தினமணி கொண்டாட்டம்

கேள்வி கேட்பதற்கே பிறந்தவர்

31st Jan 2021 06:00 AM | - டி. ஆர்.நடராஜன்

ADVERTISEMENT


எல்லாவற்றிலுமே அகலக்கால்தான் லாறி கிங்குக்கு. ஐம்பது ஆண்டு ரேடியோ, டி.வி. இரண்டிலும் நிகழ்ச்சிகள் நடத்திய முடிசூடா மன்னன்.

நாட்டு அதிபர்கள், அரசியல் தலைவர்கள், திரைப்பட ஜாம்பவான்கள், நடிகையர்கள், இயக்குநர்கள், கல்விச் செம்மல்கள், விஞ்ஞானிகள், தெருவில் வியாபாரம் செய்பவர்கள் என்று யாரை விட்டு வைத்தார்? அவரது ஆயுளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேட்டிகள். ஊடக வரலாற்றில் மிக நீண்ட காலம்

நிகழ்ச்சி நடத்தியவர் என்று கின்னஸ் புத்தக விருது  இதெல்லாம் போதாதென்று ஏழு பெண்களை எட்டு முறை மணந்த அசகாய சூரர் !

லாரன்ஸ் ஹார்வி ஸீஹர் பிறந்தது நவம்பர் 1933-இல். அவரது பெற்றோர் ஐரோப்பாவிலிருந்து வந்து அமெரிக்காவில் புகலிடம் பெற்றவர்கள். அவரது தந்தை லாறியின் ஒன்பதாவது வயதில் மரணம் அடைந்து விட, வறுமையான சூழலில் பள்ளிப் படிப்பை முடிக்க முயன்றார். கல்லூரி பக்கம் கூட தலைகாட்டாத அவர் தனது 24 ஆவது வயதில் முதல் முறையாக வானொலி ஊடகத்தில் கால்களைப் பதித்து விளையாட்டு வர்ணனையாளராகப் பணி புரிந்தார். 

ADVERTISEMENT

1978-இல் பல நாடுகளுக்கிடையே இருந்த ரசிகர்களுக்கான முழு இரவு நேர வானொலி நிகழ்ச்சிகளை அவர் தொடர்ந்து நடத்த ஆரம்பித்தார். அவரைப் பற்றிக் கேள்விப்பட்ட  உலகப் புகழ் பெற்ற சி.என்.என். தொலைக்காட்சி அதிபர் டர்னர்  தன்னுடன் பணிபுரிய அழைத்தார். 1985-இல் நடந்த முதல் நிகழ்ச்சியில் அவர் பெயர் லாறி கிங் என்று மாற்றப்பட்டது. அடுத்த 25 ஆண்டுகள் அவர் நிகழ்ச்சிகள் தொடர்ந்து சி.என்.என். தொலைக்காட்சியில் ஒளி பரப்பாகின.

பதினைந்து லட்சம் ரசிகர்கள் அவைகளைப் பார்த்து மகிழ்ந்தார்கள். அமெரிக்க உதவி ஜனாதிபதி அல் கோரேயும் தொழிலதிபர்  ரோஸ் பெரோவும் சந்தித்த நிகழ்ச்சியை ஒன்றரைக் கோடி பேர் பார்த்தது உலக அதிசயங்களில் ஒன்று.

""நான் அடிப்படையில் யார்? எங்கே? எப்போது?  எதற்காக? என்று தேடும் மனிதன்'' என்று அவர் தன்னைப் பற்றிக் குறிப்பிட்டார். ""நான் நடத்தும் பேட்டிகளில் என்னை முன்னிறுத்திக் கொண்டு பேசுவது எனக்குப் பிடிக்காது. எனக்குப் பிடிக்காத ஒரு வார்த்தை : நான்! எனது எந்த ஒரு பேட்டியிலும் நான் எதிராளியைத் திணற அடிக்க வேண்டும் என்றோ, புண்படுத்த வேண்டும் என்றோ ஒரு போதும் நினைத்ததில்லை. ஒரு கேள்வி என்பது எனக்கு இரண்டு வாக்கியங்களில் முடிந்து விட வேண்டும். மூன்றாவது வாக்கியம் அங்கே வந்தால் அந்தக் கேள்வி மோசமான கேள்வி!'' என்பார் அமெரிக்க அதிபர்களான நிக்சன், கிளிண்டன், சோவியத் அதிபரான புதின்,கோர்பச்சேவ்  பிரிட்டிஷ் அதிபரான மார்கரெட் தாட்சர், திரைப்படப் பிரபலங்களான மார்லன் பிராண்டோ, பிராங்க் சினாட்ரா, செலின் தியான் என்று அவரது செலெப்ரெட்டி பேட்டிகள் எண்ணிக்கையற்றவை. 

சிலரைப் பற்றிய அவரது அனுபவங்கள்:

"கிளிண்டன் திறமையான ஜனாதிபதி. விஷயம் அறிந்தவர். ஜிம்பாப்வே உதவி ஜனாதிபதியின் பெயரை அறிந்து வைத்திருக்கிறார். நம் ஊரில்  பெரும்பாலான அரசியல்வாதிகள் கால்சட்டையின் ஒரு காலுக்கான பகுதியில் இரண்டு கால்களையும்  நுழைத்துக் கொள்பவர்கள்!"

நிக்சனிடம் அவர் கேட்ட கேள்வி: "வாட்டர்கேட் பக்கம் உங்கள் காரை ஒட்டிக் கொண்டு போகும் போது "எல்லாம் தலைவிதி' என்கிற நினைப்பு உங்களுக்குத் தோன்றுமா?"

தனிமனித சுதந்திரத்துக்கு எதிர் நிலை கொண்ட ரஷ்யாவின் அதிபர் புதின் அவருடைய பெண்களைப் பற்றிக் கேட்ட போது "அவர்களுடைய அந்தரங்கத்தில் நான் குறுக்கிடுவதில்லை. அவர்களைப் பற்றிப் பொது வெளியில் பேசுவது சரியல்ல' என்றார்.

1987-இல் டொனால்டு டிரம்ப் நியூயார்க்கில் ரியல் எஸ்டேட் சாம்ராஜ்யத்தை ஆண்டு கொண்டிருந்தார். அப்போது பேட்டிக்கு வந்த அவரிடம் லாறி கிங் "உங்கள் நடை உடை பாவனை எல்லாம் அரசியல்வாதியைப் போல இருக்கிறதே!' என்றார். டிரம்ப் "தன்னைப் பிரசிடெண்ட் ஆகக் காண்பித்துக் கொள்வதில் தனக்குக் கொஞ்சம் கூட இஷ்டம் இல்லை' என்றார்!

கென்னடி கொலை வழக்கை விசாரித்துக் கொண்டிருந்த நீதிபதிக்குப் பணம் கொடுத்தார் என்று 1971-இல்  ஒரு வழக்கில்  லாறி கிங் சிக்கியதால் அவரிடமிருந்து பலரும் விலகியிருந்தனர்.

பின்னாளில் இந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆகவில்லை என்று தீர்ப்பு வந்தது. அவர் இழந்த பல வேலைகள் அவருக்குத் திரும்பி வந்தன.  87 -ஆவது வயதில் அவர் இறக்கும்போது அவருடைய சொத்துகளின் மதிப்பு 375 கோடி ரூபாய்.

தனக்கு நெடுநாள் வாழ ஆசை என்று சொன்ன லாறியிடம் . "உங்கள் மரணத்துக்குப் பின் உங்களைப் பற்றிய இரங்கல் செய்தி எப்படி இருக்க வேண்டுமென  விரும்புகிறீர்கள்' என்று கேட்ட போது லாறி கிங் அளித்த பதில்: " இதுவரை அதிக நாள் வாழ்ந்த மனிதர் இன்று இறந்து விட்டார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT