தினமணி கொண்டாட்டம்

விழிப்புணர்வோடு இருப்பதால் பயமில்லை!

24th Jan 2021 06:00 AM | -ஜி.அசோக்

ADVERTISEMENT

 

""இன்னும் கரோனா வைரஸ் சீசன் முழுமையாக முடியாததால், என்னோட படங்கள் ரிலீஸ் ஆகாமல்  இருக்கின்றன. அடுத்து வரும் மாதங்களில் தமிழ், தெலுங்கில் வரிசைக்கட்டி ஒவ்வொரு படமாக வெளிவரும்!'' என்கிறார் ஆனந்தி.

தமிழில் "அலாவுதீனின் அற்புத கேமரா', "கமலி ப்ரம் நடுக்காவேரி' உள்ளிட்ட படங்கள், வெங்கட்பிரபு இயக்கத்தில் "லைவ் டெலிகாஸ்ட்' வெப் சீரீஸ், தெலுங்கில் "ஷாம்பி ரெட்டி' உள்ளிட்ட திரைப்படங்கள் எனப் படு பிஸியாக இருக்கிறார். தொடர்ந்து அவரது சினிமா பயணம் குறித்துப் பேசியதிலிருந்து...

இதுவரை நடித்த தமிழ்ப் படங்களில் "கமலி ப்ரம் நடுக்காவேரி' படத்தைத்தான் மனதுக்கு மிகவும் நெருக்கமான படம் என்கிறீர்களாமே...

ADVERTISEMENT

ஒவ்வொரு கதையையும் விரும்பித்தானே ஏற்றுக்கொள்கிறோம். தமிழில் இதுவரை நடித்த படங்களில் எனக்கு மிகவும் நெருக்கமான, ரசித்த கதைகளில் "கமலி ப்ரம் நடுக்காவேரி' ரொம்ப முக்கியமான ஒரு படம். "பரியேறும் பெருமாள்', "இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு' ஆகிய படங்களுக்குப் பிறகு நான் கதை கேட்ட பல படங்களை ஒப்புக்கொள்ளவே இல்லை. அந்தச் சூழலில் என்னைத் தேடி வந்த கதை இது. 

புதிய குழு என்றதும் சற்று தயக்கத்துடனே கதை கேட்க ஆரம்பித்தேன். கதை கேட்டு முடிக்கும்போது, "நாம எந்த காரணத்துக்காகவும் இந்தப் படத்தை விட்டுவிடக்கூடாது!' என உடனே கையெழுத்துப் போட்டேன்.

அப்படி வியக்கும் அளவுக்கு என்னதான் இந்தக் கதைக்களம்?

இப்போதைக்கு முழுமையாகக் கதையைச்  சொல்ல முடியாது. கிராமத்தில் இருக்கிற ஒரு பெண் ஐ.டி துறை வரைக்கும் எப்படிப் பயணிக்கிறாள் என்பதுதான் களம். படத்தின் பெரும்பாலான காட்சிகள் என்னை சுற்றியே இருக்கின்றன. ஒவ்வொரு காட்சியையும் ரசித்து நடித்தேன். அந்த நாள்கள் ரொம்பவே மகிழ்ச்சியாக இருந்தது.

"மூடர் கூடம்' நவீனுடன் இணைந்து நடித்துள்ள "அலாவுதீனின் அற்புத கேமரா' எப்போது வெளிவர உள்ளது...

விரைவில் படம் ரிலீஸூக்கு தயாராக உள்ளது. இந்த கரோனா வைரஸ் இடைவெளியால் ஒவ்வொரு படங்களும் நிதானமாக ரிலீஸ் செய்ய வேண்டியுள்ளது. "அலாவுதீனின் அற்புத கேமரா' இயக்குநர் நவீன் என் குடும்ப நண்பர் மாதிரி. அவ்வளவு விஷயங்கள் அந்தப் படத்தின் படப்பிடிப்பில் கற்றுக்கொண்டேன். முழுமையாகவே 15 நபர்கள்தான் படப்பிடிப்பில் இருப்போம். ஆனால், நுணுக்கமாக அவ்வளவு நேர்த்தியாகப் படப்பிடிப்பு நடந்தது. யூரோப், சுவிட்சர்லாந்த் என முழுக்க வெளிப்புற இடங்களில் படமாக்கப்பட்டுள்ள படம் அது. எனக்கு காட்சி இல்லாத நேரங்களில், "இந்த ஷாட்  எப்படி வைக்க வேண்டும்? லைட்டிங் இந்த இடத்தில் எப்படி இருக்க வேண்டும்?' என சினிமா எடுக்கவும் கற்றுக் கொண்டேன். இயக்குநர், கேமராமேன் என எல்லோரும் அன்பாகப் படப்பிடிப்பில் பார்த்துக் கொண்டனர். இந்த மாதிரி குழு எப்போதாவதுதான் அமையும்.

கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் இன்னும் ஹைதராபாத்தில்தான் இருக்கிறீர்களா...

இல்லையே! "ராவணக்கோட்டம்' படத்துக்காக சென்னை வந்துபோக ஆரம்பித்துவிட்டேன். கரோனா வைரஸ் தாக்கம் உச்சத்தில் இருந்த ஜூன், ஜூலை மாதங்களில்கூட முழு பாதுகாப்புடன் ஹைதராபாத்தில் நடைபெற்ற "ஷாம்பி ரெட்டி' படப்பிடிப்பில் கலந்துகொண்டேன். நிறைய நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், நிறைய சவால் எனப் படமாக்கப்பட்ட படம் அது. அதையே சமாளித்துவிட்டோம்.

அப்படியென்றால் உங்களுக்கு கரோனா வைரஸ் பயம் இல்லையா?

என்னை விட என் பெற்றோர் தான் கொஞ்சம் பயந்தாங்க. எந்த ஒரு ஷூட்டிங் தொடங்கினாலும் எனக்கு முதல் இரண்டு, மூன்று நாள்களுக்கு எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என இருப்பேன். ஷூட்டிங் உள்ளே முழுமையாக இறங்கியதும் கரோனா வைரûஸ முழுமையாக மறந்துவிடுவேன். எல்லோரும் பாதுகாப்பாகவும், விழிப்புணர்வோடு இருப்பதால் பயம் இல்லாமல் நாள்கள் நகர்கின்றன.

இயக்குநர்கள் வெற்றிமாறன், சுதா கொங்கரா உள்ளிட்டவர்கள் இயக்கிய "பாவக் கதைகள்' வெப் சீரீஸ் பார்த்தீங்களா? உங்களுக்கு அந்த மாதிரி கதைகளை எதிர்கொள்ள ஆர்வம் இருக்கிறதா?

ஓ...! படம் பார்த்தேன். நான் அந்த மாதிரியான வரிசையில் "பரியேறும் பெருமாள்' படத்தில் நடித்துவிட்டேன். மீண்டும் ஒரே மாதிரியான கதைக்களம் வேண்டாமே. ஒவ்வொரு கதைக்கும்  சில மாற்றங்கள் இருந்தால்தான் நமக்கும் பிடிக்கும். பார்வையாளர்களுக்கும் பிடிக்கும். அதை மனதில் வைத்துதான் புதிய படங்களைத் தேர்வு செய்கிறேன். ஒரே மாதிரி தொடர்ந்து நடித்தால் சரியாக வராது. இது வெப் சீரீஸ் காலகட்டம். எல்லோருக்கும் அது பிடிக்கத் தொடங்கி விட்டது. இந்த ஊரடங்கு நேரத்தில் நானே 20 முதல் 30 க்கும் மேற்பட்ட வெப் சீரீஸ் பார்த்தேன். நானும், வெங்கட் பிரபு இயக்கத்தில் "லைவ் டெலிகாஸ்ட்' வெப் சீரீஸில் நடித்திருக்கிறேன். நல்ல கதையம்சம் கொண்ட வெப் சீரீஸ் என்றால் நிச்சயம் நடிக்கலாம்.

தமிழில் உங்கள் முதல் படமாக "கயல்' வெளியாகி ஆறேழு ஆண்டுகள் ஓடிப்போனதே?

அதெல்லாம் நான் மனதில் வைத்து கொள்வதில்லை.  தமிழ், தெலுங்கு, மலையாளம் என நல்ல நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறேன். எப்போது நாம் வந்தோம். என்ன மாதிரி வாய்ப்புகள் அமைந்தது என்பதெல்லாம் நான் பார்ப்பதில்லை என்றார்.  

Tags : தினமணி கொண்டாட்டம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT