"தெரு நாய்கள், "படித்தவுடன் கிழித்து விடவும்', "கல்தா' என சமூக அரசியல் சார்ந்த கதைகளை சினிமாவாக்குபவர் ஹரி உத்ரா. சினிமாக்களை சமூக விழிப்புணர்வுக்காக இவர் தற்போது "நம்பர் 6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு'. சினிமாக்களில் இவரது சேவையை பாராட்டி சர்வதேச தமிழ்ப் பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது.
இந்த நிலையில் தனது உத்ரா அறக்கட்டளை குழுவின் ஐ கிரியேஷன்ஸ் தயாரிரில் இதுவரை 21 குறும்படங்களை தயாரித்துள்ளார். இந்த கரோனா பொது முடக்க காலத்தில் வெளிவந்த இப்படங்கள் யாவும் சமூக விழிப்புணர்வை பேசியுள்ளது கவனிக்கத்தக்கது.
"குற்றம்', "கறை வேட்டி', "ஜனநாயகத் தற்கொலை', "பாலும் பழமும்', "தண்டனை' உள்ளிட்ட குறும்படங்கள் இதில் அடக்கம். இது குறித்து இயக்குநர் பேசும் போது... "" திரையரங்குகள் இல்லாத இந்த காலக் கட்டத்தில் சக கலைஞர்களின் கற்பனை திறனை வெளிக்கொண்டு வரும் விதமாக இந்த தளத்தில் பயன்படுத்திக் கொண்டேன். இதுவரை தயாரித்து வெளியிட்ட அனைத்து படங்களும் ரசிகர்களின் தனித்த கவனத்தை பெற்றுள்ளது.
குடும்பம், சமூகம் என சகல மட்டங்களிலும் கேள்வியை முன் வைக்கிற கதைகள் இனி சினிமாவாக இருக்கும். அதற்கான முன்னோட்டமாக இதை தயாரித்துள்ளேன். அதற்காக சில குறும்படங்களை தேர்வு செய்து வைத்துள்ளேன். அதை எனக்கான, நமக்கான உணர்வாக, மனிதனாக காட்சிப்படுத்தினால் சந்தோஷம்'' என்றார்.