தினமணி கொண்டாட்டம்

நாடோடி வாழ்க்கை!

18th Jul 2021 06:00 AM | -பிஸ்மி பரிணாமன்

ADVERTISEMENT

 

அடிக்கடி குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் குடும்பங்கள் உண்டு. சுற்றுலா முடிந்ததும் சொந்த வீட்டுக்கு அல்லது சொந்த ஊருக்குத் திரும்பிவிடுவார்கள். அப்படி ஊருக்குத் திரும்பாமல் குடும்பத்துடன் ஊர் ஊராகத் தொடர்ந்து சுற்றி நாடோடி வாழ்க்கை வாழ்கிறார்கள் சந்தோஷ் அய்யர் குடும்பத்தினர்.

பாலக்காடு பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் அய்யர் வேலை காரணமாக புணேவில் இருந்தார். மனைவி ஏஞ்சல் புணேவைச் சேர்ந்தவர். திடீரென்று 2019-இல் புணே நகரில் சொந்தமாக இருந்த வீட்டினை விற்றார். கணினித்துறையில் பார்த்துக் கொண்டிருந்த வேலையையும் விட்டார். மனைவி ஏஞ்சல், மகன் ஹிரிதன், மகள் க்வாஹிஷ் உடைகள் வைத்துக் கொள்ள நான்கு பெட்டிகளுடன் இந்தியாவை சுற்றிப் பார்த்து வாழப் புறப்பட்டுவிட்டார்கள்.

"11 வயதாகும் மகன் ஹிரிதன்னுக்கு பள்ளியில் படிப்பைச் சொல்லி அழுத்தம் தரப்பட்டது. நான் பள்ளியில் என்னென்ன படித்தேனோ அவை மறந்துபோய்விட்டது. இப்போது நான் என்ன செய்கிறோனோ அதை நான் பள்ளியில் படிக்கவில்லை...பெரும்பாலான பள்ளிகளில் பிள்ளைகளுக்கு கல்வி குறித்த அழுத்தம் தரப்படுகிறது. ஆறு வயதாகும் மகளுடைய அனுபவமும் அப்படித்தான் இருந்தது. அதனால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்திவிட்டு வீட்டில் பாடங்களைச் சொல்லிக் கொடுக்கத் தொடங்கினோம்.

ADVERTISEMENT

புத்தகத்தை விரித்தால் உடனே தூங்கத் தொடங்கிவிடும் மகன் இப்போது விழுந்து விழுந்து வாசிக்கிறான். இரண்டாம் வகுப்பில் இருந்த மகளிடத்திலும் நல்ல முன்னேற்றம். என்ன புத்தகத்தில் படிக்கிறார்களோ, அதை பற்றிய காணொளிகளை யூ டியூபில் பார்ப்பார்கள். பாடங்கள் குறித்து ஏற்படும் சந்தேகங்களைத் தீர்க்க செயலிகளை பயன்படுத்துவார்கள். மகள் இரண்டாவது வகுப்பு படிக்க வேண்டும். நான்காம் வகுப்பு நூல்களை வாசிக்கிறாள். வீட்டிலிருந்து படிப்பது போல ஏன் பயணத்திலும் படிக்கக் கூடாது' என்ற நோக்கத்தில் ஊர் ஊராகச் சுற்ற நாங்கள் நாடோடிகளாகத் தீர்மானித்தோம்.

2017-ஆம் ஆண்டு முதல் நாடோடிகளாக சுற்றி வருகிறோம். குழந்தைகளுக்கு நகரத்தில் ஒரே இடத்தில் வசிப்பது மூச்சு முட்டுகிறது. எங்களுக்கும் அதே அனுபவம்தான். இந்தியாவில் பல மாநிலங்களில் பல ஊர்களை ஒரு மாதம் இரண்டு மாதம் என்று தங்கி சுற்றிப்பார்த்து வருகிறோம். இப்போது உத்ராகாண்ட் மாநிலத்தின் டேராடூனிலிருந்து லடாக் வந்துள்ளோம். பயணத்தின் போது குழந்தைகள் படிக்க நானும் மனைவியும் ஆன்லைன்னில் வேலை செய்கிறோம். தினமும் எட்டு கி. மீ நடப்போம். நடக்கும் சமயத்தில் பசித்தால் பிஸ்கட்கள் தான் உணவு. நாங்கள் வசிக்க தேர்வு செய்யும் இடத்தில் ஒன்றிரண்டு மாதம் வசிப்போம். வாசிக்க வாடகைக்கு வீடு பிடிப்போம். அல்லது "ஏஹோம் ஸ்டே' வசதியைப் பயன்படுத்திக் கொள்வோம்.

"குழந்தைகள் வீட்டில் படித்து பத்தாவது , பன்னிரெண்டாவது தேர்வுகளை எழுதுவார்கள். வீட்டில் ஓரிடத்தில் வசித்தாலும் வாழ்க்கையில் பிரச்னைகள் வரும். பிரச்னைகள் பயணத்திலும் வரும். அதை நாங்கள் புரிந்து கொண்டிருக்கிறோம். நிம்மதியும் சந்தோஷமும்தான் வாழ்க்கைக்குத் தேவை.
"நாங்கள் நாடோடிகளாக வாழ தீர்மானித்ததும், இருவர் வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது. குழந்தைகளின் எதிர்காலத்துடன் விளையாடுகிறீர்கள்.. விஷப்பரீட்சை செய்கிறீர்கள் என்று கோபப்பட்டார்கள். குழந்தைகள் வீட்டில் படிக்கட்டும் என்று நாங்கள் தீர்மானித்ததும், தொடர்ந்து அனைத்து உடமைகளையும் விற்றதும் பெற்றோர்களை திடுக்கிடவைத்தது. அவர்கள் கோணத்தில் அவர்கள் கோபப்பட்டது நியாயம்தான்.

பள்ளிக்குச் சென்று புத்தகங்களைத் தினமும் பல மணிநேரம் படிப்பதுதான் சரியான கல்விமுறை என்று நம்மை நம்ப வைத்திருக்கின்றனர். கரோனா அதை மாற்றியுள்ளது. "அவனைப் போல அதிக மதிப்பெண்கள் வாங்கு' என்று குழந்தைகளை பந்தயக் குதிரை ஆக்க வேண்டாம் என்று நாங்கள் தீர்மானித்தபோது ... அவர்களின் சுற்றுப்புற சூழலை ரம்மியமாக்க பயணங்கள் உதவும் என்று முடிவு செய்தோம்.

பயணம் மூலம் பலவித மக்கள் அவர்களது உணவுப் பழக்கம், கலாசாரங்களைத் தெரிந்து கொள்ளலாம். மூன்று ஆண்டுகளாக நாங்கள் பயணித்துக் கொண்டு இருக்கிறோம். பயணங்கள் மூலம் குழந்தைகளின் தன்னம்பிக்கை அதிகமாகியுள்ளது. அவர்கள் தங்களைத் தானே செதுக்கிக் கொண்டு வருகிறார்கள். ஒவ்வொரு இரவிலும் நாங்கள் சேர்ந்து அமர்ந்து ஒரு மணி நேரம் தவறாமல் வாசிப்போம். பாடத்தில் சில பகுதிகளை அவர்களுக்குத் தெரிந்த வரையில் ஆங்கிலத்திலோ அல்லது ஹிந்தியிலோ மொழிபெயர்க்கச் சொல்வோம். மொழி வசமாக மொழிபெயர்ப்பு அதிக அளவில் உதவும்.

சென்ற ஆண்டு கரோனா பரவலின் போது ஊட்டிக்கு அருகே கேத்தி என்ற கிராமத்தில் வசித்தோம். அந்த கிராமத்தில் இருநூறு வீடுகள் இருந்தன. நாடு முழுவதும் பொது முடக்கம் அமலில் இருந்தாலும் கேத்தியில் பொது முடக்கத்தை அமல்படுத்த அவசியம் ஏற்படவில்லை. நான்கு மாத வாசத்தில் வாழ்க்கை எப்போதும் போல அமைந்தது. கொஞ்சம் தளர்வு ஏற்பட்டதும் பெங்களூரு சென்று உறவினர் வீட்டில் நவம்பர் வரை தங்கினோம்.

இதுவரை ராஜ்கோட், பாலம்பூர், தர்மசாலா, டல்ஹவுசி, கஸýலி, கேத்தி, ஜெய்ப்பூர், உதய்பூர், ப்ரயாக்ராஜ், சிம்லா, யோல், டேராடூன் போன்ற இடங்களில் வசித்துள்ளோம். குழந்தைகள் தரையில் படுத்துத் தூங்கக் கற்றுக் கொண்டுள்ளார்கள். மழையை ரசிக்கிறார்கள். வெப்பத்தை குளிரைப் சகித்துக் கொள்ளக் கற்றுக்கொண்டுவிட்டார்கள். இப்போது லடாக் வந்துவிட்டோம் . இங்கு ஒரு மாதம் தங்கியிருப்போம். பிறகு மீண்டும் பயணம் தொடரும்..' என்கிறார் சந்தோஷ் அய்யர்.
 

Tags : kondattam Nomadic life!
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT