தினமணி கொண்டாட்டம்

நூற்றாண்டை நெருங்கும் இளைஞர்

வனராஜன்

சென்னை   மந்தவெளிப்பாக்கத்தை சேர்ந்தவர் ஸ்ரீநிவாஸாச்சாரியார். 95 வயதாகும் இவர் யாருடைய உதவியும் இல்லாமல் இப்போதும் சுயமாக உழைத்து சாப்பிடுகிறார். காலையில் அவருடைய அலுவலகம் சென்ற போது கணினியில் அமர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவரிடம் பேசிய போது பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்:

""நான் படித்தது நான்காம் வகுப்பு வரை தான். தந்தைக்கு உதவியாய் இருந்து கொண்டு வேதாகம படிப்பை கற்றுத் தேர்ச்சி பெற்றேன். 1966-ஆம் ஆண்டு ஸ்ரீராகவஸிம்ஹம் என்ற பெயரில் இந்த அச்சகத்தைத் தொடங்கினேன். சமஸ்கிருதத்தில் நன்கு தேர்ச்சி பெற்றதோடு பல மாணாக்கர்களுக்கு அவற்றை கற்றுக் கொடுக்கும் ஆசிரியராக இருந்து வருகிறேன். சமஸ்கிருத மொழியில் இருக்கும் ஸ்லோகங்களைத் தமிழில் புத்தகமாக மாற்றினேன். இதை "ஆலயப்ராயச்சித்தி விதி' என்ற பெயரில் இரண்டு தொகுதிகளாக வெளியிட்டேன். மேலும் நாம் அன்றாடம் செய்ய வேண்டிய பணிகள் என்ன என்பதை "ஆன்மிகச் சுருக்கம்' என்ற பெயரில் தமிழில் வெளியிட்டேன். மேலும் கோயில்களில் வழிபாடு என ஆன்மிகம் தொடர்பாக 16 புத்தகங்களை பழைய பாணியில் அச்சு கோர்க்கும் முறையிலும் தற்போது நானே டைப் செய்தும் எனது அச்சகத்தில் அச்சிட்டு வெளியிட்டுள்ளேன்.

நான் நினைத்த விஷயங்கள் அனைத்தையும் எழுதி புத்தகமாக வெளியிட்டுவிட்டேன். இனி நான் எழுதுவதற்கு எதுவுமில்லை. இப்போது அந்தப் புத்தகம் பலருக்கும் உதவியாக உள்ளது. குறிப்பாக வெளிநாடுகளில் இருப்பவர்கள் என்னுடைய புத்தகங்களை அதிகம் வாங்கிப் படித்துப் பயனடைகிறார்கள்.

என்னுடைய 85 வயதில் தான் கணினியில் தட்டச்சுச் செய்யப் பழகினேன். எனக்குத் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், ஹிந்தி. கிரந்தம் என ஐந்து மொழிகள் தெரியும். கணினியிலும் இந்த மொழிகள் டைப் செய்வேன்.  இதுவரை என்னுடைய பணிகளை பாராட்டி" ராமானுஜ சேவா ரத்னா', "நல்லோர் விருது', "அகோபில மடத்தின் ஆஸ்தான வித்வான்'  உள்ளிட்ட 11 விருதுகள் வழங்கியிருக்கிறார்கள்.

இந்த வயதிலும் நான் ஆரோக்கியமாக இருக்கக் காரணம் உணவு முறை தான். யோகா, உடற்பயிற்சி என எதுவும் செய்வதில்லை. காலை உணவை 10.30 மணி முதல் 11 மணிக்குள் முடித்துவிடுவேன். நடந்தே அலுவலகம் வந்து பணிகளைச் செய்துவிட்டு மாலை வீடு திரும்புவேன். ஏதாவது டிபன் தயாராக இருந்தால் கொஞ்சமாக சாப்பிடுவேன். இரவு 8.30 மணிக்கு சாப்பாடு சாப்பிடுவேன். இடைப்பட்ட நேரத்தில் எந்த நொறுக்கு தீனிகளையும் சாப்பிடுவதில்லை. பகலில் தூங்க மாட்டேன். சரியாக 10 மணிக்கு முன்பு தூங்கிவிடுவேன். காலை 5 மணிக்கு எழுந்துவிடுவேன்.

உலகமே கரோனாவுக்குப் பயந்து நடுங்கியது. குறிப்பாக என்னைப் போன்ற முதியவர்கள் அதிகம் பயந்தார்கள். ஆனால் எனக்கு எந்தப் பயமும் ஏற்படவில்லை. வீட்டில் முடங்கவும் இல்லை நான் அன்றாடம் என்னுடைய அலுவலகம் வந்து பணிகளைக் கவனித்துச் சென்றேன். இடையில் வயிற்றுப் பகுதியில் சிறு பிரச்னை ஏற்பட்டதால் ஆஸ்பத்திரிச் செல்ல வேண்டியிருந்தது. அது தவிர நான் ஆஸ்பத்திரிக்கு அதிகம் சென்றதில்லை. மருந்து, மாத்திரைச் சாப்பிட்டதில்லை.

எந்தக் கெட்ட பழக்கமும் எனக்குக் கிடையாது. நான் ஆரோக்கியமாக வாழ்வதற்கு உணவு முறையும், ஒழுக்கமும் தான் முக்கியக் காரணமாகும்.

என்னுடைய அச்சகம் மூலமாக மாதம் 10 முதல் 15 ஆயிரம் வருமானம் கிடைக்கும். ஒரு குடும்பத்தில் அப்பாவுக்கு  நான் தான் கல்யாணப் பத்திரிகை அச்சடித்துக் கொடுத்திருப்பேன். அவரே தன் மகனுக்கும் நீங்கள் தான் கல்யாணப் பத்திரிகை அச்சடித்துத் தர வேண்டுமென்று என்னைத் தேடி வருவார்கள்.இப்போது பேரன்களின் திருமணத்திற்கும் பத்திரிகை அச்சடித்து கொடுக்கிறேன்.   ஆனால் இந்த கரோனா காலத்தில் வருமானம் சுத்தமாக இல்லை. வெறும் இரண்டாயிரம் ரூபாய் தான் கிடைத்தது. கரோனா காலத்தில் எனக்கு வேறு எந்த மாற்றமும் ஏற்படவில்லை. 

எப்படி மோடியின் "மனதின் குரல்' நிகழ்ச்சியில் உங்களைப் பற்றிப் பேசினார்?
""எனக்குத் தெரியவில்லை. சிறிது காலத்திற்கு முன்பு ஹிந்தி தொலைக்காட்சி ஒன்றில் என்னைப் பேட்டி எடுத்தார்கள். அதன் மூலம் என்னைப் பற்றிப் பிரதமர் மோடி தெரிந்து கொண்டு பேசியிருக்கலாம் என்று நினைக்கிறேன். அவர் பேசிய பிறகு என்னை ஏராளமானோர் தொலைபேசியில் தொடர்பு கொள்கிறார்கள். என்னால் அனைவருக்கும் பதில் சொல்ல முடியவில்லை என்பதால் இப்போது தொலைபேசியை கீழே எடுத்து வைத்து விடுகிறேன். 

நான் கற்றுக்கொண்ட, தெரிந்த விஷயங்களை முடிந்த வரை இளைய தலைமுறைக்குச் சொல்லிக் கொடுக்கிறேன். நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்வதும், எடுத்துக் கொள்ளாததும் அவரவர் விருப்பம்.  என்னுடைய மனைவிக்கு 90 வயதாகிறது. அவரும் என்னைப் போலவே ஆரோக்கியமாக இருக்கிறார். எங்களுடைய ஒரே மகள் தான் எங்களைக் கவனித்துக் கொள்கிறார். இரண்டு பேரன்கள் இருக்கிறார்கள். அவர்கள் வெவ்வேறு துறைகளில் இருந்தாலும் என்னைப் போலவே ஆன்மிகத்திலும் ஈடுபட்டு நல்ல விஷயங்களைச் செய்து வருகிறார்கள்.  வாழ்க்கையில் யாருக்கும் எந்தத் தொந்தரவும் தரக்கூடாது. வீட்டில் சும்மா இருக்க முடியவில்லை. பொழுது போக்குவது கஷ்டமாக உள்ளது. அதனால் தான் முடிந்தவரை என்னால் இயன்ற பணிகளை இப்போதும் செய்கிறேன்'' என்று யதார்த்தமாகப் பேசி விடை பெற்றார் ஸ்ரீநிவாஸாச்சாரியார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT