தினமணி கொண்டாட்டம்

படிப்புக்காகப் பணம் செலவழிக்கும் அதிகாரி

31st Jan 2021 06:00 AM | -விஷ்ணு

ADVERTISEMENT

 

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆதித்ய ரஞ்சன், தனது சொந்த பணத்தைச் செலவு செய்து முன்மாதிரி அங்கன்வாடி பள்ளியை உருவாக்கி அனைவரது பாராட்டையும் பெற்றிருக்கிறார்.

ஆதித்த ரஞ்சன் ஐ.ஏ.எஸ் தேர்வாகி, ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள மேற்கு சிங்பு என்ற மாவட்ட வளர்ச்சி அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அந்த மாவட்டத்தில் கல்வி, சுகாதாரம் ஆகியவை மோசமான நிலையில் இருப்பதைக் கண்டு வேதனையடைந்தார்..கல்வியை முன்னேற்றும் பதவியில் இருப்பதால், இந்த நிலையை மாற்ற சில திட்டங்களுடன் களத்தில் இறங்கினார்.

மக்களை நேரில் சந்தித்து, அவர்களது குறைகளைக் கேட்டறிந்தார். முதலில் அவருடைய சம்பளத்தில் மாதிரி அங்கன்வாடியை அமைக்க முடிவு செய்தார். மருத்துவ வசதி, கல்வி ஆகியவைகளை ஒருங்கிணைத்து அமைத்தார். இது வெற்றிகரமாகச் செயல்பட்டது. இதன் பிறகு இது போன்ற அங்கன்வாடிகளை மேம்படுத்த அரசிடம் நிதி உதவி பெற முடிவு செய்தார். இவரது மாவட்டத்தில் அங்கன்வாடிகள் செயல்படுவது பற்றி ஆய்வு செய்யும் போது, அங்கன்வாடிகளில் உள்ள 3 முதல் ஆறு வயதிற்குள் உள்ள குழந்தைகள் கல்வி கற்பதற்காகப் பள்ளிக்கு வருவதில்லை என்பது தெரியவந்தது. அங்கன்வாடி மையங்களுக்கு மதிய உணவு சாப்பிட மட்டுமே குழந்தைகள் வருகின்றனர் என்பதை அறிந்தார்.

ADVERTISEMENT

அங்கன்வாடி மையங்களில் சத்தான உணவு, மருத்துவ வசதி, கல்வி ஆகியவைகளை வழங்கினால் பெண்களும், குழந்தைகளும் பலனடைவார்கள் என்று கருதினார். இதற்காக டிட்லி போன்ற தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து அங்கன்வாடிகளை மேம்படுத்தினார். அங்கன்வாடி மையங்களில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு டிட்லி நிறுவனம் பயிற்சி அளித்தது. அங்கன்வாடி மையங்களில் அமைந்த ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை செய்து இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டன. இவை வெற்றிகரமாகச் செயல்படுவதைப் பார்த்த பிறகு, ஆயிரம் அங்கன்வாடிகளை மேம்படுத்த இலக்கு நிர்ணயித்துள்ளார் ஆதித்ய ரஞ்சன்.

""நான் முதன்முதலில் அங்கன் வாடிக்கு சென்ற போது, அங்கிருந்த நிலைமையைப் பார்த்துத் திகைத்துப் போனேன். அங்கன்வாடிகளின் நோக்கம் குழந்தைகளுக்கு உணவு வழங்குவதும், அவர்கள்  படிக்க வருவதை ஊக்குவிப்பதுமே தான் பிரதானப்பணி. ஆனால் நான் சென்ற இடங்களில் இதற்கு நேர்மாறாக நடந்து கொண்டிருந்தது. குழந்தைகள் சாப்பிட மட்டுமே வருகின்றனர். சாப்பிட்டு முடித்த பிறகு வீட்டிற்குச் சென்று விடுகின்றனர். இந்த குழந்தைகளுக்கு உணவு, உடை, படிக்க புத்தகம், நோட்டு ஆகியவற்றை வழங்கி, சுகாதாரத்தை மேம்படுத்திய பிறகு, நிலைமை மாறுவதைக் கண்கூடாகப் பார்த்தேன். அங்கன்வாடிக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது. நாங்கள் இதற்காக பிரத்யேக செல்போன் "ஆப்' ஒன்றை வடிவமைத்தோம். இதனால் அங்கன்வாடிகள் செயல்படுவதைக் கண்காணிக்கவும், அவை எல்லா நாள்களிலும் இயங்குவதை உறுதி செய்யவும் முடிந்தது உங்களால் அடுத்தவர்களின் வாழ்க்கையை முன்னேற்ற முடியும் என்றால், அது உங்கள் வேலையில் திருப்தியை தருகிறது. அந்த உணர்வு ஈடு செய்ய முடியாதது. எங்களிடம் புதிய அங்கன்வாடி மையங்களைத் திறப்பதற்குப் போதிய நிதி இல்லை. இது போன்ற திட்டங்களுக்கு மாநில அரசு அதிக அளவு நிதி ஒதுக்கும்'' என்று நம்புகின்றேன் என்று ஆதித்ய ரஞ்சன் தெரிவித்தார்.

உயர் நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் படித்து முடித்த மாணவர்களைப் பற்றிய விவரங்களை ஆராய்ந்தால், இவர்களில் பெரும்பாலோர் அறிவியல், கணக்கு தவிர மற்ற பாடங்களை எடுத்து படித்திருப்பதை அறிந்தார். 

இதற்கான காரணத்தைப் பற்றி ஆராயும் போது மேற்கு சிங்பும் மாவட்ட பள்ளிகளில் தேவையான அளவு அறிவியல், கணக்கு ஆசிரியர்கள் இல்லை என்பதைத் தெரிந்து கொண்டார். இதனால் பெரும்பாலான மாணவர்கள் வரலாறு, இலக்கியம் போன்றவைகளையே விருப்பப் பாடமாக எடுத்து படிக்க வேண்டியிருந்தது. இந்த நிலையை மாற்ற, இளம் தலைமுறையினர் மத்தியில் அறிவியல் தேடலை ஏற்படுத்த நடமாடும் அதிசயம் என்ற  பெயரில் வாகனங்களை அறிமுகப்படுத்திப் பின் தங்கிய மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவிகள் பயன்பெற நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT