தினமணி கொண்டாட்டம்

ரோஜா மலரே! - 72: மனம் கவர்ந்த புதுமையான இயக்குநர்! - குமாரி சச்சு

17th Jan 2021 06:00 AM | சலன்

ADVERTISEMENT

 

இயக்குநர் ஸ்ரீதர் தொடராமல் விட்ட படத்தின் பெயரும் "காதலிக்க நேரமில்லை' தான். அது கொலை சம்பந்தமாக எடுக்கப்பட்ட ஒரு மர்மக் கதை. அதில் நடித்த எல்லோரும் புதுமுகங்கள். அந்தப் படத்தை ஆறாயிரம் அடிகள் எடுத்திருந்தார் ஸ்ரீதர். தான் எடுத்ததைப் போட்டு பார்த்தார். அவருக்குத் திருப்திகரமாக வரவில்லை.அப்படியே நிறுத்தி விடுவோம் என்று அப்படியே வைத்து விட்டு, வேறொரு படத்தை எடுக்க நினைத்தார். ஓஹோ புரொடக்க்ஷன் செல்லப்பா பத்திரத்தை மிக முக்கியமான கதாபாத்திரமாக வைத்து அந்தக் கதை இருந்தது. ஆனால் சித்ராலயாவின் பங்குதரார்களாக இருந்த எல்லோருமே பெரிய படம் எடுப்பதற்கு முன்னர், ஒரு சின்ன பட்ஜெட் படம் எடுத்து விடலாம் என்று சொன்னார்கள். அப்படி முடிவு பண்ணியதால், இந்த யோசனைக்கு இயக்குநர் ஸ்ரீதரும் ஒத்துக்கொண்டார்.

முதலில் ஒரு சின்ன பட்ஜெட் படமாக எடுத்து விடலாம் என்று ஆரம்பித்து எடுத்த படம் தான், வெற்றிப்படமான"காதலிக்க நேரமில்லை'. அவர்களைப் பொருத்த வரையில் "காதலிக்க நேரமில்லை', சின்ன பட்ஜெட் படம். இந்த நிலையில், டைரக்டர் ஸ்ரீதர் ஒன்றைச் சொன்னார். "நானே கதை எழுதிக் கொண்டு இருக்கிறேன். வேறு ஒரு கதாசிரியரிடம் கதை கேட்கலாம். அந்தக் கதைக்கு, நான் திரைக்கதை அமைத்து, வசனம் எழுதி, இயக்குகிறேன். அது மட்டுமல்ல, அதை சித்ராலயா நிறுவனம் தயாரித்து, வெளியிடலாம்' என்று சொன்னார். எல்லோருக்கும் இது சரி என்றுபட்டது. அதன்படி வேறு கதாசிரியர்களிடம் கதை கேட்க முடிவு செய்தார்கள். அந்த சமயத்தில் இயக்குநர் தாதா மிராஸி புகழ் பெற்ற இயக்குநராகவும், எழுத்தாளராகவும் இருந்தார். அவரிடம் சென்று கதை கேட்டார்கள்.

இயக்குநர் தாதா மிராஸி ஒரு வடநாட்டுக்காரர். நிறைய ஆங்கிலப் படங்களைப் பார்ப்பார். ஆனால் தமிழ் மொழி சரளமாகப் பேசுவார். அவரிடம் நல்ல கதை இருந்தால் சொல்லச் சொல்லிக் கேட்கலாம் என்று என்று முடிவு செய்து, இயக்குநர் தாதா மிராஸியைகூப்பிட்டார்கள். "புதிய பறவை' படத்தை அவர் தான் இயக்கினார். அவரிடம் சென்று ஒரு நல்ல கதை எங்களுக்கு வேண்டும், தர முடியுமா என்று கேட்டார்கள். ஒரு நாள் அவர் கதை சொல்ல வந்தார். இயக்குநர் தாதாமிராஸி கதை சொல்லும் பாங்கே தனி.

ADVERTISEMENT

பின்னணி இசை ஒலிகளை எல்லாம் மிமிக்ரி செய்து கொண்டே கதை சொல்லுவாராம். இப்படி அவர் சொல்லும் போது கதை, வசன கர்த்தா கோபுவும், அவர் கதை சொல்லும் முறையை உன்னிப்பாகக் கவனித்தார். அவர் சொன்ன கதை இயக்குநர் ஸ்ரீதருக்கும், மற்ற எல்லோரும் பிடித்துப் போய்விட்டதாம். சரி, இந்தக் கதையைப் படமாக்கலாம் என்று முடிவு செய்து, படப்பிடிப்பிற்கான பல்வேறு வேலையைத் தொடங்கினார்களாம். ஆனால் அவர்கள் விரும்பும் ஹீரோவின் கால்ஷீட் கிடைக்கவில்லையாம். அதனால் தாதாமிராஸியின் கதையை, அப்புறம் பண்ணலாம் என்று அவர்கள் இருப்பில் வைத்து விட்டார்கள். ஆனால் கோபுவிற்கு இயக்குநர் தாதாமிராஸி கதை சொன்ன விதம், அவருடைய மனசை விட்டு அகல மறுத்தது. அதை நகைச்சுவை கதாபாத்திரத்தில் ஏன் வைக்கக் கூடாது என்று தோன்றியது. அதை இயக்குநர் ஸ்ரீதரிடம் அவர் கூற, அவரும் "ஓகே' என்று சொன்னார்.

"காதலிக்க நேரமில்லை'. படத்தில், ஒரு பணக்கார முதலாளிக்கு ஒரு மகன் இருந்தார். அவர் ஒரு படம் இயக்க முடிவு செய்தாராம். ஒரு நாள் அந்த முதலாளி கதை என்ன என்று கேட்டாராம். மகனும் கதை சொன்னாராம். அதுதான் பாலையா அண்ணனுக்கு, நாகேஷ் கதை சொல்லும் காட்சியாக உருவானது. "காதலிக்க நேரமில்லை' படம் எனக்குக் கடவுள் கொடுத்த வரம்.

இந்தப் படத்தில் இயக்குநர் ஸ்ரீதர் பல்வேறு விதமான புதுமைகளைச் செய்துள்ளார். அவர் சுலபமாக இயக்கிய படம் தான் "காதலிக்க நேரமில்லை' படத்திற்கு முன்னர் சுமார் 8 படங்கள் அவர் இயக்கினார். அவை அதிகம் வேலை வாங்கிய படங்கள். இந்தப் படம் அவர் சீரியஸ் ஆக இல்லாமல் சிரித்துக் கொண்டே எடுத்த படம். அந்தக் காலகட்டத்தில் புதுமுகங்களைச் சிறு சிறு கதாபாத்திரங்களில் தான் நடிக்க வைப்பார்கள். இந்தப் படத்தை போல் எல்லா முக்கியமான கதாபாத்திரத்திற்கும் புதுமுகங்களைப் போட்டுப் படமெடுப்பது ரிஸ்க் என்று பெரிய தயாரிப்பு நிறுவனத்தினர். யாரும் துணிந்து செய்ய மாட்டார்கள். ஆனால் இயக்குநர் ஸ்ரீதர், இந்தப் படத்தில் அனைத்தையும் செய்தார்.

அந்தக் காலகட்டத்தில் புதுமுகங்களைப் போட்டுப் படமெடுத்தால் ஒன்று விநியோகஸ்தர்கள் வாங்குவார்களா? அப்படியே வாங்கி அவர்கள் வெளியிட்டால் படம் ஓடுமா? என்று பல்வேறு பட்ட எண்ணங்கள் தோன்றும். அது மட்டுமல்லாமல் நடிப்பில் அவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க மாட்டார்கள். அவர்களுக்கு எப்படி பெரிய, முக்கியப் பாத்திரங்களைக் கொடுக்க முடியும் என்றும் நினைப்பார்கள்.

அதுமட்டுமல்லாமல் பெரிய நடிகர்களுடன் புது முகங்களுக்கு நடிக்கும் போது அவர்களுக்குப் பயிற்சி கொடுப்பார்கள்.

காரணம், பெரிய நடிகர்கள் மேக்கப் போட்டு படப்பிடிப்புக்கு வரும் போது அவர்களை காக்க வைக்கக்கூடாது. அது மட்டுமல்ல, புதுமுகங்கள் பெரிய நடிகர்களைப் பார்த்து நடுக்கமோ, பயமோ ஏற்படக்கூடாது. அதற்கு முறையான பயிற்சி கொடுத்தால்தான் அவர்கள் பயம் இல்லாமல் நடிக்க முடியும். அப்படியே பயம் இருந்தாலும் வெளிகாட்டாமல் நடிக்க முடியும்.

இயக்குநர் ஸ்ரீதரை பொருத்த அளவில் அவரது ஒவ்வொரு படத்தையும் புதுமையாக எடுப்பார். "நெஞ்சில் ஓர் ஆலயம்' படத்தின் படப்பிடிப்பு சுமார் 28 நாள்களில், ஒரே செட்டில் எடுத்த படம். அவர் எடுத்த படங்களில் ஆழமான கருத்தும், அதை நேர்த்தியாகச் சொல்லும் விதமும் அவருக்குக் கை வந்த கலை. அவருக்குக் காதல் கதையும் எடுக்கத் தெரியும், நகைச்சுவை படமும்
எடுக்கமுடியும்.

அவர் "எதிர்பாராதது' என்று படத்திற்குக் கதை வசனம் எழுதும் போது, சி.எச்.நாராயணமூர்த்தி தான் அந்தப் படத்தின் இயக்குநர். இப்படிப் பல பேருடன் ஸ்ரீதர் தொடர்ந்து பணியாற்றியதால், அவருக்குத் திரைக்கதையில் எல்லா உணர்ச்சிகளும் தானாக வந்து விழுந்து விடும். இருவேறு படங்களையும் எடுத்து வெற்றிப் பெற்ற இயக்குநர் அவர். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த படங்களையும் இயக்கி இருக்கிறார். புதுமுகங்களை வைத்தும் படமெடுத்து வெற்றி பெற்று இருக்கிறார்.

அந்தக் காலத்தில் ஈஸ்ட்மென் கலர் படங்கள் ஒரு புதுமை. கண்களுக்கு அந்த வண்ணங்கள் காந்தத்தைப் போல் எல்லோரையும் கவர்ந்து இழுக்கும். அதே நிலையில் அந்தப் படத்தின் செலவும் அதிகமாகும்.

புதுமுகங்கள் நடிக்கும் படத்துக்கு இவ்வளவு செலவு தேவையா? என்று நினைப்பவர்கள் உண்டு. நான் முன்பே சொன்ன மாதிரி பாலையா அண்ணன் தவிர எல்லோரும் புதுமுகங்கள் தான். ஒரு பெரிய இயக்குநர் எதிரில் எப்படி நடிக்கணும் என்று புதுமுகங்கள் யோசிப்பார்கள். அதுவும் இயக்குநர் ஸ்ரீதர் எதிரில் நடிப்பதற்கு மிகவும் தயங்குவார்கள். காரணம் அவர் மிகப் பெரிய இயக்குநர்.

எங்கள் குழுவில் அப்போது கல்யாணமான ஒரு ஜோடியும் இருந்தார்கள். அவர்கள் தேன் நிலவுக்குப் போகாமல் இந்தப் படப்பிடிப்புக்கு வந்தார்கள் யார் அவர்கள்?

(தொடரும்)

ADVERTISEMENT
ADVERTISEMENT