தினமணி கொண்டாட்டம்

சாப்பாடு ஐந்து ரூபாய்!

6th Jun 2021 06:00 AM | -பிஸ்மி பரிணாமன்

ADVERTISEMENT


"கரோனாவை வெல்வோம்' என்ற முயற்சியில், நல்ல மனம் கொண்டவர்களின் பங்களிப்பும் இணையும் போது சாதாரண மக்களின் சிரமங்கள் குறைகின்றன.

கேட்காமல் உதவும் பண்பு அனைவருக்கும் வந்துவிடாது. அத்தகைய உதவும் பண்புக்கு எடுத்துக் காட்டுதான் ஜி.டி. சிவா. பட்டுக்கோட்டையில் எட்டு ஆண்டுகளாக உணவு விடுதி நடத்தி வரும் சிவா, ஊரடங்கு, தளர்வில்லா ஊரடங்கு' காலங்களில் காலை உணவை இலவசமாகவும், முழு மதிய உணவை ஐந்து ரூபாய்க்கும் வழங்கி வருகிறார்.

"உணவு சேவை செய்ய காரணம் என்ன? என்று சிவாவிடம் கேட்டோம்:

"கரோனா நம்மைத் துரத்தி வருகிறது. சென்ற ஆண்டு நகரங்களில் மட்டும் வலம் வந்த கரோனா இந்த ஆண்டு கிராமங்களிலும் அதிக அளவில் ஊடுருவிவிட்டது. பட்டுக்கோட்டை சுற்றுவட்டார மக்கள் கரோனா பாதிப்பு ஏற்பட்டவுடன் பட்டுக்கோட்டை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு வந்துவிடுகின்றனர். எனது உணவுவிடுதியின் சுற்று வட்டாரத்தில் பத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் உள்ளன.

ADVERTISEMENT

நோயாளியுடன் துணைக்கு ஒருவர் இருப்பார். இருவருக்கு மூன்று வேளை உணவுச் செலவு ஒரு நாளுக்குக் குறைந்தது ஐநூறு ரூபாய் தேவைப்படும். சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்களால் உணவுச் செலவை சமாளிக்க முடியாது. சென்ற கரோனா காலகட்டத்தில் வியாபாரம் இல்லாமல் வீட்டு வாடகை, கடை வாடகை கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டேன். மின் கட்டணம் செலுத்த முடியவில்லை. எனவே இப்போதைய கரோனா காலத்தில் மக்கள் எப்படி அவதிப்படுவார்கள் என்பது எனக்குத் தெரியும். அதுவும் வெளி ஊர்களிலிருந்து பட்டுக்கோட்டை வந்து தங்கி மருத்துவம் பார்ப்பவர்களுக்கு உணவுச் செலவும் பாரமாக அவர்கள் மீது விழும். அவர்களின் சிரமத்தைக் குறைக்க எனக்குத் தெரிந்த உணவுத் தயாரிப்பை அவர்களுக்காக செய்யலாம் என்று முடிவு செய்தேன். அப்பா - அம்மா எனது முடிவுக்கு சம்மதம் தெரிவித்து சமையல் வேலைகளையும் செய்ய முன்வந்தார்கள்.

மே 19 முதல் காலை உணவை இலவசமாக வழங்க ஆரம்பித்தேன். ஐந்து இட்லி அல்லது இரண்டு இடியாப்பம் அல்லது இரண்டு தோசை. இவற்றில் எது பிடிக்கிறதோ அதை பெற்றுக் கொள்ளலாம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு ஆதாரத்தைக் காட்டினால் நோயாளிக்கும் சேர்த்து ஒரு பார்சல் ஆக மொத்தம் இரண்டு பார்சல் வழங்குவோம். மே 24 முதல் மதிய சாப்பாட்டை ஐந்து ரூபாய் பெற்றுக் கொண்டு வழங்குகிறோம். பொன்னி அரிசி சாதம், புளிக் குழம்பு, மூலிகை ரசம், தயிர், முட்டைகோஸ் கூட்டு அல்லது பொரியல், ஊறுகாய், ஒரு அப்பளம், ஒரு வாழைப்பழம், ஒரு கடலை மிட்டாய், ஒரு தண்ணீர் பாட்டில் மதிய சாப்பாட்டில் அடங்கும்.

சாப்பாட்டின் விலை ஐந்து ரூபாயாக வைக்கக் காரணம், தயக்கம் இன்றிப் பயனாளிகள் வாங்கிச் செல்வதற்காகத்தான். பலரும் இலவசமாக உணவு பெற்றுக் கொள்ளத் தயங்குகிறார்கள். தவிர, காசு கொடுத்துச் சாப்பாட்டை வாங்குவதால், சாப்பாட்டில் குறை ஏதும் இருந்தால் தயக்கம் இன்றி எங்களிடம் சொல்லலாம். காலை, மதிய உணவு தலா இருநூறு பேர்களுக்கு வழங்குகிறோம். இந்தச் சேவை "இனி ஊரடங்கு இல்லை' என்று சொல்லும் வரை தொடரும். உணவுகளை இலவசமாக வழங்கவும், விலையைக் குறைத்து விற்கவும் நண்பர்களும், நல்ல மனம் படைத்தவர்களும் அரிசி, மளிகை சாமான்கள் தந்து உதவுகிறார்கள்...இது ஓர் கூட்டுப் பங்களிப்பு... பலர் இணைந்து செய்யும் சமூக சேவை'' என்கிறார் சிவா.

Tags : சாப்பாடு ஐந்து ரூபாய்!
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT