தினமணி கொண்டாட்டம்

கட்டடமாகும்   கண்டெய்னர்கள் !

17th Jan 2021 06:00 AM

ADVERTISEMENT


அனைவருக்கும் வீடு என்பது தேசிய கொள்கைகளில் ஒன்று. ஆனால் நாடு முழுக்க நடக்கும் கட்டட வேலைகள் கார்பன் வாயுவை வெளியிட்டு சுற்றுப்புற சூழ்நிலையை சேதம் செய்கிற காரணியாகவும் அமைந்திருக்கிறது என்கிற செய்தி பலருக்கும் புதிதாக இருக்கும்.

கார்பன் மற்றும் இதர கழிவுகளைக் குறைக்கும் விதமாக கட்டடங்களை உருவாக்குவதில் பல ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. கட்டடங்களை கட்டுவதிலும் மாற்றி யோசிக்கும் சிலர் இல்லாமல் இல்லை. பொருள்களை ஏற்றுமதி செய்யப் பயன்படுத்தும் பெரிய கண்டெய்னர்களை கலை உணர்வுடன் கட்டடமாக மாற்றி அங்கு உணவு விடுதி ஒன்றையும் அமைத்திருக்கிறார் காசியாபாத்தைச் சேர்ந்த கட்டடக் கலைஞர் ராகுல் ஜெயின். காசியாபாத்தில் அமைந்திருக்கும் பல் மருத்துவக் கல்லூரியில் "கஃபே இன்ஃபினிட்டி' என்ற பிரம்மாண்டமான உணவு விடுதியை அமைத்திருக்கிறார்.

""கல்லூரி நிர்வாகம் சிக்கனமான அதே சமயம் சுற்றுப்புறச் சூழலைப் பாதிக்காத கட்டடம் தேவை என்று என்னிடம் கேட்டுக் கொண்டார்கள். கப்பல் மூலமாகப் பொருள்களை ஏற்றுமதி செய்யப் பயன்படுத்தும் பெரிய கண்டெய்னர்களைப் பயன்படுத்தலாம் என்று முடிவு செய்தேன். எனது யோசனை கல்லூரி நிர்வாகத்தினருக்கு பிடித்துப் போனது. வானிலிருந்து பார்க்கும் போது கிரேக்க கணிதக் குறியாக "இன்ஃபினிட்டி' மாதிரி விடுதியை வடிவமைத்தேன். ஒன்பது கண்டெய்னர்களை புதியதாக்கி மாற்றி அமைத்தேன். கான்கிரீட் பயன்படுத்தலை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைத்திருக்கிறேன்.

உணவு விடுதி சுமார் 4800 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. இந்தக் அமைப்பை உருவாக்க 11 மாதங்கள் பிடித்தன. கான்கிரீட் கட்டடம் கட்ட ஆகும் செலவில் 35 சதவீதம் மட்டுமே இந்த அமைப்பை உருவாக்க செலவாகியுள்ளது. எதிர்காலத்தில் இந்த கட்டடத்தை வேறு எங்காவது மாற்ற வேண்டுமானாலும் குறைவான செலவில் மாற்றி கட்டிக்க கொள்ளலாம். ஒரு பழைய கண்டெயினரின் விலை இரண்டரை லட்சம். 3750 கிலோ எடையுள்ள இந்த கண்டெய்னர் 27600 கிலோ பாரத்தைத் தாங்கும். இது போல பல உணவுவிடுதிகளை டில்லியில் உருவாக்கியுள்ளேன்'' என்கிறார் ராகுல் ஜெயின்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT