தினமணி கொண்டாட்டம்

இந்திய சிங்கங்கள்

31st Jan 2021 06:00 AM | -பா.சுஜித்குமார்

ADVERTISEMENT


சொந்த மண்ணில் புலி எனப் புகழப்படும் ஆஸி. அணியை இந்திய இளம் வீரர்கள் தடம் புரளச் செய்து வீழ்த்தினர். குறிப்பாக டெஸ்ட் தொடரில் அறிமுகம் ஆன நடராஜன், சர்துல் தாகுர், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், ஷுப்மன் கில் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 3 வீரர்கள் அஸ்வின்,வாஷிங்டன் சுந்தர், நடராஜன் ஆகியோர் பங்கு இந்த வெற்றியில் குறிப்பிடத்தக்கது.

அஸ்வின் ரவிச்சந்திரன்:

மூத்த வீரர்களில் ஒருவரான சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் 2011-இல் டெஸ்ட் ஆட்டத்தில் அறிமுகமானார்.  74 டெஸ்ட்களில் மொத்தம் 377 விக்கெட்டுகளை வீழ்த்திய அவரது சிறந்த பந்துவீச்சு 7/59 ஆகும். பேட்டிங்கில் மொத்தம் 2467 ரன்களைக் குவித்து, அதிகபட்சமாக 124 ரன்களை விளாசியுள்ளார். ஆஸி. அணிக்கு எதிராக அண்மையில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் முதல் ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சிட்னியில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட்டின் கடைசி நாளன்று முக்கிய வீரர்கள் ஆட்டமிழந்த நிலையில், அஸ்வின்-ஹனுமா விஹாரி இணைந்து வலுவான ஆஸி. பந்துவீச்சை எதிர்கொண்டு அதன் வெற்றியை தடுத்து நிறுத்தினர். நிதானமாக ஆடிய அஸ்வின் 39 (128), விஹாரி 23 (161) ரன்களையும் சேர்த்தனர்.

நடராஜன்:

ADVERTISEMENT

இளம் வீரரான நடராஜன், வலைப்பயிற்சியில் பந்துவீசுவதற்காக இந்திய அணியுடன் சென்றிருந்தார். பின்னர் ஒருநாள், டி20, டெஸ்ட் என ஓரே தொடரில் மூன்று ஆட்டமுறைகளிலும் சேர்க்கப்பட்ட முதல் இந்திய வீரர் என்ற சிறப்பைப் பெற்றார். டி20 தொடரில் அற்புதமாக பந்துவீசிய அவர் 2 விக்கெட்டுகளை சாய்த்தார். சிட்னியில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் ஆட்டத்தில் அறிமுகமான நடராஜன் திறமையான பந்துவீச்சின் மூலம் வலுவான ஆஸி.க்கு எதிராக 3 விக்கெட்டுகளை சாய்த்தார். 29 வயதான நடராஜன், டெஸ்ட் ஆட்டத்தில் 3, ஒருநாள் ஆட்டத்தில்  2, டி20யில் 6 விக்கெட்டுகளை மொத்தமாக வீழ்த்தியுள்ளார். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த நடராஜன், சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த நிலையில், தனது இடதுகை வேகப்பந்து வீச்சின் மூலம் சர்வதேச கிரிக்கெட் அரங்கின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

வாஷிங்டன் சுந்தர்:

21 வயதே ஆன இளம் வீரரான சென்னையைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் சிறந்த ஆல்ரவுண்டராக உருவெடுத்து வருகிறார். குறிப்பாக ஆஸி.க்கு எதிராக பிரிஸ்பேனில் நடைபெற்ற கடைசி டெஸ்டில் அறிமுகம் செய்யப்பட்டு மொத்தம் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பேட்டிங்கிலும் சிறப்பாக ஆடி 62 (144), இரண்டாவது இன்னிங்ஸில் 22 ரன்களை குவித்தார். 

முதல் டெஸ்ட்டிலேயே அரைசதம் அடித்தார். இதன் மூலம் அணி டெஸ்ட் தொடரை வெல்ல உதவினார்.  குறுகிய ஓவர் ஆட்டங்களான ஒரு நாள், டி20 போன்றவற்றில் தனது முத்திரையை பதித்துள்ளார் சுந்தர். இந்திய அணியில் தொடர்ந்து நிலையான இடத்தை வாஷிங்டன் சுந்தர் பெறுவது திண்ணம்.

மேலும் இதே தொடரில் அறிமுகம் ஆன நவ்தீப் சைனி, ஷுப்மன் கில், முகமது சிராஜ் ஆகியோரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்துள்ளனர்.

ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த 28 வயது வேகப்பந்து வீச்சாளரான நவ்தீப் சைனி சிட்னி டெஸ்டில் அறிமுகம் ஆகி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அணிக்கு உதவினார்.

மெல்போர்னில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் ஷுப்மன்கில், முகமது சிராஜ் அறிமுகம் ஆனார்கள். ஷுப்மன் கில் முதல் இன்னிங்ஸில் 45, இரண்டாவது இன்னிங்ஸில் 35 ரன்களை விளாசினார்.  சிட்னி டெஸ்டிலும் ஷுப்மன் கில் மொத்தம் 81 ரன்களை சேர்த்தார்.  சிராஜ் பந்துவீச்சில் அசத்தினார்.

பிரிஸ்பேன் டெஸ்டில் முதன் முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார் சிராஜ். 

ADVERTISEMENT
ADVERTISEMENT