தினமணி கொண்டாட்டம்

கரோனா மூன்றாம் அலை: பாதுகாப்புடன் இருந்தால் பயப்பட வேண்டாம்!

25th Jul 2021 06:00 AM | -வனராஜன்

ADVERTISEMENT


கரோனா முதல் அலை, இரண்டாம் அலையில் அரசு மருத்துவர் என்ற முறையில் பல ஆயிரம் பேருக்கு அரசு சார்பில் வியாசர்பாடி அரசினர் கல்லூரி, மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரியில் ஏற்படுத்தப்பட்ட சித்தா கொவைட் சிறப்பு மையத்தில் சிகிச்சை அளித்தவர் சித்த மருத்துவர் சதீஷ்குமார். அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவ கல்லூரியில் விரிவுரையாளராகவும் பணியாற்றி வருகிறார். அவரிடம் மூன்றாம் அலை தொடர்பான கேள்விகளை முன் வைத்த போது விளக்கமாக பதில் அளித்தார். அந்த கேள்வி பதில் இதோ:

கரோனா முதல், இரண்டு அலைகளும் ஏற்படுத்திய பாதிப்புகள் என்ன?

இது போன்ற பாதிப்புகளுக்கு பொதுவாக கரோனா வைரஸின் "ஸ்பைக்' புரதத்தில் ஏற்படும் மாற்றமே முக்கிய காரணம். கரோனா நோயின் முதல் அலையில் நுரையீரல் தொற்று 5 -ஆம் நாளில் தான் ஏற்பட்டது. 100 பேர் பாதிக்கப்பட்டால் 85 சதவிகிதம் பேருக்கு குறிகுணங்கள்அற்ற நிலையில் இருந்தது. 15 சதவிகிதம் பேர் தீவிரமாக பாதிக்கப்பட்டனர். அதிலிருந்து அதிகமானோர் மீண்டனர். இறப்பு சதவிகிதம் 1 முதல் 2 சதவிகிதம் இருந்தது.

இதில் இணை நோய்களான சர்க்கரை நோய் ,ரத்த அழுத்தம், தைராய்டு நோய், புற்று நோய் போன்ற நோயுள்ளவர்கள் மற்றும் அறுபது வயதுக்கு மேற்பட்டோர் அதிகமாக பாதிக்கப்பட்டனர்.

ADVERTISEMENT

இரண்டாம் அலையில் குறிகுணங்கள் அற்ற நிலையில் 70 சதவிகிதம் பேர் இருந்தனர். 30 சதவிகிதம் பேர் தீவிரமாக பாதிக்கப்பட்டனர். இறப்பு 4 முதல் 5 சதவிகிதமாக இருந்தது. ஆனால் 25 வயது முதல் 40 வயது உள்ளவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். இவர்கள் எந்த இணை நோயும் இல்லாதவர்கள். ஆகவே மூன்றாம் அலையில் நாம் விழிப்போடு இருக்க வேண்டியது அவசியம்.

மூன்றாம் அலை எப்படி இருக்கும்?

மூன்றாம் அலையில் முன்னெச்சரிக்கையே முதல் மருத்துவம். இதன் தாக்கம் அக்டோபர், நவம்பர் மாதத்தில் முழுமையாக பரவும் ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் உச்சம் பெறும். இது எப்படி இருக்கும் என்று கணிப்பது ஒரு புறம். ஆனால், மூன்றாம் அலையை எதிர்கொள்ள அரசு முழு அளவில் தயாராக உள்ளது.அதற்காக குழந்தைகளுக்கு என சிறப்பு பிரிவுகள் தயாராக உள்ளது. மூன்றாம் அலையின் தாக்கம் தீவிரமாக இருக்கும் என மருத்துவ வல்லுநர்கள் கணித்து இருக்கிறார்கள்.

மூன்றாம் அலையில் வைரஸ் உருமாற்றம் அடைந்துள்ளது. இந்தியாவில் டெல்டா வைரஸாக பரவி வருகிறது. அதுவே தற்போது டெல்டா பிளஸ்ஸாக உருமாறியுள்ளது. உலக அளவில் 46 நாடுகளில் "லாம்ப்டா' வைரஸின் தாக்கம் அதிகமாக உள்ளது.இதன் ஸ்பைக் புரதத்தில் ஏழு வகை மாறுபாடுகள் உள்ளது. இந்த குளிர் காலத்தில் மற்றொரு அச்சுறுத்தலாக ஜிகா வைரஸ் பரவி வருகிறது. இது தான் டெங்குவின் மறு தோற்றம். இவற்றிலிருந்து நம்மை தற்காத்து கொள்வது அவசியமாகும். "லாம்ப்டா' வகை வைரஸ் பரவும் தன்மையும் வீரியமும் அதிகமாக இருக்கும்.

என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தும்- எப்படி எதிர்கொள்வது?

மூன்றாவது அலையும் நுரையீரல் சார்ந்த பிரச்னைகளை தான் அதிகம் ஏற்படுத்தும். உடல் வலி, உடல் சோர்வு, காய்ச்சல், தலைவலி, வயிற்று போக்கு போன்றவை அறிகுறிகள். ஆனால் முன்பை விட தீவிரமாக இருக்கும்.காய்ச்சலின் தீவிரம் அதிகமாக இருக்கும்.

பல்வேறு வடிவில் வைரஸ்கள் உருமாற்றம் பெற்று இருந்தாலும் அதற்கு சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகள் உள்ளன. அவையனைத்தும் நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம் போன்ற பல்வேறு வகையான பொருள்களை கொண்டு தயாரிக்கப்பட்டவை. குறிப்பாக நிலவேம்பு குடிநீர், கபசுர குடிநீர், மரமஞ்சள் குடிநீர், நொச்சி குடிநீர் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை வாரத்தில் மூன்று முறை எடுத்துக்கொள்ளலாம் இவை உயிர் காக்கும் மருந்துகள்.

சிறந்த தடுப்பு மருந்தாக அன்றாடம் மூலிகை தேநீர் எடுத்துக்கொள்ளலாம். அவை: சுக்கு 100கி, மிளகு 10கி, திப்பிலி 5கி, அதிமதூரம் 150கி, அக்ரஹாரம் 150கி, ஓமம் 5கி , மரமஞ்சள் 1கி, சித்தரத்தை 20கி, கிராம்பு 5கி சேர்ந்த கூட்டாகும்.இவை அனைத்தும் மூலிகைகள் ஆனது. நீங்கள் பயப்பட தேவையில்லை. இதில் உள்ள வேதியியல் மூலக்கூறுகள் சிறந்த முறையில் நோய் எதிர்ப்பு திறனையும் வைரஸ் எதிர்ப்பாற்றலையும் பெற்றுள்ளது.

குழந்தைகளை அதிகம் தாக்குமா?

குழந்தைகளை அதிகம் பாதித்தாலும் தீவிரம் அடையச் செய்யாது. பொதுவாகவே வளரும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு தன்மை அதிகமாக இருக்கும். அதனால் தொற்று ஏற்பட்டாலும் பயம் கொள்ள தேவையில்லை. அது தீவிரம் ஆகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அதனால் குழந்தைகளுக்கு உரை மாத்திரை கொடுப்பதை வழக்கமாக்குங்கள். இது 10 வகை மூலிகைகளை உள்ளடக்கியது. குழந்தை பிறந்த 15 நாள் முதல் 3 மாதம் வரை இந்த உரை மாத்திரைகளை உரசி தாய்ப்பாலில் கலந்து கொடுக்கலாம். 1 வயது முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 1 மாத்திரை தேனில் கலந்து கொடுக்கலாம். இது குழந்தைகளின் உடலில் உள்ள செரிமான பிரச்னை, சளி, மாந்தம் என பல பிரச்னைகளையும் சரி செய்யும். சிறிய அளவு கொண்ட இந்த மாத்திரை உடலுக்கு எந்த தீங்கும் ஏற்படுத்தாது.உரை மாத்திரையின் விவரம்: வசம்பு,அதிமதுரம்,ஜாதிக்காய்,கடுக்காய்,பூண்டு,பெருங்காயம்,இஞ்சி,சுக்கு,திப்பிலி, அக்கரகாரம்.சிறந்த நோய் எதிர்ப்பு மருந்து உரை மாத்திரை என்பதில் மாற்று கருத்து இல்லை.

குழந்தைகளுக்கு தொண்டை வலி, இருமல், காய்ச்சல், சளி போன்றவை தொற்று ஏற்பட்டால் மருத்துவரின் ஆலோசனையுடன் கஸ்தூரி மாத்திரை, கோரோசனை மாத்திரைகளை காலை -இரவு என இரண்டு வேளையும் எடுத்துக்கொள்ளலாம். தொற்று பாதிப்பு குறையும். மேலும் தற்காப்பிற்கு அதிமதுர சூரணம், தாளி சாதி சூரணம், உரை மாத்திரை, திப்பிலி ரசாயனம், ஆடா தோடா மணப்பாகு போன்றவற்றில் ஏதாவது ஓன்றை எடுத்துக்கொள்ளலாம். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.

குழந்தைகளை வெளியே செல்லாதவாறு பார்த்து கொள்வது அவசியம். 5 வயதுக்கு குறைவான குழந்தைகள் முகக்கவசம் அணியத் தேவையில்லை.

6 வயதிற்கு மேல் உள்ள குழந்தைகள் முகக்கவசம் அணிய வேண்டும். வெளியே அவர்களை அழைத்து செல்ல நேர்ந்தால் அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவுவது, காலை-மாலை உடம்பை இளம் சூடான வெந்நீரால் சுத்தம் செய்வது போன்றவை நோய்த்தொற்றிலிருந்து காக்கும் பாதுகாப்பு முறைகள். பெரியவர்கள் இந்த உரை மாத்திரையை காலை -இரவு 2 விதம் தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ளலாம். குழந்தைகள் உடல்நிலை சரியில்லை என்றால் வீட்டிலேயே சுய மருத்துவம் செய்யாமல் உடனே மருத்துவரை கலந்து ஆலோசிப்பது மிகவும் அவசியம். நீங்களே சுய மருத்துவம் செய்துவிட்டு ஆபத்தான கட்டத்தில் மருத்துவரிடம் சென்றால் அவர்களால் எதுவும் செய்ய இயலாது.

தடுப்பு ஊசி போட்டு கொண்டவர்கள் மூன்றாம் அலைக்கு பயப்பட தேவையில்லையா?

கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் வி போன்ற தடுப்பூசிகள் பாதுகாப்பானவை தான். ஆனால் அவை உருமாறிய லாம்ப்டா வைரஸை எந்த அளவு எதிர்க்கும் என்பது இனிதான் ஆய்வு மூலம் தெரியவரும். எனவே முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பக்க விளைவு இல்லாத தடுப்பு மருந்துகளை எடுத்து கொள்வதில் தவறில்லை.

குறிப்பாக நில வேம்பு குடிநீர், மர மஞ்சள் குடிநீர், கபசுர குடிநீர் தாளிசாதி சூரணம், ஆடாதோடா மணப்பாகு போன்றவை நுரையீரலின் செயல் திறனை மேம்படுத்தும். இதனை தொடர்ச்சியாக எடுத்துகொள்வதால் எந்த பக்க விளைவுகளும் இல்லை. மேற்கண்ட மருந்துகள் எடுத்துகொள்ளும் போது நுரையீரலில் தொற்று ஏற்பட்டாலும் தங்கவிடாது. ஆக்சிஜன் அளவும் சீராக இருக்கும். கரோனா மூன்றாம் அலையில் கவனமாக இருக்க வேண்டியது ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் கருப்பு பூஞ்சை பாதிப்பு. இதற்கு சித்த மருத்துவத்தில் தற்காப்புக்காக இலங்காதி சூரணம், சிவனார் வேம்பு சூரணம் நல்ல பலனை தரும்.

இலங்காதி சூரணம் நுரையீரல் உள்ள ஆக்சிஜன் அளவை அதிகரிக்க செய்வதில் சிறந்தது. சிவனார் வேம்பு சூரணம், கருப்பு பூஞ்சை நோய்க்கு ஆரம்ப நிலையில் நன்கு செயல்படக் கூடியது. நோயின் தன்மையை முழுமையாக தடுக்கும் திறன் வாய்ந்தது. நம்முடைய நரம்பு மண்டலத்தில் நன்றாக வேலை செய்ய கூடியது. இது இதய அடைப்பு வராமல் தடுக்கும்.

சித்த மருத்துவத்தில் பொதுவாக பாலி ஹெர்பல் பார்முலேஷன் சிறப்பு வாய்ந்தது. அதன் அடிப்படையின் தான் பல்வேறு வகையான மூலிகை சேர்ந்து பக்க விளைவு இல்லாமல் நோய் வராமல் தடுப்பது மட்டுமின்றி நோயை காப்பதிலும் பெரும் பங்கு வகிக்கிறது.

இவையனைத்தும் சித்தர்கள் கண்டறிந்த ராஜ வைத்திய முறை. தற்போது ஏழை, எளிய மக்களுக்கும் கிடைக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது.அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளில் மேற்கண்ட பொருள்கள் இலவசமாக கிடைக்கிறது. அதனை பெற்று அனைவரும் மூன்றாம் அலையில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம். இந்த கரோனா காலத்தில் தான் சித்த மருத்துவத்தின் மகத்துவத்தை மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள்.

நோய் வராமல் தடுப்பதற்கான பொதுவான வழிமுறைகள் என்ன?

குளிர்காலத்தில் அசைவ உணவுகள் அதிகம் எடுத்துக்கொள்வதை தவிர்ப்பது நல்லது. அப்படி எடுத்துக்கொண்டாலும் மிளகுத்தூள், சீரகத்தூள், மஞ்சள் சேர்த்து எடுத்துகொள்ளலாம். வெந்நீர் பருகுவது நல்லது.

பொதுவாக சித்த மருத்துவத்தில் தை முதல் ஆடி மாதம் வரை அயனசந்தி காலம் என்று சொல்வார்கள். இந்த காலத்தில் நோய் பரவல் என்பது அதிகமாகவே இருக்கும். அம்மை நோய், காலரா போன்ற நோய்கள் பரவின. நாகரீகம் வளர வளர நோயின் தன்மையும் மாறிவிட்டது.

அதனால் வெளியே செல்லும் போது முகக்கவசம் அவசியம். அலுவலகத்திலும்,வீட்டிலும் கூடுமானவரை குளிர்சாதன வசதியை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக காற்றோட்டமான பகுதி, மரங்கள் அதிகம் உள்ள பகுதிகளில் நேரத்தை செலவிடுங்கள். மூச்சு பயிற்சி செய்வது நல்ல பலனை தரும்.

மருந்துகளை உரிய முறையில் எடுத்து கொள்வதால் உடலை பாதுகாக்கலாம். எளிய முறையில் சித்தர் திருமூலர் யோகாசனம் செய்வது நல்ல பலனை தரும். குறிப்பாக பத்மாசனம், வஜ்ராசனம், மயூராசனம், சர்வங்காசனம், சவாசனம் போன்றவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.சித்தர் முத்திரையில் சூரிய முத்திரை, வாயு முத்திரை, பிராண முத்திரை, லிங்க முத்திரை போன்ற நோய் எதிர்ப்பு தன்மையை தூண்டும். பிராண முத்திரை, லிங்க முத்திரை போன்றவை ஆக்சிஜன் அளவை அதிகப்படுத்தும். காலை-மாலை என இரண்டு வேளையும் செய்து வர நல்ல பலனை தரும். நோய் பற்றிய புரிதலுடன் தக்க பாதுகாப்பு முறைகளை கடைப்பிடித்தால் எத்தனை அலை வந்தாலும் பயப்பட தேவையில்லை'' என்கிறார் மருத்துவர் சதீஷ்குமார்.


உலகம் முழுவதும் இரண்டு ஆண்டுகளாக வைரஸ் பரவல் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரு நகரங்களில் சுற்றுசுழல் மாசு அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக தில்லி, மும்பை, சென்னை போன்ற நகரங்களில் நாம் சுவாசிக்கும் காற்றில் நச்சுத்தன்மை அதிகமாகியுள்ளது. அதுவே அதிகம் உயிரிழப்பிற்கு காரணம். வெளியே நடமாடாமல் வீட்டில் இருந்த பலர் உயிர் இழந்ததற்கு இது தான் காரணம். குறிப்பாக தில்லியில் இரண்டாம் அலையின் கோரதாண்டவத்தால் பலர் உயிரிழந்தனர். உலகளவில் லண்டன், நியூயார்க், பெய்ஜிங் போன்ற பல நாடுகளுக்கு வைரஸ் பரவல் அதிகரிக்க காரணம் காற்றில் ஏற்பட்டுள்ள மாசுதான்.

Tags : Kondattam Dont Be Afraid If You are Safe! சித்தர்கள்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT