தினமணி கொண்டாட்டம்

நூற்றாண்டு கண்ட வாழும் தலைவர் என்.சங்கரய்யா

தினமணி

கொள்கைப் பிடிப்பு - எளிமையான வாழ்க்கை நற்பண்புகளால் பிரமிக்க வைத்த அரசியல் தலைவர்களில் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் சங்கரய்யாவும் ஒருவர். அவருக்கு ஜுலை 15-ஆம் நாளன்று நூறாவது பிறந்த நாளாகும். நாம் வாழும் காலத்தில் நூற்றாண்டு கண்ட அற்புதம் இவர். வெகு அபூர்வமாக அவர் அளித்த நேர்காணலிலிருந்து சில பகுதிகள் இங்கே:

நான் 1937 முதல் 42 வரை மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பி.ஏ (ஆனர்ஸ்) படித்துக் கொண்டிருந்தேன். அப்போது தான் உலக நடப்புகளைப் பார்த்தும், மார்க்சிய தத்துவ நூல்களைப் படித்தும் சமுதாயம் முன்னேறப் பொதுவுடைமை மார்க்கமே சிறந்த வழி என்று என் உள் மனது முடிவு செய்தது. அதன் விளைவாக கம்யூனிச அமைப்பில் தீவிர ஆர்வம் காட்டினேன். அகில இந்திய மாணவர் ஃபெடரேஷனின் மதுரை மாணவர் சங்கத்தின் தீவிர உறுப்பினராகச் சேர்ந்தேன்.

ஆயினும், தேசியக் கண்ணோட்டமும் எனக்குக் கூடவே இருந்து வந்தது. வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வேலை நிறுத்தம் செய்து போராட்டங்களைத் தலைமை தாங்கி நடத்தினேன். தேர்வுக்கு 10 நாள் முன்பு என்னைத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்க் கைது செய்தார்கள். முதலில் மதுரைச் சிறையில் காவலில் வைத்து பின்னர் வேலூர் சிறைக்கு மாற்றினார்கள். வேலூரில் அந்த சமயத்தில் என்னோடு காங்கிரஸ் தலைவர்களான காமராஜர், பட்டாபி சீதாராமையா, சஞ்சீவ ரெட்டி, சாம்பமூர்த்தி, கேரள காங்கிரஸ் தலைவர் அப்துல் ரகுமான் போன்றோர் சிறைவாசம் அனுபவித்து வந்தனர். வேலூர் சிறையில் நாங்கள் உண்ணாவிரதம் இருந்து போராட்டம் நடத்தினோம்.

உண்ணாவிரதப் போராட்டம் எதற்காக?

நாட்டு விடுதலைக்காகவும், வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்து சிறை சென்ற எங்களை கிரிமினல் குற்றவாளிகளைப் போலவே நடத்தினார்கள். அதைக் கண்டித்து எங்களை அரசியல் கைதியாக நடத்த வேண்டும் என்று கேட்டு சிறையில் இருந்த கம்யூனிஸ்ட் அமைப்பு மாணவர்களும், தோழர்களும் 200 பேர் ஏ.கே கோபாலன் தலைமையில் 19 நாள் உண்ணாவிரதம் இருந்து எங்கள் கோரிக்கையில் வெற்றி கண்டோம். அந்தச் சமயத்தில் சிறைத்துறை ஐ.ஜி அங்கு பார்வையிட வந்த போது என்னைக் கண்டு வியந்து பாராட்டினார்.

சிறையில் உண்ணாவிரதம் இருந்த போது உங்களுக்குப் பாராட்டா?

கல்லூரி மாணவர்களாகிய நாங்கள் துணிச்சலுடன் தொடர்ந்து உண்ணாவிரதம் இருப்பதை விசாரிக்க எங்கள் உண்ணாவிரதத்தின் 10-ஆம் நாள் அன்று சிறைத்துறை ஐ.ஜி கான்ட்ராக்டர் என்னும் ஆங்கிலேயர் வேலூர் சிறைக்கு வந்தார். 10 நாள் உண்ணாவிரதத்தில் துவண்டு போய்ச் சோர்வாக விழுந்து கிடப்போம் என்ற நினைப்பில் அவர் உள்ளே வந்தார். அந்த சமயத்தில் நான் புத்துணர்ச்சியோடு மாக்ஸிம் கார்க்கியின் "தாய்' என்னும் நாவலை படித்துக் கொண்டிருந்தேன். 10-ஆம் நாள் உண்ணாவிரதம் இருந்தும் சோர்வடையாது மனம் தளராது புத்தகம் படித்துக்கொண்டிருந்த என்னைப் பாராட்டினார்.

நீங்கள் எத்தனை ஆண்டுகள் சிறையில் இருந்திருக்கிறீர்கள்?

1942-இல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றேன். அது மூன்றாண்டு காலம் நீடித்தது.

1949-இல் சேலத்தில் நடைபெற்ற தென்னிந்திய மாணவர் சங்க மாநாட்டில் தமிழ் மாநிலச் செயலாளராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் பாளையங்கோட்டையில் பெரும் ஊர்வலம் நடத்தி தேசிய அரசாங்கம் ( அனைத்துக் கட்சிகளும் அரசில் பங்கு கொள்ளும் வகையில்) அமைக்க வேண்டுமென்று போராட்டம் நடத்தினோம். அப்பொழுது நடந்த தடியடியில் பலத்த காயங்களுக்குள்ளாகி நான் கைது செய்யப்பட்டேன். ஆக மொத்தம் 8 ஆண்டுகள் சிறை வாசமும் மூன்று ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கையும் வாழ்ந்திருக்கிறேன்.

விடுதலைக்கு முன்பு சிறையில் நீண்ட காலம் இருந்திருக்கிறீர்கள். சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கான பென்ஷன் பெற்றீர்களா?

எனக்கு தியாகி பென்ஷன் வந்தது. ஆனால் அந்த பென்ஷனை நான் வாங்கவில்லை. வேண்டாம் என்று நான் மறுத்துவிட்டேன். என்னோடு சிறையில் இருந்தார்கள் என்று நான் சான்றிதழ் கொடுத்து பலருக்குத் தியாகி பென்ஷன் வாங்கித் கொடுத்திருக்கிறேன். தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக 1967, 77, 80 ஆகிய மூன்று சட்டமன்றங்களில் நான் இருந்திருக்கிறேன். அதற்காக பென்ஷன் வருகிறது. அதையும் நான் கட்சிக்குக் கொடுத்துவிட்டு என் செலவுக்கென்று கட்சி கொடுக்கின்ற சம்பளத்தை மட்டும் வைத்துக் கொண்டு தான் குடும்பம் நடத்தி வருகிறேன். சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் ஆகிய எந்த பதவிகளில் இருந்தாலும் சரி, அவர்களது சம்பளத்தினைக் கட்சிக்கு கொடுத்துவிட்டு கட்சி தருகின்ற சம்பளத்தைப் பெற்று கொள்வது தான் எங்கள் கட்சியின் நடைமுறை.

உங்கள் குடும்பப் பின்னணி எப்படி இருந்தது? இளமைக் கால அனுபவங்கள் பள்ளி, கல்லூரி நாட்களை நினைவுபடுத்திப் பார்க்கிறீர்களா?

1922 ஜூலை 15 நான் பிறந்த நாள். என் தகப்பனார் நரசிம்மலு ஒரு பொறியாளர். நகராட்சிகளில் வேலை பார்த்து வந்தார். எங்கள் குடும்பம் அந்தக் காலத்திலேயே சுயமரியாதைக் குடும்பமாக இருந்தது.

1930-இல் ஒரு தமிழ்ப் புலவரை வைத்து சுயமரியாதைத் திருமணம் எங்கள் வீட்டில் நடந்தது. அதனால் என் தாத்தாவை ஊரில் பலர் தங்களுடன் சேர்த்துக் கொள்ளவில்லை. அது பற்றி அவர் கவலையும் படவில்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் போகும் வழியில் உள்ள ஆத்தூர் தான் எங்கள் பூர்விகக் குடியிருப்பு. ஆனால் என் அப்பாவுக்கு பொறியாளர் வேலை. மாறும் இடங்களுக்கு நாங்கள் அடிக்கடி மாறிக்கொண்டே இருப்போம்.

பள்ளியில் படிக்கும் போதே நான் பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகள் பெற்றதுண்டு. விளையாட்டில் கால்பந்தின் மீது எனக்கு மிகுந்து ஆர்வம் உண்டு.

கலை இலக்கியத் துறையில் உங்களுக்கு எந்த அளவு ஈடுபாடு ?

என்னுடைய 18-ஆவது வயதிலேயே 1940-ஆம் ஆண்டில் நான் பொதுவுடைமை இயக்கத்தில் என்னைத் தீவிரமா ஈடுபடுத்திக் கொண்டேன். 1952 முதல் தமிழ் மாநில கம்யூனிஸ்ட் கட்சியின் முழு நேர ஊழியன். ஆகவே எந்நேரமும் எனக்கு இயக்கம் பற்றிய சிந்தனை செயல்பாடுதான் உண்டு.

தேசிய உணர்வுகளுக்குப் பாரதியார், சமூக சீர்த்திருத்தக் கருத்துகளுக்குப் பாரதி தாசன், பொதுவுடைமைக் கருத்துக்களுக்குப் பட்டுக்கோட்டையார், ஆகியோர் பாடல்களை நான் விரும்பிப் படிப்பதுண்டு. நல்ல இலக்கியங்கள் வளர வேண்டும். நச்சு இலக்கியங்கள் ஒழிய வேண்டும் என்ற கொள்கை உடையவன்.

நான் அரசியலுக்கு அப்பால் இலக்கிய கூட்டங்களிலும் பேசுவதுண்டு. எம்.ஜி.ஆர், ஆட்சியில் நடைபெற்ற மதுரை உலகத் தமிழ் மாநாட்டின் பொதுக்கூட்டத்தில் இலக்கிய உரை நிகழ்த்துமாறு எம்.ஜி.ஆர் என்னைக் கேட்டு கொண்டார்.

திருக்குறள், தொல்காப்பியம் முதலிய பண்டைத் தமிழ் இலக்கியங்களைத் தமிழர்கள் அனைவரும் படிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.

நீங்கள் சந்தித்த குறிப்பிடத்தக்க வழக்கு ஒன்றைப் பற்றி கூறுங்களேன்?

1944-இல் என் மீதும், ராமமூர்த்தி, கே.டி.கே தங்கமணி ஆகியோர் மீது தொழிற் சங்க இயக்கத்தைச் சேர்ந்த நாங்கள் அரசாங்க அதிகாரிகளைத் தாக்கி கொலை செய்யத் திட்டமிட்டுச் செயல்பட்டதாக வழக்கு. ஒரு குறிப்பிட்ட நாளில் நாங்கள் கூடி இந்தச் சதிக்காகத் திட்டமிட்டோம் என்று போலீசார் வழக்கு தொடர்ந்திருந்தார்கள்.

அதே நாளில் மதுரையில் பதுக்கல் தடுப்புப் பிரிவைச் சேர்ந்தஐ.பி.எஸ் அதிகாரியுடன் சொக்கிகுளத்தில் அவருடைய வீட்டில் நாங்கள்பதுக்கல்களைத் தடுப்பது குறித்து அவருடன்பேசச் சென்றிருந்தோம்.

இந்த வழக்கில் வெங்கட்ரமணி என்ற அந்த ஐ.பி.எஸ் அதிகாரியே கோர்ட்டுக்கு வந்து, சதித் திட்டம் நடந்ததாக வழக்கு கொடுக்கப்பட்ட அதே நேரத்தில் நாங்கள் அவருடன் பேச்சு வார்த்தை நடத்திய உண்மையைத் துணிந்து கோர்ட்டில் சொன்னார். எங்களுக்கு எதிராகச் சாட்சி சொன்னவரும் 16 தடவை கிரிமினல் குற்றங்களுக்காக சிறைக்குப் போனவர், என்பதும், தயாரிக்கப்பட்ட பொய்ச் சாட்சி என்பதும் நிரூபணம் ஆனது. இது ஒரு ஜோடிக்கப்பட்ட வழக்கு என்று நீதிபதி வழக்கைத் தள்ளுபடி செய்தார். அந்தத் தீர்ப்பு வந்த நாள் ஆகஸ்ட் 14, 1947 அன்று இரவு மதுரையில் பெரிய கூட்டம் நடத்தினோம். கூட்டம் முடிந்த அன்று இரவு 12 மணிக்கு இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்தது.

- ராம்குமார்
"நாகசாமி முதல்' என்ற நூலிலிருந்து

பழ.நெடுமாறன்
தமிழர் தேசிய முன்னணி தலைவர்


முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யா சட்டப்பேரவைக்கு மதுரை நகரில் இருந்து மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1980-இல் மதுரை மத்திய தொகுதியில் இருந்து நான் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.

சட்டப்பேரவையில் தோழர் சங்கரய்யா உரையாற்றும்போது மிக உன்னிப்பாகக் கவனிப்பேன். மக்கள் பிரச்னைகளை எழுப்பி அவர் பேசும்போது அரசு இழைத்த தவறுகளைச் சுட்டிக் காட்டுவதோடு நின்றுவிடாமல், அதை எப்படிப் போக்குவது என்பது குறித்தும் அரிய ஆலோசனைகளை வழங்குவார். அவரின் இந்த அணுகுமுறை மிகவும் பிடித்திருந்தது.

தமிழக அரசு (அதிமுக) அப்போது நுழைவு வரியைக் கொண்டு வந்திருந்தது. எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாங்கள் அனைவரும் அதை எதிர்ப்பது என முடிவு செய்தோம்.

முதலில் சங்கரய்யா பேசினார். அவர் பேசும்போது, ""நுழைவு வரியின் விளைவாக தொழில்கள் முடங்கும். வேலைவாய்ப்பு பறிபோகும். தொழில் வளர்ச்சி தடைபடும். இந்த வரிச்சுமை மக்கள் தலையில் விடியும்'' என அழுத்தம் திருத்தமாகப் பேசினார். அதையொட்டி நாங்களும் பேசிவிட்டு, நுழைவு வரியை எதிர்த்து வெளிநடப்பு செய்தோம்.

தமிழ்நாட்டு வணிகர்கள் இந்த வரியை எதிர்த்து ஒருநாள் கடையடைப்பு நடத்துவது என முடிவு செய்தனர். நாங்கள் அனைவரும் அதற்கு ஆதரவு தெரிவித்தோம்.

மதுரையில் எனது அலுவலகத்தில் நான் இருந்தபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரான தோழர் நல்லசிவம் என்னைச் சந்திப்பதற்காக வந்திருந்தார். இருவரும் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது வெளியில் அதிமுகவினர் கூட்டமாக கடைகளை அடைக்கக் கூடாது என ஒவ்வொரு கடைக்காரர்களிடமும் கூறிக்கொண்டே வந்தனர்.

வெளியே எனது காரும் நல்லசிவம் வந்த காரும் நின்றன. அவற்றில் இருந்த எங்கள் கட்சிகளின் கொடிகளைப் பார்த்து, கார்களின் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர்.

உடனடியாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு தொலைபேசியின் மூலம் புகார் செய்தோம்.

சிறிது நேரத்தில் அங்கு வந்த காவல்துறை ஆய்வாளர் எங்கள் இருவரையும், உடனிருந்த தோழர்களையும் கைது செய்து அழைத்துச் சென்று காவல்நிலையத்தில் அடைத்து வைத்தனர். இந்தச் செய்தி பத்திரிகைகளில் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மறுநாள் சட்டப்பேரவையில் என்.சங்கரய்யா எங்கள் கைது குறித்து ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து, மிகக் கடுமையாக பேசுகையில், சட்டப்பேரவைத் தலைவருக்கு அறிவிக்காமல், சட்டப்பேரவை உறுப்பினரையும் (பழ.நெடுமாறன்) மேலவைத் தலைவருக்குத் தெரிவிக்காமல் மேலவை உறுப்பினரையும் (நல்லசிவம்) எப்படிக் கைது செய்வீர்கள் என்று கேட்டபோது, அரசு தரப்பில் பதில் கூற முடியாமல் திணறினர்.

அதையொட்டி எதிர்க்கட்சிகள் அனைத்தும் எங்கள் கைதைக் கண்டித்தன. இதன் விளைவாக அன்றே நாங்கள் விடுதலை செய்யப்பட்டோம்.

அநீதியை எதிர்த்தும், ஏழை எளிய மக்களுக்கு ஆதரவாகவும் தொடர்ந்து குரல் கொடுத்த சிறந்த சட்டமன்றவாதி என்.சங்கரய்யா.

திண்டிவனம் ராமமூர்த்தி
காங்கிரஸ் மூத்த தலைவர்

சட்டப்பேரவையில் மிக தெளிவாகவும் கெüரவமாகவும் பேசக்கூடியவர் என்.சங்கரய்யா. அப்போது சட்டப்பேரவையில் நான் இடம்பெற்று அவரது அவை நடவடிக்கைகளைக் கவனித்திருக்கிறேன். காங்கிரஸ் (ஆர்) காங்கிரஸ் (ஓ) பிரிந்தபோது நான் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் (ஓ)-இல் இருந்தேன். அப்போது லாயிட்ஸ் காலனியில் உள்ள என் வீட்டிற்கு சங்கரய்யா திடீரென வந்திருந்தார். அவரை வரவேற்று உபசரித்து விவரம் கேட்டேன். "ஒன்றும் இல்லை. சும்மா பார்க்க வந்தேன்' என்றார். கொஞ்ச நேரம் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தோம். அது அதோடு முடிந்தது. அதற்குப் பிறகு எனக்கொரு விழாவை விழுப்புரத்தில் எடுத்தனர். அந்த விழாவிற்கு சங்கரய்யா வந்திருந்தார். விழாவில் அவர் பேசும்போது ""காங்கிரஸ் (ஆர்) காங்கிரஸ் (ஓ) பிரிந்தபோது திண்டிவனம் ராமமூர்த்தியை காங்கிரஸ் (ஆர்)-இல் இருக்க வேண்டும் என்று சொல்வதற்காக அவர் வீட்டிற்குச் சென்றேன். ஆனால், காமராஜர் பற்றி அழுத்தமாகவும், ஆழமாகவும் ராமமூர்த்தி பேசிக்கொண்டிருந்தார். அப்போதே அவரை மாற்ற முடியாது என்று புரிந்துகொண்டேன். அதனால், எதுவும் சொல்லாமல் திரும்பி வந்துவிட்டேன்'' என்றார். அந்தச் சம்பவத்தை என்னால் மறக்க முடியாது. மிக உயர்வான
மனிதர் சங்கரய்யா.

பண்ருட்டி ராமச்சந்திரன்
முன்னாள் அமைச்சர்

1967-இல் அண்ணா அமைச்சரவையை அமைத்தபோது சட்டப்பேரவையில் சங்கரய்யாவை நேரில் சந்தித்து உரையாடும் வாய்ப்பை முதன்முதலில் பெற்றேன். அப்போதைய சட்டப்பேரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குழுத் தலைவராக திண்டுக்கல் பாலசுப்ரமணியமும், துணைத் தலைவராக சங்கரய்யாவும் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருப்பார்கள்.

அந்த காலகட்டங்களில் பேரவையில் நடைபெறும் விவாதங்களில் பங்கேற்கும் சங்கரய்யா, தனது கருத்துகளை ஆணித்தனமாவும், அடுக்கடுக்காவும் எடுத்துரைப்பார். சட்டப் பேரவையில் இளம் உறுப்பினராகவும், புதிய உறுப்பினராகவும் அப்போது நான் இருந்தேன். உரத்த குரலில் சங்கரய்யா ஆற்றிய உரைகள் அனைத்தையும் வியப்பில் உறைந்தபடி விழி அகலாமல் பார்த்து ரசித்திருக்கிறேன்.

ஏற்றத் தாழ்வற்ற சமுதாயம் அமைய வேண்டும் என்பதும், அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதும் சமூக நெறியாக கருதப்படுகிறது. அத்தகைய கொள்கையை தன்னகத்தே கொண்ட சங்கரய்யா மீது சமூகத்தில் அனைவருக்கும் மாசற்ற மதிப்பு உள்ளது.

மாற்று கட்சியினரும் மதிக்கக்கூடிய பண்பாளர். தனது லட்சிய வாழ்க்கைக்கு வலு சேர்க்க வேண்டுமென வாழ்த்துகிறேன்.

துரைமுருகன்
நீர்வளத்துறை அமைச்சர்

சட்டப்பேரவை உறுப்பினராக 1967, 1977, 1980-களில் அவர் செயலாற்றிய போது அவருடன் நெருங்கிப் பழகியவர் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்.

அவருடன் தனக்கு உள்ள நட்பையும், பேரவையில் அவரது செயல்பாடுகள் குறித்தும் துரைமுருகன் கூறியது:

""சட்டப்பேரவையில் அவர் எம்எல்ஏவாக இருந்த காலகட்டத்தில் அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றேன்.

சட்டப்பேரவையில் அவர் உரையாற்றும்போது அவையே நிசப்தமாக இருக்கும். அந்தளவுக்கு சங்கரய்யாவின் குரல் ஓங்கி ஒலிக்கும். ஆழ்ந்த அனுபவம், அரசியல் அறிவு, சமூகப் பணியின் மூலம் கிடைத்த வரலாற்றுச் செய்திகள் அனைத்தும் அவரது உரையின்போது வந்து விழுந்து கொண்டே இருக்கும்.

பொதுவாழ்க்கைக்காக ஓயாமல் உழைத்து பாதி நாள்கள் ரயில், பாதி நாள்கள் ஜெயில் என வாழ்ந்தவர் சங்கரய்யா.

அவர் முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் மிகுந்த அன்பையும், மதிப்பையும் பெற்றிருந்தார். அவரை அண்மையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் சென்று நேரில் சந்தித்தேன்.

மேலும் பல ஆண்டுகள் பொதுவாழ்க்கையில் ஈடுபடுத்திக் கொள்ள வாழ்த்துகிறேன்.



டி.கே.ரங்கராஜன்
மார்க்சிஸ்ட், மூத்த தலைவர்.



1964-இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரிந்து உதயமான பிறகு திருச்சி மாவட்ட மாநாடு கரூரில் நடந்தது. அந்த மாநாட்டில் துவக்க உரையாற்றிய தலைவர் சங்கரய்யா, "முரண்பாடுகள்' என்பதைப் பற்றிப் பேசினார். அது மிக முக்கியமான தலைப்பு. முரண்பாடுகளைப் பற்றி அவர் ஒரு மணி நேரம் பேசும்போது, கட்சி பிரிந்ததற்கான தத்துவார்த்த ரீதியான, கொள்கைரீதியான, கோட்பாடு ரீதியான, அமைப்பு ரீதியான காரணங்களை விளக்கினார்.

""மார்க்சியத்துக்கு இரண்டு ஆபத்துகள் உள்ளன. ஒன்று திருத்தல்வாதம் மற்றொன்று தீவிரவாதம். இரண்டுக்கும் இடையே பயணிக்க வேண்டிய பொறுப்பு மார்க்சியத்துக்கு இருக்கிறது. மார்க்சியத்தில் நீங்கள் பயணம் செய்யும்போது, இரண்டு தீவிரவாதங்களும் உங்களைப் பாதிக்கும். அந்த இரண்டில் இருந்தும் மார்க்சியத்தைப் பாதுகாப்பது மட்டுமல்ல, அன்றைய சூழலில் சீன கம்யூனிஸ்ட் கட்சியோ, சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியோ நமக்கு வழிகாட்டிகள் அல்ல.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மார்க்சியமேதான் வழிகாட்டியே தவிர, வேறு யாரும் அல்ல'' என்று உரையாற்றினார்.

அது என்னைக் கவர்ந்தது. என்னால் என்றைக்கும் மறக்க முடியாதது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

SCROLL FOR NEXT