தினமணி கொண்டாட்டம்

ரத்தத்தின் ரத்தமே... - 25

25th Jul 2021 06:00 AM | டாக்டர்  எஸ். அமுதகுமார்

ADVERTISEMENT

,
"ரத்தமும் தண்ணீரும்' தென் ஆப்ரிக்காவில் ஒளிபரப்பான ஒரு பிரபல தொலைக்காட்சி தொடரின் பெயர் இது. ரத்தத்தில் திடப்பொருளும் இருக்கிறது. திரவப் பொருளும் இருக்கிறது. இரண்டும் சேர்ந்த கலவைத் திரவம் தான் ரத்தம். திரவ வடிவில் இருக்கும் ரத்தத்தில் அதிகமாக தண்ணீர்தான் இருக்கின்றது. 

தண்ணீர் சேராவிட்டால் ரத்தம் ஓடமுடியாது.

மனித உடலில் சுமார் 60 சதவீதம் தண்ணீர் இருக்கிறது. நமது ரத்தத்தில் சுமார் 90 சதவீதம் தண்ணீர் இருக்கிறது. ரத்தத்தில் இருக்கும் திரவத்தின் பெயர் "பிளாஸ்மா'.  இந்த பிளாஸ்மா திரவத்தில் 90 சதவீதம் தண்ணீரும் மீதி 10 சதவீதம் புரதம், உப்பு, என்சைம்கள், ரத்த உறைதலை உண்டாக்கும் பொருள்கள், எதிர்ப்புச் சக்தியை உண்டாக்கும் பொருள்கள், இது போக உடலுக்குத் தேவையான சில முக்கிய சத்துப் பொருள்கள், ஹார்மோன்கள் முதலியவை இருக்கின்றன.

ரத்த அழுத்தத்தை எப்பொழுதும் ஒரே சீராக வைக்க உதவுவது ரத்தத்திலுள்ள தண்ணீர்தான். உடலுக்குத் தேவையான எல்லாப் பொருள்களையும் ரத்த ஓட்டத்திலேயே நகரச் செய்து வைத்திருப்பது ரத்தத்திலுள்ள தண்ணீர்தான். ரத்தத்திலிருந்து பிளாஸ்மாவை பிரித்து எடுத்துவிட்டால், பிளாஸ்மா உறைந்துவிடும். திரவ வடிவில் இருந்து, பின் உறைந்து போன இந்த பிளாஸ்மாவை சுமார் ஓராண்டுக்குக் கூட சேகரித்து, சேமித்து வைக்கலாம்.

ADVERTISEMENT

உடலில் ஏற்படும் ரத்தக்கசிவு பிரச்னைகளைச் சரிசெய்ய, பிளாஸ்மா திரவத்தைத் தான் உபயோகித்து சரி செய்ய வேண்டும். நோய்வாய்ப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா திரவத்தை ஏற்றினால், உடல் நிலை சரியாகிவிடும். அத்துடன் நோயோடு இருக்கும் பிளாஸ்மாவும் உடலிலிருந்து வெளியேறிவிடும். பிளாஸ்மா திரவம் தனியாகவே ரத்த வங்கிகளில் விற்கப்படுகிறது.

திரைப்படங்களில் ரத்தம் வரும் காட்சிகளைச் காட்ட, தண்ணீரில் ரத்தக் கலரில் இருக்கும் சாயப் பவுடரை கலந்து ஊற்றிவிடுவார்கள் என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது அப்படி அல்ல. திரைப்படங்களில் ரத்தம் வடியும் காட்சிகளை தத்ரூபமாகக் காட்ட, கிளிசரின், தேங்காய் எண்ணெய், ப்ளட் பவுடர் ஆகியவைகளின் கலவையை உபயோகித்துத்தான் காட்சிகளை படம் பிடிப்பார்கள்.

உலகமெங்கும் உள்ள மனிதர்கள், தினமும் சுமார் 5.2 பில்லியன் கேலன் தண்ணீர் (அதாவது சுமார் 2080 கோடி லிட்டர்) குடிப்பதற்காகப் பயன்படுத்துகிறார்கள். மனிதர்கள் குடிப்பது போன்று 8 மடங்கு அதிகமாக தண்ணீர் குடிப்பது பசுக்கள் தான். அமெரிக்காவின் தென்மேற்கு பாலைவனப் பகுதியில் வசிக்கும், கங்காரு போன்ற நீண்ட வால் உடைய, கங்காரு எலி என்று சொல்லக்கூடிய ஒருவகை எலி, தனது வாழ்நாளில் தண்ணீரே குடிப்பதில்லை. அதன் உடலமைப்பு அப்படி.

அநேகமாக எல்லா விலங்குகளுக்கும் தண்ணீர் தேவைதான். தனது உடல் காய்ந்து போகாமல் இருக்க, வறண்டு போகாமல் இருக்க, விலங்குகள் அவ்வப்பொழுது தண்ணீர் குடிக்கத்தான் செய்கின்றன. சில நேரங்களில், சில விலங்குகளுக்கு அதன் உணவிலேயே கொஞ்சம் தண்ணீர் கிடைத்து விடுகிறது. உடலில் தண்ணீர்ச்சத்து அதிகம் இல்லாத விலங்குகளின் தோல் இறுக்கமாக இருக்கும். எடை கொஞ்சம் குறையும். கண், உதடு, நாக்கு, போன்றவை உலர்ந்து காணப்படும்.

அனைத்து வகை கீரைகளிலும் 96 சதவீதமும், செடி தண்டு இலை போன்றவைகளில் 95 சதவீதமும், சீமை சுரைக்காயில் 95 சதவீதமும், முட்டைக்கோஸில் 92 சதவீதமும், தர்பூசணியில் 91 சதவீதமும், கிர்னிபழத்தில் 90 சதவீதமும், முலாம்பழத்தில் 90 சதவீதமும் தண்ணீர்ச் சத்து இருக்கின்றது.

தினமும் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை நாம் எல்லோரும் ஒரு முக்கியமான வேலையாக வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் பெரும்பாலானோர் இதை செய்வதில்லை. கண்டு கொள்வதில்லை. தண்ணீர் குறைந்தால், ரத்தம் அதிக அடர்த்தியாகி, ரத்த அழுத்தம் அதிகமாக வாய்ப்புண்டு. தாதுப் பொருள்களும், சத்துப் பொருள்களும் உடல் முழுக்க போய்ச் சேர உடலிலும் ரத்தத்திலும் போதுமான அளவு தண்ணீர் இருக்கவேண்டும். 

பல நாள்களாக நீரிழப்பு ஏற்பட்டு, உடலில் தண்ணீர்ச்சத்து குறைந்துவிட்டால் சிந்தனை, யோசனை எல்லாம் குழப்பமாகி மூளையே வேலை செய்யாத நிலை ஏற்பட்டுவிடும்.

ஒரு நாளைக்கு 2  லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்லது. ஒரு நாளைக்கு இவ்வளவு தண்ணீர் குடித்துத்தான் ஆகவேண்டும் என்று பொதுவான சட்டதிட்டம் எதுவும் இல்லை. உடலுக்குத் தண்ணீர்ச் சத்து தேவை என்பது, இடம், பொருள், சூழ்நிலை, காலம், தட்பவெப்பம், உடலமைப்பு முதலியவைகளைப் பொறுத்து ஒவ்வொருவருக்கும் மாறுபடும். தண்ணீர் கிடைப்பவன் குடிப்பான். கிடைக்காதவன் இருப்பான். தாகம் எடுப்பவன் குடிப்பான். தாகமில்லாதவன் குடிக்க மாட்டான். 

ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு லிட்டர் தண்ணீராவது குடிக்க முயற்சி செய்யுங்கள். சிலர் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு சொம்பு தண்ணீர் (600 மில்லி லிட்டர்) குடிப்பார்கள். ஆனால் அதற்குப் பிறகு குடிப்பது ரொம்ப ரொம்ப குறைவாக இருக்கும். இது மாதிரி செய்வதால்  உடலுக்கு 
உபயோகமுமில்லை. 

நாம் எவ்வளவு தண்ணீர் தினமும் குடிக்கிறோம் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ள ஒரு அளவு பாட்டிலை கணக்குக்காக வைத்துக் கொள்ளுங்கள். 

உங்களுக்கு தினமும் எவ்வளவு தண்ணீர் தேவைப்படும் என்பதை முதலிலேயே முடிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள். மோர், ஐஸ், சர்பத், சூப் போன்ற திரவ வடிவ உணவுகளைத் தண்ணீருக்குப் பதிலாக எடுத்துக் கொள்வதால், அதையும் அளந்து கணக்கு வைத்துக் குடியுங்கள். தண்ணீர் பாட்டிலை கையிலேயே வைத்துக் கொள்ளுங்கள். கையில் இருந்தால், எப்பொழுது வேண்டுமானாலும் குடிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். உங்கள் கண்படும் தூரத்திலும், உங்கள் கைபடும் தூரத்திலும் தண்ணீர் பாட்டிலை வைத்துக் கொள்ளுங்கள். சில மடக்கு தண்ணீரை அரை மணி நேரத்துக்கு ஒரு முறை குடித்தே ஆகணும் என்று பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

ரத்தமும் தண்ணீரும் ஈருடல், ஓருயிர் போன்றது. மெக்காவில் கொடுக்கப்படும் ஜ ம்ஜ ம் தண்ணீருக்குப் பெயர் புனித நீர். தேவாலயங்களில் கொடுக்கப்படும் தண்ணீருக்கும் பெயர் புனித நீர். கோயில்களில் கொடுக்கப்படும் தண்ணீருக்குப் பெயர் புனித நீர். அதேபோல், புனிதமான ரத்தத்தில் இருக்கும் தண்ணீருக்குப் பெயர் பிளாஸ்மா. பிளாஸ்மா திரவத்தினுடைய முக்கிய வேலை, ரத்த செல்களை சுமந்து செல்வது, சத்துப் பொருள்களை சுமந்து செல்வது, என்சைம்களை சுமந்து செல்வது, ஹார்மோன்களை சுமந்து செல்வது, இன்னும் சில பொருள்களை உடல் முழுக்க சுமந்து செல்வதே. எனவே போதுமான அளவு தண்ணீரை தினமும் குடித்து ரத்தத்திலுள்ள தண்ணீரின் அளவை சரியாக வைத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் நிறைவாக எங்கிருந்தாலும் அது சிறப்புதான். நமது உடலிலும் அப்படித்தான்.

தொடரும்

Tags : Kondattam Blood of blood
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT