தினமணி கொண்டாட்டம்

அமெரிக்க ஆளுமைகளான இந்தியர்கள்!

சுதந்திரன்

அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடன் அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளிகளில் குறைந்தது 20 பேர்களுக்கு அமெரிக்க அரசு நிர்வாகத்தில் முக்கியப் பொறுப்புகளுக்காகத் தேர்வு செய்துள்ளார். இந்த 20 நபர்களில் 13 பேர்கள் இந்திய வம்சாவளி பெண்களாவர். பைடன் தெரிவு செய்தவர்களில் இரண்டு காஷ்மீர் பெண்களும் அடக்கம்.

கடந்த ஜனவரி 20 -ஆம் தேதி அமெரிக்க அதிபரான ஜோ பைடன் அமெரிக்காவின் 46-ஆவது அதிபர் ஆனார். அமெரிக்க சரித்திரத்தில் முதல் முறையாகப் பெண் ஒருவர் துணைஅதிபராகப் பொறுப்பு ஏற்றுள்ளார். அந்தப் பெருமையை பெற்றவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 56 வயதான கமலா ஹாரிஸ் .

அமெரிக்க மக்கள் தொகையில் இந்திய வம்சாவளியினர் ஒரு சதவீதம் உள்ளனர். இருந்தாலும், இதுவரை எந்த அமெரிக்க அதிபரும் இந்திய வம்சாவளியினருக்கு வழங்காத முக்கியத்துவத்தை ஜோ பைடன் அளித்துள்ளார். முந்தைய அமெரிக்க அதிபர்கள் ஒரு சில இந்திய வம்சாவளியினருக்கு மட்டுமே நிர்வாகப் பொறுப்புகளை வழங்கி வந்துள்ளனர். பைடன் அந்த மரபிலிருந்து விலகி 20 பேர்களைத் தேர்ந்தெடுத்துள்ளார். தேர்வு செய்திருக்கும் 20 இந்திய வம்சாவளியினரில் 17 பேர்களுக்கு வானளாவிய அதிகாரம் குவிந்திருக்கும் வெள்ளைமாளிகை நிர்வாகத்தில் நேரடி தொடர்புடையவர்கள் !

இது ஒரு மகத்தான மாற்றம். பைடனின் இந்த இந்திய ஆதரவு நிலை, கமலா ஹாரிûஸ துணை அதிபராகத் தெரிவு செய்ததிலிருந்து வெளிப்படையாகத் தெரிய ஆரம்பித்துவிட்டது.

டாக்டர் விவேக் மூர்த்தி என்பவரை பைடன் அமெரிக்க அறுவை சிகிச்சை மருத்துவ அமைப்பின் தலைவராக்கியுள்ளார். இவர் தமிழ்நாடு வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க நாட்டவர். அமெரிக்க தேசிய பொருளாதாரக் குழுமத்தின் துணை இயக்குநராகப் பொறுப்பு ஏற்பவர் பரத் ராமமூர்த்தி. ஒபாமா அமெரிக்க அதிபராக இருந்தபோது அதிபரது அலுவலகத்தில் துணை இயக்குநராக இருந்த கவுதம் ராகவன் பைடன் நிர்வாகத்தில் பங்கேற்க மீண்டும் வெள்ளை மாளிகைக்கு வந்திருக்கிறார்.

அமெரிக்க அரசின் நிர்வாகத்திலும் சரி... பொது மக்கள் சேவையிலும் சரி... அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் காட்டிய அக்கறைக்கும், ஆர்வத்திற்கும் சமர்ப்பணத்திற்கும் அங்கீகாரம் தரும் விதமாக பைடன் 20 இந்திய வம்சாவளியினரை குறிப்பாக அதிகம் பெண்களை, தனது நேரடி நிர்வாகத்தில் சேர்த்துக் கொண்டுள்ளார் என்று அமெரிக்க இந்திய வம்சாவளியினர் பெருமைப்படுகின்றனர். ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக நிதி சேகரித்த இதய மருத்துவர் விஜய் ஜானகிராமன், புற்றுநோய் மருத்துவர் சுந்தரேசன் சம்பந்தம், அமெரிக்க அரசு நிர்வாகத்தில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் வாய்ப்பு இதுவரை தரப்படவில்லை.

கமலா ஹாரிஸ் துணை அதிபராகப் பொறுப்பு ஏற்பதை ஒட்டி அவரது சொந்த ஊரான திருவாரூருக்கு அருகில் இருக்கும் துளசேந்திரபுரத்தில் கிராம மக்கள் தெருவெங்கும் கோலம் வரைந்து "கமலா- எங்கள் கிராமத்தின் பெருமை' போன்ற வாழ்த்து செய்திகளையும் கோலங்களுடன் எழுதினார்கள். துளசேந்திரபுரம் கிராமத்தில் உள்ள அருள்மிகு கேசவப் பெருமாள் கோயிலில் 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற குடமுழுக்கு விழாவிற்கு கமலா ஹாரிஸ் குடும்பத்தினர் நன்கொடை அளித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் துளசேந்திரபுரத்தில் கிராம மக்கள் தெருவெங்கும் கோலம் வரைந்து வருவதை அறிந்தோ அறியாமலோ அமெரிக்காவிலும் கோலம் வரைவது வைரலாகிவிட்டது.

ஜோ பைடன் பதவி ஏற்கும் ஜனவரி 20 அன்று வெள்ளைமாளிகை முன்பு கோலம் வரைந்து ஜோ பைடனை வரவேற்பது என்று சில தமிழ்நாட்டின் வம்சாவளியினர் காவல்துறையின் அனுமதி பெற்றிருந்தனர்.

ஆனால் ஆட்சி மாற்றம் காரணமாக அமெரிக்காவில் பதட்ட நிலை, குறிப்பாக வெள்ளை மாளிகையில் வன்முறை தலைகாட்டியதால் வெள்ளை மாளிகையைச் சுற்றிப் பல அடுக்குப் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதால் கோலங்கள் வரைய கொடுத்த அனுமதி ரத்தாக்கப்பட்டுள்ளது.

அதனால் ஆன்லைனில் கோலங்களை வரைந்து அசத்த பள்ளி மாணவர்கள் உட்பட, பல ஆயிரம் பேர்கள் இணைந்துள்ளனர். கோலத்தின் "கண்ணோட்டத்தை' ஆன்லைனில் கோலமாக அமைத்து தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள், அமெரிக்காவில் வசிக்கும் தமிழ்நாட்டு வம்சாவளிகளும், தென் இந்தியாவின் வம்சாவளிகளும்!

இந்தக் கோலம் போடும் ஆர்வத்தைப் புரிந்து கொண்ட அமெரிக்க நிர்வாகம் விரைவில் இன்னொரு நாளில் வெள்ளை மாளிகை முன் கோலம் வரைய அனுமதித் தரப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள்..!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

திருமகள்.. பூஜா ஹெக்டே!

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

SCROLL FOR NEXT