தினமணி கொண்டாட்டம்

திருக்குறளில் என்ன இல்லை?

நெ. இராமன்

ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் தான், சென்னைக்கு முதன் முறையாக அச்சு எந்திரம் வந்தது. இந்த எந்திரத்தின் மூலம் முதலில் எதை அச்சிடுவது என்று ஆங்கிலேயர்களுக்குக் குழப்பம்!

அப்போது தஞ்சை மன்னரின் அரசவைக் கவிஞராக இருந்தவர் புலவர் கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர். இவர் கும்பகோணத்தை அடுத்துள்ள கொட்டையூர் என்னும் இடத்தவர். இவரின் தந்தை பெயர் தண்டபாணி தேசிகர். சைவ மரபைச் சேர்ந்தவர். தமிழ் இலக்கியம், இலக்கணம் முதலானவற்றில் நன்கு தேர்ச்சி பெற்றவர்.  19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு சிற்றிலக்கியப் புலவர். 

மருத்துவ நூல்கள் பலவற்றை செய்யுள் வடிவில் எழுதி வைத்துள்ளார். மன்னரின் வேண்டுகோளுக்கிணங்கப் பல ஏட்டுச் சுவடிகளைச் சேர்த்துத் தொகுத்துள்ளார்.

"இவரிடம் கேட்டால், நல்ல நூலைத் தேர்வு செய்து தருவார்' என்று பலரும் ஆலோசனை வழங்கினர். 

உடனே, சிவக்கொழுந்து தேசிகரை வரவழைத்து அவரிடம் இதுகுறித்து விவாதித்தனர். சிவக்கொழுந்து தேசிகர் கொஞ்சமும் யோசிக்காமல், ""திருக்குறளை வெளியிடலாம்'' என்று சொன்னார்.

இதைக் கேட்ட ஆங்கிலேய துரைக்கு ஆச்சரியம்! ""திருக்குறளில் அப்படி என்ன உள்ளது?'' என்று கேட்டார்.

அதற்கு தேசிகர், ""திருக்குறளில் என்ன இல்லை? எல்லாமே உள்ளது'' என்று உறுதிபடத் தெரிவித்தார்.

இந்த பதில் ஆங்கில துரைக்கு மேலும் எரிச்சலூட்டியது. அங்கு கிடந்த ஒரு கல்லைக் காட்டி, ""இந்தக் கல்லைப் பற்றி திருக்குறளில் கூறப்பட்டுள்ளதா?'' என்று கிண்டலாகக் கேட்டார்.

துரையின் கேள்விக்குச் சற்றும் சளைக்காத தேசிகர், ""ஒரு முறை அல்ல... இரு முறை கூறப்பட்டுள்ளது'' என்று கூறி விட்டு,

"வீழ்நாள் படாமை நன் றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்'
"பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்ட ளைக் கல்'

என்று இரு குறள்களையும் கூறினார். இதையடுத்து திருக்குறளின் சிறப்பை உணர்ந்த ஆங்கிலேய அதிகாரிகள், முதன்முதலாக திருக்குறளை அச்சேற்றினர்!

வீழ்நாள் படா அமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல்
ஒருவன் அறம் செய்யத்தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தை செய்வானானால், அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும்.

"பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்கருமமே கட்டளைக் கல்'(மக்களுடைய குணநலங்களாகிய) பெருமைக்கும் (குற்றங்களாலாகிய) சிறுமைக்கும் தேர்ந்தறியும் உரைகல்லாக இருப்பவை அவரவருடைய செயல்களே ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமயபுரம் மாரியம்மன் கோயில் தேரோட்டம்!

பெரும் முதலாளிகளின் கருவி மோடி: ராகுல் விமர்சனம்

விஷாலின் ரத்னம் பட டிரைலர்!

தக் லைஃப்: மீண்டும் இணைந்த துல்கர்; இரட்டை வேடத்தில் சிம்பு?

வெங்காய ஏற்றுமதிக்கான தடை உத்தரவில் தளர்வு!

SCROLL FOR NEXT