தினமணி கொண்டாட்டம்

சிறையில் பூத்த மனிதாபிமானம்

17th Jan 2021 06:00 AM | - முத்துக்குமார்

ADVERTISEMENT


இந்த உலகம் நல்லதையும் கெட்டதையும் கொண்டே இயங்கி வருகிறது. வாழ்வில் சிலர் கெட்ட நடத்தைக் கொண்டவர்களாக அறியப்பட்டுப் பின்னர் தன்னையே நல்லவற்றின் அடையாளமாக மாற்றியிருக்கிறார்கள்.  அந்த வகையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் மூலிகை டீ விற்று வரும் கோ.கண்ணதாசனும் கவனிக்கதக்கவராக உள்ளார். 

இங்குள்ள அரசு அலுவலகம், நீதிமன்றம் முதல் பேருந்து நிலையம், கடைகளுக்கு  மிக நேர்த்தியான உடை மற்றும் ஸ்டைலான கண்ணாடி அணிந்து, இரு சக்கர வாகனத்தில் ஒலிபெருக்கி அறிவிப்புடன் மூலிகை தேநீர், தூதுவளை, முடக்கத்தான், வல்லாரை,ஆவாரம்பூ, வாழைத்தண்டு, காய்கறி, முடவாட்டுக்கால் சூப்களையும் கூடவே, பல்வேறு மூலிகைகளின் பொடிகளையும் விற்பனை செய்து வருகிறார். இதனால், "மூலிகை டீ கண்ணதாசன்' என்றால் இப்பகுதியில் பிரபலம்.

ஆனால், 52 வயதான அவரது கடந்த காலத்தை நினைத்தாலே வறுமை விரட்டியது. அதனால், கொலை, கொலைக்குத் தண்டனையாக ஆயுள் தண்டனைப் பெற்றவர், உறவுகளால் புறக்கணிப்பு, சமுதாயத்தில் விரட்டியடிப்பு, ஒரு வேளை உணவுக்காக அடுத்தவர்களை எதிர்பார்க்கும் நிலை. எங்கெங்கும் அச்சத்துடனேயே பார்த்து புறக்கணிப்புக்கு உள்ளாகுதல் என்று பல அவமானங்களையும், விரக்தியையும் சந்தித்தவர். 

ஆனாலும், அதனை மனதில் நிறுத்திக் கொள்ளாமல் அதிலிருந்து மீண்டு இன்று கரோனா காலத்தில் உணவு இல்லாமல் தவிக்கும் குரங்குகள், நாய்களுக்கு உணவு அளிக்கும் வகையில் மனிதாபிமானத்தை வளர்த்துக் கொண்டுள்ளார்.
அவரின் கடந்த காலம் என்ன? 

ADVERTISEMENT

""கடலூர் அருகிலுள்ள சின்னபரூரில் சாதாரண குடும்பத்தில் 11 குழந்தைகளில் ஒருவராகப் பிறந்தேன். 

இளமையில் வறுமை காரணமாக 6 -ஆம் வகுப்பு படிக்கும் போதே பிழைப்பிற்காக மும்பைக்கு ரயில் ஏறினேன். அங்குக் கிடைத்த வேலையைச் செய்து கிடைத்த சாப்பாட்டை சாப்பிட்டு பிளாட்பாரத்தில் வாழ்க்கைச் சென்றது.

14 வயதில் கும்பகோணத்திலிருந்து வந்திருந்த கவரிங் வியாபாரிகள் மூலமாக வியாபாரத்திற்குச் சென்ற போது உள்ளூர் ரெளடிகள் சிலர் மாமூல் கேட்டு அடிப்பது, பொருட்களை சூறையாடுவதாக இருந்தனர். அவர்களிடமிருந்து எங்களை தற்காத்துக் கொள்ள முதன்முதலில் ஆயுதம் ஏந்தும் நிலை ஏற்பட்டது. 

இதனால், அப்பகுதியில் தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைக்கும், கட்டப்பஞ்சாயத்து செய்வதுமாக சென்ற வாழ்க்கையில், குறைந்தது 50 பேர் சுற்றியே இருக்கும் நிலை ஏற்பட்டது. அரசியல் நடவடிக்கைக்காக முதல் கொலையும், அதனைத் தொடர்ந்து பல பழிவாங்கல்களும் தொடர்ந்தது. 1988- ஆம் ஆண்டில் ஒரு கொலை வழக்கிற்காக கைது செய்யப்பட்ட நிலையில் மும்பை நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் வாழ்க்கையே முடிந்து விட்டதாக நினைத்தேன். 

ரத்னகிரி சிறை உட்பட நான் பார்க்காதே சிறையே இல்லையென்ற நிலை ஏற்பட்டது. அங்குப் பல சித்ர வதைகள், கொடுமைகளைச் சந்தித்துக் கொண்டே இருந்தேன். 

சிறையிலேயே வாழ்க்கை முடிந்து விடும்  என்ற நிலையில், சிறைவாசிகளுக்கு தியானம், யோகா ஆகியவற்றைக் கற்றுக் கொடுக்க  சிறைத்துறை தலைவராக இருந்த கிரண்பேடி ஏற்பாடு செய்திருந்தார்.  கட்டாயத்தின் பேரில் கற்கத் துவங்கினேன். சட்டங்களுக்கு உட்பட்டு பல மனுக்களை அளித்ததன் விளைவாகக் கடலூர் மத்திய சிறைக்கு 2005- ஆம் ஆண்டு மாற்றப்பட்டு 2010 அக்டோபர் 30 -ஆம் தேதி சிறையிலிருந்து விடுப்பட்டேன்.

சுமார் 22 ஆண்டுகள் சிறையில் கழிந்த நிலையில் சொந்த ஊருக்குச் சென்றால் உறவினர்களின் புறக்கணிப்பு, இருக்க இடம் கிடையாது, அடுத்த வேளை சோற்றுக்கு வழி தெரியாது என்ற நிலையில் பல அவமானங்களையும், புறக்கணிப்புகளையும் தொடர்ந்து சந்தித்தேன். 

சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்குச் சென்ற நிலையில் மிகவும் அதியசமாக எனக்கு ஒருவர் மூலமாகத் திருமணத்திற்குப் பெண் கிடைத்தது. கணவரை இழந்த சங்கீதாவை மறுமணம் செய்து கொள்ளும் நிலை உருவானது. ஆனால், திருமணத்திற்கு முன்பு உறவுகளால் கைவிடப்பட்ட நிலையில் ஜாதியைக் கடந்த நட்புகளாலும், நல்ல உள்ளம் கொண்ட வழக்குரைஞர்களாலும் திருமணம் நடந்தது. 

ஒரு ஜீவனின் வயிற்றுப் போராட்டத்திற்கே திண்டாடிய நிலையில் இரு ஜீவனுக்கான ஜீவனம் மேலும் கடினமானது. ஊர், ஊராக சுற்றியும் பிழைக்க முடியாத நிலையில் குடும்பத் தொழிலாக இருந்து வந்த டீ வியாபாரத்தைப் பார்க்கலாம் என்ற நினைப்போடு  விருத்தாசலம் வந்து சேர்ந்தேன். அப்போது, கோவையைச் சேர்ந்த அழுக்குசாமி சித்தர் பீடம் அரியலூரில் நடத்திய 108 பாட்டி வைத்தியம் என்ற பயிற்சியில் பங்கேற்றேன்.  மூலிகை டீ, சூப் தயாரிப்பதை கற்றேன் விற்பனையையும் ஆரம்பித்தேன்.

சிறையிலிருந்து திரும்பி மனம் திருந்தி வாழுவோருக்கு அரசு அளிக்கும் சலுகைகள் முறையாகக் கிடைத்தால் உதவியாக இருக்கும்.  மனுக்களை பல  அளித்தும் எந்த பயனும் இல்லை என்கிறார் கண்ணதாசன். 

இப்போது, காலையில் எழுந்ததும் அப்பகுதியில் உணவிற்காக அலையும் குரங்குகளுக்கு வாழைப்பழம் வழங்குவதோடு, ஆதரவற்ற நாய்களுக்கு உணவும் அளித்து வரும் மனிதாபிமான உணர்ச்சிக் கொண்டவராக  மாறியிருக்கிறார். 

இவரது நேர்த்தியான உடை மற்றும் உடல்வாகினைப் பார்த்து சிலர் மும்பை தாதா  என்று அழைப்பதை நேர்மறையாகச்  ஏற்றுத் தான் சாதாரண டீ வியாபாரி என்று பதிலளித்து விட்டு நகர்ந்துச் செல்கிறார். தனது வாழ்க்கையை சிலராவது தெரிந்து கொண்டு கெட்ட நடத்தையை விட்டுவிட்டு நல்ல பாதைக்குத் திரும்பினாலே பூரண சந்தோஷம் என்று மகிழ்வோடு கூறுகிறார் கண்ணதாசன். 

Tags : தினமணி கொண்டாட்டம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT