பயணம் என்றால் அது சாலை வழியாக இருக்க வேண்டும். பல ஊர்கள், பலதர மக்களை பார்த்தவாறே பயணிக்கலாம். எனக்கு இதுவரை நீண்ட தூர பயணத்தில் கார் ஓட்டி அனுபவமில்லை. அதனால் கேரளத்திற்குள் அடிக்கடி நீண்ட தூரம் கார் ஒட்டி பழகினேன். பிறகு சென்ற கரோனா காலத்தில் செப்டம்பர் மாதத்தில் கொச்சியிலிருந்து ஹம்பி வரை சுமார் 900 கி.மீ தூரத்தை 13 மணி நேரத்தில் காரில் அடைந்தேன். என்னால் நீண்ட தூரம் கார் ஓட்ட முடியும் என்று நம்பிக்கை பிறந்தது என்கிறார் மித்ரா சதிஷ். கொச்சி அரசு ஆயுர்வேதகல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணிபுரிபவர். இவர், சமீபத்தில் தன்னுடைய மகனுடன் கொச்சியிலிருந்து காஷ்மீர் வரை 28 மாநிலங்களை 51 நாளில் கடந்து திரும்பியுள்ளார். இவர், தனது பயணம் குறித்து பகிர்ந்து கொண்டவை:
""ஆறாம் வகுப்பு படிக்கும் மகன் நாராயணனுக்கு என்னை மாதிரியே பயணம் செய்யப் பிடிக்கும். அவனது நண்பன் ஒருவன் அம்மாவுடன் ஊட்டிக்குச் சென்று ஆதிவாசிகளுடன் தங்கி வந்ததைச் சொல்ல, அம்மா நாமும் எங்காவது போய் வருவோம் என்று கேட்கத் தொடங்கினான். கரோனா காலத்தில் பள்ளிகள் மூடிக் கிடப்பதால் அவனுக்கும் வீட்டில் இருந்து போதும் போதும் என்றாகிவிட்டது.
பயணம் எப்படி அமைய வேண்டும் என்று திட்டமிட இரண்டு மாதம் தேவைப்பட்டது. போகும் இடங்களில் பழங்கலைகளைக் காப்பாற்றி வரும் கலைஞர்களைச் சந்திக்க வேண்டும் என்பதற்காக அவர்களைப் பற்றியத் தகவல்களைத் திரட்டினேன். நடுவண் அரசின் சுற்றுலாத்துறை தகவல் வழங்கியதுடன், உதவி தேவைப்பட்டால் ஆங்காங்கே தொடர்பு கொள்ள வேண்டிய சுற்றுலாத்துறை அதிகாரிகளின் பெயர்களையும் தந்து உதவியது.
பயணம் தொடங்குவதற்கு முன் நான் கரோனா தடுப்பு ஊசி போட்டுக் கொண்டேன். மகனுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கூட்டும் ஆயுர்வேத மருந்துகளையும் கொடுத்து வந்தேன். நாராயணன் பயணிக்க அவனது பள்ளியிலிருந்து அனுமதி பெற்றுக் கொண்டேன். ஆன்லைன் தேர்வுகளை பயணத்தின்போது எழுதவும் அனுமதி கிடைத்தது.
அப்போது கரோனா பரவல் பெரிதாக இல்லாததால் எனது பயணத்திற்கு நான் வேலை பார்க்கும் கல்லூரியின் அனுமதியும் கிடைத்தது.
இந்த ஆண்டு மார்ச் 17}இல் காரில் நானும் மகனும் புறப்பட்டோம். தமிழ்நாடு, பாண்டிச்சேரி, ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம், சுற்றி வட கிழக்குப் பகுதிகளை அடைந்தோம். போகும் வழியில் மக்கள் எங்கெல்லாம் கூடி நின்றார்களோ அங்கே போகாமல் தவிர்த்தோம். சிறு கிராமங்களில் தங்கினோம். கரோனா தொற்று கண்டுபிடிக்கும் ஆர்டி}பிசிஆர் சோதனையை வாரம் ஒருமுறை செய்து கொண்டோம்.
பயண நேரத்தில் நாராயணன் வகுப்பு புத்தகங்களைப் படிப்பான். மாலை நேரங்களில் தேர்வு. இப்படி ஏழு தேர்வுகளை எழுதினான். போகும் வழியில் கிடைத்த அனுபவங்கள், அவன் படித்த பாடங்களைவிட முக்கியத்துவமாக அமைந்தது.
மேற்கு வங்கத்தில் பஞ்சமுரா கிராமத்தில் களிமண்ணால் ஓடு செய்வதை நாராயணன் கற்றுக் கொண்டான். அஸ்ஸôமில் சல்மோரா கிராமத்தில் பாரம்பரிய முறையில் மண் பானையை சக்கரத்தைச் சுழற்றி செய்வார்களே அப்படி செய்யாமல் கைகளால் செய்ய நாராயணன் கற்றுக் கொண்டான். அஸ்ஸôமின் போடோ கிராமத்தில் சின்ன குடில்களில் தங்கினோம். வடகிழக்குப் பகுதிகளில் அதிகம் அசைவம் சாப்பிடுவார்கள் என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் சைவ உணவு உண்பவர்கள் கணிசமாக இருக்கிறார்கள். அதனால் எங்களுக்குச் சைவ உணவு கிடைப்பதில் சிரமம் ஏதும் இருக்கவில்லை.
நாங்கள் காஷ்மீரை அடைந்த போது, நாராயணனுக்கு பனிக்கட்டிகள் மூடிய மலையைப் பார்க்க வேண்டும் என்ற தீராத ஆசை. அதற்காக முதலில் சோனாமார்க், பிறகு úஸôஜிலா, கும்ரி சென்று பனி மூடிய சிகரங்களை ஆசை தீர கண்டு களித்தோம்.
அந்த சமயத்தில்தான், கரோனா இரண்டாம் அலை தாக்குதல் உக்கிரமாக மாறியது. இதனால், ஜம்மு, சண்டிகர், டெஹ்ராடூன், ஜெய்ப்பூர், பரோடா, மும்பை, மங்களூர் வழியாக ஒரு நாளில் சுமார் 17 மணி நேரம் காரில் பயணித்து மே 6}இல் கொச்சி வந்தடைந்தோம்.
நூறு நாள் பயணிக்க வேண்டும் என்று தீர்மானித்திருந்தாலும் கரோனா காரணமாக 51 நாட்கள் போதும் என்று முடித்து விட்டோம். அதிகமாக நண்பர்கள், தெரிந்தவர்கள் வீட்டில் தங்கியதால், முழு பயணத்திற்கும் ஒன்றரை லட்சம்தான் செலவாகியது. கரோனா காலம் என்பதால் பல வேலைகள் முக்கியமாக மதிய உணவு சாப்பிடவில்லை. வாங்கி வைத்திருந்த கார்ன்ஃபிளெக்ஸ், உலர்பழங்கள், கெடாத பால் இவற்றை வைத்து சமாளித்தோம். வரும் நாட்களில் மகனுடன் இன்னும் பயணிக்க திட்டமிட வேண்டும்' என்கிறார் மித்ரா சதீஷ்.