தினமணி கொண்டாட்டம்

பார்த்து, கேட்டு, உணர்ந்ததுதான் படைப்பு

DIN

""நம் நினைவுகளோடும் உணர்வுகளோடும் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு பொருளுக்கும் உயிர் இருக்கிறது. தாத்தாவின் பேனா, சந்தோஷங்களைச் சுமந்து வந்த ஒரு கடிதம், அப்பாவின் சட்டை, தாத்தா தந்து விட்டு போன பம்பரம், அம்மாவின் தாலி இப்படி ஏதோ ஒன்றை எல்லோரும் வைத்துக் கொண்டுதான் வாழ்கிறோம். விதவிதமாக, ரகரகமாக இவ்வளவு கார்கள் ஓடும் பெருநகரத்தில், இன்னமும் நினைவில் ஒரு சைக்கிளைச் சுமந்து கொண்டு இருக்கும் ஒரு முதியவரை எங்கேயாவது பார்க்க முடிந்தால் எப்படியிருக்கும்.... யோசித்துப் பார்த்தால், எண்பதுகள் வரை பிறந்த எல்லோரது ஞாபகத்திலும் கை, கால், முகம் முளைத்த ஒரு சைக்கிள் உட்கார்ந்திருக்கும். அது போல்தான் இந்தக் கதையில் கட்டில். பரம்பரையாகத் தொடரும் ஒரு கட்டில் அதைச்சுற்றிய மனிதம்தான் கதை''. உள்ளார்ந்து பேசத் தொடங்குகிறார் இயக்குநர் இ.வி.கணேஷ்பாபு. நடிகர், இயக்குநர் எனத் தொடர்ந்து பயணமாகும் மனிதர். இந்த முறைஎடிட்டர் லெனின் கதை, வசனத்தில் "கட்டில்' படத்தை இயக்குகிறார்.

"கட்டில்'.... தலைப்பே கதையை உணர வைக்கிறது....

கதை எல்லோருடனும் தொடர்புடையது. மொழியே தெரியாமல் பார்த்தாலும் கண்ணீர் கரையும். சாப்பாடு, சம்பளம், துயரம், சந்தோஷம் எனக் கிடைக்கும் வாழ்வு, எல்லோருக்கும் அமைவது இல்லை. கனவு, லட்சியம், வேட்கை எனத் துரத்தும் வாழ்வில் எங்கேயோ போய் நிற்கிறோம். எல்லாம் இருந்தும் மனசு, அன்புக்கு ஏங்குகிறது. வன்மம் இல்லாத உலகுக்குத் தவிக்கிறது. எப்போதும் பரிசுத்தமான காதலுக்கு தவிக்கிறது. இப்படியான ஒரு பயணத்தில் திட்டமிட்டுச் செய்து முடித்ததுதான் இந்தப் படம்.

என் அப்பாதான் எனக்கு ஆதர்சம். மிகவும் மேன்மையான மனிதர் அவர். கிட்டப்பா பாடல்களில் கிறங்கிப்போவார். கிராமபோன் என்கிற வஸ்து, எங்கள் வீட்டில் கிட்டப்பா, சுந்தராம்பாளையே பாடிக்கொண்டிருக்கும். இப்போதும் அவர்தான் என் ரோல் மாடல்.

யாரையும் குற்றம் சொல்லாத, வெறுக்காத, மிகுந்த சாந்த பாவத்தோடு துன்பங்களை எதிர்கொண்ட அந்த மாமனிதரைப் போல் வாழ்ந்து தீர்ந்தால் நான் மகிழ்ச்சியடைவேன். என் ஒரே பிரார்த்தனை இது மட்டும்தான். மனிதனாக வாழ்தல் மகத்தானது. இதை 1970, 1940, இப்போது என மூன்று காலக் கட்டங்களாக அடுக்கியிருக்கிறேன். தாத்தா, மகன், பேரன் என வாழ்வாங்கு வாழ்ந்த கதை இது.

கதையின் உள்ளடக்கமாக என்ன இருக்கும்...

எப்போதும் ஒரு காதலை, பிரிவை மீட்டெடுக்கிறான் மனிதன். காலம் முழுக்க ஜல்லிக்கட்டு காளைகளைத் தயார் செய்வதிலேயே வாழ்க்கையைத் தொலைத்தவர்கள், பறவைகளுக்கான ஆராய்ச்சிக்காவே தன்னை அர்ப்பணித்தவர்கள், பாம்புகளின் புதிர்களைத் தெரிந்துக் கொள்வதையே பயணமாக்கி கொண்டவர்கள்... இப்படி ஏக மனிதர்கள் ஒரு அதிசயம் போல் நம்மைக் கடந்து கொண்டே இருக்கிறார்கள். எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்தான் மனிதர்களின் பெரும் பிரச்னை. நம்பிக்கை, அன்பு எல்லாம் பொய்யாகும் போதுதான், எல்லாம் கசந்து போகிறது. பொருள்களிடம் அது எதுவும் இல்லை. அதன் அன்பில் அப்பழுக்கு இல்லை. இந்த மன நிலையை பொருள்களை முதன்மைப்படுத்தி வாழும் பலரிடம் நான் பார்த்திருக்கிறேன். நம்பிக்கை இன்மை நிறைந்த மனித உறவுகளை மனதளவில் துரத்தியவர்கள், ஏதோ ஒரு பொருளின் பேசா அன்பை நிழலாக்கி கொள்கிறார்கள். இங்கே நிகழ்வதும் அப்படித்தான். இந்தப் பூமியோடும், மனித வாழ்க்கையோடும் பிற உயிர்களுக்கு இருக்கும் தொடர்பு என்பது மிக முக்கியமானது.

லெனின் சார் கதை, திரைக்கதை, படத்தொகுப்பு பலமாக இருக்குமா?

லெனின் சார் படத்தொகுப்பு செய்த நான் நடித்த முதல் படம் "பாரதி'. அந்தப் படத்தில் நானும் ஒரு நடிகர். அவர் இயக்கிய "ஊருக்கு நூறு பேர்' படத்திலும் நான் நடிகன். அது முதல் அவருக்கும் எனக்குமான புரிதல் உண்டு. அதன் நீட்சிதான் இந்த சினிமா. லெனின் சார் எப்போதும் எளிமையின் அடையாளம். அதே நேரத்தில் இயக்குநர் பீம்சிங் மகன் என்கிற பாரம்பரியம். பாரம்பரியம் இருக்கிற நிறைய இடங்களில் எளிமை இருக்காது. எளிமை இருக்கிற இடத்தில் பாரம்பரியம் இருக்காது. இந்த இரண்டும் ஒருங்கே பெற்றவர் லெனின் சார். தன் அப்பா வாழ்ந்த பாரம்பரிய வீட்டை மாற்றியமைக்கும் போது கூட, பீம்சிங் என்கிற பெயர் பலகையை நினைவாக எடுத்து வந்து, இப்போதும் பார்வையிலேயே வைத்திருக்கிறார். இப்படித்தான் ஒரு பேச்சு போனது... அடுத்த நிமிடமே இந்தக் கதை வந்து விழுந்தது. சென்னை வந்த பிறகு சில வீடுகளில் ஷோகேஸிலும் அறை மூலைகளிலும் உறங்கும் வீணைகளைப் பார்த்திருக்கிறேன். பார்த்த கணமே நம்மை அதிரவைப்பவை, மெளனமாக அமர்ந்திருக்கும் வீணைகள்தான். எடுத்ததும் கொடுத்ததும் எவ்வளவு எனத் தெரியாமல், யுகங்களின் இசையையும் மெளனத்தையும் வைத்துக்கொண்டு உர்ர்ரென்று முறைக்கும் வீணைகள்.

வீணை என்பது ஒரு குறியீடு. பயன்படுத்துவதற்கும் பயன்படுவதற்கும் அர்த்தம் அறியாமல் வாழும் இதயத்தின் குறியீடு. இந்த இடத்தில் ஒரு கட்டில் பற்றிச் சொன்னார். அது பற்றிய நினைவுகளையும் கிளறிவிட்டது லெனின் சார் இதயம்தான். அதை கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு என சினிமாவுக்குள் எடுத்து வந்திருக்கிறேன். லெனின் சார் இந்தப் படைப்புக்கு ஆகச் சிறந்த பலம்.

நீங்களே தயாரித்து, நடித்து, இயக்குவது கடினம்இல்லையா....

மனதில் ஊறிப்போய் இருந்ததுதானே. எல்லாத்துக்கும் முன் மாதிரி உண்டு. எதுவும் தானாக உருவாக முடியாது என்பதுதான் இந்த உலகத்தின் சட்டம். படித்தது, பார்த்தது, கேட்டது, உணர்ந்ததுதான் படைப்பாக வருகிறது. இதுகூட சென்டிமெண்ட்தான். இந்த கதை, உறவுகள் கூட பழையதுதான்.

ஆனால், அதை எனக்கான உணர்வாக, மனிதனாகக் காட்சிப்படுத்தியதுதான் புதுசு. வசதி மட்டுமே சந்தோஷம் இல்லை. அதற்கு பிறகு கூட துறவு கதைகள் இங்கே அதிகமாக இருக்கிறது. சித்தார்த்தன் முதல் பட்டினத்தார் வரை ஏக கதைகள் உண்டு. எங்கே நிம்மதி, எப்படி சந்தோஷம் என்று எதையும் எளிதாக அர்த்தப்படுத்திட முடியாது. நல்லவன் வாழ்க்கை எவ்வளவு எளியதாயினும் நிம்மதியானது. வைரமுத்து சார், ஸ்ரீகாந்த் தேவா, "வைட்ஆங்கிள்' ரவிசங்கரன், சிருஷ்டி டாங்கே, விதார்த், என துணைக்கு எல்லோருமே அவ்வளவு பலம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்காலில் 71 சதம் வாக்குப் பதிவு

ராஜதுா்க்கையம்மன் கோயிலில் சண்டியாகம்

தோ்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியா்கள் சாலை மறியல்

மன்னாா்குடியில் அமைதியான வாக்குப் பதிவு

வாக்குப்பதிவு மையங்களில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT