தினமணி கொண்டாட்டம்

ரத்தத்தின் ரத்தமே... - 18

6th Jun 2021 06:00 AM | டாக்டர்  எஸ். அமுதகுமார்

ADVERTISEMENT


தனது ஊரிலுள்ள மிகப்பெரிய பணக்காரரை, "அவருக்கென்னப்பா ஏழு தலைமுறைக்கு சொத்து சேர்த்து வச்சிருக்கார்' என்று ஊரிலுள்ளவர்கள் சொல்லுவதுண்டு.

இவ்வாறாக, "நல்ல காரியங்களுக்கும் ஏழு தலைமுறை, கெட்ட காரியங்களுக்கும் ஏழு தலைமுறை' என்று கிராமப்புறங்களில் ஏழு தலைமுறை என்கிற வார்த்தையை,  அடிக்கடி சொல்லுவதுண்டு. ஏழு தலைமுறை எது?

ஒரு ஐந்து வயது பெண் குழந்தையை எடுத்துக் கொள்வோம். இந்த ஐந்து வயது பெண் குழந்தைதான் முதல் தலைமுறை (1). இந்தக் குழந்தையின் அப்பா, அம்மா தான் இரண்டாவது தலைமுறை (2). குழந்தையின் தாத்தா,  பாட்டிதான் மூன்றாவது தலைமுறை (3). குழந்தையினுடைய தாத்தா,  பாட்டியின் அப்பா அம்மாதான் நான்காவது தலைமுறை (4). அதாவது இவர்களை பூட்டன்,  பூட்டி என்றும் அழைப்பதுண்டு. இப்போதுள்ள பல குடும்பங்களில் தாத்தா, பாட்டியையே பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுவிடுகிறது. ஜப்பான், சீனா போன்ற நாடுகளில், நூறு வயதைத் தாண்டியவர்கள் நிறையபேர், நல்ல ஆரோக்கியத்துடன், கூட்டுக் குடும்பமாக இன்றைக்கும் வாழ்கிறார்கள். இவர்களெல்லாம் பூட்டன், பூட்டிகள்தான்.  அந்தக் குழந்தைகள் பாக்கியம் செய்தவர்கள். 

பூட்டன், பூட்டியின் அப்பா அம்மா தான் ஐந்தாவது தலைமுறை (5). இவர்களை ஓட்டன், ஓட்டி என்று அழைப்பதுண்டு. ஓட்டன், ஓட்டியின் அப்பா அம்மா தான் ஆறாவது தலைமுறை (6). இவர்களை சேயோன், சேயோள் என்றும் அழைப்பதுண்டு. 

ADVERTISEMENT

சேயோன், சேயோளின் அப்பா அம்மா தான் ஏழாவது தலைமுறை (7). ஏழாவது தலைமுறையைச்சேர்ந்த ஆணை "பரன்' என்றும், பெண்ணை "பரை' என்றும் அழைப்பார்கள். இந்த பரன், பரை இரண்டையும் சேர்த்துத்தான், நாம் பரம்பரை என்று அழைக்கிறோம். 

"என் பரம்பரை ராஜ பரம்பரை, தெரியுமாடா?' என்று ஊரில் சிலபேர் பெருமைக்குச் சொல்லிக் கொள்வதுண்டு. நிறைய பேருக்கு 2 அல்லது 3 தலைமுறைக்கு மேல், பார்த்திருக்க, தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. இதில், ஏழாவது தலைமுறை யாருக்குத் தெரியப் போகிறது? யார் பார்த்திருக்கப் போகிறார்கள்?

எனது  மருத்துவக் கல்லூரி அறுவை சிகிச்சைத் துறை முன்னாள் பேராசிரியர். டாக்டர்.எம். அஹமது அலி, குடும்பத்தில் அவர் எள்ளுத் தாத்தா ஆகிவிட்டார். இன்றைக்கும் நான் தினமும் மருத்துவமனையில், அந்த எள்ளுத் தாத்தா டாக்டரைப் பார்க்கும் பாக்கியம் கிடைத்ததை எண்ணி, மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

இப்பொழுது விஷயத்துக்கு வருவோம். பரம்பரைக்கும், ரத்தத்துக்கும் என்ன சம்பந்தம்? பரம்பரை பற்றிய தகவல்களை எதற்காக, மிக விவரமாகச் சொல்கிறேன் என்று நீங்கள் யோசிக்கலாம்.

பரம்பரை ரத்த உறவுகளின் மூலாதாரத்தை நாம் பின்னோக்கிச் சென்று தேடிப் பார்த்தால், நமக்கு தலை சுற்றிவிடும். மூதாதையர்கள் உறவாக இருந்து, அவர்கள் வழிவழி வந்தவர்களை ரத்த உறவுகள் என்று நாம் அழைப்பதுண்டு. ஒரு தாய் வயிற்றில் பிறந்த பல குழந்தைகள், எல்லோருமே ரத்த உறவுகளே. அந்தக் குழந்தைகள் ஆணோ, பெண்ணோ வளர்ந்து, பெரியவர்களாகி, அவர்கள் நெருங்கிய உறவுகளுக்குள் திருமணம் செய்து கொண்டபின், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் ரத்த உறவுகளே. இதைத்தான் மிக நெருங்கிய ரத்தவழி உறவு என்று சொல்வதுண்டு.

பெரும்பாலும் நெருங்கிய உறவுகளுக்குள் திருமணம் நிச்சயிக்கப்படும்போது, உறுதி செய்யப்படுவதற்கு முன்பு, ரத்த உறவு முறைகள் சரியாக இருக்கிறதா, இல்லையா என்பதை வைத்துத்தான் திருமணத்திற்கே சம்மதம் சொல்வார்கள்.
பெரிய பதவியிலுள்ள, பெரும் வசதியான, பெரும் பணக்காரர்களை, தூரத்து ரத்த உறவு என்று சிலர் சொல்லிக் கொண்டு, உள்ளே நுழையப் பார்ப்பதுண்டு. இந்த உறவுமுறை, ஊர் விட்டு ஊர், நாடு விட்டு நாடு, நேராகப் போகாமல், ஊரெல்லாம் சுற்றிப்போகிற மாதிரி இருக்கும். சிலர், காரியங்கள் ஆகவேண்டு
மென்றால் தூரத்து ரத்த உறவு என்று எப்படியோ ஒரு உறவுமுறையை கொண்டு வந்து சேர்ப்பார்கள். சிலர் வேண்டாம் என்று முடிவு பண்ணிவிட்டால், நெருங்கிய உறவாக இருந்தாலும், ரத்த உறவே கிடையாது. அவங்க யாரோ, நாங்க யாரோ, சரிப்பட்டு வராது என்று சொல்லி விடுவார்கள். எங்க அப்பாவுக்கு அப்பா, அவரோட கூடப் பிறந்த தங்கை மகளுக்கு, பெரியப்பா பையனுக்கு ஒன்றுவிட்ட தம்பியின் மகன் நான். அப்ப எனக்கு உங்க பொண்ணு முறைப் பொண்ணு தானே? என்று ரத்த உறவுகளை சங்கிலித் தொடர் போல, வேண்டுமென்றே, எங்கெங்கோ போய் இழுத்துக் கொண்டு வந்து சேர்ப்பார்கள் சிலர்.

அண்ணன்-தங்கை, சித்தப்பா-பெரியப்பா,  சித்தி-அத்தை, மாமன் மகள்-அத்தை மகன், இப்படி பலவாறாக ரத்த வழி குடும்ப உறவை நாம் சொல்லிக் கொண்டே போகலாம். சில சமயங்களில் இந்த குடும்ப உறவுப்படி வரும் ஒரு ஆணுக்கும், ஒரு பெண்ணுக்கும் திருமணம் செய்யலாம் என்று நாம் நினைப்போம். ஆனால்,  2, 3 தலைமுறை ரத்த வழி உறவுப்படி, அந்த ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொள்ளக்கூடிய உறவாக இல்லாமலும் இருப்பார்கள். எனவே திருமணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விடும்.

அந்த காலத்தில், ஏன் இந்த காலத்தில் கூட தாம்பத்ய உறவுகளையே, ரத்த வழி உறவு முறையை வைத்துத்தான் முடிவு பண்ணுவார்கள். மிக நெருக்கமான உறவுகளாக இருந்தாலுங்கூட, சில ரத்த உறவுகள், தாம்பத்யம் வைத்துக் கொள்ளக் கூடாது என்று சில சட்டங்களிலே சொல்லப்பட்டிருக்கின்றன. தடை செய்யப்பட்ட உடல் உறவு சார்ந்த குற்றம் என்று இது கருதப்படுகிறது. சில நாடுகளில் நெருங்கிய ரத்தவழி உறவு முறையில் திருமணங்கள் செய்யாமலிருந்தால், ஊக்கத் தொகை கொடுக்கப்படும் என்று அரசே அறிவித்து, நெருங்கிய ரத்தவழி உறவுமுறை திருமணங்கள் அதிகமாக நடக்காமலிருக்க முயற்சி செய்கிறார்கள்.

நெருங்கிய ரத்தவழி உறவுகளில், திருமணம் செய்யும்போது, அந்த ஆணுக்கோ, அல்லது அந்தப் பெண்ணுக்கோ, பரம்பரை பரம்பரையாக, உடலில் ஏதாவது பிரச்னை தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறதா, நோய் ஏதாவது இருக்கிறதா என்று ரத்தப் பரிசோதனைகளையும், மற்ற பரிசோதனைகளையும், திருமணம் செய்வதற்கு முன்பு கட்டாயம் செய்து பார்க்க வேண்டும். இந்தப் பழக்கம் ஐக்கிய அரபு நாடுகளிலும், கத்தார் நாட்டிலும் நீண்ட காலம் அமலில் இருந்தது.
இரண்டு மூன்று தலைமுறைகளுக்குள் நெருங்கிய தாய் வழி ரத்த வழி உறவுகள் நெருங்கிய தந்தை வழி ரத்த உறவுகளுக்குள் திருமணம் நடந்தால் கர்ப்ப காலங்களில் பிரச்னை,  பிறவிக் கோளாறு மரபணுக் கோளாறு ஆகியவை ஏற்பட வாய்ப்புண்டு.

நெருங்கிய ரத்த வழி உறவுத் திருமணம் உலகில் ஐந்தில் ஒரு பங்கு ஜனத்தொகையில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. மத்திய கிழக்கு நாடுகள், மேற்கு ஆசியா, வடக்கு ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆகிய நாடுகளில் இந்த நெருங்கிய ரத்த வழி உறவுத் திருமணம் அதிகமாகவே நடைபெறுகின்றது. சுமார் நூறு கோடி மக்கள் உலகம் முழுவதும் மிக நெருங்கிய ரத்த வழி உறவுத் திருமணம் செய்து கொண்டு வாழ்கிறார்கள். இது காலங்காலமாய் வழிவழியாய் பல சமுதாயங்களில் இன்றைக்கும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது.

சொத்து போய்விடக் கூடாது என்பதற்காகவும் சொந்தம் விட்டுப்போய்விடக் கூடாது என்பதற்காகவும் நெருங்கிய ரத்தவழி உறவுகளில் திருமணம் செய்கிறார்கள். இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் இது அதிகமாக நடைபெறுகிறது. 1955- ஆம் ஆண்டிலேயே ஜெமினி கணேசன்-சாவித்ரி நடித்து வெளிவந்த தமிழ்த் திரைப்படத்தின் பெயரே "மாமன் மகள்' என்றுதான் இருந்தது. "அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு வாழப் பிறந்தாயடா' என்று சிவாஜி-சாவித்ரி நடித்த "பாசமலர்' பழைய தமிழ்த் திரைப்படத்தில் வரும் மிகப் பிரபலமான இந்தப் பாடலில் அந்தக் காலத்திலேயே நெருங்கிய ரத்த வழி உறவுத் திருமணத்தை நேரடியாகவே சுட்டிக் காட்டியிருப்பார் கவியரசர் கண்ணதாசன்.

ஒரு குடும்பத்துக்குள்ளேயே சுற்றி சுற்றி உறவினர்களை திருமணம் செய்து கொண்டு வந்தால் பின்னாளில் பிறக்கும் குழந்தைகளும் சரி சந்ததிகளும் சரி தீராத பிரச்னைகளோடு தீராத குறைபாடுகளோடு பிறக்க அதிக வாய்ப்புண்டு. நோயோடும் குறையோடும் பிறந்த குழந்தைகளோடு வாழ்க்கையை நடத்தும் பெற்றோர்களின் மனக்கஷ்டம் மனவலி மனப் போராட்டம் நிம்மதியின்மை ஆகியவைகளை நீங்கள் தூரத்திலிருந்து பார்த்தாலே கண்ணீர் விட்டு அழுது விடுவீர்கள்.
உங்கள் ரத்தவழி நெருங்கிய உறவுகளையே திருமணம் செய்யும் போது உங்களது சக்தியான மரபணுக்கள் உங்கள் குடும்பத்தில் திருமணம் செய்து கொண்டு புதிதாக வந்த புது உறவுப் பெண்ணின் சக்தியில்லாத மரபணுக்களோடு சேர்ந்து புதுப்பெண்ணின் மரபணுக்களை மிகச் சக்தியுள்ளதாக்கி உங்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தைகளுக்கு மிகப் பெரிய அளவில் பிறவிக் குறைபாடுகளை உண்டு பண்ண வாய்ப்பு அதிகமுண்டு. ஆனால் சில சமூகங்களில் அத்தை மகளையோ மாமன் மகனையோ திருமணம் செய்து கொண்டு நல்ல பூரண ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றெடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

1. குழந்தையாக இருக்கும்போதே காது கேட்கும் திறன் குறைவது  2. கண் பார்வைத் திறன் குறைவது 3. மன வளர்ச்சி குறைவு 4. செழிப்பான நல்ல வளர்ச்சியின்மை 5. வளர்ச்சியில் தாமதம் 6. பரம்பரை ரத்தக் கோளாறுகள் 7. வலிப்பு 8. காரணம் சொல்ல முடியாத குழந்தை இறப்பு இவைகளில் சில நெருங்கிய ரத்தவழி உறவுகளில் திருமணம் செய்பவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்பட வாய்ப்புண்டு. ஏற்படாமலும் போகலாம்.

குறைபாடுள்ள குழந்தைகள் பிறக்கும்போது குறைபாடுள்ள குழந்தையின் ரத்தத்தையும் பெற்றோர்களின் ரத்தத்தையும் கண்டிப்பாக பரிசோதிக்க வேண்டும். ரத்தப் பரிசோதனை மட்டுமல்லாது மரபணு சோதனையும் செய்து பார்க்க வேண்டும். அதனால்தான் டாக்டர்கள் நோயுற்ற உங்கள் குழந்தைகளை பரிசோதிக்கும்போது, உங்க வீட்ல வேற யாருக்காவது இந்த மாதிரி இருந்ததுண்டா தாத்தா, பாட்டி, சித்தப்பா, பெரியப்பா யாருக்காவது இம்மாதிரி இருந்திருக்கிறதா? என்று கேட்பார்கள். அதன் அர்த்தம் மரபணுக் கோளாறு காலங்காலமாக (இந்தப் பிரச்னை) வந்து கொண்டிருக்கிறதா என்று தெரிந்து கொள்ளத்தான் இந்தக் கேள்விகளை டாக்டர்கள் கேட்பார்கள்.

செயலற்று அமைதியாக ஒருவரது உடலில் உறங்கிக் கொண்டிருந்த மரபணுக்கள்  திருமணம் செய்தபின் அந்தப் புது வரவின் உடலில் மிக வீரியமாக மிக ஸ்ட்ராங்காக மிகுந்த சக்தியுடன் இருக்கும் மரபணுக்களோடு சேர்ந்து ஏற்கெனவே மூதாதையர்களிடம் இருந்த நோய் மறுபடியும் புதிதாக பெரிய அளவில் உருவெடுத்து வந்துவிட வாய்ப்புண்டு. எனவே முடிந்தவரை மிக நெருங்கிய ரத்தவழி உறவு முறைகளில் திருமணம் செய்வதை தவிர்க்கவும்.

நாம் அனுபவிக்கும் எல்லா இன்ப - துன்பங்களும் நாமும் நம் முன்னோர்களும் செய்த பாவ புண்ணியத்தின் அடிப்படையிலேயே தொடர்ந்து வருகிறது என்று சொல்லப்படுவதுண்டு. எனவே எப்பொழுதும் நல்லதை நினையுங்கள். நல்லதை செய்யுங்கள். நல்லதே நடக்கும். உங்கள் குடும்பத்தில் கொள்ளுத் தாத்தா- பாட்டி,     எள்ளுத் தாத்தா- பாட்டி வாழ்ந்து கொண்டிருந்தால் நீங்கள் பாக்கியம் செய்தவர்கள் ஆவீர்கள். அவர்களிடம் உங்கள் குடும்ப உறவுகளின் முன்னோர்களின் பழங்கால மருத்துவ சரித்திரத்தைக் கேட்டு வைத்துக் கொள்ளுங்கள். அது எப்பொழுதும் உங்கள் குடும்பத்துக்கு உதவியாய் இருக்கும்.

 -தொடரும்

Tags : ரத்தத்தின் ரத்தமே...
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT