தினமணி கொண்டாட்டம்

இந்திய மாணவன் சாதனை!

6th Jun 2021 06:00 AM | -சுதந்திரன் 

ADVERTISEMENT

 

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சிக் கழகமான நாசா  செய்யாத ஒரு விஷயத்தை இந்திய  இளைஞர் ஒருவர் செய்து சாதனை நிகழ்த்தியுள்ளார். 
நாசா மற்றும் வல்லரசு நாடுகள் ஏவிய, ராக்கெட்டுகள் நிலவைச் சுற்றி வந்து பல படங்களைப் பிடித்தன. நிலவில்  இறங்கிய பல விண்கலன்களும் நிலவையும், நிலவின் மேற்பரப்பைப் பல கோணங்களில்  படம் பிடித்துப் பூமிக்கு அனுப்பின. அத்தகைய படங்கள் நிலவு வெளிர் மஞ்சள் நிறத்தில், அங்கங்கே கருப்புத் திட்டுக்களுடன் இருப்பதாகக்  காட்டின. நமது கண்களால் நிலவைப் பார்க்கும் போதும்  நிலவு  வெளிர் மஞ்சள் நிறத்தில் கருப்புத் திட்டுக்களுடன் இருப்பதால்... நிலவின் அமைப்பே அப்படித்தான் என்று  முடிவு செய்துவிட்டோம்.
புணேவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்  நிலவை  மிக மிகத் தெளிவாகப் படம் பிடித்துச்  சாதனை புரிந்துள்ளார். 
பிரதமேஷ்  ஜாஜு. பத்தாம் வகுப்பில்  படிக்கும்  16  வயது  மாணவன். பிரதமேஷ் எடுத்தது ஒன்றோ நூறோ  படங்கள் அல்ல. சுமார் ஐம்பதாயிரம்  படங்களை எடுத்துத்  தள்ளியிருக்கிறார். எடுத்து முடிந்ததும்  அவற்றைக் கவனமாக ஆராய்ந்து  இதுவரை எடுக்கப்பட்ட  நிலவுப் படங்களை விட மிக மிகத் தெளிவானப் படங்களாக வெளியிட்டிருக்கிறார். 
""நிலவுப் படங்களை நான் மே மாதம் மூன்றாம் நாள் அதிகாலை ஒரு மணிக்கு காமிராவில் பதிவு செய்யத் தொடங்கினேன். நான்கு மணி நேரம்  நிலவைப் படம் பிடித்தேன்.  விடியோக்களும்  எடுத்தேன். நான் படம் பிடித்த நிலவுப் படங்களைப் பளிச்சென்று  ஆக்குவதற்குப் பலவித தொழில் நுட்ப முறைகளைக் கையாண்டேன். 
படங்களைத் தெளிவாக்கிக் கூர்மையாக்கும் தொழில் நுட்பங்களை  யூ  டியூப் மூலமாகவும், ஊடகங்களில் வெளிவந்த  கட்டுரைகளையும் படித்துத் தெரிந்து கொண்டேன். நான் எடுத்த  படங்களை  இணைத்து,  நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குத் தெள்ளத் தெளிவானப் படங்களாக உருவாக்கினேன். 
நிலாவின் தரை பல வண்ணங்களில் பதிவாகியுள்ளது. நமது கண்களால்  அந்த நிறங்களை அடையாளம் காண முடியாது. ஆனால் டெலஸ்கோபிக் காமிராவால்  நாம்  காண முடியும். நீல நிறத்தில் இருக்கும் இடங்களில் இல்மினைட்  கனிமம் உள்ளது. இல்மினைட்டில்  இரும்பு, டைட்டானியம், மற்றும் ஆக்சிஜன் உள்ளது. ஆரஞ்சு, கத்தரிப்பூ நிறங்களில் தெரியும்  இடங்களில் குறைந்த அளவு இரும்பும் டைட்டானியமும் இருக்கும். வெள்ளை மற்றும் கருப்பு  நிறங்களில் இருக்கும் இடங்களில் சூரிய ஒளி அதிகமாக விழுகிறது என்று பொருள். இன்ஸ்ட்டாகிராமில் என்னை 26 ஆயிரம் பேர் தொடர்கிறார்கள். இன்ஸ்ட்டாகிராமில் நான் பதிவிட்ட நிலவுப் படங்களை 11 ஆயிரம் பேர் விரும்பியுள்ளனர். வானியல் படித்து  வானியல் விஞ்ஞானியாக விரும்புகிறேன்'' என்கிறார் பிரதமேஷ்  ஜாஜு .
பிரதமேஷ்ஷின் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானாலும்  நாசா இந்தப் படங்கள் குறித்து  கருத்தோ மறுப்போ இதுவரையில் தெரிவிக்கவில்லை. 

Tags : இந்திய மாணவன் சாதனை!
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT