தினமணி கொண்டாட்டம்

முத்திரை பதிக்கும் முன்னாள் கதாநாயகிகள்!

18th Jul 2021 06:00 AM | -ஜி.அசோக்

ADVERTISEMENT


சினிமாவில் முன்னணி கலைஞர்களாக இருந்தவர்கள், மீண்டும் சின்ன இடைவெளிக்குப் பின் திரைக்கு திரும்ப வருவது அவர்களுடைய பயணத்தில் நிச்சயம் முக்கியமானது. அப்படி முன்னணியில் இருந்து மீண்டும் நடிக்க வந்த கதாநாயகிகள் பட்டியல் இது!

சிம்ரன்

 

நடிப்பு, நடனம், படங்கள் தேர்வு என 90 - களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமர்ஷியல் ஹீரோயினாக மட்டுமல்லாமல் தன் திறமைக்குத் தீனி போடும் சிறந்த கதையம்சம் கொண்ட படங்களையும் தேர்ந்தெடுத்து நடித்ததும் அவர் முன்னணி நடிகையாக வலம் வந்ததற்கு முக்கியக் காரணம். "விஐபி' படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் அடுத்தடுத்து "துள்ளாத மனமும் துள்ளும்', "ப்ரியமானவளே', "பம்மல் கே சம்பந்தம்', "கன்னத்தில் முத்தமிட்டால்' என இவர் நடித்த பெரும்பாலான படங்கள் ஹிட்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனத் தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் பல படங்கள் நடித்துள்ளார். திருமணத்துக்குப் பிறகு சில காலம் சினிமாவிலிருந்து விலகியிருந்தார். பிறகு 2008-ஆம் ஆண்டு "சேவல்' படம் மூலம் மீண்டும் திரைக்கு வந்தார். ஆனால் "வாரணம் ஆயிரம்' படமும், அதில் அவர் நடித்த மாலினி கேரக்டரும்தான் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. "சீமராஜா', "பேட்ட' என அடுத்தடுத்து ஹிட் கொடுத்தவர் மாதவனுடன் "நம்பி விளைவு', விக்ரமுடன் "துருவ நட்சத்திரம்' எனத் தனது இரண்டாவது இன்னிங்ஸிலும் சிம்ரன் செம பரபரப்பு!

ADVERTISEMENT

 

ஜோதிகா

துறுதுறுப்பான நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தைக் கொண்டிருந்தவர் ஜோதிகா. காதல், கமர்ஷியல், காமெடி என அனைத்து இடங்களிலும் கைத் தட்டலை அள்ளியவர். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் பாக்ஸ் ஆபீஸ் ஹிட். "குஷி', "வாலி', "டும்டும்', "சந்திரமுகி' எனத் தான் நடித்த படங்களின் கதைகளிலும் தனக்கான கதாபாத்திரங்களின் தேர்விலும் வித்தியாசம் காட்டினார் ஜோதிகா. திருமணத்துக்குப் பிறகு சினிமாவிலிருந்து சின்ன ப்ரேக் எடுத்தார். பிறகு "ஹவ் ஓல்ட் ஆர் யூ?' மலையாளப் படத்தின் தமிழ் ரீமேக்கான "36 வயதினிலே' படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தவரை "வாடி ராசாத்தி' என வாரியணைத்துக் கொண்டது தமிழ் சினிமா. "36 வயதினிலே', "காற்றின் மொழி', "ராட்சசி' என இரண்டாவது இன்னிங்ஸில் ஹீரோயினுக்கான கதைகளில் கவனம் செலுத்தி வருகிறார் ஜோதிகா.

 

அசின்

2001- ஆம் ஆண்டு மலையாளப் படத்தின் மூலம் தன் பயணத்தை ஆரம்பித்த அசினை, "எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி' படத்தில் மோகன் ராஜா தமிழில் அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து சூர்யாவுடன் "கஜினி' படத்தில் வெகுளித்தனமான கல்பனாவாக வந்தவர், "வேல்' படத்தில் "கோவக்கார கிளியே... புருவம் தூக்கிக் காட்டாதே' என்று இளைஞர்களின் மனதில் கனவுக்கன்னியாக மாறினார். அஜித்துடன் "வரலாறு', "ஆழ்வார்', விஜயுடன் "சிவகாசி', "போக்கிரி' என்று வெற்றிப்படங்களில் நடித்தவருக்கு, "தசாவதாரம்' படத்தில் கமலுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தமிழில் கடைசியாக "காவலன்' படத்தில் நடித்தார். அதன்பின், பாலிவுட் இவரைத் தன்வசப்படுத்தியது. 2015-இல் "ஆல் இஸ் வெல்' என்ற ஹிந்தி படத்தில் நடித்தவர், மைக்ரோ மேக்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ ராகுல் சர்ந்த்வை திருமணம் செய்து செட்டிலாகிவிட்டார். இல்லறம், குழந்தை வளர்ப்பு என இருந்தவர் மீண்டும் சினிமாவுக்கு திரும்புகிறார். விஜய்யின் அடுத்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்துக்காக பேசப்பட்டு வருகிறார் அசின்.

நதியா


தமிழ் சினிமாவின் கதாநாயகி நதியா. "பூவே பூச்சுடவா' படம் மூலம் அறிமுகமானவர் ரஜினி, பிரபு என 80-களில் முன்னணி ஹீரோக்கள் பலருடனும் பல ஹிட் படங்களைத் தந்தார். முன்னணியில் இருந்த போதே திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து விலகியவர் பத்து வருடங்களுக்குப் பிறகு "எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி' படத்தில் ஜெயம் ரவிக்கு அம்மாவாக ரீஎன்ட்ரி கொடுத்தார். படம் வெளியான சமயத்தில் இந்த ஜாலியான அம்மா-மகன் கூட்டணிக்கு வரவேற்பு கிடைத்தது. அதற்குப்பிறகு "தாமிரபரணி', "சண்டை' என அடுத்தடுத்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார் நதியா. இப்போது "பாபநாசம் 2' படத்துக்காக பேசப்பட்டு வருகிறார். இது நடந்தால், கமல் - நதியா ஜோடி இப்போது சாத்தியமாகலாம்.

 

மஞ்சு வாரியர்


மலையாளத்தில் 90-களில் முன்னணி நடிகை மஞ்சு வாரியர். தமிழ்ப்பெண். திருமணம், விவாகரத்து என தனது சொந்த வாழ்க்கைப் பக்கங்களிலிருந்து மீண்டுவந்தவர். 15 வருடங்களுக்குப் பிறகு "ஹவ் ஓல்ட் ஆர் யூ?' மலையாள படத்தின் மூலம் திரும்ப வந்தார். "வில்லன்', "லூசிஃபர்' என மீண்டும் தனது இடத்தை தக்க வைத்திருப்பவர், கடந்த முறை "அசுரன்' படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். இன்னும் தமிழ், மலையாளம், ஹிந்தி என இவருக்காக காத்திருக்கிறார்கள் இயக்குநர்கள்.

நதியா முதல் ஜோதிகா வரை அனைவருமே திறமையான நடிகைகள் என்பது ஒரு பக்கம் இருக்க, தமிழ் சினிமாவில் 35-45 வயது வரையிலான பெண் கதாபாத்திரங்களில் நடிக்க மிகப்பெரிய அளவில் நடிகைகளுக்கான தேவை இருக்கிறது. இன்று குடும்பத்துடன் தியேட்டருக்குச் சென்று படம் பார்ப்பவர்களில் அதிகபட்சமானோர் இந்த 35-45 வயதைச் சேர்ந்தவர்கள்தான். அதனால்தான் இந்த வயது கேரக்டர்களில் முன்னணி நடிகைகள் நடிக்கும்போது பெரிய வரவேற்பு இருக்கிறது. கமர்ஷியலாகவும் படங்கள் ஓடுகின்றன. அதனால்தான் திரைக்கு திரும்ப வருகிறார்கள். முன்னாள் முன்னணி கதாநாயகிகள். அவர்களைத் தமிழ் சினிமா ரசிகர்களும் வெற்றியோடு வரவேற்கிறார்கள்!

Tags : kondattam Ex-heroines stamping!
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT