தினமணி கொண்டாட்டம்

ரோஜா மலரே! - 73: விரும்பி நடித்தும், பொருந்தாத காட்சிகள்! - குமாரி சச்சு

24th Jan 2021 06:00 AM | சந்திப்பு: சலன்

ADVERTISEMENT

 

எங்கள் குழுவில் அன்று கல்யாணமான ஒரு ஜோடியும் இருந்தார்கள். அவர்கள் தேன் நிலவுக்குப் போகாமல், இந்த படப்பிடிப்புக்கு வந்தார்கள் என்று சொல்லியிருந்தேன். அவர் நடிப்புத்துறை தொடர்புடையவர் இல்லை.  ஆம்! இயக்குநர் ஸ்ரீதர் - தேவசேனா தம்பதி. அவர்கள் இருவரும் இந்தப் படம் எடுப்பதற்கு முன்பே திருமணம் செய்து கொண்டார்கள்.  படப்பிடிப்புத் தொடங்கிய பின் தேன் நிலவுக்குப் போவதற்குக் கூட நேரம் கிடைக்கவில்லை. 

இன்னும் சொல்லப் போனால், இருவரும் தனிமையில் பேசுவதற்குக் கூட இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது முடியவில்லை.  இயக்குநர் ஸ்ரீதர், சின்ன பட்ஜெட் படம் என்பதால், கிடைக்கும் நேரத்தில் எல்லாம் படமெடுத்துக் கொண்டிருந்தார். பெரும்பாலான நாள்கள் படப்பிடிப்பு, அடுத்த நாள் விடியற்காலை கூட நீண்டு விடும்.   இயக்குநர் ஸ்ரீதரும், எனக்குத் தேன் நிலவு முக்கியம் இல்லை, படப்பிடிப்புதான் முக்கியம் என்று சொல்லி, மனைவியையும்  படப்பிடிப்புக்கு அழைத்து வந்திருந்தார்.

ஸ்ரீதர் மனைவி தேவசேனா எங்களுடன் உட்கார்ந்து , படப்பிடிப்பைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்குப் பெரும்பாலான நேரத்தில்  பேச்சு துணைக்கு காஞ்சனா, ராஜஸ்ரீ, நானும் தான் இருந்தோம். உண்மையைச் சொல்லப்போனால், எங்களிடம் தான் தேவசேனா அதிகம் பேசிக் கொண்டிருந்தார். 

ADVERTISEMENT

இந்தப் படத்தில் பிடித்த காட்சி எதுவென்று கேட்டால், பெரும்பாலானவர்கள் கூறுவது நாகேஷ், பாலையா அண்ணனுக்குக் கதைச் சொல்லும் காட்சியைத் தான் முதலில் கூறுவார்கள். இந்தக் காட்சி இரவில் எடுக்கப்பட்ட காட்சி. அது மட்டுமல்ல ஆழியார் அணை அப்பொழுதுதான் கட்டப்பட்டது. அது திறப்பதற்கு முன்னர் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தான் முதலில் அங்கு நடைபெற்றது.  

இயக்குநர் ஸ்ரீதர், எப்பொழுதுமே ஒரு புதுமுகத்தை அறிமுகம் செய்யும் போது முதலில் டெஸ்ட் ஷுட் எடுத்து இந்தக் கதாபாத்திரத்துக்கு இவர் பொருத்தமாக இருப்பாரா என்று பார்த்து விடுவார். அவர் அந்தப் பாத்திரத்துக்குப் பொருந்துவார் என்று தோன்றினால் மட்டுமே நடிக்க வைப்பார். அப்படி நடிக்க வைத்தாலும் ஸ்ரீதர் போன்ற புகழ் பெற்ற இயக்குநர் முன்பு நடிக்கத் தயக்கமாக இருக்கும். நாம் சரியா நடிக்கிறோமா என்று அவர்களுக்குத் தெரியாது. இயக்குநருக்கு  வேண்டிய முகபாவங்களைக்  கொடுக்கிறோமா, காமிராவிற்கு முன்னால், நாம் திறமையாகச் செய்கிறோமா என்று பல்வேறு சிந்தனைகள் இருக்கும். இப்பொழுது உள்ளது போல் அன்று நடிப்புப் பயிற்சி பெற கல்லூரியோ அல்லது கூத்துப்பட்டறையோ இல்லாத காலம். 

அந்தக் காலகட்டங்களில் தான் ஸ்ரீதர், பல்வேறு புதுமுகங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார். அதற்குக் காரணம், பழக்கப்பட்ட நடிகர் என்றால், அவர்கள் நடிப்பு அவருக்குத் தெரியும். அதனால் அவர்கள் நடிக்கும் போது சிறு, சிறு மாற்றங்கள் மட்டும் சொல்லிவிடுவார். அவர்கள் நடிப்பு நன்றாக இருந்தது என்றால் ஓகே சொல்லிவிடுவார். புதுமுகங்கள் என்றால், முதலில் அவர்களுக்குக் காட்சியை விளக்கிச் சொல்லி விட்டு, "எப்படி நீங்கள் நடிக்கிறீர்களோ, அப்படி நடியுங்கள்' என்று அவர்கள் போக்கில் விட்டு விடுவார். அப்புறம், இதில் இப்படிச் செய்தால், நன்றாக இருக்கும் என்று திருத்துவார். 

நான் முன்பே திரைப்படங்களில் நடித்து வந்ததனால், எனக்கு டெஸ்ட் எல்லாம் எடுத்துப் பார்க்கவில்லை.  ஒவ்வொருவருடைய தனிப்பட்ட ஸ்டைலை கெடுக்காமல், தனக்கு வேண்டியதை வெளிக்கொண்டு வந்து விடுவார். 

இங்கு ஒன்றை நான் சொல்ல வேண்டும். அவருக்கு எது பிடிக்கிறதோ அதையே அவர் எடுப்பார். "அவளுக்கென்று ஒரு மனம்' என்று ஒரு படம் ஸ்ரீதர் எடுத்தார். அது ஓர் முக்கோண காதல் கதை. நடிகை பாரதி அந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்தார். "காதலிக்க நேரமில்லை', "சிவந்த மண்' எல்லாம் எடுத்த பிறகு, இதை ஸ்ரீதர் எடுத்தார். அந்தப் படம் எடுக்கும் பொழுது திரைப்பட விநியோகஸ்தர்கள் எல்லோரும் அவரிடம் கேட்டார்கள். ""உங்களுடைய "காதலிக்க நேரமில்லை' நகைச்சுவை படம் பெரிய வெற்றியை தந்ததே, அதில் நாகேஷ் - சச்சு நகைச்சுவை பேசப்பட்டது. அவர்களையும் இந்தப் படத்தில் நீங்கள் பயன்படுத்தலாமே'' என்று கேட்டார்கள். அதற்கு ஸ்ரீதர்  ""இவர்கள் இருவரும் எனக்கு ராசியானவர்கள் தான், நீங்கள் சொன்ன மாதிரி, இந்தப் படத்திலும் அவர்களை நடிக்க வைக்கிறேன்,'' என்று சொன்னார். அவர் கூப்பிட்டதால், நானும், நாகேஷும் போய் நடித்தோம். அந்தப் படத்தில் வி.கே.ராமசாமியும் நடித்தார். இரண்டு மூன்று வகையான நகைச்சுவை காட்சிகளை எடுத்தார்கள். எல்லோரும் எங்களது நகைச்சுவையை ரசித்தார்கள். 

இறுதியாக எல்லாவற்றையும் போட்டுப் பார்த்த போது, எடுக்கப்பட்ட நகைச்சுவை காட்சி படத்திற்குப் பொருந்தவே இல்லை. அதனால் நகைச்சுவை காட்சிகளை நீக்கிவிட்டார்.  "காதலிக்க நேரமில்லை' படத்தில் காமிரா கோணங்களில் ஒரு புதுமை இருக்கும். படம் ஆரம்பிக்கும் போது வருமே "என்ன பார்வை உந்தன் பார்வை' என்ற பாடல் காட்சியின் போது, அன்றைய மெரீனா கடற்கரையின் ஓட்டு மொத்த அழகையும் மக்களுக்குக் காண்பித்து விடுவார். அவருக்குப் பிறகு வந்த இயக்குநர்கள் எல்லோரும் அவரது பாணியைப் பின்பற்றி வந்தவர்கள் தான். 

இயக்குநர் ஸ்ரீதரின் படங்களைப் பார்த்து விட்டு அவரைப் போல இயக்குநர் ஆகவேண்டும் என்று ஒருவர் ஆசைப்பட்டார். அது மட்டுமல்ல, இயக்குநர் ஸ்ரீதரை நேரில் பார்க்க வேண்டும் என்று விரும்பினார். பிற்காலத்தில் அவரும் புகழ் பெற்றவராக மாறினார். அந்த நபர் யார்? இயக்குநர் ஸ்ரீதரை அவர் சந்தித்தாரா?

(தொடரும்)

Tags : தினமணி கொண்டாட்டம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT