான முறையில் பயன்படுத்தினால் மிகவும் சிறப்பாக இருக்கும். பிற உயிர்களை பாதுகாக்கும் பணியில் இருக்கிறோம். முதலில் நம்மை நாம் தற்காத்துக் கொள்ள வேண்டும். அதற்கு ஆங்கில, சித்த என அனைத்து மருத்துவர்களும் தங்களை தற்காத்துக் கொள்வது அவசியம்.

உங்கள் சிகிச்சை மையத்தின் சிறப்புஅம்சங்கள் என்ன?

6 மருத்துவர்கள் சுழற்சி முறையில் பணியாற்றுகிறோம். நோயாளிகளுக்கு சிறு பிரச்னை என்றாலும் உடனே சென்று பார்த்து சிகிச்சை அளிக்கிறோம். எங்களுக்கான தேவைகளை சித்த மருத்துவ மைய ஒருங்கிணைப்பாளர் டாக்டர்.பிச்சையாகுமார்,டாக்டர்.சசிகுமார் இந்திய மருத்துவ துறை இயக்குநர் கணேஷ் ஐ.ஏ.எஸ், இணை இயக்குநர் பேராசிரியர்.பார்த்திபன் ஆகியோரின் ஆலோசனையின் படி மருத்துவம் மேற்கொள்ளப்படுகிறது. முதலமைச்சரின் வழி காட்டுதல் படி 50-க்கும் மேற்பட்ட சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது நோயின் தாக்கம் குறைந்து வருகிறது. படுக்கை வசதிகள் எல்லா மருத்துவமனைகளிலும் உள்ளன. வரும் ஜுலை மாதம் இரண்டாவது அலை பாதிப்பு என்பதே இருக்காது. அடுத்ததாக மூன்றாவது அலையிலிருந்து குழந்தைகளை காக்க வேண்டும்.

கரோனா பாதித்தவர்களை கருப்பு பூஞ்சை நோய்தொற்றும் பாதிக்கிறதே?

வைரஸ் தொற்றுடன், பாக்டீரியா தொற்று ஏற்பட்டதும் கருப்பு பூஞ்சை தொற்றும் ஏற்படுகிறது. இதற்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் போனது தான் காரணம். எனவே தாளி சாதி சூரணம், லவங்காதி சூரணம் போன்றவற்றை தொடர்ச்சியாக எடுத்துக்கொண்டாலே நோய் எதிர்ப்பு சக்தி உடலில் உண்டாகும். எல்லா தொற்றுகளிலிருந்தும் நம்மை காத்துக் கொள்ளலாம்'' என்கிறார் சித்த மருத்துவர் சதீஷ்குமார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

6 புதிய புறநகா் ரயில்கள் அறிமுகம்

அதிதீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம்

கோடை விடுமுறை: 19 சிறப்பு ரயில்கள் 239 நடைகள் இயக்கம் -தெற்கு ரயில்வே அறிவிப்பு

வாக்குச் சாவடிகளில் மருத்துவ முகாம்கள்

வாக்குச்சாவடிகளில் கைப்பேசிக்கு அனுமதி மறுப்பு: வாக்களிக்காமல் திரும்பிச் சென்ற வாக்காளா்கள்

SCROLL FOR NEXT