தினமணி கொண்டாட்டம்

'நளபாகம்' எங்களுடையது!

சா. ஜெயப்பிரகாஷ்

கிராமத்து இளைஞர்கள் 5 பேர் தனது சமையல் கலை தெரிந்த தாத்தாவையும் இணைத்துக் கொண்டு 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய யுடியூப் சேனல், இப்போது ஒரு கோடி சந்தாதாரர்களை எட்டி, அந்த யூடியூப் நிறுவனத்தின் "டைமண்ட்' விருதைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

மரங்கள் நிறைந்த தோட்டப் பகுதிக்குள் பெரிய பெரிய பாத்திரங்கள், மூட்டை மூட்டையாக சைவ, அசைவப் பொருள்களுடன்  நடந்து கொண்டே, "செம்மையா சமைக்கிறோம்... பயங்கரமா ருசிக்கிறோம்... நீங்களும் வாங்க... ஆல்வேய்ஸ் வெல்கம்' என்ற குரல் உச்சஸ்தானியில் கேட்கும்.

கடந்த ஜனவரியில் தேர்தல் பிரசாரத்துக்கு வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியுடன் சேர்ந்து கரூரில் காளான் பிரியாணி செய்யும்போது, ராகுலையும் "தயிர்ரு'.. "கல்லுப்பு'... எனச் சொல்ல வைத்தபோதுதான் அந்தக் குரலின் வலிமை பிரபலமானது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள சின்னவீரமங்கலம் என்ற குக்கிராமத்து இளைஞர்களின் அந்தச் சேனலின் பெயர்- "வில்லேஜ் குக்கிங் சானல்'.அந்தத் தாத்தாவின் பெயர் எம். பெரியதம்பி,  வயது 75.

மூத்த பேரன் வி. சுப்பிரமணிக்கு வயது 32, எம்.காம், எம்.பில் முடித்தவர். அடுத்தவர், வி. முருகேசன், 10-ஆம் வகுப்பு முடித்து சிங்கப்பூர் போய்விட்டுத் திரும்பியவர். அடுத்தவர் வி. அய்யனார் வயது 28, பி.காம் முடித்துவிட்டு தனியார் நிறுவனப் பணியில் இருந்து வந்தவர்.

ஜி. தமிழ்ச்செல்வன் வயது 26, நானோ டெக்னாலஜியில் அழகப்பா பல்கலைக்கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். டி. முத்துமாணிக்கம் வயது 25, பி.எஸ்ஸி உணவக மேலாண்மை முடித்தவர். கடைசி இருவரும் பங்காளிகள்.

இந்த 5 பேரன்களும் பெரியதம்பி தாத்தாவும்தான் இன்றைக்குப் பரபரப்பாக பேசப்படும் "வில்லேஜ் குக்கிங்' சேனலின் உரிமையாளர்கள். ஆம், சமையல் சேனல் இதுவரை அதிலும் குறிப்பாகத் தமிழ் சேனல் எதுவும் யூடியூப் நிறுவனத்தில் ஒரு கோடி சந்தாதாரர்களைப் பெற்றதில்லை. அத்தோடு நிற்கவில்லை. கரோனா தடுப்புப் பணிக்காகத் தமிழ்நாடு முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ. 10 லட்சத்தையும் கொடுத்து வந்திருக்கிறார்கள்.

வி. சுப்பிரமணி, கணினி பயிலாவிட்டாலும் புலமை மிகுந்தவர். பெரியதம்பி தாத்தா, தனது 25 வயதிலேயே சமையல் பணிக்கு வந்தவர். இவர்களைத் தாண்டி பேரன்கள் அனைவருக்கும் சமைக்கத் தெரியும் என்கிறார்கள். இது குறித்து சுப்ரமணி கூறியதாவது:

2018 ஏப்ரல் மாதம் "வில்லேஜ் குக்கிங் சானல்' தொடங்கப்பட்டது. தொடக்கத்தில், கொஞ்சமாக சமைத்து, வீடியோ தயாரித்துக் கொண்டு சமைத்த உணவை நாங்களே சாப்பிட்டோம். 

பிற்காலத்தில் வீடியோ பிரபலமாகி, வருமானம் வரத் தொடங்கியதும் சமைக்கும் அளவை அதிகரித்துக் கொண்டு, உணவை அருகேயுள்ள ஆதரவற்ற - முதியோர் இல்லங்களுக்குக் கொண்டு சென்று இலவசமாக வழங்கி வருகிறோம்.

காரசாரமான கமகமக்கும் மசாலாப் பொருள்கள் அனைத்தையும் அம்மியில் அரைத்துக் கொள்வதும், சமைப்பதற்கு நாட்டு மரச்செக்கில் ஆட்டிய எண்ணெய் வகைகளைப் பயன்படுத்துவதும் எங்களது பாணி.

25 கிலோ கத்தரிக்காயில் எண்ணெய் கத்திரிக்காய் சமையல், 500 பானி பூரிகள், பல்வேறு அசைவ உணவுகள், கிராமத்துத் திருமணச் சமையல், என பல நூறு வீடியோக்களைப் பதிவிட்டு இருக்கிறோம். 

யூடியூப் சேனலின் பார்வையாளர்களையும் அவ்வப்போது நேரில் அழைத்துச் சமைத்த உணவுகளை ருசிக்கச் செய்கிறோம்.

6 மாதம் விவசாயம் செய்துவிட்டு, 6 மாதம் சும்மா இருப்பதுதான் கிராமத்து வேலை. வெளிநாட்டுக்குச் சென்று பிடிக்காத வேலையைச் செய்வதில் விருப்பமில்லை. கிராமத்திலுள்ள பெரும்பாலான இளைஞர்களுக்குச் சமையல் அத்துப்படி. எனவே, சமையல் சேனல் ஒன்றைத் தொடங்கினோம்.

யார் பணம் கொடுத்துத் தங்கள் நிறுவனங்களுக்காக வீடியோவாகத் தரச் சொன்னாலும் செய்வதில்லை. எவ்வளவு பணம் கொடுத்து வீட்டு விசேஷங்களுக்குச் சமைக்கச் சொன்னாலும் போவதில்லை. நாங்கள் சமைக்கிறோம், ஒவ்வொன்றிலும் வித்தியாசமாகச் செய்கிறோம். பார்வையாளர்களுக்கு அதனைப் படைக்கிறோம். சம்பாதிக்கிறோம். அவ்வளவுதான்.

எங்களுக்கு மிகுந்த வரவேற்பையும் அதிகப் பார்வையாளர்களையும் பெற்றுத் தந்தது ராகுல் நிகழ்ச்சிதான். ஒரு கோடிப் பார்வையாளர் என்ற பெருமை அவரால் தான் கிடைத்தது. 

இந்த நிகழ்ச்சிக்கு ஜோதிமணி எம்.பியும், அமைச்சரான செந்தில் பாலாஜியும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.   ராகுல் எங்களது சமையலை சுவைத்து சாப்பிட்டது எங்களுக்குப் பெருமை. 

எங்களின் வீடியோக்களுக்குக் கீழே, என்ன மொழி என்றே தெரியாத எழுத்துகளில் வரும் பின்னூட்டங்களைப் பார்த்துப் பிரமித்துப் போயிருக்கிறோம். இப்போது எங்களது பார்வையாளர்களின் எண்ணிக்கை  ஒரு கோடியைத் தொட்டிருப்பதால், வீடியோக்களில் ஆங்கிலத்தில் சப்டைட்டில் போட வேண்டிய தேவையும் எழுந்திருக்கிறது.

விரைவில், எல்லா மாவட்டங்களுக்கும் செல்வோம், எல்லா மாநிலங்களுக்கும் செல்வோம்'' என்கிறார் சுப்பிரமணியன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT