தினமணி கொண்டாட்டம்

நக்கீரராகவே இருந்தாலும் குற்றமே!: கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

தினமணி

உலகை மன்மதன் தன்வயப்படுத்தும் இளவேனிற் காலத்தின் ஒரு மாலைப்பொழுது, வசந்தத்தின் இனிமைதுய்க்க செண்பகப்பாண்டியன் அரசமாதேவியோடு புறப்படுகிறான். ஈசன் எந்தை இணையடி நிழலாய் மனம் பதித்தார்க்கு மாறா இதம்தரும் இயற்கையின் எழிலோடு செயற்கையின் வனப்பும் கூடிய ஓர் அற்புதப் பூங்காவினை அடைந்து நலம்மிகும் காவின் நயப்பினிற் திளைத்து, ஏகாந்தத்தின் இனிமை உணர்ந்து, இளவேனில் இன்பம் துய்க்கிறான் அவன். வசந்தம்வருட, நாணித் தலைசாய்த்து மலர்ந்து நிற்கும் பூக்களின் நடுவில் தானும் ஒரு பூவாய் தன் மனங்கவர் காதலி பூரித்துநிற்க, சற்றுத் தள்ளித் தனித்தவனாய் ஓர் அற்புதச் சிற்பியின் கைப்பதத்தால் கவினுற்ற கற்குன்றொன்றில் மெய்மறந்து மேனி சிலிர்க்க அமர்ந்திருக்கின்றான்.

இவ்இளவேனிற் காலத்(து) இன்உயிர்த் துணைவியோடும்
செவ்விய செங்கோல் நேமிச் செண்பக மாறன் ஓர்நாள்
கைவினை வல்லோன் செய்த கதிர்விடு காந்தக் குன்றில்
வெவ்விய வேடைநீப்பான் இருந்தனன் வேறு வைகி

அப்போது, எப்போதும் அவன் நாசியறியா நாற்றம் (மணம்) ஒன்றை முதன்முதலாய் அவன் மூக்குணர்கிறது. அவ்வாசனையின் வகை அறியத் தலைப்படுகிறது அவன் அறிவு. இன்பத்துறையில் எளியரானார்தம் மனம் போல், வனப்புமிகு வனத்தின் பூக்களிலெல்லாம் புகுந்து வருடி, அவற்றின் நாற்றம் பொருந்தி நளினமாய் வீசும் காற்றின் மணமோ இது? காவலன் நெஞ்சில் கேள்வி. ஆண்டுதோறும் இவ் அரிய வசந்தத்தைத் தீண்டி இன்பில் திளைப்பவன் ஆதலால், பூக்களின் மணத்தை அவன் புலன்கள் நன்கு அறியும். இப்போது வந்த இனிய நறுமணம் எப்போதும் காணா ஒன்றென அவன் இதயம் சொல்ல, இந்த வாசனை எங்கிருந்துற்றது? வந்தது பூங்காவில் பூத்த மலர்களில் காற்று வெளவிய வாசமன்று. காற்றுக்கும் வாசம் இல்லை. 

அங்ஙனமாயின்? அவனது கேள்வி பெரிதாயிற்று.
வெவ்விய வேலான் வீசும் வாசமோந்(து) ஈது வேறு
திவ்விய வாச மாக இருந்தது தென்றல் காவில்
வெளவிய வாசமன்று காலுக்கும் வாசமில்லை
எவ்வியல் வாசமேயோ? இதுவென எண்ணங் கொள்வான்.

அயலை ஆராய்கின்றன அவன் கண்கள். சற்றுத் தூரத்தே தன்னை மறந்து நிற்கும் தலைவியின்மேல் அவை பதிகின்றன. அவனை "வா' எனக் கைநீட்டி அழைப்பது போல் வசந்தக் காற்றில் அவள் கூந்தல் குதூகலிக்கிறது. அவன் மனத்துள் திடீரென ஓர் ஒளி. இவ்வாசத்தை, காற்று, தேவியின் கூந்தலில் இருந்தே திருடியது என நிச்சயம் கொள்கிறான். அவன் உள்ளம் இறும்பூதெய்துகிறது.

வண்டுணரா அவ்வாசனையை கண்டுணர்ந்ததாற் களிகொண்டான் பாண்டியன். மீண்டும் அவன் மனத்திலோர் ஐயம். தேவி கூந்தலின் இத் தித்திக்கும் வாசனை, பூவினால் சேர்ந்ததோ? புதுமணத் தாதுகள் கூடிவந்ததோ? குளித்தபின் சேடியர் கூட்டும் அகிற்புகை ஏறி வந்ததோ? என பற்பல எண்ணிப் பாண்டியன் மயங்கினான்.

காதற்கினியவள் கருங்குழற்; கற்றையின் ஏதமில் வாசனை இயற்கையா? செயற்கையா? இவ்வெண்ணம் மீண்டும் அவன் அறிவை ஆராயத் தூண்டிற்று.

திரும்பித் தன்தேவி தன்னை நோக்கினான் தேவி ஐம்பால்
இரும் பித்தை வாசமாகி இருந்தது கண்(டு) இவ்வாசஞ்
சுரும்பிற்கும் தெரியா தென்னாச் சூழ்ந்(து)இறும்பூது கொண்டீ
தரும்பித்தைக்கியல்போ செய்கையோ என ஐயங்கொண்டான்.

அவன் மனத்துள் மறுபடியும் திடீரென ஒரு மகிழ்ச்சி. தன் அவையிலுள்ள சங்கச் சான்றோரின் தங்கத் தமிழுக்கு, இவ்வினாவை விதையாக்கினால் என்ன? "ஆகா!' என அவன் ஆனந்தித்தான். தன் மனத்திற் தோன்றிய இக் கேள்வியை எவர்க்கும் உரைக்காமல் தன் ஐயுறுகருத்தை யாவராயினும் அறிந்து கவி தருக! என ஆணையிட்டால், உளக் கருத்தறியும் உண்மைப் புலவனைத் தெரிந்து அறிந்திடலாம். தேடற்கரியவோர் கவி அறிந்திடலாம். ஒரே கல்லில் இரு மாங்காய் என எண்ணி, ஆள்பவன் மனத்தில் ஆனந்த வெள்ளம். அவன் ஆசை சங்கத்துள் ஓசையாய் ஒலித்தது. வென்றார்க்கு இதுவென வேத்தவை வாசல் தன்னில் பொன்னினாற் பொலிந்த நல்ல பொற்கிழி தனையமைத்து கவி, பண்ணியே பெறுக! என்று காவலர் தூங்க விட்டார்.

ஐயுறு கருத்தை யாவராயினும் அறிந்து பாடல்
செய்யுநர் அவர்க்கே இன்ன ஆயிரஞ் செம்பொன் என்றக்
கையுறை வேலான் ஈந்த பொற்கிழி கைக்கொண்(டு) ஏகி
மெய்யுணர் புலவர் முன்னாத் தூக்கினார் வினைசெய் மாக்கள்.

நக்கீரன் தலைமையில் நற் பெரும் புலவோர் மன்னன்தன் மனத்துற்ற ஐயம் யாதெனத் தேடி ஆராய்ந்து தேம்பிச் சோர்ந்தனர். கூடி ஆராயின் குறைவுறும் பரிசு என்று தனித்தனி ஓடி ஆராய்ந்து ஓய்ந்தனர். உற்றது உணரும் தன்மையிலாத் தம் சிற்றறிவால் மன்னவன் மனக் கருத்தறியாது மருண்டனர். அறியாதது அறிந்தும், அரும்பொருள் ஆசைகொண்டு கருத்திலாக் கவிதை செய்து கவன்றனர்.

வங்கத்தார் பொருள்போல் வேறு வகையமை கேள்வி நோக்கிச்
சங்கத்தாரெல்லாம் தம்மில் தனித்தனி தேர்ந்து தேர்ந்து
துங்கத்தார் வேம்பன் உள்ளம் சூழ்பொருள் துழாவி உற்ற
பங்கத்தாராகி எய்த்துப் படர் உறு மனத்தரானார்.

அந்த வேளையில், ஆதி சைவருள் தந்தை, தாயிலாத் தருமி என்பவன் மாணவப்பருவம் நீங்கி மணம்புரி ஆசை தோன்ற, மதுரைச் சொக்கநாதர்தம் திருவடி ஒன்றே கதியென நினைந்து உருகி வேண்டினான். முழுதும் தருகின்ற, அவ்வேயிறு தோளிபங்கன் முன் சென்று, தன் வருத்தமுரைத்து வாடினான். 

கல்வியின் முடிந்த பயன் அக்கடவுளே என்னும் உண்மை ஞானம் உதித்த அப் பிராமணன், அறிவு தரும் ஆணவம் சிறிதும் இல்லாச் சிந்தையொடு, "இல்லறம் புகுந்தாலன்றி இறைவர்க்குச் சேவை செய்யும் நல்லறம் வாய்க்காது ஐயா! நான் என்ன செய்வேன்?'  என்றும், "பொன்னிலாக் கையனாய் நான் எவர் மனை புகுந்து எற்குப் பெண் கொடு என்று கேட்பேன் பேதை எற்கு உறவுமில்லை. என் பொருட்டு ஏதும் செய்ய வேண்டும்' என்றும், கண்ணுதற் கடவுளின் கால்தொழுது அழுதான். "மன்னவன் மனக்கருத்தை விளக்கி, இறைவ! ஓர் கவிதை தந்தால் ஏழையேன் உய்வேன்' என்று இறைவனை இறைஞ்சித் தொழுதான்.

தந்தை தாயிலேன் தனியன் ஆகிய
மைந்தனேன் புது வதுவை வேட்கையேன்
சிந்தை நோய் செய்யும் செல்லல் தீர்ப்பதற்(கு)
எந்தையே இது பதமென்(று) ஏத்தியே.
ஐய யாவையும் அறிதியே கொலாம்
வையை நாடவன் மனக்கருத் துணர்ந்(து)
உய்ய ஓர் கவி உரைத்(து) எனக்கருள்
செய்ய வேண்டும் என்றிரந்து செப்பினான்.

வேண்டுவார்க்கு வேண்டுவன ஈயும் அவ்விறைவன், வேதியனின் வேதனையை விலக்க உளம் கொண்டான். ஓதி உணர் அறிஞரெலாம் உணரமாட்டா, ஒப்பற்ற கவி ஒன்று உரைத்துத் தந்தான். வறுமையால் மனம் வாடி நின்றதோர் ஏழை பெற்ற நல் இனிய செல்வமாய்க் கடவுள் தந்த அக்கவியை வாங்கி, தன் தலையிற் சூடி அத்தருமி விம்மினான். இறையனார் தந்த அந்த இனிய நற்கவிதை, இன்றும் சங்கப்பாடலுள் தங்கமாய் மின்னும். இதோ அக்கவிதை:

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமஞ் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற் 
செறியெயிற்(று) அரிவை கூந்தலின் 
நறியவு(ம்) உளவோ நீ அறியும் பூவே.

தாழ்விலாத் தமிழ்ப்புலவன் ஒருவனின் கூற்றாய் அமைவது இக் குறுங்கவி. அழகிய சிறகு கொண்ட "வண்டொன்றை அழைத்து, "உன் தனிவிருப்புரையாது உண்மை உரை!' என வேண்டி, பின் கேள்வியைத் தொடுக்கிறான் புலவன். "மயில் போன்ற வடிவினையும், நெருங்கிய அழகிய பற்களினையும் கொண்ட, மங்கையர் கூந்தலின் மணம் மிகுந்ததோர், நறியமணம் கொண்ட நல்ல மலரினை, அறிவையோ நீ?' என வண்டினைக் கேட்பதாய் அக்கவிதை முடிகிறது.

மறைமுகமாய் மங்கையர் கூந்தலுக்கு வாசனை உண்டென, ஈசனே இயம்பி, இக் கவிதையைத் தருமியின் கையிற் கொடுத்தான். ஆண்டவன் தந்த அவ்வரிய கவிதையைத் தன் கவிதை என உரைத்துச் சங்கம் ஏறினான் தருமி. சங்கத்தார் எல்லாரும் அப் பங்கமில் கவிதை கண்டு பரவசப்பட்டனர்.

கல்வியாளர் தம் கையில் நீட்டினான்
வல்லை யாவரும் வாங்கி வாசியாச்
சொல்லின் செல்வமும் பொருளும் தூக்கியே
நல்ல நல்லவென்(று) உவகை நண்ணினார்.

பாண்டியனின் முன்னால் கவிதை படிக்கப்பட்டது. அக்கவிதை தன் எண்ணம் உரைத்த வண்ணம் கண்டு, வேண்டிய கவி கிடைத்ததாய்ப் பாண்டியன் மகிழ்ந்தான். போற்றி இப்புலவனுக்கே பொற்கிழி அளிக்க! என, பாண்டியனிடம் இருந்து கட்டளை பிறந்தது.

அளக்கில் கேள்வியார் அரசன் முன்புபோய்
விளக்கி அக்கவி விளம்பினார் கடன்
உளக் கருத்து நேர் ஒத்தலாற் சிரம்
துளக்கி மீனவன் மகிழ்ச்சி தூங்கினான்.
உணர்ந்த கேள்வியார் இவரொடு ஒல்லைபோய்ப்
புணர்ந்த ஆயிரம் பொன்னும் இன்தமிழ் 
கொணர்ந்த வேதியன் கொள்க! இன்றென
மணந்த தாரினான் மகிழ்ந்து நல்கினான். 

வேண்டிய பொருள் கிடைத்ததென பொற்கிழி நோக்கி விரைந்தான் தருமி. புலவர்க்கு எட்டா அரசனின் மனப்பொருள் போலவே, அப் பொற்கிழியும் எட்டா உயரத்தில் இருந்தது பற்றி அதனைப் பறிக்க முனைந்த தருமியின் கரத்தைத் தடுத்தது ஒரு கரம். 

அரச கட்டளையைத் தடுப்பது யாரெனத் தருமி திகைத்தான். தன்கை பற்றித் தடுத்த அக் கரத்திற்கு உரியவரைக் காண, உயர்ந்தன அவன் விழிகள். அங்கு, தன் அறிவு பெறாத தகுதியை, இம் மண்ணில் வேறு எவரும் பெறுவதா? என கண்களில் பொறாமைத்தீ கனன்றெழ, பங்கமுற்ற மனத்தோடு, சங்கத்தலைவர் நக்கீரர் நின்றார்.

வேந்தன் ஏவலால் விபுதர் தம்மொடும்
போந்து மீண்டு அவைப் புறம்பு தூங்கிய
ஆய்ந்த பொற்கிழி அறுக்கு நம்பியை
நேர்ந்து கீரன் நில்லென விலக்கினான்.

ஆற்றல்மிகு அறிவு கொண்ட நக்கீரன் தனைக்கண்டு, தருக்கறியாத் தருமி தன் உருச்சுருங்கி நின்றனன். "குற்றம் உண்டு உன் கவியில்!' எனக் கூறி, பற்றவிடாது பரிசினைத் தடுத்தார் நக்கீரர். நற்றமிழில் துறைபோகாத் தருமி அக்கவிப் பிழையை, உற்று அறியமாட்டாது ஒடுங்கினன். 

இறைவன் கவியிலும் ஏதம் வருமா? வாதம் செய்யும் வகையறியாது வாடினான் தருமி. நெடும்பசி கொண்டான் ஒருவன் உணவை நெருங்கிடும் வேளை, தடுத்ததற்கு ஒப்ப அத்தருமியின் பரிசு தடுக்கப்பட்டது.

குற்றம் இக்கவிக்கு என்று கூறலும்
கற்றிலான் நெடுங் காலம் வெம் பசி
உற்றவன் கலத்து உண்ணும் எல்லைகைப்
பற்ற வாடினான் பண்பு பற்றினான்.

அடுத்த இதழில்....

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னாப்ரிக்காவில் பேருந்து விபத்தில் 45 பேர் பலி; உயிர் பிழைத்த ஒரே சிறுமி

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

கடல் கன்னி... ஷ்ரத்தா தாஸ்!

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

SCROLL FOR NEXT