தினமணி கொண்டாட்டம்

ரோஜா மலரே! - 99: திறமையை வெளிச்சம் போட்டு காட்டிய சின்னத்திரை! - குமாரி சச்சு

25th Jul 2021 06:00 AM | சலன்

ADVERTISEMENT

 

நான் கதாநாயகியாக முதன் முதலில் நடித்த நிறுவனம் ஏ.வி.எம் என்று எல்லோருக்கும் தெரியும். அந்தப் படத்தின் பெயர் "வீரத் திருமகன்'.  கதாநாயகியாக நடித்த பிறகு அதே நிறுவனத்தின் தயாரிப்பில்  நடித்த படம் "அன்னை'.  அவர்களும் சினிமாவை விட்டுத் தொலைக்காட்சி தொடர்கள் எடுக்க ஆரம்பித்தனர். அந்தத் தொலைக்காட்சி தொடர் தயாரித்தது ஏ.வி.எம்.குமரன். அந்தத் தொடருக்குப் பெயர் "இப்படிக்கு தென்றல்'. எனக்குக் கிடைத்த வேடம் சிறப்பானது. திறம்பட நடித்துக் கொடுக்க வேண்டிய பாத்திரம்.

இதையே சினிமாவில் செய்ய வேண்டும் என்றால் நடிகைகள் பி.பானுமதி, எஸ்.வரலக்ஷ்மி போன்றோர் செய்யும் வேடம். அது மாமியார் வேடம் மட்டுமல்ல;  மருமகளைத் துன்புறுத்தும் வில்லி வேடமும் கூட. ஆனால் தான் பெற்ற பையன் மீது பாசம் அதிகம். கூடவே கண்டிப்பும் உண்டு.  திமிர் பிடித்த பணக்கார மாமியார் பாத்திரம். ஏ.வி.எம்.குமரன் இந்த வேடத்தை நடிப்பில் அனுபவம் பெற்ற நடிகைகள் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று எனது பெயரை சொன்னார். 

இந்தக் கதாபாத்திரத்தை  நான் செய்யலாமா, வேண்டாமா என்று யோசனை செய்தேன். இதுவரைக்கும்  தொலைக்காட்சி தொடர்களில் செய்தது,   மென்மையான வேடங்கள் மட்டுமே. 

ADVERTISEMENT

இப்போது மாமியார் வேடம் செய்ய வேண்டுமா? இதில் நம்மை ரசிகர்கள் எப்படிப் பார்ப்பார்கள்,  விரும்புவார்களா? என்று  எனக்கு சந்தேகம் தோன்றியது. அதே நேரத்தில், இந்த மாதிரி வேடங்களில் தான், நமது நடிப்பு திறமையை நிரூபிக்கக் கூடிய வாய்ப்பு கிடைக்கும் என்றும் தோன்றியது. அதற்காகத் தான் இந்த வேடத்தை ஏற்று  நடிக்கச் சம்மதித்துத் தொடர்ந்து நடித்தும் கொடுத்தேன்.

எனக்கு ஒரு பழக்கம் உண்டு. நடிக்கச் சம்மதிக்கும் முன்னால் பல முறை யோசிப்பேன். 

சம்மதித்து விட்டால் 100 சதவிகிதம்  உழைத்து நடித்துக் கொடுத்து விடுவேன். இந்தத்  தொடரில்  வசனங்கள் ரொம்பவே சிறப்பாகவே இருந்தன. காரணம் இந்த வசனங்களை எழுதியவர் எழுத்தாளர் தேவிபாலா. ஏ.வி.எம்.குமரன் முக்கால்வாசி நேரமும் படப்பிடிப்பில் தான் இருப்பார். நான் அந்த வசனங்களைப் பேச தயங்கும் ஒவ்வொரு முறையும், இந்தப் பாத்திரம் இப்படிதான் பேச வேண்டும் என்று குமரனும், அந்தத் தொடரின் இயக்குநர் எல்.ராஜாவும் எனக்குச் சொல்லிக் கொடுத்து என்னைப் பேச வைத்தார்கள். நான் வசனத்தில், வில்லத்தனத்தை வெளிப்படுத்தி நடித்தேன். 

எனக்கு வில்லத்தனமான முகத் தோற்றம் கிடையாது. அதனால் வசனத்தைக் கொஞ்சம் கடுமையாக நான் பேசும் படி  வைத்ததால், இந்தப் பாத்திரம் வெற்றி பெறும் என்று நினைத்தார்கள். அதைப் போலவே வெற்றிப் பெற்றது.  நடிக்கும் போது எப்பொழுதுமே, நான் செய்ய வேண்டிய வேடத்தை ரசித்து செய்வேன். ஆனால் இந்த மாமியார் பாத்திரத்தை உள்ளுக்குள் ரசித்துச் செய்ய முடியவில்லை. ஆனால், பார்த்தவர்கள் என்னிடம் சொன்னது என்ன தெரியுமா? "முகத்தில் கடுமையைக் காட்டாமல், வார்த்தையில் காண்பித்தீர்கள், அதனால் நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள்', என்றார்கள். 

"இப்படிக்கு தென்றல்'  தொலைக்காட்சி தொடரில் ஒரு படிப்பினை இருந்தது. கண்டிப்பான தாய் வேடம், மகன் வளர்ந்து, அவனுக்குக் கல்யாணம் ஆகிவிட்ட நிலையில்,  மாமியார் வேடம் மட்டுமல்லாமல், கணவராக வந்த வரை உதாசீனப்படுத்தும் காட்சிகளும் இருந்தன. 

நான் நடிக்காத பாத்திரம் என்று வரும் போது, நம் அனுபவ நடிப்பு நமக்கு உறுதுணையாக இருக்கும். ஏ.வி.எம்.குமரன் எனக்கு உறுதுணையாக செட்டிலேயே இருந்து எனக்கு எப்போதெல்லாம் சந்தேகம் வருகிறதோ, அப்பொழுது எல்லாம் இப்படி வசனம் பேசினால் தான் சரியாக இருக்கும் என்று எனக்கு சொல்லி, என்னை அந்த வேடத்தைச் செய்ய வைத்தார். அது மட்டுமல்ல, இயக்குநர் எல்.ராஜா கூட, எப்படி எல்லாம் செய்தால், இந்த வேடம் சிறப்பாக இருக்கும் என்று சொல்லி என்னை நடிக்க வைத்தார்.  இருவரும் என்னை ஊக்கப்படுத்திக்கொண்டே இருந்தார்கள். 

எனக்குள் இருந்த நடிப்புத் திறமையை சினிமாவில் முழுமையாக உபயோகப்படுத்தவில்லை என்ற வருத்தம் எனக்கு எப்பொழுதுமே உண்டு. என்னை ஒரு காமெடி நடிகையாகப் பார்த்தார்கள். நடன நடிகையாகப் பார்த்தார்கள். கவர்ச்சி கன்னியாகப் பார்த்தார்களே ஒழிய, நான் ஒரு சிறந்த நடிகை என்றும், எந்த வேடம் கொடுத்தாலும் சிறப்பாகச் செய்யக்கூடியவள் என்று, யாருமே பார்க்கவில்லை. ஏனென்றால் அவர்கள் நகைச்சுவை நடிகை என்ற கோணத்தில் எனக்குப் பாத்திரங்களை அளித்தார்கள்.

கதாநாயகியாக இருக்க எல்லாத் தகுதியும் உள்ளது என்று சொன்னார்களே தவிர, எனக்குக் கதாநாயகி பாத்திரத்தில் நடிக்க ஒரு சில படங்களில் மட்டுமே வாய்ப்புத் தந்தார்கள். ஆனால், தொலைக்காட்சி தொடர்களில், எனக்குக் கிடைத்த இது போன்ற நல்ல வாய்ப்பை, வித்தயாசமான பாத்திரங்களை நான் ஒப்புக்கொண்டதால், மனதுக்கு ஆறுதல் தந்தது. மக்களின் பாராட்டும் கிடைத்தது. மகிழ்ச்சியும் ஏற்பட்டது.

நான் எத்தனையோ படங்களில் நடித்திருக்கிறேன். மேடை நாடகத்தில் நடித்திருக்கிறேன். தொலைக்காட்சி தொடர்களில் நடித்து இருக்கிறேன். ஒவ்வொரு ஊராகப் போய் நடித்திருக்கிறேன். ஆனால் நாடு விட்டு, நாடு சென்று நடித்து விட்டு வந்தது, இந்தத் தொலைக்காட்சி தொடரில் தான். அது மட்டுமல்ல, ஒவ்வொரு கதையும் பிரபலமான எழுத்தாளரின் கதையாக இருக்கும். 

இல்லையென்றால், பிரபலமான இயக்குநரின் கதையாக இருக்கும். தொடர்ந்து நான் நடித்தது எந்த எழுத்தாளரின் கதை தெரியுமா?

(தொடரும்)

Tags : Kondattam Logo screen that highlights talent
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT